Quara இணையதளத்தில் ’நீங்கள் இருந்த ஊர்களிலே எது மோசமான ஊர்?’ என்னும் கேள்விக்கு Nimmy Sunny இந்தப்பதிலை அளித்திருக்கிறார். ஒரு வாசகர் இதை எனக்கு அனுப்பினார்.
அந்த ஊர் மருத்துவமனையில் ஒரு காட்சி. ஒரு குழந்தைக்கு உடம்பு சரியில்லை. அதைக் காட்ட மருத்துவரிடம் குழந்தையின் அப்பா கொண்டு வந்திருக்கிறார்.
மருத்துவர்,’ குழந்தைக்கு என்ன பண்ணுது?’
பதில் -‘ அதை கண்டுபிடிக்க தானே நீங்க இங்க ஒக்காந்து இருக்கிய ‘ செம பதில்!
சரி,கடையில் ஒரு சாமான் வாங்க போயிருக்கிறீர்கள். கடைக்காரர் மாத்திரம்தான் இருக்கிறார். கூட்டம் ஒன்றும் இல்லை. கொஞ்ச நேரமாக நீங்கள் உங்களுக்கு வேண்டிய அந்த பொருளை தேடுகிறீர்கள். கடைக்காரர் அவர் பாட்டுக்கு சாலையை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார். உங்களிடம் ஒன்றும் கேட்க மாட்டேங்கிறார். ஒரு 10 நிமிடத்திற்கு பிறகு நீங்கள் அவரிடம்,’இந்த சாம்சன் ஜாமீட்டரி பாக்ஸ் இருக்குதா?’ அவர் பதில்-‘ தெரியாது, பாக்கணும் ‘.
நீங்கள்-‘ சரி,பார்த்து சொல்லுங்க’.
கடைக்காரர்-‘ வாங்குறீங்களா?
நீங்கள்,’ முதல்ல காட்டுங்க ‘ அவ்வளவுதான்,கடைக்காரர் பதில் சொல்லாமல் பேசாமல் இருக்கிறார்! அந்த ஊரில் அதுதான் normal பழக்கம்!உடனே கோபத்தில் பக்கத்து கடைக்கு போகிறீர்கள்.அவர், இவரே தேவலாம் என்ற வகையில் நடந்து கொள்கிறார்!
சரி, ஒரு வழியாக உங்களுக்கு வேண்டிய அந்தப் பரிசுப் பொருளை வாங்கி விட்டீர்கள். அதை பரிசுக்காக பொதிந்து தர சொல்லுகிறீர்கள். 10,15 நிமிடம் ஆகி விடுகிறது.நீங்கள் கவுண்டரில் காத்திருக்கிறீர்கள். பணமெல்லாம் கொடுத்தாகிவிட்டது. மற்ற ஊர்களைப் போல,அவன் பொருளை கொண்டு வந்து தருவான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். 20 நிமிடம் ஆனவுடன் நீங்கள் பொறுமை இழந்து ,என்ன பே க் பண்ணி விட்டீர்களா? என்று கேட்கிறீர்கள். விற்பனைப் பையன் பதில் ஒன்றும் சொல்லாமல், கண்ணைக் காட்டுகிறான். அவன் காட்டிய பகுதியில் ஏற்கனவே பொதிந்து வைத்த பரிசுப் பொருள் வைக்கப்பட்டிருக்கிறது. அனேகமாக 15 நிமிடத்திற்கு முன்னாலே அது தயாராகி இருக்கிறது. ஆனால், அதை சொல்ல மாட்டார்கள்.நாமே தான் கண்டுபிடிக்க வேண்டும். கடைப் பையன் சொல்ல மாட்டான்! அதுதான் அந்த ஊர் பாணி!பளாரென்று ஒரு அறை அறையலாம் போல உங்களுக்கு இருக்கிறது! ஆனால் கோபத்தோடு வீட்டுக்கு வந்து விடுகிறீர்கள். அந்த ஊரில் அது இயல்பான அனுபவம்.
