கோணங்கி

கோணங்கி தமிழ் விக்கி

கோணங்கி
கோணங்கி – தமிழ் விக்கி

கோணங்கியை நான் முதலில் சந்தித்தது– நீங்கள் எதிர்பார்ப்பது தப்பு, நள்ளிரவில் அல்ல. காஸர்கோடு தொலைபேசி நிலையத்தில் மத்தியான நேரத்தில் ஒரு பழைய பையும் கல்கத்தா ஜிப்பாவுமாக வந்து எனக்காக காத்து நின்றிருந்தார். யாரோ வந்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டு நான் சென்றபோது தாடையில் மட்டும் சிமினி விளக்கின் புகைக்கரி மேலே சுவரில் படிந்திருப்பது போன்ற மென் தாடியுடன் கறுப்பாக கொழுகொழுவென நின்றுகொண்டிருந்தார். நான் புரியாமல் ”யாரு?”என்றேன்

”நான் கோணங்கி” என்றார். இதயம் தெரியும் அந்தச்சிரிப்பு நான் நேரில் சந்தித்த சிறந்த சிரிப்புகளில் ஒன்று. லேசான திக்கல் காரணமாக தப்புதப்பாக வாய்ப்பாடு ஒப்பிக்கும் பிள்ளை போல ஒரு திணறல் பாவனையுடன் பேச்சு. ”உ.உம்மை பாக்கணும்னு வந்தேன். பார்பர் ஷாப்ல போய் அட்ரஸ் கேட்டேன்… சொன்னாங்க…”

”ஏன் பார்பர் ஷாப்ல?”

”கேரளால பார்பர்ஷாப்லாம் அதிகமும் தமிழாளுங்கதான்…” அப்போதே நான் அவர் யார் என்று புரிந்துகொண்டேன்.

அப்போது நான் நான்குகதைகள் மட்டுமே எழுதியிருந்தேன். என்னைக்காண கிளம்பி வந்திருந்தார். காஸர்கோட்டில் கடற்கரை ஓரமாக தென்னந்தோப்புக்குள் ஒரு பழைய முஸ்லீம் வீட்டை வாடகைக்கு எடுத்து தன்னந்தனியாக தங்கி இரவுபகலாக வாசித்துக் கொண்டிருந்தேன். ”வீட்டுக்குள்ள வேற யாரோ இருக்காப்ல…”என்றார் கோணங்கி ”பெருச்சாளிகள்தான்”என்றேன். ” இலக்கிய பெருச்சாளிகளைத்தான் பயப்படணும்.. நெஜப்பெருச்சாளின்னா சரியான துணைதான்…” என மகிழ்ந்தார்.

வீட்டுக்குள் வந்ததும் தப் தப் என்று சிறகடிப்பு ”வவ்வால் உண்டோ?” என்றார். ”இல்லாமலிருக்குமா?” ”அடாடா, வவ்வால் பெரிய இலக்கிய விமரிசகனாச்சேய்யா.நாம எழுதறத அவன் தலகீழா தொங்கி வாசிக்கிறான்…” உள்ளே எங்குபார்த்தாலும் குப்பை .புத்தகங்கள், சாப்பிட்ட தட்டுகள், பூசணம் பூத்த ரொட்டி…கோணங்கி மிகவும் சொந்தமாக அவ்விடத்தை உணர்ந்தார்”நல்லா பாந்தமா இருக்குய்யா ரூம்…”என்றார்.

‘பாலைக்கும் வசந்தம் உண்டு’ வை பற்றவைத்து ‘காகிதப்பறவைகளை’ எரித்து டீ போட்டு கொண்டுவந்து ‘அபிதான சிந்தாமணி ‘ மீது வைத்து ”சாப்பிடுங்க கோணங்கி” என்றேன். மிக்சர் பொட்டலத்தை பிரித்து ‘ வருவாயா என்னுயிரே’யில் பிய்த்த தாளில் கொட்டி பரிமாறினேன். கோணங்கிக்கு பரவசம். ‘வாரப்பவே நெனைச்சேன். இப்டி ஏதாவது இருக்கும்னு. ஒரு வேகத்தோட இருக்கேருய்யா… ஒரு கதைதான் படிச்சேன். ப-படுகை… ஒடனே கெளம்பிட்டேன். ஒண்ணு சொல்றேன்யா.நீரு தமிழ்நாட்ட ஒரு கலக்கு கலக்குவேரு… நீரு பெரிய கிளாஸிக் ரைட்டர்யா …நல்ல அருமையான இருட்டு…இருட்டுலதான்யா எழுத்தாளன் இருக்கணும். அப்பதான் சின்ன வெளிச்சமெல்லாம் கண்ணுக்குத் தெரியும்…”

