நுகர்வு இன்று -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

நுகர்வு பற்றிய ஒரு காந்திய உரையில் நீங்கள் என் மூளை கட்டுகளை அவிழ்த்து விட்டுருக்கிறீர்கள். நுகர்வுக்கான தீர்வு பின்னோக்கி  திரும்புவதே என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த உரையை சில ஆண்டுகளுக்கு முன் கேட்ட ஞாபகம் ஆனால் பெரும்பாலும் அன்றாடம் நுகர்வைப்பற்றி சிறிதேனும்  ஒரு அக உரையாடல் எழும்.

எங்கும் நுகர்வுக் குப்பைகள். ஆணையிடும் விளம்பர போர்டுகள். கட்டளையிடும் வணிக காணொளிகள். கிட்டத்தட்ட நுகர்வின் விளிம்பு நிலைக்கு சென்று விட்டோம் நாம். நுகர்ந்து நுகர்ந்து பூமிப்பந்து ஒடுக்குளுக்தே போய்விடும் போல. நுகர்வு பற்றிய என்னுடைய இரண்டு  எண்ணங்களை உங்கள் முன் வைக்கிறேன். இது ஒரு முதிரா எண்ணமே இருப்பினும் உங்கள் முன் வைப்பதில் ஒரு நிறைவு.

இணையம், சமூக வலைத்தளம் அடுத்து மெய்நிகர் உண்மை உலகை நோக்கி சென்று கொண்டிருக்கிரோம். மெய்நிகர் உலகில் நாம் யாராக வேண்டுமானாலும் வாழக்கூடிய நிலை வெகு தொலைவில் இல்லை. இப்போது  பல வணிக நிறுவனங்கள் விர்ச்சுவல் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகின்றனர். இவ்வாறிருக்க நுகர்வுக் கலாச்சாரம்  மெய்நிகர் உலகில் திளைக்கும் என்றால் பூமி நுகர்வில் இருந்து தப்பும் வாய்ப்பு உள்ளது என்று நான் நினைக்கிறேன்.

மனிதர்கள் அப்படி விடமாட்டார்கள். கட்டற்ற நுகர்விற்கு ஒரு தீர்வு ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கை இல்லாமலில்லை. ஆனால் அந்த நம்பிக்கை எதுவரை? மனிதன் உயிர் வாழ ஒரு வேற்று கிரகம் கண்டுபிடிக்கும் வரை தான். நாம் வாழும் உலகை உலையில் போட்டுத்தானே வேற்று உலகை சமைக்க முடியும்.

இப்படிக்கு,
அருண்

அன்புள்ள அருண்

நுகர்வு என்பது நம் இன்றைய உலகின் சிக்கல். மிக எளிமையாக அதற்கு தீர்வு சொல்லிவிடமுடியாது. காந்தி காலத்தைவிட சிக்கலானது. நுகர்வுதான் உற்பத்தியின் அடிப்படை. உற்பத்திதான் செல்வ உருவாக்கம். செல்வம்தான் அடிப்படை வசதிகள். ஆகவே நுகர்வை தவிர்ப்பது ஏழ்மையை கொண்டுவரும் என்பது நவீனப்பொருளியல்.

நுகர்வின்மீதான கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் என்ன என்பதே இன்றைய கேள்வி. நுகர்வை எவர் கட்டுப்படுத்துவது, என்னென்ன அடிப்படைகளில்? நுகர்வு ஆடம்பரமோ போட்டியோ ஆகாமல் தடுப்பதெப்படி? அதெல்லாம்தான் நாம் இன்று யோசிக்கவேண்டியவை.

ஜெ

முந்தைய கட்டுரைஏழாம் உலகம், வாசிப்பு
அடுத்த கட்டுரைசுவரில்…