இப்போது,கடன் வாங்க ஒருவர் வங்கிக்கு சென்று இருக்கிறார்.வங்கி மேலாளர் கேட்கிறார், பேர் என்ன? பதில் – அதில் எழுதி இருக்கு ல்ல .
விண்ணப்பத்தில் இருக்கிறதாம்!
மேலாளர் -சரி நாளைக்கு வாங்க.
பதில்-ஏன், இன்னிக்கு தர மாட்டீகளோ.
மறுநாள் வங்கி மேலாளர் காலையில் வேலைக்கு வருகிறார்.கிளைக்கு முன்னால் ஒரு பெருங்கூட்டம் நிற்பதை பார்க்கிறார்.ஒரே சத்தம்,ஆர்ப்பாட்டம். என்ன என்று உற்றுப் பார்க்கிறார்.’ கல்விக் கடன் தர மறுக்கும் வங்கி மேலாளர் செல்வராஜை வன்மையாக கண்டிக்கிறோம்’. என்று எழுதிய அட்டைகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.நகரின் பிரதான சாலை இந்த மறியலால் ஸ்தம்பித்து விடுகிறது.உடனே ஊடகங்கள் எங்கிருந்தோ ஓடி வருகின்றன. வங்கி தலைமை அலுவலகத்திலி ருந்து ரீஜனல் மேனேஜர், என்ன செல்வராஜி என்ன பிரச்சனை? கொஞ்சம் பாத்து நடந்துக்கங்க, என்று அறிவுரை கொடுக்கிறார். ரீ ஜினல் மேனேஜருக்கு தெரியாது. அந்த ஊரில் மிரட்டி தான் கடன் வாங்குவார்கள்! அதுதான் அந்த ஊரின் பாணி! மேலாளராக மனமுவந்து கொடுத்தால் அவர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது!
சரி, அவசரமாக ஒரு பாட்டியை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். டாக்ஸி அழைக்கிறீர்கள். அவன் வந்து, வீட்டு முன்னால் நிற்பான். அரைமணி நேரம் ஆனாலும், அவன் வந்ததை சொல்ல மாட்டான். நீங்களாக வெளியே போய் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். சரி,பார்த்து விட்டீர்கள். பாட்டியை கஷ்டப்பட்டு கையைப்பிடித்து காருக்குள் ஏற்ற முயற்சிக்கிறீர்கள். கார் டிரைவர் சும்மா பார்த்துக் கொண்டிருப்பான். ஒரு உதவியும் செய்ய மாட்டான். ஏனென்றால், கார் டிரைவரின் வேலை அதுவல்லவாம் , கார் ஓட்டுவது மட்டும் தானாம் என்பது அந்த ஊர் மக்களின் பலமான கருத்து. அவங்க வேலை மாத்திரம் செய்தால் போதுமாம்!
சரி, இரவில் அவசரமாக கார் தேவைப்படுகிறது. அதே டிரைவரிடம் நீங்கள் அழைத்து, உங்கள் அவசரத்தை சொல்லுகிறீர்கள். முதலில் அவன் போனை எடுக்கவே மாட்டான். அப்படி மீறி எடுத்தால், காரு செட்டுக்குள்ள இருக்கு, வெளிய எடுக்க முடியாது, ன்னு டக்குனு சொல்லிவிட்டு வைத்து விடுவான். எவ்வளவு பழக்கமான டிரைவர் ஆனாலும் சரி இரவு 10 மணிக்கு மேல், எந்த உயிர் போகும் அவசரத்துக்கும் கூட வர மாட்டான்! அவங்களுக்கு அவ்வளவு கொள்கைப் பிடிப்பு!
