ஆசான் – கடிதங்கள்

ஆசான் என்னும் சொல்

அன்புள்ள ஜெ

ஆசான் என்னும் சொல் பற்றிய கட்டுரை வாசித்தேன். ‘அரசியல்வாதிகளில் எவரையெல்லாம் நீங்கள் ஆசான் என்றும் தெய்வம் என்றும் சொல்கிறீர்கள்? ஒருவரையாவது பெயர் சொல்லி பேச முடியுமா? எழுத்தாளரை ஆசான் என்றால் மட்டும் ஏன் தன்மதிப்பு தலைக்குமேல் ஏறுகிறது?’ இதை நானும் ஐம்பதுபேரிடமாவது கேட்டிருப்பேன். அவர்களின் பிரச்சினை எழுத்தாளர் என்னும் ஆளுமை மேல் அவர்களுக்கு மதிப்பில்லை, அவரிடமிருந்து எதையும் கற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதுதான்.

ஒருவர், எழுதக்கூடியவர், சொன்னார் ‘நான் எதையுமே படிப்பதில்லை. இன்ஃப்ளூயன்ஸ் ஆகிவிடுவேன்’ ஆனால் கண்டபடி சினிமா பார்ப்பார். அவருடைய எழுத்தே சினிமாவின் நிழல்தான். இதெல்லாம் அறியாமையின் வெவ்வேறு முகங்கள்

அர்விந்த்குமார்

அன்புள்ள ஜெ,

ஆசான் என்னும் சொல் வாசித்தேன். எனக்கும் நீங்கள் ஆசான் தான் ஆனால் அதைவிட ஆசிரியர் என்று எனக்குள் கூறிக் கொள்வது நன்றாக இருக்கிறது.

அதுமட்டுமல்ல உங்களுடைய எழுத்து சில நேரம் எனது தந்தையின் “சொல்லாமல் சொல்வது” போல இருந்தாலும், பல சமயம் என் முத்த சகோதரர் திட்டுவது போலவும் உணர்கிறேன்.

என்ன இருந்தாலும், ஏதாவது எழுதினால் நண்பன் போல தோற்றம் கொடுக்கும் ஜெ தான் எனக்கு விருப்பமானது.

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா.

***

மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.

ஆசான் என்னும் சொல் பதிவு தொடர்பாக, ஒரு கேள்வி.  கேள்வி பொதுவாக ஒருவரை விளிப்பதைப் பற்றி.

நேர்ப்பேச்சில் நாம் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கும் ஒருவரை,  சார் என்று கூறவருகிறது.    அய்யா என்பது எல்லா இடத்திலும் பொருந்தி வருவதில்லை.

மேடைப்பேச்சில் “செந்தில் அவர்களே” என்று விளிக்கும் பழக்கம் இருந்தாலும்,  நேர்ப்பேச்சில் ‘அவர்களே’ என்னும் விகுதி சேர்த்து இங்கு விளிப்பதில்லை.  ‘செந்தில் சார்’ என்பதே பொதுவான வழக்கமாக உள்ளது.

ஆனால், நீங்கள் கன்னடத்தில் கவனித்திருக்கக் கூடும்,  அவர்கள் பேச்சு வழக்கில், வெகு இயல்பாக ‘அவரே’ ‘அவுரே’ என்ற விகுதி சேர்த்து அழைக்கிறார்கள்.  கேட்டிருப்பீர்கள்.   நன்றாக இருக்கிறது தானே?   செந்தில் அவரே,  ஜெயமோகன் அவரே.   எளிமையாகவும் உள்ளது, மரியாதையாகவும் உள்ளது.  சார் மோர் ஜி எதுவும் தேவையில்லை.

அவரே என்ற சொல் நமக்கும் அதே பொருள்தான்.  ஒரே மொழிக்குடும்பம் தான்.    ஆனால், தமிழில் இந்தப் புழக்கம் இல்லாமல் இருப்பது ஏக்கமாக உள்ளது.

ஏதேனும் ஒரு திரைப்படத்தில்,  முக்கியப் பாத்திரம் ஒருவர் இவ்வாறு பயன்படுத்தினால்,  பரவிவிடுமோ?

அன்புடன்,
வி. நாராயணசாமி.

முந்தைய கட்டுரைஉதிர்பவை மலர்பவை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇலக்கியநுண்ணுணர்வு – மூன்றுவிதிகள்