போரும் அமைதியும் மொழியாக்கங்கள்
அன்பின் ஜெ.
போரும் அமைதியும் மொழியாக்கங்கள் குறித்து திரு.சத்ய நாராயணன் அவர்களுடன் தாங்கள் நடத்திய உரையாடலை முன்னிட்டு என் அனுபவங்களை கூறலாம் என்றிருக்கிறேன். பொது முடக்கத்து முந்திய (2019-ஆம் ஆண்டின்) பெருநிகழ்வு அது. உலகம் பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்துக்கு வெகு விரைவில் போய்ச் சேர்ந்து, எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பி வர வேண்டும். சுனில் கிருஷ்ணன்தான் இதற்கு தொடக்கப் புள்ளி போட்டது. சாந்தமூர்த்தி எல்லோரையும் முந்திக் கொண்டு அந்த ஆயிரம் மணிநேர வாசிப்பில் 89 நூல்களை படித்திருந்தார். பொறாமையாக இருந்தது. நேரிடையாக அந்த போட்டியில் நான் முறைப்படி பதிவு செய்துகொள்ளாவிட்டாலும் நானும் ரிங்குக்கு வெளியே அந்த ஓட்டத்தில் இருக்கத்தான் செய்தேன்.
இந்த நேரடி போட்டியில் நான் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு என் இயல்பும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். இந்த மாத உயிர்மை இதழில் முருகவேள் எழுதிய சிறுகதை ‘மதமாற்றம்’ வந்துள்ளது. அதில் ஸ்டீபன் சண்முகம் என்றொரு பாத்திரம். அவரைப் போல தானுண்டு என்று தன் போக்கு உண்டு என்கிற மனோபாவம் எனக்கும்.
மௌலானா ரூமியின் மஸ்னவி 27972 ஈரடி செய்யுள், அதில்லாமல் 1146 ஈரடி செய்யுள்கள் பிற்சேர்க்கையாக கொண்டது, அனேகமாக அதொரு இடைச்செருகல் என்றே கருதப்படுகிறது. ஏழு பெருந்தொகுதிகளை கொண்ட
29118 பாடல்கள். ஆயிரம் ஆண்டு பழமையான அந்த நூலின் மூல மொழியான பெர்சியன் (வாசிக்க மட்டுமே தெரியும், பிரெஞ்சு போல) ஓசைநயத்துக்காகவும், மூலமொழியில் படிக்க வேண்டும் என்கிற ஆவலில் அதையும், அதன் உருது தெளிவுரை, தமிழாக்கம், தேவைப்படும் இடங்களில் ஆங்கிலத்தையும் கூட வைத்துக் கொண்டு மஸ்னவியின் இலக்கிய அழகில் கிட்டத்தட்ட மூழ்கிக் கிடந்தேன். இப்பொழுது Shoukath Sahajotsu அவர்கள் மஸ்னவி மலையாள மொழிபெயர்ப்பின் புதிய நூல் குறித்த அறிவிப்பை கொடுத்துள்ளார், அதையும் வாங்கிப் படிக்க வேண்டும்.
இன்றைய கட்டுரையின் பேசுபொருளான ‘போரும் அமைதியும்’ நாவலை இங்கு தமிழில் படித்திருக்கிறேன். அண்மையில் வடநாடு சென்று திரும்பிய நண்பர் வாங்கி கொடுத்த இதே ‘போரும் அமைதியும்’ நாவலை பைசல் ஏவானின் உருது மொழிபெயர்ப்பில் ஒரு நூறு பக்கங்கள் கடந்திருக்கிறேன். வேறு (சில) நூல்களையும் பிற மொழிகளில் படிப்பது அலாதியான சொல் மயக்கத்தை தருகிறது. வாசிப்புச் சுவையை கூட்டவும், வேறு சில சொற்சேர்க்கையில் இரண்டு மொழிகளில் படிக்கும்போது மொழிபெயர்ப்பாளரின் இயலாமையால் மொழிபெயர்ப்பு ஆகாத சொற்கள் தனித்து கண்ணுக்கு படவே செய்கின்றன. எப்படி இருந்தாலும் நமக்கு ரஷ்ய மொழியோ, பெர்ஷியனோ அறவே தெரிய வாய்ப்பில்லாத நேரங்களில் இதுபோன்ற இணைவாசிப்பு உதவவே செய்கின்றன. இதற்கு முன்பு தாகூரின் சில படைப்புகள், கீதையின் உருது மொழிபெயர்ப்பு என படிக்கும்போது செவ்வியல் பிரதிகளின் மூலம் வரலாற்றின் ஏதோவொரு காலத்தில் நமக்கு அகப்படாத மூலமொழி ஒன்றின் துணுக்குகளே நம்மை வந்தடைந்து இருப்பதாக படுகிறது. இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும், அறிஞருமான டாக்டர் கரண்சிங் முன்முயற்சியில் வெளிவந்த பகவத் கீதை உருது மொழிபெயர்ப்பையும் படித்து ருசித்திருக்கிறேன்.
கடந்த விஷ்ணுபுரம் விழாவில் வத்ரேவு சி. வீரபத்ருடு அவர்களின் கவிதையை ராஜு செய்திருந்த மொழிபெயர்ப்பும், மேடையில் அவ்வளவு இயல்பாக, மூலத்துக்கு நெருக்கமாக கொண்டு போன அழகும் என்னை வியக்க வைத்தன. வரக்கூடிய ஆண்டுகளில் கன்னடத்திலிருந்து, மராட்டியிலிருந்து நேரடியாக அறிமுகப்படுத்தி இணைப்பு பாலத்தை ஏற்படுத்தலாம். இதற்கு முன்பு சிவசங்கரி அவர்கள் இதற்கான முன்கையெடுத்து செய்த மொழியாக்க கட்டுரைகளை (சில பத்தாண்டுகளுக்கு முன்பு) படித்த நினைவுள்ளது. அது நூலாகவும் தொகுக்கப்பட்டதாக அறிகிறேன். இது நம் புரிதலை விரிவுபடுத்துவதாக அனுபவம்.
நன்றி
கொள்ளு நதீம், ஆம்பூர்.