அந்த ஊரில் இருக்கும் எல்லா ஊழியர்களும் அந்த ஊரின் இப்படியான உயரிய குணங்கள் கொண்டவர்கள் தான்! காலையில் எட்டு மணிக்கு வங்கிக்கு போஸ்ட்மேன் வருவார். வங்கிக்கு தினசரி 20,30 பதிவுத் தபால் வரும். எல்லா தபால்களும் கிளை மேலாளர் பெயருக்கு தான் வரும். காலை 8 மணிக்கு கிளை மேலாளர் வேலைக்கு வர மாட்டார். ஆதலால், பணியில் இருக்கும், வாட்ச்மேனிடம் தபால்களை கொடுத்து கையெழுத்து வாங்குவது எல்லா ஊரிலும் பழக்கம். ஆனால் இந்த ஊரில், போஸ்ட்மேன் வேண்டுமென்றே, கிளை மேலாளர் கையில்தான் கொடுப்பேன், அவரை வரச் சொல்லுங்கள் என்று அடம்பிடிப்பார்! தமிழ்நாட்டில் மற்ற ஊர்களில் வங்கிக் கிளை மேலாளர் என்றாலே ஒரு தனி மரியாதை கொடுப்பார்கள். இந்த ஊரில் எந்த பதவிக்கும் மரியாதை கிடையாது. சரி, வங்கி மேலாளர் அந்த நேரத்தில் வங்கிக்கு போக முடியாது எனவே கடிதங்களை வாட்ச்மேனிடம் கொடுக்கவும் என்று போஸ்ட் மேனின் மேலதிகாரி போஸ்ட் மாஸ்டரி டம், பேசுவார். உடனே போஸ்ட் மாஸ்டர் சரி என்று சொல்வார் என்று நினைக்காதீர்கள். அவர் சொல்வார், அதுதான் ரூலு! இதுல நான் என்ன பண்ணமுடியும்? என்பார்! எதிலேயும் பிரச்சனை செய்வதில் வல்லவர்கள் இந்த ஊர்க்காரர்கள்! அதுதான் அவர்கள் பவர் என்று நினைத்துக்கொள்வார்கள்! வீட்டில் போய் பெருமையாகச் சொல்வார்கள், வங்கி மேலாளரை மிரட்டிட்டேன் பாத்தியாடா! என்று.
இதெல்லாம் என் கணவர் வங்கி மேலாளர், அவருடைய உண்மை அனுபவங்கள்.
ஒரு முறை கணவரின் வங்கி தலைமை பொது மேலாளர் கிளைக்கு வந்திருந்தார். அவருடன் அவர் குடும்பமும் வந்திருந்தது. இதுதான் சரியான நேரம் என்று, என் கணவரை பழிவாங்க நினைத்த ஒரு வங்கி வாடிக்கையாளர், அவர் காரை வேண்டுமென்றே தலைமை பொது மேலாளர் வந்திருந்த காரின் முன்னால் நிறுத்தி விட்டார்! அதாவது இந்த காரை எடுத்தால்தான் அதை எடுக்க முடியும்! முன்பு,அந்த வங்கி வாடிக்கையாளர் கேட்ட ஒரு கடனை என் கணவர் தகுதி இல்லாததால் மறுத்துவிட்டார்! அதற்கு பழிவாங்க அவர் தருணம் நோக்கிக்கொண்டிருந்தார்! பெரிய அதிகாரி வருவதை உள்ளிருக்கும் ஊழியர்கள்தான் போட்டுக் கொடுத்து இருக்க வேண்டும்! இது வெளியே சொல்லப்படும் செய்தி அல்ல. அதிகாரி வேலை முடிந்து திரும்பும் நேரம் வந்தது. இந்த வாடிக்கையாளர் அவர் காரை நகர்த்த மறுக்கிறார். என் கணவர் வெளியில் வந்து சொல்லிய பிறகும், அவர் வேண்டுமென்றே காரை நகர் த்தாமல் அடம்பிடிக்கிறார். பின்னர் அந்த பெரிய அதிகாரியே, அப்படியே வந்து,ஆங்கிலத்தில் வாடிக்கையாளரை பார்த்து காரை நகர்த்தச் சொன்னார். பின்னர் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு அவர் காரை ஒருவழியாக நகர்த்தினார். வாடிக்கையாளரின் ஒரே நோக்கம், என் கணவரை பெரிய அதிகாரியின் முன் அவமானப்படுத்த வேண்டும் என்பதே! ஆனால் என் கணவர் நடந்த இந்த மோசமான சம்பவத்தை அவருக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்! இந்த ஊர் மக்களின் குணமே தனி, என்பதை விளக்கமாக சொன்னார்! இறுதியில் பெரிய அதிகாரி என் கணவரை பாராட்டிவிட்டு சென்றார்! எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் எப்படி இவ்வளவு நல்ல வியாபார வளர்ச்சி காட்டியிருக்கிறீர்கள் என்று எல்லோர் முன்னிலையிலும் பாராட்டினார்.
