ஆழத்தில் விதிகள் இல்லை- அசோகன்

காதுகள் – சொற்பொருட் பேதத்தின் விளையாட்டுக் களம்- அந்தியூர் மணி

காதுகள், அந்தியூர்மணி – கடிதம்

மரபுப் பிரச்சாரகர் அல்ல மணி

மதிப்பிற்குரிய ஜெயமோகன்அவர்களுக்கு,

வணக்கம்.

போன கடிதம் வரைக்கும் “ஜெமோ” என்று போட்டுதான் விஷயத்தை ஆரம்பித்தேன்.  நேத்து பார்த்து, ஏளனம் செய்பவர்கள்தான் அப்படி கூப்பிடுகிறார்கள் என்று ஒரு போஸ்ட்டில் எழுதி உலக்கையால் இடித்துவிட்டீர்கள். சரி. எதற்கு வம்பு? அழைப்பை மாத்திவிடுகிறேன். அப்புறம் “நமோ” என்று செல்லப்பெயர் சூட்டி ப்யூரருக்கு கோஷம் போடும் ஒருகூட்டம் இருப்பது இதுவரை மண்டையில் உரைக்கவில்லை. பெயரில்கூட நமக்கு அந்த வாசமே வேண்டாம். இனி எப்பவும் ஜெயமோகன்தான்.

O

அந்தியூராரின் கட்டுரைக்கு நான் போட்ட பதிலை இவ்வளவு சீக்கிரம் சைட்டில் பப்ளிஷ் செய்வீர்கள் என்று எண்ணவில்லை. அந்த ஆச்சர்யத்தை டபுளாக்கும்படி சத்திவேல் என்பவரின் லெட்டரும் சைட்டில் வந்திருக்கிறது. “சக்திவேல்” எனும் பேரில் கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து ஒருவர் நிறைய கடிதங்கள் எழுதுவார். படித்திருக்கிறேன்.  “த்” வைத்து சத்தி என்பது புதுசாக இருக்கிறது. நல்லது. யாரோ புதிய நண்பர். பொருட்படுத்தி எனக்கு பதில் எழுதியுள்ளார். நன்றி. எல்லா கருத்துக்களும் கருந்துளைக்குள் போய் தொலைந்துவிடும் காலத்தில் வாழ்வதாக நான் நினைத்திருந்தேன். ரியாலிட்டி அப்படி இல்லை போல. சத்திவேல் தெம்பாய் உரையாடலை முன்னெடுப்பது சந்தோஷமாய் உள்ளது.

பிரதிவாதியின் கருத்துக்கு வாதி பதில் சொல்வதற்கு முன்னால் ஒன்றை கட்டாயம் தெளிவுப்படுத்த வேண்டும். சத்திவேலர் என்னென்ன அம்சங்களை அந்தியூராரின் கட்டுரையில் முக்கியமானவை என்று கோடு போட்டுக் காட்டுகிறாரோ அதே அம்சங்கள்தான் அசோகனார் பாராட்டி எழுதியுள்ளார் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. அரசியலில்தான் போலரைசேஷன் என்று பார்த்தால் இலக்கியத்திலும் அது நுழைந்துவிட்டது போல. அந்தியூராரின் வாசிப்பை நான் முழுக்க ரிஜெக்ட் செய்யவில்லை. மரபான பார்வை கூடாது என்பது என் கருத்தல்ல. சத்திவேலன் இரண்டு கடிதங்களையும் பலமுறை வாசித்ததாக சொல்லியிருக்கிறார். எனக்காக என் கடிதத்தை இன்னொரு தடவை வாசித்து விடுங்கள் நண்பரே!

இனி என் பக்கத்து நியாயங்கள். நவீனம், மரபு என்றொரு பைனரி சக்திவேல் உருவாக்குவதை கவனித்தீர்களா? அதுதான் மூலப் பிரச்சனை. அங்குதான் தடுப்புக் கட்டை போட வேண்டும் என்கிறேன் நான். அந்தியூராரின் கட்டுரையில் அதே பிரச்சனைதான் உள்ளடங்கி இருக்கிறது. சத்திவேலர் பூனையை சாக்கிலிருந்து வெளியே எடுத்துவிட்டார். இனி பேசுவது கொஞ்சம் ஈசி.