எனக்கு அப்போது என்னிடம் பணம் ஏதும் எதிர்பார்க்கிறாரா என்ற ஐயம்தான் ஏற்பட்டது. அரைமணிநேரம் கழிந்து அவர் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்ற புரிதல் உருவான பின் வேண்டுமென்றே ஏதோ மிஸ்டிக்காக போட்டு தாக்குகிறார் என்ற எண்ணம் ஏற்பட்டது. ”இந்தூரிலே என்ன ஸ்பெஷல்?” என்றார். ”பீ·ப் ·ப்ரைதான்” என்றார். ”சாப்பிட்டுருவோம்”என்று தலையை ஆட்டிச் சிரித்தார்.

”நீங்க பீ·ப் சாப்பிடுவீங்களா? தமிழ்நாட்டிலே இதெல்லாம் ரொம்ப ஆர்த்தடக்ஸா இருப்பாங்கள்ல?” என்றேன். ”நாங்க தேவமாரு பொதுவா மாடு எல்லாம் சாப்பிட மாட்டோம். நான் எல்லாத்தையும் சாப்பிட்டுருவேன். இப்ப காதல்கவிதை எழுதறவனில ஒருத்தன போட்டுத்தள்ளி ·ப்ரை பண்ணி சாப்பிடணும்ணு ரொம்பநாளா ஆசை…”

கோணங்கி நன்றாக சாப்பிடுவார்– பில் பிறர் கொடுக்கையில். ‘மெல்லென வந்து நில்லாது சென்று’ உள்கட்டுகளில் உரித்துக்குவித்த வெங்காய மலைகள், வழித்து வைக்கப்பட்ட மாவுக்குண்டான்கள்,சாத்தப்பட்ட சட்டுவங்கள் , கமறும் புகை நடுவே அழுக்கு வேட்டி கட்டி தலையில் துண்டு சுற்றிய சரக்கு மாஸ்டரை அணுகி ”அண்ணாச்சி நல்லாருக்கேளா? வீட்டுல எல்லாரும் சொகம்தானா?”. அவர் திரும்பி ”இருக்காங்க….தம்பி ஆரு?” ”அண்ணாச்சி ஊத்தப்பமா ஒரு தோசை போடுங்க…எண்ணைய நல்லாவே ஊத்துங்க, பரவால்லை. ” . ‘ஊத்தப்பமா தோசை’ என இருவகைகளை கலப்பது கோணங்கியின் பாணி. ”.. நமக்கு கோயில்பட்டிப்பக்கம். அண்ணாச்சிக்கு சங்கரன்கோயிலா?”

கோணங்கியின் திறமைகளில் முதலாவது ஒருவரைப்பார்த்தால் உடனே சாதி, பிராந்தியம் இரண்டையும் கண்டு பிடித்து விடுவது. சரக்குமாஸ்டர்களில் பொதுவாக வடநெல்லைக்காரர்கள் — இப்போதைய காமராஜ் மாவட்டம்- அதிகம். பெரும்பாலும் நாடார்கள். மதுரைக்காரர்களும் உண்டு, தேவர்கள் குறைவு. ”பேரணாம்பட்டிலே ஒரு சௌராஷ்டிர சரக்குமாஸ்டர் இருக்கார். அவரு ஒருத்தருதான் சமையல்பண்ற ஒரே சௌராஷ்டிரக்காரர்…” ஓட்டலில் ஆட்டுக்குழம்பை ஒருவாய் சாப்பிட்டு ”சமையக்காரர் கோனார்னு நெனைக்கிறேன்..”என்று சொல்பவர் அவர். எழுத்தாளர்கள் கூட இப்பிரிவினைக்குள் வருவார்கள் ”சமயவேல் வீட்டிலே சாப்பிட்டேன். ஆசாரிமார் வீட்டிலே மீன்கொழம்பு நல்லா இருக்கும்”

கோணங்கி செல்லும் வீடெல்லாம் அவருக்கு சிறப்புதான். முதல் விஷயம் அவ்வீட்டில் உள்ள பெண்களை கையில் எடுத்துக் கொள்வது. பெரும்பாலான பெண்கள் அடையாளம் காணப்பட, சற்றே புகழப்பட ஏங்குபவர்கள் என அவர் அறிவார். ”… வெளமீனுல ஓமத்தைக் கொஞ்சம் விட்டிருக்கீங்க பாருங்க, அங்கதான் நீங்க இருக்கீங்க…ஓமத்த அளவா விட்டாத்தான் நல்லாருக்கும்”. இதெல்லாம் ‘அப்டியே’ வருவதுதான். எனக்குக் கல்யணமான புதிதில் எங்கள் வீட்டுக்கு வந்தவர் எடுத்த எடுப்பிலேயே ”.. பாப்பா, கொஞ்சம் தண்ணி கொண்டுவா பாப்பம்…”என்றார். அருண்மொழிக்கு அக்கணமே அவர் ஒரு இலக்கியமேதையாக தெரியலானார்.

