சென்ற சில வாரங்களாக அருண்மொழி இசை பற்றிய கட்டுரைகளை எழுதிவருகிறாள். பல கட்டுரைகள் சுவாரசியமானவை. சில தமிழ் கீர்த்தனைகள்- சில குரல்கள்- சில பித்துக்கள். கருமையின் அழகு போன்றவை. இசை சார்ந்து வாசிக்க விரும்புபவர்கள் அவற்றில் பல ரசனை நுட்பங்களை காணலாம். அவள் இங்கே இரவுபகலாக இந்துஸ்தானியும் கர்நாடக சங்கீதமும் கேட்டுக்கொண்டிருந்தாள். நான் ஊ சொல்றியா மாமா கேட்டுக்கொண்டிருந்தேன். கூடவே அவள் சுட்டிக்காட்டிய இந்த இசையையும் அவ்வப்போது கொஞ்சம் கேட்டேன்.
இரண்டுவகைகளில் அருண்மொழியின் கட்டுரைகள் முக்கியமானவை. அவள் முறையாக இசை கற்றுக்கொண்டவள் அல்ல. இசையின் இலக்கணமும் தெரியாது. ஆனால் இசையில் பெரும்பித்துடன் மூழ்கியிருக்கிறாள். அவள் எழுதியிருக்கும் இக்கட்டுரைகளும் பித்து பற்றியவை. ஓர் உள்ளம் எப்படி இசைக்குள் நுழைகிறது, அதன் உணர்வுகளென்ன என்பது பற்றிய நேர்மையான, தீவிரமான பதிவுகள் இவை. இன்னொரு பக்கம் அருண்மொழி இசைக்கலைஞர் அல்ல, மொழிக்கலையே அவளுடையது. ஆகவே இவை ஓர் எழுத்தாளர் இசையை அணுகுவதன் பதிவாகவும் உள்ளன.
குறிப்பாக இந்தக்கட்டுரை முக்கியமானது. மொகல் இ அஸம் பற்றிய வரலாற்றுத்தருணத்துடன் இணைந்து இசைபற்றி எழுதியிருக்கிறாள். நான் இசையை எப்போதும் அப்படித்தான் அணுகுகிறேன். எனக்கு அவை வெறும் பாடல்கள் மட்டுமல்ல, அவை நிகழ்ந்த வரலாற்றுத்தருணத்தின் சாட்சியங்களும்கூட. ஆனால் இந்த பித்து எனக்கு இசையில் அமைவதில்லை.
காதலின் இசை-அருண்மொழி நங்கை
சில தமிழ் கீர்த்தனைகள் – சில குரல்கள் – சில பித்துகள் – 2
சில தமிழ் கீர்த்தனைகள்- சில குரல்கள்- சில பித்துக்கள்