சத்திவேலரின் எழுத்தை மேம்போக்காய் பார்த்தால் அவர் பைனரியை மறுப்பது போல் தெரியும். ஆனால் மொழியில் அர்த்தம் மேலடுக்கில் மட்டும் பார்க்கக் கிடைப்பதில்லை. சொல்லும் செயலும் சுலபமாக வேறுபடுவதுப்போல் சொல்லும் பொருளும் கூட வேறுபடும். ஸ்கூலில் மட்டும் தான் இரண்டுமே ஒன்றுதான் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மொழி ஒரு மாபெரும் இல்யூஷன். சத்திவேலர் குறிப்பிடும் அயோத்திதாசரின் பார்வையில் சொன்னால் புறமெய், உள்மெய் என்று மொழியில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.சத்திவேலரின் பதிலாகட்டும்,அந்தியூராரின் பதிலாகட்டும் இரண்டு பேரிடமும் இருக்கும் உள்மெய்யைத்தான் நான் விமர்சிக்கிறேன்.

(நடுவே சக்திவேலர் அயோத்தி தாசர் விவாதத்தையும் கையாண்டுள்ளார்.நானும் ஸ்டாலின் ராஜாங்கத்தை படித்திருக்கிறேன். டி.தர்மராஜையும் படித்திருக்கிறேன். ஆனாலும் இந்த மாற்றுக் கதையாடல் போன்ற சமாச்சாரங்களில் எனக்கு தெளிவு இல்லை. இவற்றையெல்லாம் செயல்பாட்டை வைத்தல்ல விளைவுகளை வைத்து புரிந்துகொள்ளவேண்டும் என்பது இப்போதைய என் தெளிவு. இந்த விஷயத்தில் அறிஞர்கள் பேசுவது சரி என்பது என் தாழ்மையான கருத்து. அயோத்திதாசர் வெகுஜனமயமானது மகிழ்ச்சிக்குரியது என்கிறார் பேராசிரியர் தர்மராஜ். எனக்கு என்னவென்றால், அப்படி எல்லோர் வாயிலும் விழ வேண்டுமா என்று ஒரு சம்சயம்)

அந்தியூராரின் விமர்சனக் கட்டுரை மறுபடி அலசலாம். சித்தர் மரபில் சாதகம் எப்படி நடக்கிறது என்பதை சில பத்திகளில் அவர் விளக்குகிறார். அந்த போர்ஷனை மட்டும் மறுபடி படித்து பாருங்கள்.அக்கம் பக்கத்தில் யாராவது சித்தர் இருந்தால் ஓடிப் போய் மந்திரம் படித்து வாழ்க்கைப்பாட்டை தீர்த்துக் கொள்ளலாம் என்று ஒரு நொடி மனம் பரபரக்கிறதா இல்லையா? பேசாமல் அந்தியூராரிடமே போய் சிஷ்யனாய் சேர்ந்துவிட்டால் என்ன என்றுக்கூட கபடமில்லாமல் நான் யோசித்தேன். வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள். வெளியேயும் ஆயிரம் பிரச்சனைகள். ஞானம் கிடைத்தால் தேவலாம் என்றுதான் தோன்றுகிறது. அந்தியூரார் இப்படியே பேச்சை நீட்டுகிறார். சில விசேஷ நோய்களுக்கு மூலிகை இருக்கிறது. மந்திரங்களுக்கு தொல்காப்பியரே சர்டிபிகேட் கொடுத்துவிட்டார் என்று அவர் அடுக்கிக்கொண்டே போவதைத்தான் நான் வக்காலத்து வாங்குவது என்று சொல்கிறேன். கடைசியில் “யாம் நடத்திய நாடகம் இது” என்று சிவபெருமான் வேஷத்தை கலைப்பது போல், நான் தான் மகாலிங்கம் என்று வேறு அந்தியூரார் சொல்கிறார். இதுக்கு மேலுமா அக்கட்டுரை நம்பிக்கையில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது என்பதற்கு வேறு எவிடென்ஸ் வேண்டும்?