கிழவி, கிழவர்களை முதல் சொல்லிலே கவர்வார். ”என்ன பாட்டா, காலம் போற போக்கப் பாத்தீகளா?”என்று கேட்டபடி அவர் கிழம் பக்கத்தில் அமரும்போது அதற்குச் சிரமமே இல்லை, நேராக தனது தேசியகீதத்துக்கு வந்து சேர்ந்துவிடலாம். ”என்னத்த சொல்றது போ…”என்று சிலர் கண்களைச் சுருக்கும்போது நானெல்லாம் மெல்ல நழுவி விடுவேன். கோணங்கி ”… என்ன அப்டிச் சொல்லிட்டீங்க? பெரியவங்களுக்கு ஒரு மரியாத இருக்கா நாட்டிலே?” என்று அடியெடுத்தும் கொடுப்பார். சலிக்காமல் முழு ஆர்வத்துடன் இரண்டுமணிநேரம் பேசிக் கேட்டு, கும்பிட்டு அவர் போனால் பிறகு அந்தப் பாட்டா அச்சடித்த எந்தக் காகிதத்தைப் பார்த்தாலும் ”அந்த கோமுட்டித்தம்பி நல்லாருக்குதா?”என்று அருகிலிருப்பவரிடம் கேட்பார்.

ஆனால் ஒன்று உண்டு, கோணங்கி நடிப்பதில்லை. இதெல்லாமே மனிதர்கள் மேல் அவருக்கு உள்ள உண்மையான பிரியத்தில் இருந்து வருபவைதான். குழந்தைகளும் கிழடுகளும் போலி நடிப்பை உடனடியாக கண்டுபிடித்துவிடும். கோணங்கியின் முகபாவனையில் ஒரு செல்லக்குழந்தை வெளிப்பட்டபடியே இருப்பது இன்னொரு காரணம். அதேசமயம் குழந்தைகள் போல எங்கிருக்கிறாரோ அங்கே முற்றாக இருப்பவர் அவர். அவ்வூரைவிட்டு கிளம்பும்போதே அவ்வூர் சார்ந்த அனைத்தையும் விட்டுவிட்டு சுத்தமான சிலேட்டாகத்தான் அடுத்த ஊருக்குச் செல்வார்.

கோணங்கியின் பேச்சு முறை சிக்கலானது. அவரால் கருத்துக்களை உருவாக்க முடியாது, சித்திரங்களை மட்டுமே உருவாக்க முடியும். அச்சித்திரங்களும் அவ்வப்போது மனதில் தோன்றும் வரிசையில் இருக்கும். எப்படி எங்கு உளறினாலும் வசீகரமான சித்திரங்களின் கவர்ச்சியால் காதூன்றிக் கேட்கவும் தோன்றும். நடுவே அவரைக்கவர்ந்த விசித்திரச் சொற்களை வெறும் ஒலியாகவே உள்வாங்கி பயன்படுத்தி இன்புறுவார். எல்லா புதிய சிந்தனைகளையும் இப்படி ஒலியாகவே உள்வாங்கிக் கொண்டு முன்னால் சென்றபடியே இருக்கிறார். இதை ஒரு தனிச்சிறப்பாக அவரிடம் இளம் வாசகர்கள் சொல்ல, உற்சாகமாக அப்படியே ஒரு பாணியாக வளர்த்தெடுத்தார்.

”…மொழியோட அடுக்குக்குள்ள ஆம்ஸ்டர்டாம் இருக்கு. ஆம்ஸ்டர்டாமிலே நதிகள்லாம் பச்சையா ஓடிட்டிருக்கு. வின்செண்ட் வான்கா பச்சை நிறத்தில ஒரு ஆப்பிளைச் சாப்பிட்டுட்டு அப்டியே அதை தூக்கிப் போட்டப்ப மொளைச்சு தனித் தனியா எலை விரிச்சு நின்னிட்டிருக்குறப்ப அங்க ரெம்பிராண்டின் குகைக்குள்ள ஓவியங்கள் கண்முழிக்குது… [தீவிரமான முகபாவனையுடன் குரல் எழுப்பி] ஆம்ஸ்டர்டாம் தெருக்களிலே அலைஞ்சான் ஜி நாகராஜன்! அங்க மொழி குளிர்ந்து உறைஞ்சிருக்கு. மொழியிலயும் பனிக்கூம்புகள் தொங்கிட்டிருக்கு. கூர்மையா பளபளன்னு ஊடுருவிட்டு ஒளி போகுது. ஆம்ஸ்டர்டாமிலே இருக்கிற எல்லா வீட்டிலயும் தாய்மார்கள் சாப்பாடு எடுத்து வச்சிட்டு அவங்களோட புள்ளைங்க வருவாங்களா மாட்டாங்களான்னு உக்காந்து அப்டியே கம்பிளி நூலிலே பின்னல்வேலை செஞ்சிட்டிருக்காங்க….”

