குழந்தைவதை
அன்புள்ள ஆசிரியருக்கு,
என்னை சிறுவயதில் பல பயிற்சிக் கூடங்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள் . அதுவும் கோடைகால விடுமுறை நாட்களில் கேட்கவே வேண்டாம். ஆங்கிலம், ஹிந்தி வகுப்புகள், கணினி, தட்டச்சு, ஓவியம், கராத்தே என்று முழு நாட்களும் சுழன்று கொண்டிருப்போம். எனக்கு ஓவியம், கராத்தே தவிர வேறு எதிலும் ஆர்வம் இல்லை. ஆனால் வீட்டில் இருந்தால் பையன்களுடன் சேர்ந்து ஊர்சுற்றப்போய் கெட்டுவிடுவேன் என்ற நம்பிக்கையில் இது போன்ற வகுப்புகளில் அனுப்பி விடுவார்கள். ஒருவேளை படிப்பு கைகொடுக்காவிட்டால் இயல்பிலேயே ஓவியத்தில் ஆர்வமும் இருப்பதால் ஓவியம் எல்லாம் கற்று வரைந்தாவது பிழைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கையும் காரணம். ஆனால் ஒரே ஒரு நல்ல விஷயம் வகுப்புகளில் அனுப்பிவிடுவதோடு சரி. அதற்கு மேல் அதில் தலையிட மாட்டார்கள். எனக்கு கராத்தேவும் ஓவியமும் மட்டும் போதும் என்ற போதும் என்னை வேறெதற்கும் வற்புறுத்தவுமில்லை. இவ்விரு கலைகளில் தொடர்ந்த ஆர்வமும் பிறகு ஓவியம்/காட்சிக்கலை என் முழுநேரத் துறையாகவும் மாறிப் போனது.
நான் ஓவியக் கல்லூரியில் படிக்கும் காலங்களில் பகுதி நேரத்திற்கு ஓவியப் பயிற்சிப் பள்ளிகளில் ஓவிய வகுப்புகள் எடுத்திருக்கிறேன். குறிப்பாக குழந்தைகளுக்கு. சில பெரியவர்களும் வருவார்கள். அதனால் குழந்தைகளுக்கு ஓவியம் போன்ற பயிற்சிகளை அளிப்பதில் அவர்களை பயிற்சிக்கு அனுப்பும் பெற்றோர்களின் சிக்கல்கள் தெரியும். லாப நோக்கில் மட்டுமே நடத்தப்படும் பயிற்சிக் கூடங்களுக்கு கலையோ குழந்தைகளின் மனநிலையோ தேவையில்லை. பெற்றோர்களுக்கும் ஒரு கலையை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது என்ற நோக்கத்தை விட தங்கள் குழந்தைகள் பரிசு பெற வேண்டும் என்பது தான் குறிக்கோள். ‘உங்க பையன் நல்லா வரைரான்‘ என்று யாராவது சொல்லக்கேட்டு பரவசமடையும் எளிய உள்ளங்கள். ஒரு மரத்தை வரையும் போது அதற்கு பச்சை நிறத்தில் மட்டும் தான் இலைகள் இருக்கும் என்று ஒரு பயிற்சியாளர் ஒரு குழந்தையின் மனதில் ஆழமாக பதித்து விட்டார் என்றால் அது தன் வாழ்க்கையின் கடைசி தருணம் வரை கூட இலைகளுக்கு பச்சை நிறம் மட்டும் தான் என்று நம்பிக்கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இலைகள் வாட ஆரம்பிக்கும் போது பழுப்பு நிறத்தையும் காலநிலைக்கு ஏற்ப வேறு வேறு நிறங்களையும் முற்றிலும் பச்சை நிற இலைகள் இல்லாத மரங்களும் உலகத்தில் உள்ளன என்பதையும் அந்த குழந்தை கணக்கில் கொள்ள பயிற்சியாளர் விடவே மாட்டார். முதலில் பயிற்சியாளருக்கு அது தெரிந்திருக்க வேண்டும். ஓவியத்தில் இலைகள் பச்சை நிறத்தில் மட்டுமில்லாமல் குகை ஓவியத்தில் இருந்து இன்றைய சமகாலப் படைப்புகள் வரை வேறு வேறு கலைஞர்கள் வேறு வேறு விதத்தில் இலைகளை பதிவு செய்துள்ளார்கள் என்று பயிற்சியாளருக்கு தெரிந்திருந்தால் குழந்தைகள் தங்கள் இயல்பிலேயே வேறு வேறு வண்ணங்களில் மரங்களை புரட்டியெடுக்கும் போது அவர் கொஞ்சம் நிதானத்தை கடை பிடிப்பார்.