நிஜமாகவே இப்படி ஒரு மரபு தமிழில் இருக்கும்போது அதை ஏன் அப்படியே “நம்பிக்கை வெளிப்படும் விதமாக” சொல்லக்கூடாது என்று ஒருவர் கேட்கலாம். முருகன் வந்து சொன்னால் எனக்கும் பிரச்சனை இல்லைதான்.அந்தியூரார் இலக்கிய விமர்சனத்தின் சொல்லும்போதுதான் இடிக்கிறது. அப்புறம் மொழி உங்களோடு பேசுவது லாஜிக்கால் மட்டும் அல்ல. எனவே அது ரீடரிடம் என்ன விளைவுகளை உண்டுபண்ணுகிறது என்பது இன்றைக்கு ரொம்ப முக்கியம். அந்தியூராரின் கட்டுரை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதனால்தான் அது நம்பிக்கையில் இருந்து எழுதப்பட்டிருக்கிறதோ என நான் சந்தித்தேன். சக்திவேலர் என் சந்தேகத்தை ஊர்ஜிதமாக்கிவிட்டார். இதுவெல்லாம் வெறும் மரபுசார் தரவுகள்தான் என்று சக்திவேலர் கூறுவாராயின்,ஒன்று அவர் நம்பிக்கைவாதியாக இருக்க வேண்டும்.அப்படி இல்லை என்றால்,மொழிக்கு நேரடிப்பொருள் மட்டுமே உண்டு என்று நம்பும் அப்பாவியாக இருக்க வேண்டும். அவர் அப்பாவி இல்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது.நம்பிக்கைவாதி என்று நினைக்கிறேன். ரொம்ப லாஜிக்கலாக தன்தரப்பை முன்வைக்கிறார். லாஜிக்கலான நம்பிக்கைவாதிகள் கொஞ்சம் அபாயகரமானவர்கள்.

நவீனத் தரவுகளை மட்டும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்கிறீர்கள் மரபுத்தரவுகள் என்றால் மட்டும் கசக்கிறதா? மாடி வீட்டு மங்கை என்றால் மயக்கம் ஏழைவீட்டு பெண் என்றால் ஏளனமா? இப்படி சத்திவேலர் எமோஷனல் பிளாக்மெயில் வேறு செய்கிறார். அந்தியூரார் சொல்வதும் இதைத்தான். ஆனால் அவர் மரபார்ந்த நம்பிக்கைவாதி என்பதால் இந்த ஜாலங்கள் அவருக்கு கைவரவில்லை. சக்திவேலர் சமகாலத்து நம்பிக்கைவாதி போல. சரியாக மடக்கப் பார்க்கிறார். ஆனால் ஒரு விஷயம் முக்கியம். செண்ட் பாட்டில்கள் போல் இறக்குமதியாகும் வெளிநாட்டு கோட்பாட்டு சமாச்சாரங்களை நானே என் பதிலில் சாடலாகத்தான் பேசியிருக்கிறேன். அதை வைத்து நான் பொதுப்போக்கான நவீனத்தை கண்ணைமூடி ஏற்றுக்கொள்பவன் அல்ல என்பதை சக்திவேலர் யோசித்திருக்கலாம். ஆனால் அவரால் அப்படி யோசிக்க முடியாது. நீ தப்பு என்று சொன்னால்தான், நான் சரி என்று அவரால் நிரூபிக்க முடியும். பைனரி என்று இதைத்தான் சொல்கிறேன். நான் இரண்டு தரப்பும் கோணலானது என்கிறேன். அதுதான் சக்திவேலரை குழப்பம் அடைய வைக்கிறது.

