கேளாச்சங்கீதம்
https://www.vishnupurampublications.com/
அன்பு ஜெ!
எப்படி உங்கள் தளம் கண்டு வாசிக்கத் துவங்கினேன் என்பது நினைவில் இல்லை. எப்போதிருந்து என்பதும்தான். ஏதோ ஒரு தினம் கேளாச் சங்கீதம் வாசித்தேன். முதல் வாசிப்பில் நான் கதைக்குள் உள்ளே செல்லாமல் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவாறு இருந்தேன் அல்லது விலக்கம் கொண்டிருந்தேன். இத்தனைக்கும் இப்போதுவரை கணேசன் குடித்த மதுரத்தை அனுதினமும் குடித்து அதன் மயக்கத்தில் திளைத்தும் களைத்தும் போய்க்கிடக்கிற ஒருவன்தான் நான்.
எதனால் நான் மங்கை அவளில் மயங்கித் திரிகிறேன் என்பது என் அறிவுக்கும் மனதிற்கும் நன்கு தெரியும். அதுதான் கணேசனுக்கும் எனக்குமான வேறுபாடு. ஆனால் அதிலிருந்து வெளிவருகிற சூத்திரம் பிடிபடாதிருந்த வகையில் நானும் கணேசன் ஆகிப்போகியிருந்தேன்.
ஜெ! அவள் என்னிலும் ஒரு விரற்கடையளவு உயரம். எனக்குப் பிடித்தமான உடல்வாகு. ஒளி வீசும் பற்கள். பேசும் விழிகள். அவள் சிரிக்கிறபோது சிறு மின்னல் ஒன்று வெட்டி முகத்தில் பரவி ஒளியாக நிலைத்திருக்கும். சிரித்துக் கொண்டேயிருப்பாள். மலையாளத்தில் அவள் அம்மையோடு பேசுவதைக் கேட்க வேண்டும்! அவளின் பேச்சை ராஜாவின் இசையாகத்தான் என் மனம் மொழிபெயர்த்துக் கொள்ளும். சிறுவயதில் அப்பாவை இழந்தவள். நிறைய சிலுவைகள் சுமந்தவள். ஆனால் அதன் சுவடுகூட தெரியாது. அப்படி வாழ்வை கொண்டாடி வாழ்கிறவள். அறிவுக் கூர்மை கொண்டவள். என் இரசனையோடு ஒத்துப் போகிறவள். இப்படி தோரணமாக நீளும் காரணங்களால் அவள் என்னில் அமிழ்ந்து கிடக்கிறாள். பித்துப்பிடித்து திரிந்தேன். விலக நினைப்பேன், அவள் இறங்குவாள். அவள் விலகுகையில் நான் இறங்குவேன். சமயங்களில் காலமும் எங்களை இணைக்கிறபடியான கோலம் போடும். நான் மணமானவன். அவளுக்கு இனிதான். மோகமுள் பாபு-யமுனா என என்னென்னவோ ஓடும் மனதில். தூரத்தில்தான் இருக்கிறோம். என்றாலும் தினம் தொடர்பில் இருக்க இந்த அலைபேசியும் கட்புலனும் போதாதா?
எல்லாத் திசைகளிலிருந்தும் தொலைதூரங்களிலிருந்தும் என்னின் வெகு ஆழத்திலிருந்தும் என்னில் அவள் அதிமென்மையாக முடிவேயில்லாத கேளாச் சங்கீதத்தை இசைத்துக் கொண்டேயிருந்தாள். இன்னும் கூடத்தான். உறக்கத்திலும் சதா அவள் நினைவுகளில் அரற்றுகிற மனதிற்கும் புத்திக்கும் அவளிலிருந்து தொலைவு கொள்ள உங்கள் எழுத்துக்களைத்தான் பக்கம் கொண்டுள்ளேன் சமீப காலமாக. நல்ல விளைவு உணர்கிறேன்.
நன்றியும் அன்பும்
சத்யன்