சடம் [சிறுகதை] ஜெயமோகன்
மதிப்பிற்குரிய ஐயா,
சடம் சிறுகதை படித்தேன்.. பார்க்கும் பெண்களை எல்லாம் சடமாக்கி உறவு கொள்ளும் போலீஸ்காரன்..! சடத்தைப் புணர்வதையே காலப்போக்கில் சாகசமாக எண்ணுகிறான்..
மனைவி ஜடமாகியபின், யாரைப் புணர்ந்து என்ன உணர்வது?
இறுதியில் சடம் சடத்தை தழுவுகிறது.
அன்புடன்
தயானந்த்
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சடம் உக்கிரமான கதை. மிகப்பெரிய விஷயத்தை குற்றப்புலனாய்வு கதைபோல சொல்லி இருக்கிறீர்கள்.வெகுநாட்களுக்கு உள்ளிருந்துகொண்டு தொந்தரவு செய்யப்போகும் கதையும் கூட.
“சிஜ்ஜடம்னாக்க சித் கூட்டல் ஜடம்… ரெண்டும் சேந்தா சிஜ்ஜடம்னு ஒரே சொல்லு. சித்னா நம்ம சித்தம். அதாவது நமக்கு உள்ள இருக்கப்பட்டது. ஜடம்னா வெளியே இருக்கப்பட்ட இந்த அன்னமய லோகம்… அதுக்க சமன்வயமாக்கும் இந்த உலகம்” இதிலிருக்கிறது மொத்தக்கதையும். உயிரற்ற அந்த பெண்ணின் சடலத்துக்கு அந்த காவலரின் காமம் உயிர்கொடுக்கிறது. சடலத்துக்கு உயிர் வரும் அந்த கடைசிப் பகுதி அபாரம்.
சவம் என்னும் சொல்லை அந்த காவலதிகாரி பயன்படுத்திக்கொண்டே இருக்கிறார். சவம் என்று வைவது, சவம் போலல்லாமல் சாடிக் கதறும் பெண்ணை பிடிக்குமென்கிறார், நோயாளி மனைவி செத்த சவமாட்டம் இருப்பதை சொல்லுகிறார் இறுதியில் ஒரு சவத்தை புணருகிறார். அவர் உள்ளிருக்கும் சித்தம் எத்தனை மறுத்தும் உடல் அதை கேட்காத ஒரு நொடியில் அதை செய்துவிடுகிறார்.
அவர்களிருவரும் மேனோனின் மகளை தேடிக்கொண்டு போகும் காட்டை விவரிக்கையில் மரங்கள், குரங்கு, யானை, புலி, பறவைகளின் எச்சரிக்குரல்கள் என விவரித்து மெல்ல அந்த குரங்கிலிருந்து குட்டிகள் பின்னர் அவர் முன்பு சிதைத்தவர்கள், பின்னர் இந்த குட்டி என்று மேனோனின் மகளுக்கு வந்து அவர்களின் உரையாடல் வழியே கதை நகர்கிறது. சிவந்த கொடி என்று அந்த தடத்தை சொல்லி இருந்தது மிகப்புதிதாக இருந்தது. அதை கற்பனையில் திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டேன்.
காடுகளின் ஒற்றையடிப்பாதையை இப்படி நினைத்ததே இல்லை. பல நுண் தகவல்கள் காட்டை குறித்தும், அவ்விருவரின் அலுவலக வாழ்வு குறித்தும் வருவது,ம் அந்த நாரோயில் மொழியும் கதையை இன்னும் மனதுக்கு அணுக்கமாக்கி விட்ட்து.
இந்த கதையுடன் இதற்கு முந்தைய கதையான வேதாளமும் மனதிற்குள் இணைந்து கொண்டது. இதில் அந்த மேனோனின் தலைக்கு சுகமில்லாத மகள், அதில் உடல் நலமற்ற தாணுலிங்கம். இரண்டிலும் இரு காவலதிகாரிகள் காட்டில் செல்கிறார்கள். இனி இந்த சடலத்தை புணர்ந்த நினைவு வேதாளமாக இவருடன் கூடவே இருக்கும் என நினைத்து கொண்டேன்.
நன்றி
லோகமாதேவி