என் கடிதத்தில் இருக்கும் “மார்டன்” என்கிற வார்த்தையை, சட்டை பேண்ட்டை உயர்த்தி பேசி வேட்டி சட்டையை மட்டம் தட்டுவது என்கிற ரீதியில் சுருக்கி புரிந்துகொள்ள வேண்டாம். சமகாலத்தின் இன்றைய நிலையைத்தான் நான் மார்டன் என்கிறேன். நீங்களும் நானும் சொந்த நம்பிக்கையை விலக்கிவைத்துவிட்டு காமன் ஸ்பேசில் பேசி உரையாட முடியும். மார்டன் மொழியில்தான் அது சாத்தியம். நவீனத் தரவுகளுக்கு இயல்பாகவே அந்த அம்சம் இருக்கிறது. மரபுத் தரவுகளுக்கு அதை வெளியிலிருந்து கொடுக்க வேண்டும். மரபுக்கு ஜாமீன் கையெழுத்து போடாமல் பேச வேண்டும். நவீனத் தரவுகள் அப்படி எந்த உத்தரவாதத்தையும் கேட்பதில்லை. அதுதான் இரண்டு வகை மொழிக்கும் உள்ள வித்தியாசம். மத்தபடி மரபை பழிப்பதல்ல நான் சொல்லும் மார்டன். இன்றைய நிலையில் மரபான வழிகளை சும்மா கிண்டல் செய்யும் பகுத்தறிவு செல்லுபடியாகாது. தை பிறந்தால் ஐ.டி கம்பனிகளிலேயே பொங்கல் வைக்கிறார்கள். எனவே நான் சொல்லும் மார்டன் என்பது மரபு எதிர்ப்பு அல்ல. அதுப் போன்றே சத்திவேலர் சொல்லும் நவீனத் தரப்பும் இப்பொழுது ஜோராக இயங்கிக் கொண்டிருக்கவில்லை. அரசியலில் அவர்கள் சத்தம் கேட்கிறதுதான். அதுக்கு காரணம், எதிர்த் தரப்பில் மரபின் ஒவ்வொரு கோணலையும் படியாக்கி அரியணை ஏறி அமர்ந்திருக்கும் “நமோ”  பூதம். சரி. ரொம்ப அரசியல் பேச வேண்டாம். மீண்டும் இலக்கியத்துக்கு வருகிறேன்.

இலக்கியத்தில் இன்று பவரில் இருப்பதே ஜெயமோகன் வட்டம்தான். மரபின் அவசியத்தை ஏற்கனவே எழுதி நிறுவிய ஒருவர்தான் இன்று முக்கியமான பவர் சென்ட்டர்.  இதை நான் நெகட்டிவாக சொல்லவில்லை. மனம் உவந்து பெருமையோடே சொல்கிறேன்.  சூழ்நிலை இப்படி இருக்கும்போது சத்திவேலர் எதற்கு வஞ்சிக்கப்பட்ட ஒரு தொனியை தேர்ந்தெடுக்கிறார்? அவர் சொல்லும் அந்த மற்றவர் யார்? எம்.வி.வியின் காதுகள் நாவலை நல்ல படைப்பாக கருதாத சுந்தர ராமசாமிதான் அசலான நவீனத் தரப்பு. அந்த பாணி விமர்சனம் இன்று எழுதப்படுகிறதா என்ன? அரசியல் கட்டுடைப்பு செய்யும் விமர்சனங்கள்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. இது இந்துத்துவ பிரதி. இது கிறிஸ்துவ பிரதி. இப்படி நிறைய லேபிள்கள் இருக்கின்றன. ரேஷன் பையில் ஸ்டிக்கர் ஒட்டுவதுப் போல் படைப்பின் மேல் எதையாவது ஒட்டிவிடுகிறார்கள். அதுக்கெல்லாம் நாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது.நான் கேட்பது சுந்தர ராமசாமிப் போல் ஒரு பெரிய பெர்சனாலிட்டி இலக்கியம் மேல் நம்பிக்கைக்கொண்டு முன்வைக்கும் நவீனத் தரப்பு இன்று இருக்கிறதா? ரேஷனாலிட்டியை முன்வைக்கும் ஆளுமைகள் யார்?  எனக்கு தெரிந்து இல்லை. இல்லாத எதிரியின் முன்னால் தொடையை தட்டி சபதம் எடுத்து என்ன லாபம் என்றுதான் நான் கேட்கிறேன்.

“மரபு பிரச்சாரகர் அல்ல மணி” எனும் தலைப்பே கொஞ்சம் பகீரிட வைக்கிறது. “மரபு பிராச்சாரகர் மணி” என்று நான் என் லெட்டருக்கு தலைப்புக் கொடுக்கவில்லை. ஆனால் நான் அப்படி சொன்னதான அர்த்தத்தை இந்த தலைப்பு கொடுத்துவிடுகிறது. இதுதான் நம்பிக்கைவாதிகளின் வன்முறை. போலீஸ்காரர்கள் இப்படித்தான் விசாரனையை ஆரம்பிப்பார்கள். வாக்குமூலம் எழுதிவிட்டுதான் கேள்வியே கேட்பது. நம்பிக்கைவாதிகளுக்கும் போலீஸ்காரர்களுக்கும் இருக்கும் ஒற்றுமைகள் பற்றி இன்னொரு நாள் தனியே பேச வேண்டும். அந்தியூரார் மரபை பிரச்சாரம் செய்வதற்காக அக்கட்டுரையை எழுதினார் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அக்கட்டுரை மரபின் பிரச்சாரமாக வளர்கிறது. இதுதான் நான் சொன்னது. இரண்டுக்கும் நடுவே பெரிய வேறுபாடு இருக்கிறது.