ஓவியத்திற்கு என்று சிறப்பு படிப்பு படித்தவர்களுக்கு இது போன்ற பயிற்சி கூடங்களில் பணியாற்ற ஒரு மணி நேரத்திற்கு 500-1000 ரூபாய் கட்டணம்(நம் தகுதியையும் நாம் பணியாற்றும் இடத்தையும் பொறுத்து இக்கட்டணம் மேலும் ஏறலாம்) என்றால் வேறு வேலை வாய்ப்புகள் இல்லாமல் ஓவியத்தில் அடிப்படை ஆர்வம் மட்டுமே இருப்பவர்கள் பயிற்சியாளராக வந்தால் ஒரு நாளுக்கே கூட 500 ரூபாய் கொடுக்க வேண்டியதில்லை. அதனால் எப்படியாவது ஒப்பேற்றி லாபம் மட்டும் பார்த்தால் போதும் என்று நினைக்கும் பயிற்சிக் கூடங்கள் குறைந்த செலவில் திறமையற்றவர்களை அமர்த்திக் கொள்வார்கள். அடுத்ததாக எல்லா கலைஞர்களும் கற்பிக்கும் மனநிலை கொண்டவர்கள் அல்ல. அதுவும் குழந்தைகளுக்கு கற்பிக்கும் போது இயல்பாகவே அவர்களின் உலகத்தை விரும்பி அவர்களுடன் அணுக்கமாகத் தெரிந்தவர்களால் தான் குழந்தைகளுக்கு ஏதாவது கற்றுக் கொடுக்க முடியும்.
படைப்பாற்றலின் வேரே ஏற்கனவே செய்து கொண்டிருப்பதை மாற்றி வேறு விதத்தில் செய்து பார்த்தால் என்ன என்று நம்மை யோசிக்க வைக்கும் உந்துதல் தான். பெரும்பாலும் குழந்தைகள் அதை இயல்பாகவே செய்வதை பார்த்திருக்கிறேன். அந்த இயல்பை முற்றாக ஒழித்துக் கட்டுவதையே பல பயிற்சியாளர்கள் செய்கிறார்கள். ஒரு பக்கம் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு. மறுபக்கம் பெற்றோர்களிடமிருந்து கட்டணத்தை பெறும் பயிற்சியாளர்களின்/பயிற்சிக்கூ
இன்று குழந்தைகளை இதுபோன்ற பயிற்சி கூடங்களுக்கு அனுப்பும் பெற்றோர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர குடும்பத்தில் இது போன்ற பயிற்சிகளை சிறுவயதில் பெற வாய்ப்பற்றவர்களாக இருக்கும் சூழலில் இருந்து மேலே வந்தவர்கள். அதனால் தங்கள் குழந்தைகள் எல்லா பயிற்சிகளும் பெற்று அனைத்தையும் கரைகண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒரு விதத்தில் அது நேர்மையான உணர்வு போலத் தோன்றும். அதுவே குழந்தைகளுக்கு அழுத்தத்தையும் கொடுக்கிறது. பல கலைகளை பயிற்சிகளை குழந்தைகளுக்கு கண்ணில் காண்பித்து அறிமுகப்படுத்தி அதில் அவர்களுக்கு எது வருமோ எதில் ஆர்வம் உள்ளதோ அதை மட்டும் பெற்றோர்கள் தாங்களே நேரடியாக தலையிட்டுக் குழப்பாமல் அதற்கான நல்ல வகுப்புகளுக்கு அனுப்பினால் மட்டும் போதுமானது. யார் நல்ல பயிற்சியாளர் என்று கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கும் பொறுப்பு மட்டுமே பெற்றோர்களுக்கு உரியது. அத்துறையில் நீடித்த ஆர்வமும் பயிற்சியும் மற்றும் குழந்தைகளிடம் எளிதாக பழகத்தெரிந்தவர்களை பயிற்சியாளராக கொள்ளலாம். ஆனாலும் அக்கலையில் தான் குழந்தைகள் சாதிப்பார்கள் என்றோ பிறகு வேறு கலைகளில்/துறைகளில் அவர்களின் ஆர்வம் செல்லாது என்றோ உறுதியாக சொல்லவே முடியாது.
ஜெயராம்