தம்பி- ஒரு வாசிப்பு

விஷ்ணுபுரம் பதிப்பகம்

அன்புள்ள ஆசிரியர்க்கு,

abiman.in எனும் திரைப்படம் சார்ந்த இணையதளத்தில் மாதம் பத்து சிறுகதைகள் வாசிப்பு இலக்காக வைக்கப்பட்டு அவை  குறித்த கருத்துக்கள் கேட்கப்பட்டிருந்தன. அவற்றில் தம்பி, வணங்கான் சிறுகதைகளும்  இருந்தன. ஏற்கனவே வாசித்த  கதைகள்தான் என்றாலும், கதை குறித்து எழுதி பார்த்துக்கொள்ள ஒரு வாய்ப்புதானே என எண்ணி  ‘தம்பி’ சிறுகதையை வாசித்து, என் வாசிப்பை அதற்காக எழுத துவங்கினேன். அது குறித்து எழுதும் போதுதான் அதில் நான் கண்டுகொண்டதை (சரியாகவோ  பிழையாகவோ) திடமாக கொண்டுவர முடிந்தது. எழுதுவது நம்மை தொகுத்துக்கொள்ள உதவும் என நீங்கள் சொன்னதை உணர்கிறேன். அந்த கருத்துக்களை  தங்களிடம் பகிர்கிறேன்.
-சஃபீர் ஜாஸிம்
தம்பி (ஜெயமோகன்) – சிறுகதை வாசிப்பிலிருந்து என் கருத்துக்கள்

இந்த சிறுகதை எல்லா ஜெ-வின் படைப்புகளை போல் கதைமாந்தர்களின் ஆழுள்ளத்தை அப்படியே வாசகர்களுக்கு கடத்துகிறது. மேலதிகமாக கதையிலுள்ள அமானுஷ்ய சித்தரிப்புகள், மேலோட்டமாக வாசிப்பவரை கூட கதைச்சூழலுக்குள், கதைமாந்தருக்குள் வாசகனைக் கொண்டு நிறுத்தி நடுங்க வைக்குமளவுக்கு இருக்கின்றன. சரவணனின் பார்வையில் அமானுஷ்யத்துக்கும் பிரமைக்கும் ஊசலாடும் தருணங்கள் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்த பிரமையை ஒரு திடமான அமானுஷயமாக அவன் உணர்வது, அவை எழுதப்பட்ட விதம், திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் jump scare போல் நொடிக்கு பயமுறுத்தாமல், ஒரு தொடர் திகிலை நமக்குள் புகுத்துகிறது.

ஒரு இயல்பான பொருளை தனிமையான, அரவமற்ற பொழுதில் (பெரும்பாலும் இரவில்), முக்கியமாக ஒரு எதிர்மறை மனநிலையில் பார்க்கும் போது அது ஒரு கணத்துக்கு அமானுட இருப்பாக தெரியும். இந்த வகை திகில், கதையில் கையாளப்பட்டுள்ளது. மேலும் கதைக்கு அப்படிபட்ட திகில்தான் ஏற்றது.

பொதுவாக பேய்க்கதைகளும் திரைப்படங்களும், மனிதமனம் உச்சக்கட்ட கற்பனையில் உருவகித்துக்கொண்டு பயப்படும் மின்னல் வேக குரூர உருவங்களை (பேய் என்றோ காட்டேரி என்றோ கூறி) கதைக்குள் பயன்படுத்துவன.’தம்பி’யில் (குறிப்பாக மனநோயின் ஆரம்பக் கட்டத்தில் ) காட்டப்பட்டிருக்கும் பேய் (பிரமை) சாதாரணமாக நாம் புறச்சூழலால், எதிர்மனநிலையால் ஒரு பொருளை, ஒரு அமானுட இருப்பு என தவறி உணரும் தருணங்களை ஒத்து இருப்பதால், அவ்வப்போது பின்னால் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டுதான் கதையை படித்தேன்.கதையின் சாரமே சரவணன் தன் மூளைபாதித்த அண்ணன் மீது கொண்ட அருவருப்பு, அவன் பதிலுக்கு தன் மீது காட்டிய அன்பு, அவனை வெறுப்பின் உச்சியில் கொலைசெய்தல் மற்றும் அதனால் விளைந்த குற்றவுணர்ச்சிகள். அவன் அண்ணனை சுற்றிய இந்த பல்வேறு உணர்ச்சிகள் முற்றி, பேயாக அவன்முன் வருகிறது.’பேய்ன்கிறது நம்ம மனசாட்சிதான்’ என எங்கோ கேட்டது படிக்கும்போது நினைவுக்கு வந்தது.

சகோதரர்களுக்குள் உள்ள ஒரு உளவியல் பிணைப்பு ×உரசல் முரணை கதை பேசுகிறது.”நான் ஒரு படம் என்று வைத்துக் கொள்வோம். அதே படத்தை நன்றாகக் கசக்கி விரித்தது போலத்தான் அவன். அவனது குரூபத்தோற்றத்துக்கு உள்ளே என்னுடைய முகமும் உடலும் ஒளிந்திருந்தது. அவன் பேசும்போது நடக்கும்போதும் என்னை ஏளனம் செய்வதுபோல இருந்தது.”

” ஒரு மங்கலாய்டு நமக்கு மகனாகப் பிறக்கலாம். நம் அப்பாவாக இருக்கலாம். நம் சகோதரனாக இருக்கக் கூடாது….”

நிச்சயமாக செந்திலும் தன் உருவத்தை தன் தம்பியில் கண்டு கொண்டதனால்தான் அவனிடம் அன்பு காட்டியிருக்க கூடும் என நினைக்கிறேன். இங்கு பிணைப்பு அன்பாக இருக்கிறது.