”இல்ல கோணங்கி, இந்த ஆம்ஸ்டர்டாம்னா…”

”அதான் சொல்லவரேன்” உற்சாகமாக ”…ஆம்ஸ்டர்டாம் ஒரு நதி…அதிலே வின்செண்ட் வான்காவும் பாப்லோ நெரூதாவும் போட்லே போய்ட்டிருக்கிறப்ப மீன்கள் அப்டியே பளபளன்னு நீந்தி நீந்திப்போய்ட்டிருக்கு. அந்தச்செதில்களிலே எழுதியிருக்கிற புராதன மொழி என்ன? நகுலன் சாஞ்சிருக்கிற அந்த நாற்காலிய ஆம்ஸ்டர்டாம் தெருக்களிலே போட்டு வைப்போம் [உரக்க,ஆணித்தரமாக] மிஸ்டிக் கிழவன் நகுலன் ஆம்ஸ்டர்டாம் தெருவிலே சுசீலாவோட கூந்தலிழைகளிலே பின்னிய தூண்டிலோட உக்காந்திட்டிருக்கான். எதுக்கு? அவனோட புனைவுமொழியிலே தமிழ்ல உள்ள சொற்கள் வெட்டுக்கிளிகளைமாதிரி பறந்திட்டிருக்கு!!! ”

நான் பரிதாபமாக ”..இல்ல கோணங்கி இந்த ஆம்ஸ்டர்டாம்னா…” ஆனால் சுற்றிலும் நாலைந்து இளம் முகங்கள் பரவசம் பளபளக்க நிற்கின்றன.

”ஆமா, ஆம்ஸ்டர்டாம் வீடுகளிலே புகைக்ககூண்டுமேலே ஒரு மாடப்புறா உக்காந்திட்டிருக்கு. புறாவோட சிறகுகளிலே இருந்து பனித்துளிகள் பாசிமணிகள் போல சிதறுது. அதிலே வெயில்பட்டு விப்ஜியார்னு நெறம்…விப்ஜியாரிலே எழுதப்பட்டிருக்கிற மந்திரச்சொற்களைப் படிக்கணுமானா சித்திரக்குள்ளர்கள் காவல்காக்கிற ராஜகுமாரியோட அரண்மனைக்குள்ள போய் சாவியை எடுக்கணும். சாவியின் ரகசியத்தில் தொங்கி ஆடிட்டிருக்கு விப்ஜியார். அந்த ரகசியத்தை தெரிஞ்ச தங்கமீன் விப்ஜியாரை தன் இறகுகளால எடுத்துட்டு கடலுக்குள்ள போய்ட்டிருக்கு. விப்ஜியாரின் நிழல் கடல் அடி மண்ணில் விரிஞ்சிருக்குறப்ப மூழ்கிப்போன புராதன மரக்கலங்கள் ஆடுற நிழலில் விப்ஜியார் …

”இல்ல, கோணங்கி, இப்ப இந்த விப்ஜியார்னா…”

ஆரம்ப காலத்தில் கோணங்கி இயல்பாக இப்படிப்பேசும்போது ஒரு கவர்ச்சி இருந்தது. குறிப்பாக நகைச்சுவைச் சித்தரிப்பில். திருவண்ணாமலையில் ஒருமுறை பேசிக் கோண்டிருந்தார். நக்ஸலைட்டுகளை ஒடுக்கிய சித்தார்த்த சங்கர் ரேயை சிற்றிதழ் எழுத்தாளர் தொல்லையை ஒழிக்க தமிழ்நாட்டுக்கு அனுப்புகிறார்கள். வேட்டை நடக்கிறது. க.நாசு சாத்தனூர் சர்வ மானிய அக்ரஹாரத்தில் சவண்டியாகப் போய் ஒளிந்துகொள்கிறார். சுந்தர ராமசாமியிடம் ஒரு வாக்குமூலம் கேட்கப்படுகிறது, தன் டைப் ரைட்டரில் தினம் ஒரு எழுத்து மட்டுமே அடிக்கமுடியும் என்கிறார். நாலு எருமையை வைத்து பால் கறந்து பாலியல் கதைகளுக்கு தப்புகிறார் கிரா

”கோணங்கி நான்? இதிலே நான் எங்க?” என்றார் கவிஞர் மீரா[அன்னம்]. ”…மதுரை கோனார் மெஸ்ஸிலே சித்தார்த்த சங்கர் ரே தலைக்கறியும் ரத்தப்பொரியலும் சாப்பிட்டுட்டு கைகழுவறதுக்குப் போறார். அப்ப நீங்க சாப்பிட்டுட்டு அப்டியே குறுக்காக போய்டறீங்க…”

”ஏன் கோணங்கி?”

