மகிழ்ச்சியான முடிவு?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.

நான் ஜனார்த்தனன் கொழும்பு,இலங்கையில் இருந்து.  நீண்ட காலமாக ஒரு கேள்வி என்னை உறுத்திக்கொண்டேயிருக்கிறது. ஒரு சிறுகதையின் முடிவு என்பது எவ்வாறாக வேண்டுமானாலும் முடிவடையலாம். அந்த உண்மையை ஏற்றுக்கொண்டு தான் நாம் கதையில்  பயணிக்கிறோம்.ஆனால் சிலருக்கு ஒரு சிறுகதையின் முடிவு மகிழ்ச்சிகரமாக முடிந்தால் அதை அவர்களால்  ஏற்றுக்கொள்ள முடியவில்லை . அது ஏன் என்று மட்டும் என்னால் விளங்கிகொள்ள முடியவில்லை.

ஒரு முடிவு என்பது ஒரு இழப்பிலோ, இயலாமையை ஏற்றுக்கொண்ட விதத்தில், சொல்லிக்கொள்ளாமல் பயணிக்க ஆரம்பித்தது போல்,ஒருவரை இறுதியாக புரிந்துகொண்டது போல  மற்றும்  ஒரு கைவிடுதலில்  இப்படி நீளும் எந்த விதமான வகையில் முடிவுற்றாலும், மகிழ்ச்சியை தவிர்த்து அதை அவர்கள் மனம் ஏற்கிறது. இதற்கென ஏதேனும் காரணம் இருக்கிறதா?  என் புரிதலில் தவறோ, ஒரு  வேளை இதுவரை நான் சேர்த்துக்கொண்ட  வாசகர்களையும் எழுத்தாளர்களையும் தாண்டாமல்  என் வட்டம் குறுகியதாகக் கூட  இருக்கலாம்.ஆனால்  நானும் எழுதும் போது கூட  சில கதைகளுக்கு முடிவை முன்கூட்டியே தீர்மானிப்பதை முடிந்தவரை தவிர்த்து வருகிறேன். கதையின் போக்கில் அதுவாகவே தன் முடிவை நிச்சயித்துக் கொள்கிறது.இந்த பரீட்சார்த்த முயற்சியை சில காலமாகத் தான் கடைபிடித்து வருகிறேன். இதை கடைப்பிடிப்பது சரியா, இதற்கான விளக்கத்தை இந்தச்  சிறியேனுக்கு தாங்கள் தயவு கூர்ந்து தெளிவுபடுத்த வேண்டும்.

அன்புடன்
ஜனார்த்தனன்.

அன்புள்ள ஜனார்த்தனன்

நான் நீங்கள் சொல்வதை உணர்ந்ததில்லை. கதையின் முடிவு இப்படித்தான் இருக்கவேண்டும் என வாசகர் எண்ணுவதில்லை. ஆனால் சிலவற்றைச் சொல்லலாம். கதை செயற்கையாக ஒரு தீர்வை, அல்லது நல்லமுடிவைச் சொன்னால் அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். எதிர்மறை முடிவு என நாம் சொல்லும் பல முடிவுகள் உண்மையில் வாழ்க்கையிலுள்ள ஒரு பிரச்சினையை அல்லது ஒரு கேள்வியை முன்வைத்து வாசகனே மேற்கொண்டு செல்ல இடமளிப்பவை. வாசகன் கதையில் தானும் செயல்பட விரும்புகிறான். அவனை கற்பனைசெய்யவைக்கும் கதைகள் அவனுக்குத்தேவை. அவனுடைய கற்பனைக்கு இடமே அளிக்காமல் தானே பேசி முடிக்கும் கதைகளை அவன் விரும்புவதில்லை.

மகிழ்ச்சியான முடிவு அல்லது விடை கொண்ட முடிவு என்பது கதையை சொல்லி முடித்து வாசகனுக்கு இடமளிக்காமல் போவதாகவே பெரும்பாலும் உள்ளது. அவ்வாறன்றி ஒரு மகிழ்ச்சியான முடிவிலிருந்து மேலும் கேள்விகள் எழுமென்றால் அவை வாசகனுக்கு உவப்பானவையாகவே இருக்கும்

ஜெ

முந்தைய கட்டுரைபூவன்னா சந்திரசேகர், கடிதம்
அடுத்த கட்டுரைசபரிமலை, கடிதம்