வங்கியில் வேலை பார்க்கும் கடைநிலை ஊழியர் Messenger மெசஞ்சர் என்று அழைக்கப்படுவார். எல்லா ஊரிலும் அந்தப் பதவியில் வேலை பார்ப்பவர்கள் சொன்ன எல்லா வேலை எல்லாவற்றையும் செய்வார்கள். அரசு அலுவலகங்களில் பியூன் என்று சொல்லப்படும் ஊழியர்கள்தான் வங்கியில் இவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்.அந்த ஊரில் மட்டும், மெசஞ்சர் என்றால் மெசேஜ் கொடுப்பவர் என்று பொருள், ஆதலால் காபி எல்லாம் வாங்கி கொடுக்க மாட்டேன், என்று வாதிடுவார் அந்த கடைநிலை ஊழியர் ! அதற்கு தொழிற்சங்கமும் ஆதரவு கொடுக்கும்! முக்கியமான பெரும் வாடிக்கையாளர்கள் வரும்போது, கிளை மேலாளர் அவர்களுக்கு காபி வாங்கி கொடுப்பார். இந்தக் கிளையில் மெசஞ்சர் அந்த வேலையை செய்ய மாட்டார்! டீ கடைக்காரருக்கு தனியாக காசு கொடுத்து கொண்டு வந்து கொடுக்கும் படியாக ஒரு ஏற்பாடு செய்தார் என் கணவர்!
ஒருமுறை வங்கியில் ஒரு பெரிய தொழிற்சாலைக்கு கடன் கொடுத்து இருந்தார்கள். அந்த தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு வங்கியின் வட்டார தலைமை அலுவலரை ( ரீஜனல் மேனேஜர் ) அழைத்திருந்தார்கள். காலையில் எட்டரை மணிக்கு திறப்பு விழா. அதனால் அவர் அதிகாலையிலேயே எழும்பி,120 கிமி பயணம் செய்து மிகுந்த பசியுடன் வந்து சேர்ந்தார். பொதுவாக தமிழ்நாட்டில் இவ்வாறாக யாரை அழைத்தாலும் அவர்களுக்கு விஐபி வரவேற்பு கொடுப்பார்கள். அவர்களை தனியே அழைத்துக்கொண்டு போய் உணவு கொடுத்து உபசரிப்பார்கள். ஆனால் இந்த ஊரில் அப்படி கிடையாது. உணவு எல்லாம் தயாராக இருந்தது. ஆனால் இவரை அழைக்க இல்லை. உணவு கொடுக்கவும் இல்லை. அவர் நீரிழிவு நோயாளி ஆனதால் பசியில் கிரங்கி விட்டார். என் கணவரையும் உணவுக்கு அழைக்காததால் அவர்களிடம் போய் உணவு கேட்பது கேவலமாக இருந்தது. ஆனால், அவர்கள் எல்லோரும் ஜாலியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்! திறப்பு விழா முடிந்தவுடன் முதல் வேலையாக என் கணவர் அவர் மேல் அதிகாரியை ஒரு உணவகத்திற்கு கூட்டிச்சென்று உணவை வாங்கி கொடுத்தார். இவ்வளவு ஒரு கேவலமான வரவேற்பு தமிழ்நாட்டில் வேறு எந்த ஊரிலும் நடக்காது.