”தமிழிலக்கியத்தில அவ்ளவுதான் சார் உங்க எடம். சும்மா இருங்க…”

விதிவசத்தால்தமிழில் யதார்த்தவாதத்தை ஒழிக்க ஆசைப்பட்ட விமரிசகர் நாகார்ஜுனன் என்ற ரமேஷ் கண்ணில் கோணங்கி பட்டார். திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை பிராந்தியங்களில் அம்பிகளுக்கு சின்னவயதிலேயே சோடாப்புட்டி போடாவிட்டால் பிற்பாடு ஐ.ஐ.டியில் சீட் கிடைக்காத நிலை இருந்தது. ஆகவே அவரது அம்மா அம்பி ரமேஷுக்கு சோடா புட்டி போட முயற்சி எடுத்துக் கொண்டார்கள். பொடி எழுத்து கிளாஸிக்குகளை தினமும் கொடுத்து குறைந்தது நாநூற்று எண்பத்தெட்டு பக்கம் படித்து ஒப்பித்தால்தான் இரவில் தயிர்சாதம் கொடுக்கப்படும் என்றார்கள்.

கிளாசிக்குகளில் படுத்து, நவீன இலக்கியங்களில் தலைவைத்து, பின்நவீனத்துவ எழுத்துக்களை போர்த்தி தூங்கிய ரமேஷ் அம்பிக்கு சோடா புட்டி விரைவிலேயே போடப்பட்டது. ஆனால் அவனது வாயிலிருந்து வந்த மொழியில் மேற்கோள்கள் பொன்மொழிகள் சொலவடைகள் என பலதும் கலங்கிப்போய் ·பில்டர் காபியில் கள்ளைக்கலந்தது போல நுரைததும்ப இருந்தது.

அம்பி ஒருநாள் காலையில் எழுந்து படுக்கையில் அமர்ந்து தலையை உருட்டியபடி ”ம்ம்ம் ம்ம்ம் நான் நாகார்ஜுனன்…நாகார்ஜுனன் வந்திருக்கேன்…ம்ம்ம்… கும்பிடுங்கடா…” என்று சொல்ல ”என்னங்க! சித்த வந்து பாருங்கோ! அம்பி முழியே சரியில்லியே! நேக்கு பயம்மா இருக்கே” என்று மாமி கூவினாள். ”இருடீ ஊரைக்கூட்டாதே. அவனுக்கு ஒண்ணும் ஆகல்லை. நேத்து சேப்பங்கெழங்கு பொடிமாஸ் செஞ்சேல்லியோ.வாயுத் தொந்தரவுதான்…”என்றார் மாமா. பக்கத்துவீட்டு மாமாவுக்கு வேறுமாதிரி ஐயம் வந்து மாந்த்ரீகரை வரவழைத்துப் பார்த்தபோது அவர் ”ஒண்ணுமில்ல நாகதோஷம்தான்… சரியான ஜாதகத்தோட ஒரு மாட்டுப்பொண் வந்துட்டாள்னா எல்லாம் சரியாயிரும்…”என்றார்

இந்நிலையில் நாகார்ஜுனன் பின் நவீனத்துவ முறைப்படி பின்னால் திருவல்லிக்கேணி தெருவில் நடந்துசெல்லும்போது ஒரு புல் அவரது காலை தடுக்க அவர் கீழே விழ நேரிட்டது. எழுந்து பார்த்தபோதுதான் அது யதார்த்தவாதப்புல்! உடனே அதை பிடுங்கி காலால் உதைத்து கையால் பிய்த்து அழிக்க முற்பட அதன் ஆணிவேர் சிக்கவில்லை. கடுப்பாகி தன் குடுமியை அவிழ்த்துவிட்டு இனிமேல் யதார்த்தவாதத்தை வேரோடு அழித்த பின்னர்தான் முடிவேன் என்று சபதம் மேற்கொண்டார்

