சில மாதங்களாகவே, வெண்முரசிக்குள் நுழையலாம் என்ற எண்ணம் தயக்கத்தை மீறி மேலோங்கி வந்திருந்தது. தயக்கத்திற்குக் காரணம், வெண்முரசு கண்டிப்பாக உழைப்பைக்கோரும். வேறு எதையும் செய்யவிடாது. செயலற்றதன்மையை உண்டாக்கும். மனம் தயாராகவே இருந்தது. அனைத்தையும் தூக்கி வீசிவிட்டு வெண்முரசினுள் நுழைந்தாயிற்று:
மாபெரும் காவியம், அதற்கான தகுந்த நுழைவாயில். “முதற்கனல்”.
அன்று நிலவிய அரசியல் சூழல், அறநிலைகள், தர்க்கங்கள் ஆகியவற்றின் மீது தோய்ந்தெறியும் நெருப்பின் “முதற்கனல்”.வெண்முரசின் உச்சதருணங்கள் என நான் உணர்ந்தவற்றை உங்களுடன் பகிரவிரும்பியே இந்த கடிதம்.
யாகநெருப்பின் முன், ஜனமேஜயன் – ஆஸ்திகன் உரையாடல்
“மொத்த காவியத்தின் சாரமே, முழு உலகின் இயக்கமே சத்வ, ரஜோ மற்றும் தமோ குணம் ஆகியவை முயங்கி, பின் நிகழும் தரிசனமே. அவை மோதி, முரண்பட்டு இறுதியில் சமன்பட்டு அடையும் ஒன்றே பொன்னுலகு. இவற்றுள் இச்சையை அழித்தால், அழிவது அந்த பொன்னுலகை அடைவதற்கான வழியே. இதுவா அறம்?” என கற்றறிந்த அவையை அதிரச் செய்கிறான். ஆஸ்திகன். இச்சையை அழிக்கும் பொருட்டு செய்யப்படும் வேள்வி முன் வைக்கப்படும் இந்த ஒற்றைக்கேள்வி, யுகயுகமாக, பொன்னுலகை அடைய விரும்பும் சீற்றம் கொண்ட எவனொருவனும் தனக்குள்ளும், மற்றவரிடமும் கேட்கும் கேள்வி. இவற்றுள் எதுவொன்றும் அழியாலாகாது என்பதே விடை. சத்வ, ரஜோ மற்றும் தமோ குணம் இம்மூன்றும் அவற்றுள் ஒன்றை ஒன்று பொருதி, பொருதுவதன் பொருட்டே தன்னை நிலைநிறுத்துபவை.
சத்தியவதி – பீஷ்மர் உரையாடல்
பீஷ்மர் செய்யும் யாவும் அறத்திற்கு எதிராகவே. ஆனால், அறத்தைக் காக்கும் பொருட்டு. அது அவர் அன்னையின் வரம்.ஒவ்வொரு மீறலின் முன்னும் பின்னும் நாம் அவரிடம் காட்டுவது பரிவே. இறக்கி வைக்க முடியாத அளவு, அவ்வாறே இறக்கி வைத்தால் மீண்டும் தோளில் ஏற்றி வைக்க முடியாத அளவு பாரம் அவர் மீது ஏற்றப்படுகிறது. அதுவும் தொடர்ந்து. சிறு வயது முதல். ஏன்? மிகவும் எளிமையான பதில். அவரன்றி வேறெவராலும் முடியாது என்பதாலேயே.
காசி ராஜன் பீமதேவன் மகள்களை சிறையெடுக்கும் பொருட்டு நிகழும் சத்யவதி-பீஷ்மர் உரையாடல், சிறையெடுத்தபின், மண நிகழ்வின் போது மறுமொழி கூறாமல் நடையைக் கட்டும் அன்னை மீதான பெருமதிப்பு, ஒவ்வொரு கணமும் அறத்தை காக்கும் பொருட்டு அறத்தை மீறுதல் என ஒரே கணத்தில் பிதாமகராவும், எளியவனாகவும் தோன்றுகிறார். இளவரசிகளை சிறையெடுக்கச் செய்தல், இளவரசிகள் கருவுறும் பொருட்டு, வியாசரை இம்முடிவை ஏற்கச் செய்வதாக, பீஷ்மரை அவர் வாயாலேயே கூறச் செய்யும் தருணம் என அனைத்திலும் “அரசகுலத்தி” ஆகிறாள் “மச்சகந்தி” சத்யவதி.
