உணர்வுகள், உன்னதங்கள்
அன்புள்ள ஜெ
உணர்வுகள் உன்னதங்கள் வாசித்தேன். நுண்ணுணர்வுள்ள இலக்கியவாசகன் உள்ளே வந்ததுமே சந்திக்கும் பிரச்சினை இது. அரசியல் வாசிப்பு கொண்டவர்கள், இலக்கியத்தின் உண்மையான உணர்வையோ ஆழத்தையோ உணராமல் அதிலிருந்து வழக்கமான கருத்துக்களை மட்டுமே உருவி எடுக்கும் கும்பல் அவனிடம் உடனே பேச ஆரம்பிக்கிறது. இலக்கியத்தை வாசிக்கும்போது உணர்ச்சி அடையக்கூடாது, நெகிழக்கூடாது, கறாராக உடைத்து கருத்தை மட்டும் உருவி எடுக்கவேண்டும், அந்தக்கருத்து ஏற்கனவே நம் கைவசம் உள்ள கருத்து என்றால் அதை ஏற்கவேண்டும் இல்லையென்றால் தூற்றவேண்டும்- இதை திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். உண்மையில் அவர்களின் லெவல் அதுதான் என்பதனால் அதை மிக நம்பி ஆத்மார்த்தமாகவே சொல்வார்கள்.
இலக்கிய வாசகனுக்கு கொஞ்சம் குழப்பம் ஏற்படும். உணர்ச்சிவசப்படக்கூடாதோ என அவனும் சந்தேகப்படுவான். தன்னுடைய உணர்ச்சிகளுக்கும் எளிமையான செண்டிமென்ட் கதைகளை வாசித்து உணர்ச்சிவசப்படுவதற்கும் என்ன வேறுபாடு என்று குழப்பம் அடைவான். அந்த குழப்பங்களை மிகத்தெளிவாக தீர்த்துவைத்த கட்டுரை. பல இடங்களில் இதை மேற்கோளாக அனுப்பவேண்டியிருக்கும்.
ராஜாராம்
***
அன்புள்ள ஆசிரியருக்கு,
உணர்வுகள் உன்னதங்கள் கட்டுரை அருமை. நூறு நாற்காலிகள் படிக்கும்போது தாங்கமுடியாமல் தேம்பித்தேம்பி அழுதேன். இப்போது சில மாதங்கள் கழித்து யோசிக்கையில் கதையின் உன்னதத் தருணங்களும் அதன் உக்கிரமும் தான் நினைவில் இருக்கிறது. அந்த உணர்வு வடிந்துவிட்டது. ஆனால் கொற்றவையில் அன்னையின் கோயில் முழுதும் மலர்கள் நிரம்பி இருக்கும் காட்சியை இப்போது நினைத்தாலும் மனம் பொங்கிவிடும். பிங்கலன் குறித்து உணர்ச்சிவசப்படாமல் எழுதவே முடியாது.
பன்னீர் செல்வம்