கடைசியாக அந்தியூராரின் கட்டுரையில் உள்ளடக்க பாணி விமர்சனம் இல்லை என்று சக்திவேலர் சொன்னது இடி முழங்கும் சினிமா சோகக்காட்சி ரக அதிர்ச்சி. உள்ளடக்க விமர்சனத்தை அறிய உள்மெய்யெல்லாம் தேவையில்லை. புறமெய்யே போதும். நாவலின் மொழி பற்றியோ ஸ்ட்ரக்சர் பற்றியோ கட்டுரையில் ஒரு வார்த்தை கிடையாது.மகாலிங்கம் தவிர வேறு கேரக்டர்கள் பற்றி மூச்சே இல்லை. மகாலிங்கத்துக்கும் உலகத்துக்குமான உறவு நாவலில் எப்படி எழுதப்பட்டிருக்கிறது மொழியில் எப்படி உருமாறியிருக்கிறது என்பது பற்றி அந்தியூரார் பேசவே இல்லை. இலக்கியத்தில் எம்.வி.வியின் இடம் என்ன என்றோ அல்லது எம்.வி.வியின் படைப்புகளிலேயே காதுகளின் இடம் என்ன என்றோ குரல் இல்லை. ஆசிரியரின் வரலாறும் கிடையாது. நாவலின் வரலாறும் கிடையாது. அட, நாவல் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதைக்கூட அந்தியூராரின் கட்டுரையில் இருந்து தெரிந்து கொள்ள முடியவில்லை.  “முக்கியமான நாவல்” என்று சொல்வதை என்னால் புரிந்துகொள்ளவே முடிந்ததில்லை. யாருக்கு முக்கியம்? ரீடருக்கா?விமர்சகருக்கா? எழுத்தாளருக்கா? பப்ளிஷருக்கா? ஒரே குழப்பமாகிவிடுகிறது. அந்தியூராரிடம் நாவல் என்ன உணர்ச்சியை ஏற்படுத்தியது. அதை பேதமில்லாமல் ராவாக சொல்லவில்லையே. மகாலிங்கத்தின் கதையை சொல்லிவிட்டு கதைக்கு மேல் அந்தியூரார் தன் நிலைப்பாட்டை பேசிக் கொண்டேயிருக்கிறார். நாவல் என்பது வெறும் கதை அல்ல என்பது இலக்கியத்தின் பாலபாடம். மகாலிங்கத்தை கரைத் தேற்றுவதில்தான் அந்தியூராரின் முழு கவனமும் இருக்கிறது. நாவலை அம்போவென்று விட்டுவிட்டார். மகாலிங்கமும்அவரும் வேறு வேறு இல்லை என்றானபின் என்னதான் செய்ய முடியும்? தன்னை காப்பாற்றத்தான் முயற்சி செய்ய முடியும்.

