சடம் கடிதங்கள்-3

சடம் [சிறுகதை] ஜெயமோகன்

அன்புள்ள ஜெ,

‘சடம்’ சிறுகதை வெறுமே உரையாடல் வழியாகச் சென்று சட்டென்று மிக உச்சத்தை அடைகிறது. கதையிலிருக்கும் தத்துவம் வாழ்க்கை பற்றிச் சிந்திப்பதற்கு இன்னும் இன்னும் திறப்புகள் தந்தவாறு இருப்பது இனிய அனுபவம். சுடலைப் பிள்ளை ஏறக்குறைய சடம்; அவரிடம் சித்தம் பெரிதாக இல்லை. தன்னிடம் இருக்கும் அதிகாரம் ஊடாக அவர் சீரழிக்கும் பெண்கள் சார்ந்து அவருக்குக் குற்றவுணர்வோ, மானுடம் சார்ந்த அறவுணர்வுகள் தீண்டப்படும் இடங்களோ இல்லை. வாதம் வந்து படுக்கையிலிருக்கும் மனைவி அவருக்குச் சவமாகத் தெரிகிறாள்; அவளுடன் கூட இயலவில்லை. ஆனால், இப்போது அவர் புணர்வது நிஜமான பிணத்தை. அவரிடம் இருந்த கொஞ்ச நஞ்ச சித்தமும் விலகிச்செல்ல – அவரே திகைப்புடன் விலகி நின்று தான் செய்வதைப் பார்த்துக்கொண்டிருக்க, அவரை மீறி அந்தச் செயல் நிகழ்கிறது. சித்தம் இல்லாத இறந்த அந்தப் பெண்ணுடலுடன், சித்தம் இல்லாத சுடலைப் பிள்ளையின் உடல் கலவி கொள்கிறது. அங்கே இறுதியில் நிகழ்வது என்ன? சித்தத்தை வெல்ல சடம் அடையும் முயற்சியா? பாறைப்பரப்புகள் சருமம்போல் உயிர் கொள்கின்றன. அவளது உடல் சித்தம் கொண்டு அவரை அணைத்துக் கொள்கிறது. சித்தமற்ற சடங்களின் இணைவில் பிறப்பது சித்தம் என்றாகிறது. எனக்குப் பிக் பாங் தியரியையும், உலக உருவாக்கத்தையும் நினைவுபடுத்தி யோசிக்க வைக்கிறது.

அன்புடன்

அனோஜன் பாலகிருஷ்ணன்

***

அன்புள்ள ஜெமோ,
சடம் சிறுகதை பற்றிய என்னுடைய புரிதல். அடுத்தவர் மீது  ஒவ்வொரு கணமும் அதிகாரத்தை செலுத்த நினைக்கும் கோழை மனம் தான் சுடலைப்பிள்ளையுடயது. அவர் செய்யும் பாலியல் வல்லுறவுகள் அவர் செலுத்த நினைக்கும் அதிகாரத்தையும் காட்டுகின்றன.  சவம் போல் இருக்கும் பெண்ணை கூட புணர விரும்பாதவர் கடைசியில் நிஜ சவத்தையே புணர்கிறார். அவரின் கீழ்மையை விலகி நின்று அவரது சித்தம் உணரும் கணத்தில் அவரது உலகில் உள்ள அனைத்தும் அந்த கீழ்மையை அறிகின்றன.
வேல்முருகன்.

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

ஓலைச்சுவடி ஜனவரி இதழில் வந்த தங்களின் கதை ”சடம்” வாசிக்கும்போது வெண்முரசு முதற்கனல்- 1 ல் கத்ருதேவி காஸ்யபனிடம் அழியாமல் இருக்கும் ”இச்சை”தான் வேண்டும் என்று கூறும் வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.
சுடலை பிள்ளையில் இச்சையின் குணங்களான அகங்காரமும், காமமும் வெளிப்படுவதும் அவர் சிஜ்ஜடமாவதும் அற்புதமான வரிகள்.

அன்புடன்
ராஜசேகரன்

சடம் கடிதங்கள்-2

ஜடம்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைமுதற்கனல் வாசிப்பு- லெட்சுமிநாராயணன்
அடுத்த கட்டுரைஅஜ்மீர் கடிதங்கள்-5