குற்றாலத்துக்கு நாகார்ஜுனன் வந்தபோது ஐந்தருவிச்சாலையில் ஒரு வன்னி மரத்தில் கோணங்கி அமர்ந்து தான் இருந்த கிளையையே வெட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே ஓடிப்போய் ”நீதான் நான் தேடிய ஆள்..” என்று கட்டிக் கொண்டு அவர் வாயைத் திறந்து நாவை இழுத்து அதில் ரெய்னால்ட்ஸ் ·பைன் டிப் பேனாவால் ‘ எழுத்தாளன் இல்லை, பிரதியும் இல்லை, விமரிசகன் மட்டுமே உண்டு’ என்ற பின் நவீன மூலமந்திரத்தை பொறித்தார். ‘யதார்த்தம் கொண்டான்’ என்ற பட்டத்தையும் அவருக்கு அளித்தார்.

அதன் பின் கோணங்கி குருகுல முறைப்படி ‘பின் நவீனத்துவம்’ ‘நான் லீனியர்’ ‘அ-புனைவு’ ‘மேஜிக்கல் ரியலிசம்’ ‘·பேன்டஸி ‘ போன்ற ஒலிகளை தலைக்குள் ஏற்றுக் கொண்டார். ‘போர்ஹெ’ என்று சொன்னால் வாசலை எட்டிப்பார்த்து ”ஆரு போராஹே?’ என்று கேட்கும் நெல்லைச்சீமையின் விதையை பாரீஸ் செடியாக மாற்ற நாகார்ஜுனன் எடுத்துக் கொண்ட பரிசோதனை முயற்சியின் விளைவே பிற்கால கோணங்கி.

அதன்பின்னால் சன்னதம் வந்த அம்மன் கொண்டாடிபோல ஆனார். அருள்வாக்கு சொன்னால் கேட்டுக் கொள்ளவேண்டியதுதான். அதற்கு ஆட்டோமாட்டிக் ரைட்டிங் என்று பெயர். எழுதுவதற்கு கோணங்கி பொறுப்பல்ல. ”பேனாவின் நுனி நகர்ந்து நகர்ந்து எழுதும் எழுத்துக்களில் கசியும் உப்பு மின்னி சுருங்கி உருவாகும் புதிர்மொழிப்பாதைகளின் மண்புழுத்தடங்களில் சொல்லப்பட்ட மூதாதையரின் சொற்கள்…”என அவற்றை கோணங்கி வகுத்துரைத்தார், குற்றாலம் அரங்கில்.

”ம்ம்ஹாம்ம்ம் ம்ம்ஹாம்ம்ம்ம் அம்மன் வந்திருக்கேன்…எனக்க மக்கா நான் வந்தாச்சு..எனக்க மக்கா கோளி குடுங்கலே எனக்க மக்கா சேவக்கோளி குடுங்கலே…” குலவையிட்டெழுந்த முத்தாலம்மன் கும்பிட்டு நின்று சிவனாண்டிநாடார் கேட்கிறார். ”ஆத்தா பிள்ள இப்டி குண்டிசூம்பி கெடக்கே…அதுக்கொரு நல்ல காலம் உண்டா?” .கண்கள் பக்கவாட்டில் உருள ”ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹாம்… செஞ்சபாவம் சிவனை விடல்ல..செய்யாத்த பாவம் பிரமனை விடல்ல…கோளியிருக்கு குடலில்லே குடலிருந்த கோளியில்லே..ம்ம் ம்ம்ம்.. .”

”இல்ல ஆத்தா நான் கேக்குறது இந்த பிள்ளைக்க காரியம்…” – சிவனாண்டிநாடார் விடவில்லை. ”ம்ம் ம்ம்ஹம்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹம்ம்ம்…ஆனைக்கு அடிசறுக்கும் பூனைக்கு முடிசறுக்கும் அறிஞ்சவனுக்கு ஆயிரம் அறியாத்தவனுக்கு ஒண்ணுமில்லே…லே…அம்மன் வந்திருக்கேண்டா செஞ்ச கடன் தீரு.. பெஞ்ச மழைய பாரு…ம்ம்ம் ” அதற்கு மேல் கேட்டால் சாம்பல் விபூதி கண் மூக்கு தலையெல்லாம் விசிறப்பட்டு துப்பித்துப்பி கண்ணீர் மல்க வேண்டியிருக்கும். நாடார் பின்வாங்கிவிடுகிறார்

”அப்டீன்னா எதையும் எழுதலாமா?” என்றார் ஒரு பெரியவர். கோணங்கி பரிவுடன் புன்னகைசெய்து, ” எழுத்தின் புதிர்முடிச்சுகளில் முடிகள் அசைய செல்லும் கம்பிளிப்பூச்சியின் ஆயிரம் கண்களில் ஒளிந்துகிடக்கும் சுழற்சியின் வானம் அறிந்து அறிந்து எண்ணி எண்ணி அளிக்கும் கைவிரல்களில் எழுபது பனைமரங்களின் கரிய கால்களில் கள் நுரைத்து வழியும் சிறுத்தை போல இந்த மரங்கள் பூத்து வரும்போது எதுமே என்ணி சொல்லப்பட முடியாதென்பதனால் யதார்த்தம் செத்து விட்டது….”