O

நம்பிக்கைவாதிகள் பற்றி பேச ஆரம்பித்தக் கையோடு “அழகியல் பிரச்சாரம்” பற்றியும் கொஞ்சம் பேசிவிடுகிறேன். போன கடிதத்திலேயே அதை தனியாக பேசுவதாக சொல்லியிருந்தேன். சூட்டோடு சூட்டாக பேசிவிட்டால்தான் ஆச்சு. இல்லையென்றால் சோம்பேறித்தனம் வந்துவிடும். அழகியல் பிரச்சாரம் என்று எழுதியபோது என் மனதில் இருந்தது எழுத்தாளர் விஷால் ராஜாவின் கட்டுரைகள். யாரோ ஒரு வெளிநாட்டு எழுத்தாளர் பற்றி ரொம்ப மாதங்கள் முன்னால் ஒரு பெரிய கட்டுரை எழுதியிருந்தார். அப்புறம் இப்போது செந்தில் ஜெகன்னாதனின் கதைகள் பற்றி ஒரு கட்டுரை. இரண்டுமே நல்ல கட்டுரைகள். சூழலில் இப்படி ஒரு குரல் இருப்பது நம்பிக்கை அளிக்க வல்லது. ஆனால் இரண்டு கட்டுரைகளிலும் ஒரே பிரச்சார வாடை. கட்டுரையில் தீவிரம் இருப்பதை தப்பு சொல்ல மாட்டேன். ஆனால் மதம் மாற்ற முயற்சிக்கும் தீவிரம் ஆகாது. அது ஒரு கோளாறு. முரண்பட்டு பேசினால் சாத்தானே அப்பாலே போ என்று சொல்லிவிடுவாரோ என்று கலக்கம் வருகிறது. சத்திவேலரின் கடிதத்தில் இருப்பதுப் போலவே சமநிலையில் இருப்பதான பாவனை, புறமெய் அவர் கட்டுரைகளிலும் இருக்கிறது. ஆனால் உள்மெய்யில் தூய்மைவாதி ஒளிந்திருக்கிறார். இளம் எழுத்தாளர் என்பதால் அதை கொஞ்சம் மன்னிக்கலாம்தான். ஆனால் இளம் எழுத்தாளர் என்பதாலேயே அவரை எச்சரிக்க வேண்டியிருக்கிறது. தம்பி, கொஞ்சம் நிதானமாய் இருங்கள்!

அழகியல் பிரச்சாரத்தில் பெரிய சிக்கல் என்னவென்றால் எல்லாவற்றுக்கும் முன்னாலே அழகியல் வந்துவிட்டது என்பதான பிரம்மை எழுத்தாளர்களிடம் வந்துவிடுகிறது என்பதுதான். கடவுள் எல்லாவற்றுக்கும் முன்னால் இருந்தார் என்கிற மத நம்பிக்கையின் இன்னொரு வடிவம் இது. புனைவெழுத்தாளர்களால் வேறு மாதிரி யோசிக்க முடியாது என நினைக்கிறேன். மாத்தி பேசுவது அவர்களுடைய ஆதார நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் நிகழ்வு. அதை அவர்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் அவர்கள் நினைப்பது அப்படியே அச்சு பிசகாமல் எல்லோருக்கும் பொருந்த வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லையே. இலக்கியம் முன்னால் வந்து அழகியல் பின்னால் வந்தது என்று சொன்னால் அவர்கள் பதறிவிடுவார்கள். ஆனால் அதற்கு எல்லா வாய்ப்பும் இருக்கிறது. இப்படி எண்ணிப் பாருங்கள். இலக்கியம் எதற்காக முதலில் கண்டுபிடிக்கப்பட்டது? விஷால் ராஜா அழகியல் வெளிப்பாட்டிற்காக என்று சொல்வார்.ஆனால் அது உண்மையின் ஒரு பக்கம் தானேத் தவிர எல்லாத் தரப்புகளும் ஏற்றுக் கொள்ளும் பொதுவான உண்மை கிடையாது. அது விஷால் ராஜாவின் உண்மை மட்டுமே. உபரிதான் இலக்கியம் என்று ஒரு மார்க்சியர் சொல்வது உண்மையின் இன்னொரு பக்கம். உபரி செல்வமும் உபரி நேரமும்தான் கலை என்று சொன்னதும் அழகியல் தரப்பினர் அய்யய்யோ என்று அலற ஆரம்பித்துவிடுவார்கள்.

