சடம் கடிதங்கள் -5

சடம் [சிறுகதை] ஜெயமோகன்

அன்புள்ள ஜெ

பிணவிழைவு (necrophilia ) என்னும் சொல் பெல்ஜிய எழுத்தாளர் Joseph Guislain, முன்வைத்தது. மனிதர்களில் இந்த விழைவு உள்ளார்ந்து செயல்படுவதாக அவர் சொன்னார். பல குற்றங்களில் கொலைக்கு பிறகு உறவு நிகழ்ந்திருப்பதை பிணக்கூறாய்வுகள் தெரிவிக்கின்றன. 1980 களில் இப்படி ஒரு வழக்கு தமிழகத்திலும் பேசப்பட்டது. இந்த மனநிலைக்கான காரணம் என்ன என்பதற்குப் பல விளக்கங்கள் உண்டு. முக்கியமான விளக்கம் என்பது எதிர்த்தரப்பு எதிர்வினையே இல்லாமல் இருப்பதுதான் காரணம் என்பது. அந்த விளக்கத்திற்கு ஒரு விளக்கம் இந்தக் கதை. எதிர்தரப்பை தன் கற்பனை வழியாக ‘உயிர்பெற’ செய்யும் வாய்ப்பு அமைகிறது. இது ஒரு அகநிலை. இந்தக்கதை அதைத்தான் சொல்கிறது என நினைக்கிறேன்

சாமுவேல் ஆசீர்

***

அன்புள்ள திரு ஜெ அவர்களுக்கு,

இந்தக் கதை என்னுடன் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது போல உள்ளது.

அனைத்து மனிதர்களும் (சித்ததால்) பல்வேறு நூல் திரிகளை தங்கள் விருப்பமானவை (ஜடம்) மீது வீசி,  கவர்ந்து,அதிலேயே சிக்கி பிணையுண்டு இருப்பது  போன்ற ஒரு தரிசனத்தை ஒரு முறை ஈஷா யோகா மையத்தில்  கேட்டதுண்டு.   அந்த நூல் திரிகளை எல்லாம் விலக்கி உள்நோக்கி சென்று அமர்வது பெரும் பாடு –  யோகம்.

நான் செய்யும் ஒவ்வொரு செயலும் – கவனம் (சித்தம், consciousness ) என்னும் நாணயம் செலவழித்து , எனக்கு புறத்தில் உள்ள (ஜடப்பொருள்) ஒன்றுடன் இயங்கி செய்வது.  பணியுலகிலும் அதுவே,  பொழுது போக்கிற்கு செய்வதுவும் அதுவே.   என் சித்ததாலேயே வெளியில் உள்ள ஜடம் (எனக்கு) உயிர் கொள்கிறது. குயவன் பானை வனைவது போல, மனிதர்கள் தங்கள் சித்ததால் ஜடத்தை வனைந்து தங்களுக்கு பிடித்த பொம்மைகள் செய்து விளையாண்டு களித்து செத்து மடிகிறார்கள்.    குடும்பம், உறவுகள், வீடு, அந்தஸ்து போன்று… ‘அனைத்துமே நாய் புணர்ந்த நிலையில் தான் உலகத்தில் எல்லாமே உள்ளன’ என்று ஒரு வாசகர் கடிதம் சொன்னதும் இதுவே.

இதில் வரும் சீண்டும் பாலியல் குரூரம் ஒரு கதை சொல்லியின் யுக்தி மட்டுமே.   சித்தம் தன்னிலை மறந்து உலகியல் ஆசைகளில் அலைக்கழிக்கப் பட்டு, புறத்தோடு புணர்வது கிட்டத்தட்ட சுடலைப்பிள்ளை செய்தது போல அருவருக்கத் தக்க செயல். சாமியாருக்கும் , பாந்தனுக்கும் நகர வீதிகளில் உலகியலில் மூழ்கி காண கிடைக்கும் எந்த சாமானியனும், சுடலைப்பிள்ளைக்கு ஒப்பானவரே.

தங்கள் உண்மையுள்ள
கோகுல்

சடம் கடிதங்கள்-4

சடம் கடிதங்கள்-3

சடம் கடிதங்கள்-2

சடம்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைஉணர்வுகள், உன்னதங்கள்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைமறக்கப்பட்ட புன்னகை, எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் படைப்புகள்