”இல்லே நான் கேட்டது…” என்று பெரிசு கேட்க பின் நவீனத்திறனாய்வாளர் எம்.டி.முத்துக்குமார சாமி ”..அவரு என்ன சொல்றார்னா இண்ணைக்குள்ள பின் நவீன உலகிலே பிரதிகள் அர்த்தத்தை அழிச்சுட்டு புதிசாப்பொறந்து புதியவாசகனுக்காக தேடிட்டிருக்கிற நேரத்திலே பன்முகப்பிரதிகள் உற்பத்தி செய்ற அர்த்தங்களும் மௌனங்களும் எந்த அளவுக்கு முக்கியம்னுதான்…”

”அதை இன்னும் விளக்கமாச் சொல்லலாம் ” என்றார் படுத்துக்கிடந்த நாகார்ஜுனன் மேற்கூரையை நோக்கி ”நான் இதை தெரிதாவை முன்வைச்சுதான் சொல்லுவேன். ஆக்சுவலா தெரிதா–”

”தெரியுது, சொல்லுங்க”

”….பிரதி இறந்துவிட்டதுன்னு சொல்றச்ச பிரதியில உள்ள அர்த்தங்கள் என்ன ஆகிறதுங்கிற கேள்விக்குள்ள ஒருபக்கம் நாம போறப்ப தெரிதாவோட கோட்பாட்டுக்குள்ள போகலாம் போகாமலும் இருக்கலாம்ங்கிறபோது இதில கெஸ்டால்டுன்னு சொல்ற அர்த்தம் என்ன அதுக்கு கார்னிவல்ஸ்க் குடுக்கிற — கார்னிவல்னா நான் அத களியாட்டம்னு சொல்வேன், அது ஒரு திருவிழான்னு பக்தின் சொல்றதனால — தெரிதா சொல்ற அர்த்தம்….”

”கமலஹாசன் தோத்தாரு”என்றான் யுவன் சந்திரசேகர் என் காதருகில். பின்பு உரக்க ” நாகார்ஜுனன், அப்ப கோணங்கி சொல்றப்பவே என்ன சிக்கல்ங்கிறது எங்களுக்கு தெளிவாத்தான் இருந்திச்சு. இப்ப நீங்க ரெண்டுபேரும் பேசி முடிக்கிறப்ப சந்தேகம் தீந்திட்டுது…” என சிகரெட் பிடிக்க எழுந்து போனார்.

”…இப்ப நீங்க இதையெல்லாம் சேத்துத்தான் கத எழுதறீங்களா?” என்றார் பெரிசு விடாமல்

”எனக்கு ஒண்ணுக்கு வருது. அப்றம் பேசுவோமே…” என்றார் கோணங்கி

”முத்துகுமாரசாமிசார் எதுக்கும் இதயும் கொஞ்சம் மொழிபெயர்த்திருங்க …”

திடீரென்று நாகார்ஜுனன் திருமணம்செய்துகொண்டார். நாகதோஷம் முடிந்து அவர் மீண்டும் அம்பி ரமேஷாக மலையேற கோணங்கி திருவிழாவில் கைவிடப்பட்ட குழந்தையாக ஆனார். இதற்குள் அவருடைய மொழியே அவ்வாறாக வடிவாகியிருந்தது. தூக்கத்தில் பதறி உளறினால் கூட ”ய்யோ..மண்புழுவின் சிறகுகளிலே உப்புக்கரிக்கும் விறகில் என்னமோ ஓடுது…”என்று எழுந்து ”…இல்ல என்னமோ பிதுராகாச சொப்பனம்!’ என்று சொல்லும் அளவுக்கு. ”தம்பியை அந்த அம்பி ஒரு ரூமிலே போட்டு பூட்டி சாவிய வீசிட்டு லண்டன் போய் செட்டிலாய்ட்டான்” என்று கோணங்கியின் அண்ணா தமிழ்ச்செல்வன் பரிதாபமாகப் புலம்பினார்.