இலக்கியம் கண்டுபிடிக்கப்பட்டதே தகவல்களை சேமித்து வைக்கத் தான் என்று இன்னொரு தரப்பினர் சொல்லக்கூடும்.  அப்போது என்ன செய்வார்கள் அழகியல்வாதிகள்? டாகுமெண்ட்டிங்தான் இலக்கியத்தின் வேலை என்று சொன்னால் அதுவொன்னும் மாபாதக செயல் இல்லை. பாட்டாக எழுதினால் ஞாபகத்தில் நிற்கும் என்பதற்காகத்தான் செய்யுள் வந்தது. மத்தபடி கவிதையும் அழகும் ரெண்டாம்பட்சம்தான் என்று சொல்வதில் என்ன தவறு? கவிதை, அழகு இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் அப்ஜெக்டிவ் வரையறை கிடையாது. ஒரு காலத்தில் அன்றாட மொழியாக இருப்பது காலம் மாறும்போது “கவித்துவம்”ஆகிவிடுகிறது. இன்னைக்கு ஒருவர் செந்தமிழில் பேசினால் அது கவித்துவம் போல் ஒலிக்கவில்லை? விஷயம் சாதாரணமானதுதான். மொழி பழசாகும்போது அதில் அழகு வந்துவிடுகிறது. ஏக்கமும் தெரியாமையும் அழகுதான். “கரம் சிரம் புறம் நீட்டாதீர்” என்று பஸ்ஸில் எழுதி வைத்திருக்கிறார்கள். இன்னும் நூறு வருஷம் கழிச்சு தமிழின் தினசரி பேச்சு வழக்கு சுத்தமாக உருமாறி இருக்கும்போது இந்த வரி கவித்துவமானதாக அழகியல் கொண்டதாக கருதப்படலாம்தான். யார் கண்டது? உண்மை இப்படி இருக்கும்போது நான் அழகியலை மட்டுமே ஸ்கேலாக வைத்திருப்பேன் அதன் விதிகளை மட்டும் முன்வைப்பேன் என்பதெல்லாம் ஒருவகை பிடிவாதம். விஷால் ராஜா இந்த பிடிவாதத்தை கைவிட வேண்டும்.

நானும் செந்தில் ஜெகன்னாதனின் கதைகளை படித்தேன். என்னை அவை ஈர்க்கவில்லை. உலக இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் மாஸ்டர்களை தினமும் படித்துக் கொண்டிருக்கும் எனக்கு அக்கதைகள் எதையும் கொடுக்கவில்லை. என்னை ஈர்க்கவில்லை என்பதால் உடனே நல்ல கதையின் அடிப்படை கூறுகள் என்ன என்று நான் ஆராய ஆரம்பித்துவிட மாட்டேன். நான் என்ன செய்வேன் என்றால், செந்தில் ஜெகன்னாதன் இன்ன மாதிரி கதைகள் எழுதுவதற்கு என்ன காரணம் என்று யோசிப்பேன். அவற்றின் தேவை என்ன என்று கேள்வி கேட்பேன். அக்கதைகள் சூழலில் கொண்டாடப்பட்டால், சூழலுக்கு நல்ல இலக்கியத்தை போதிக்க புறப்பட்டுவிடமாட்டேன். அதுதான் மத மாற்ற மனோபாவம். மாறாக நான் என்ன செய்வேன்? சூழல் எதை அளவுகோலாக கொண்டிருக்கிறது?அது எப்படி காலந்தோறும் மாறி வருகிறது? இது பற்றியெல்லாம் சிந்திப்பேன்.

வெகுஜனக் கதைகள் என்று ஒரு வகைமை தமிழில் இருக்கிறது. விகடனில் வரக்கூடிய கதைகள் எல்லாம் அந்த பாணியில் ஆனவை. குமுதம் ஒரு பக்க கதைகள் மாதிரி அவை சுத்தமாக கிராப்டே இல்லாமல் இருக்காது. அதற்கென்று ஒரு கிராப்ட்மேன்ஷிப் உண்டு. நம்பகத்தன்மை மிக்க வாழ்க்கைச் சூழல் அக்கதைகளில் இருக்கும். சீரியஸ் இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்ட கிராப்ட்தான் அது. ஆனால் கதைகளில் புதுசாக ஒன்றும் இருக்காது. அல்லது கொஞ்சூண்டு புதுமை இருக்கும். எதிர்வீட்டு அக்கா,ஓடிப் போன சித்தப்பா, கிட்டார் வாசிக்கும் மாமா, விவசாயி அப்பா இப்படி டெம்ப்ளேட் மனிதர்களை வைத்து கதை எழுதுவார்கள். அதில் சில நேரங்களில் நல்ல கதைகளும் வந்துவிடும். பாஸ்கர் சக்தி, க.சீ.சிவக்குமார் போன்றோர் அந்த வரிசையில் குறிப்பிட வேண்டிய நல்ல எழுத்தாளர்கள். சு.வேணுகோபால்கூட ஏறத்தாழ அந்த ரக எழுத்தாளர்தான். இவர்களுடைய கதைகளில் சொந்த அனுபவத்தின் தீவிரம் கூடும்போது கதைகளும் வேறு மாதிரி வடிவெடுத்துவிடும். மத்தபடி அழகியல், தத்துவம் என்று பேசும் சீரியஸ் எழுத்தோடு இந்த வரிசைக்கு ஸ்நானப்ராப்திகூட கிடையாது.