ஒரு முறை எங்கள் கார் ஒரு இடத்தில் நிறுத்தி வைத்திருந்தோம். திரும்ப வந்து ஸ்டார்ட் செய்த போது ஸ்டார்ட் ஆகவில்லை. அதன் அருகில் நான்கு இளைஞர்கள் சும்மா உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் என் கணவர் போய், தம்பி கார் ஸ்டார்ட் ஆகவில்லை, கொஞ்சம் தள்ளி விட முடியுமா? என்று கேட்டார். அவர்கள் உடனே பதிலுக்கு, பக்கத்துல ஒர்க்ஷாப் இருக்கு போங்க, ஸ்டார்ட் பண்ணி தருவாங்க, ன்னு சொல்லிவிட்டு அவர்கள் பார்த்துக் பேசிக்கொண்டிருந்தார்கள்! இந்தியா முழுவதும் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம். எந்த ஊர்லயும் இவ்வாறான ஒரு உணர்ச்சி இல்லாத பதிலை நாங்கள் கேட்டதே இல்லை. இவ்வளவுக்கும், எங்கள் குடும்பம் காரினுள் இருப்பதையும் அவர்கள் பார்த்தார்கள்! அதுதான் அந்த ஊர் பாணி! அப்புறம் நாங்க ஒர்க் ஷாப் போன் பண்ணி அவர்கள் வந்து சரி பண்ணி கொடுத்தார்கள்!
அந்த ஊர் மக்களுக்கு இன்னொரு குணம் உண்டு. அவர்கள் கேட்டதை கொடுக்க வில்லை என்றால் ஊடகத்திலிருந்து பேசுவது போல பேசுவார்கள்! நிறைய குற்றச்சாட்டுகள் சொல்லுவார்கள்! அதைக் கேட்டால் பயந்து விடுவோம் என்று நினைப்பார்கள்!
இந்த ஊரில் இரண்டு வருடம் நாங்கள் உயிர்தப்பி வாழ்ந்தோம் என்றால், எங்களுக்கு அதற்காகவே நோபல் பரிசு தரலாம்! டிஸ்கவரி சேனல் கிர்ல் பேர் ஸ் இந்த ஊரில் ஒரு நாள் கூட வாழ முடியாது. நாங்கள் ஒரு சிராய்ப்பு கூட இல்லாமல் தப்பித்து வேறு ஊருக்கு மாற்றலாகி சென்றோம்! அப்பாடா 😇
இவ்வளவு கேட்டவுடனே நீங்கள் அது எந்த ஊர் என்று தலையை குழப்பிக் கொண்டு இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும்.
அந்த ஊரில் எல்லாம் படித்த மக்கள். அழகாக இருப்பார்கள், அழகாக உடுத்துவார்கள். கேரளாவின் வெள்ளை தோலும், எல்லா கெட்ட குணங்களும் இவர்களுக்கு நிறைய உண்டு! இந்த ஊரில் இருந்து பத்து கிலோமீட்டர் போனால் கேரள எல்லை வந்துவிடும். இங்கு ஓணம் விமரிசையாக கொண்டாடுவார்கள்.
ஊரின் பெயரை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்!
அந்த ஊர்க்காரர்கள் கோரா விலும் நிறைய இருக்கிறார்கள். அதனால் நான் பெயரை வெளியிட விரும்பவில்லை. அவர்கள் வருத்தப்படுவார்கள்..
*
ஏறத்தாழ போகன் சங்கர் அளவுக்கே மெல்லிய நையாண்டியுடன் எழுதியிருக்கிறார். ஏறத்தாழ அவர் சொல்வது உண்மை. நாகர்கோயிலில் பணியாற்ற அதிகாரிகள் அஞ்சுவார்கள். உரிமைக்குரல் எங்கே எழும் என சொல்லமுடியாது. ஜனநாயகம் அடுத்தபடிக்குச் சென்றுவிட்ட ஊர்.
யோசித்துப் பார்த்தால் குமரிமாவட்டத்தின் ஒரே சிறப்பு என்பது சாமானியர்களின் பேச்சில்கூட இருக்கும் நையாண்டியும் படிமங்களும்தான். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகை ஒவ்வாமைகள். முற்றிலும் சம்பந்தமில்லாமல் பேசுவது, எந்த உள்ளடக்கமும் இல்லாமல் மணிக்கணக்காக உரையாடுவது, முன்னர் சொன்னவற்றை அக்கணமே மாற்றிப்பேசுவது என மையத்தமிழகத்தில் நான் இதேபோல பல ஒவ்வாமைகளைக் கண்டிருக்கிறேன்.
ஜெ