இத்துடன் கைக்குழந்தைக்கு கௌபாய்ச் சட்டை போட்டுவிடுவதுபோல இதழியலாளர்கள் அவருக்கு ஒரு இமேஜை வலுக்கட்டாயமாக உருவாக்கி விட்டார்கள். அவர் நடுராத்திரியில் வந்து கதவைத்தட்டி ”ஆத்தா கூழு இருக்குமா? கடிச்சுக்கிட ஒரு பல்லு வெங்காயமும் குடுங்காத்தா” என்று கேட்பார் என்றும், சொல்லாமலேயே கிளம்பிவிடுவார் என்றும், சோறுபரிமாறிவிட்டு ‘கோணங்கீ கோ—ணங்கீ”என்று கூப்பிடும்போது பை இருக்காது என்றும் ஆட்கள் உறுதியாக நம்பத்தலைபப்ட்டார்கள். எப்போதும் பூசாரிதானே தெய்வத்திற்கான நடமாட்ட விதிகளை வகுக்கிறான்?

ஸ்ரீவில்லிப்புத்தூர் பஸ் ஸ்டாண்டில் மதிய நேரம் ஒரு நண்பர் பசிமயக்கத்தில் கோணங்கியைப் பார்த்திருக்கிறார். சாப்பிட வைத்துக் கேட்டால் கொடுமை. அங்கே ஒரு நண்பரைப்பார்க்க வேண்டும். ஆனால் பகலில் போக முடியாதே. நள்ளிரவு ஆவதற்காக பசியோடு காத்திருந்திருக்கிறார் கோணங்கி.

கோணங்கிக்கு இப்போது சொற்களை அளிக்க நாகார்ஜுனன் இல்லை. மனம் தளராமல் அபிதான சிந்தாமணி, பேரகராதி எல்லாம் புரட்டி சுண்டலில் உப்புக்கல்போல அகப்படும் விசித்திரச் சொற்களைப் பிடித்து போட்டு எழுதி வைக்கிறார். ஆனால் அவரை முன்போல யாரும் இப்போது விசித்திரக் கவர்ச்சியுடன் பார்ப்பதில்லை. அன்புக்கு குறைவில்லை ஆனால் அந்த ஈர்ப்பு இல்லாமலாகிவிட்டது. பாவம் அவரும்தான் என்ன செய்வார், முட்டையிடும் கோழியிடம் போய் முட்டையை குறை சொல்லமுடியுமா? அது பாட்டுக்கு முக்குகிறது, வருவதுதான் முட்டை.

கோணங்கிக்கு இப்போதைய சிக்கல் சில தீவிர சிஷ்யர்கள்தான். அவர் நாவல் எழுதி முடித்ததுமே மதிப்புரை வருகிறது. ”பாழியின் பல்தடங்களில் படிந்திருக்கும் பாசிமணிகளை கோணங்கியின் கைகள் தொட்டுச்செல்லும்போது மேகங்களின் சிறகுகளில் அசையும் புராதன நதிகளின் மேல் பறக்கும் கொக்குகள்…”என்ற வகையில். கோணங்கி குவார்ட்டர் அடித்தபின் தனித்திருந்தால் மார்பில் ஓங்கி அறைந்து விம்மி அழுவார் என்று நினைக்கிறேன். எங்களூர் அம்புரோஸ் மகன் சார்லஸ் பக்கத்து வீட்டு சரோஜினி மேல் லவ் கொண்டிருந்தான். இரவில் மின்சாரம் போய் விளக்கேற்றுவதற்குள் கொல்லைப்பக்கம் வழியாகப்பாய்ந்து சரோஜினியை முத்தமிடப்போக அவள் கணவரால் முத்தமிடப்பட்டான். போதையில் அதை எண்ணி அப்படித்தான் அவன் அழுதான்

ஆனாலும் மிட்டாய் கொடுத்து கூட்டிச்செல்லப்பட்டு நாக்கு அறுத்து பிச்சை எடுக்க வைக்கப்பட்டபின் கைவிடப்பட்ட குழந்தை போன்ற இம்மனிதனைத்தான் என் தலைமுறையின் முதன்மைச் சிறுகதையாளனாக நினைக்கிறேன். தமிழ்ப்பண்பாடுகண்ட மாபெரும் கலைஞர்களில் ஒருவனாகவும். மொழித்தேர்ச்சியின்றி சொல்லப்பட்டவையானாலும் அவரது ஆரம்பகாலக்கதைகளில் மனிதஉறவுகளின் விசித்திரமும் வசீகரமும் களங்கமில்லாத குழந்தைக்கதைகள் போல வெளிப்படும் விதம் அத்தகையது.

மறுபிரசுரம்/ முதல்பிரசுரம் நவம்பர் 2006

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 4, ஜடாயு
அடுத்த கட்டுரைகொடுமணல் அகழாய்வு