இன்றைய தலைமுறையில் அந்த பாணி எழுத்தாளர்கள் வளரவில்லை. ஏனென்றால் விகடன் வாசகர்களே அருகிவிட்டார்கள். எல்லோரும் இணையத்தில் வாசிக்க வந்துவிட்டார்கள். இண்டர்நெட்டில் இருக்கும் வாசகக்கூட்டமானது தனக்கு தெரிந்த விஷயங்களைத்தான் கதைகளில் எதிர்பார்க்கும். உணர்ச்சிவசமான கதைகளைத்தான் அவர்கள் விரும்புவார்கள். யதார்த்தமான வாழ்க்கையையே கதையில் தேடுவார்கள். செந்தில் ஜென்னாதனின் வாசகர்கள் அவர்கள் தான். அப்படி செந்தில் ஜெகன்னாதனை ஒரு வெகுஜன எழுத்தாளர் என்று அடையாளம் காட்டலாம். சீரியஸ் இலக்கியம் ஏஸி கோச்சில், வெகுஜனம் அன்ரிசர்வ்டில் என்று தரம் பிரிப்பது என் வேலை அல்ல. ஆனால் இப்படியான கோணத்திலும் பார்ப்பது உசிதமே. ஐரனி எனப்படும் முரண் தான் மக்களுக்கு உடனே பிடிக்கக்கூடியது. அழகியல் பிடிவாதம் கண்ணை மறைக்கும்போதுதான் வெகுஜன கதையில் ஐரனி தேவையா என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது.இருப்பதிலேயே பெரிய ஐரனி அதுதான்.

என்னை ஆச்சர்யப்படுத்திய இன்னொரு விஷயம். செந்தில் ஜெகன்னாதனின் கதைகளில் கிராப்ட் அப்படி இப்படித்தான் இருக்கிறது. இரண்டுங்கெட்டான் தன்மை என்று அதை சொல்ல்லாம். ஆனால் இன்று கதைகளில் கிராப்ட் தேவையில்லை என்ற முடிவை வாசகப் பரப்பு எடுத்திருக்கிறது. ஏனென்றால் வெகுஜன இதழ் வாசகர்களுக்கு பெரிய பாவனைகள் கிடையாது. பொழுதுபோக்கு வாசிப்பு என்ற தெளிவு அரைகுறையாகவேனும் உண்டு. ஆனால் இன்று இண்டர்நெட் பத்திரிக்கைகளில் கதையை படிக்கும்போது தீவிரம் மற்று செண்ட்டிமெண்ட் என்கிற கலவையான மார்க்கம் திறக்கிறது. கதைகளிலும் இரண்டும் மிங்கிளாகி இருப்பதை அது விரும்புகிறது. இரண்டிலும் தேர்ச்சியில்லாத நடுவாந்திர பாதையை அது தனக்குரியதாய் வகுக்கிறது. இது ஒருசுவாரஸ்யமான தேர்வு. சௌகர்யமான தேர்வும்கூட. இதையெல்லாம்தான் விமர்சகர்கள் பேச வேண்டும். இதைவிட்டுவிட்டு அழகியல் விதிகள் பற்றி வகுப்பெடுப்பதால் யாருக்கு என்ன பயன்? தன் நம்பிக்கைகளை உலகின் மேல் திணிக்கும் போக்குதான் நடக்கும். விஷால் ராஜாவிடம் நான் சொல்ல விரும்புவது “ஆழத்தில் விதிகள் இல்லை”

O

ஓரளவுக்கு விரிவாகவே என் நியாயங்களை சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன். இதையெல்லாம் எழுத தூண்டுதல் அளித்த சத்திவேலருக்கு நன்றி. இனி இப்படி நிறைய எழுத வேண்டும். சோம்பேறித்தனம் விலக வேண்டும். அப்புறம் வாழ்க்கைச் சூழல் ஒத்துழைக்க வேண்டும்.

பிரியத்துடன்,
அசோகன்.

முந்தைய கட்டுரைசடம் கடிதம்-6
அடுத்த கட்டுரைபூவன்னா சந்திரசேகர், கடிதம்