ஆனால் சரவணன் தன்னை அவனில் கண்டுகொள்ளும்போது அவனது குரூபத் தோற்றம், அவன் தோற்றத்தின் பகடிபோல் தெரிய அவனுக்கு அந்த பிணைப்பு முற்றிலும் எதிர்மறையாக ஒரு வெளிப்படையான அருவருப்பாக, வெறுப்பாக வெளிப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட அந்த வசனங்களிலிருந்தும், கதையிலிருந்தும் மங்கலாய்டு, அருவருப்பு எனும் விஷயங்களை நீக்கிவிட்டு பொதுவாக பார்த்தால், எல்லா உடன்பிறப்புகளுக்குள்ளும் அந்த ஒரு பிணைப்பு×உரசல் முரண் ஏதோ ஒருவகையில் (அவ்வளவு தீவிரமாக இல்லாதிருப்பினும்) இருக்குமோ என படுகிறது.

சரவணனுக்கு அண்ணனின் தோற்றம் வெறுப்பாக அல்லது அருவருப்பாக ஒருபக்கம் இருக்க , அந்த தோற்றமே தனக்கு நெருக்கமானவனாக அவனை ஆக்கிவிடுகிறது. அந்த நெருக்கம் அவ்வெறுப்பை பலகீனமாக்குகிறது.

அண்ணன் தன் மீது வைத்திருந்த கள்ளமற்ற அன்பு தனது அருவருப்பு உணர்ச்சியுடன் மோதி தன்னை ஏதோ கெட்டவன் போல காட்டியாதால் உருவான வெறுப்பு ஒருபக்கம் இருக்க , அவன் தன்னால் இறந்ததை எண்ணி வந்த குற்றவுணர்ச்சி அந்த வெறுப்பை பலகீனமாக்குகிறது.

அவன் தாய் அவன்மீது வைத்திருந்த அன்பு மேல் வெறுப்பு ஒருபக்கம் இருக்க, அந்த அன்பால் தாய் இறந்ததன் குற்றவுணர்ச்சி அந்த வெறுப்பை பலகீனமாக்குகிறது.

ஒரு இரவில் அவன் காணும் பிரமையை தனது அண்ணனோ என எண்ணி பயந்ததில் வந்த சிறு பொறி அவனுக்குள் அதுவரை உறங்கியிருந்த ஒவ்வொரு வகை வெறுப்பையும், அது விளைத்துவிட்ட குற்றவுணர்ச்சிகளையும் எழுப்பி ஒன்றோடுன்று மோதவிட்டு அவனை பிளந்து விடுகிறது. தன் குற்றவுணர்ச்சியே அண்ணனாய் வந்து நிற்க, அவன் அதனுடன் தனது வெறுப்பால் மோதி இறுதியில் அந்த இரண்டாலும் தோற்று இறக்கிறான்.

கதையின் உச்சம், சரவணனின் நிலை குறித்து டாக்டர் அதுவரை கொண்டிருந்த உளவியல் தர்க்கங்களை ஒரு நொடிக்கு ஆட செய்யும் அந்த இறுதி சிரிப்பு சத்தம்.

1.அதை ‘அறிவியலுக்கு அப்பாற்ப்பட்ட திடமான பேய்தான்’ எனக்கொள்ளலாம். அல்லது

2.தர்க்கத்திற்கு உட்பட்டு ‘அது மரித்த உடல் படிப்படியாய் தளரும்போது நிகழ வாய்ப்புள்ள செயல்தான்’ என கொள்ளலாம்.

அல்லது

3.’சரவணன் கொண்ட உச்சநிலை பிறழ்வை தொடர்ச்சியாக கண்ட பாதிப்பால் டாக்டர் கொள்ளும் பிரமை’ எனக்கொள்ளலாம்.

எப்படி கொண்டாலும் சரவணனின் மரணத்துக்கு முன்பு வரை அவனுள் இருந்த வெறுப்பாலும், அண்ணனின் கள்ளமற்ற அன்பால் தாயின் பிரிவால் ஆன குற்றவுணர்ச்சியாலும், விளைவில் உருவகித்த செந்திலின் மறுபிரதியாலும் கூடி அவனில் உருவான ஆளுமைப்பிளவின் உக்கிரம், அந்த சிரிப்புக்கு ஒரு படி மேலே போய் ஒரு விளக்க இயலா திகிலை படர்த்துகிறது.

அவனது பிளவுண்ட மனம் பிறரை நம்பவைக்க அல்லது தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அவனது உடலை, குரல்வளையை கதைநெடுக இயக்கியது போல், அவற்றை மரணத்தின் நுனி வரை இயக்க செய்து, உடல் மரித்து விட்டு தளரும்போது விழும் இறுதி ஓசையாகவேணும் தன்னை வெளிப்படுத்த செய்திருக்கிறது.

அந்த பிளவுண்ட/ பிறழ்வுண்ட மனம் எந்த ஒரு பிசாசை, காட்டேரியை விடவும் திகிலூட்டுவது. மனம் என்பது பேராற்றல்.அந்த இறுதிசிரிப்பின் மூல ஊற்று அந்த பேராற்றலின் கிலியூட்டும் மற்றோரு மர்மதோற்றம்.

-சஃபீர் ஜாஸிம்

முந்தைய கட்டுரைஇன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் காந்திகள்!-பீட்டர் துரைராஜ்
அடுத்த கட்டுரைஅசோகமித்திரனும் புவியரசுவும்-சக்திவேல்