அம்பையின் மன(மண)வெளி – பயணம்
அம்பை ஒவ்வொருவராலும் கைவிடப்படும் போதும் அவர்களனைவரும் கூறும் ஒற்றைச்சொல் “அறத்திற்காக”. அறத்தின் வெம்மையால் முழுவதும் சுடப்பட்டவள். ஆனால் அவள் அறத்தின் வெம்மையால் கருகாமல், சிவக்கிறாள். சொல்லில், செயலில், உடையில் என அனைத்திலும் கனலால் சுடப்பட்ட இரும்புத்தண்டின் முனை போல. அவள் இந்த யுகத்திற்கானவளும் கூட. எல்லா யுகத்திற்குமானவள்.
முதற்கனலில் அம்பையின் பயணம் எனக்கு அபலையின் பயணமாகவே தோன்றுகிறது. காதலன் கிடைக்கவில்லை, தந்தையகத்தில் இடமில்லை, தாயால் அரவணைப்பும் கிட்டவில்லை, சரி சிறையெடுத்தவனுடன் இருக்கலாமென்றால் அவன் அறத்தை கொன்று, பின்னர் “அறம்” பேசியும் கொல்லுகிறான். அனைத்து அறங்களும், அம்பையின் முன் தங்கள் பெருங்கதவை சாத்திக்கொள்கின்றன. ஆனால், அம்பை சோரவில்லை. மாறாக, சம்மட்டியால் அடிக்கும் போது அதிரும் இரும்பைப்போல அதிர்வுற்று பின் ஆயுதமாகிறாள். பின் பித்தியாகிறாள். சிகண்டினியின் ஆன்மாவில் தன்னை உட்செலுத்தி “சிகண்டி”யாகிறாள். அதன்பின், சிகண்டியிடம் இருந்து அவளை பிரிப்பதற்கில்லை, குளிருலையில் இடைப்பட்ட செவ்விரும்பைப்போல சிகண்டிக்குள் அவள் தன்னை இறுக்கிக்கொள்கிறாள்.
அம்பை – பீஷ்மர் உரையாடல்
மிக அழகாக வரையப்பட்ட ஷண்முகவேலின் ஓவியம் இந்த உரையாடலின் சுருக்கத்தை, வீரியத்தை கடத்தியுள்ளது என சொல்லலாம். பின்னங்கால்கள் கட்டப்பட்ட யானை முன் அம்பை வேண்டும் காட்சி. பீஷ்மர், அம்பை இருவருக்கும் நாம் இந்த விவாதத்தில் தோற்றுவிடுவோம் என முன்னமே தெரிகிறது. இந்தக் கணத்தை/கனத்தை வெற்றிகரமாக கடக்க வேண்டும் என, அதற்கான சகல முயற்சிகளையும் செய்து பார்க்கின்றனர். இறுதியில், கால்கள் கட்டப்பட்டிருந்தாலும் யானை வெல்கிறது. ஆனால் அது அந்த கணத்தை மட்டுமேவெல்கிறது. அது யானைக்கும் தெரிந்துதான் நிகழ்கிறது.
அம்பிகை – விசித்திரவீரியன் உரையாடல்
முதற்கனலில் எனக்கு மிகவும் பிடித்த இடம் இது. முதற்கனலின் அறங்களையெல்லாம் சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு நிகழ்ந்த ஓர் இலக்கியத்தருணம். ஒரு இலக்கிய தருணத்தின் உச்சம். முற்றிலும் வெறுக்கும் ஒருவரின் அகத்தை தனது அகத்திற்குள் எப்படி உள்வாங்குவது? அவ்வாறே உள்வாங்கும் பெண்கள் எல்லாக்காலத்திலும் இருந்தாலும், அதனை எழுத்தில் எப்படி நிகழ்த்துவது? அம்பிகை வேறு வழியின்றி விசித்திரவீரியனை தனக்குள் செலுத்திக்கொள்ள வில்லை அல்லது ஏற்கவில்லை. அவள் அவனை முதுமாக அறிந்து பின்னர் அவனாகிறாள். விசித்திரவீரியனின் இறப்பிற்குப்பின், அனைவரும் சத்தியவதி உட்பட தீர்க்கவியாதியசனான அவனிடம் இவள் எதைக்கண்டாள்? அவர்கள் அனைவரும் கண்டடையும் விடை “அகம்” .
மிகச் சாதாரணமான ஒரு முதலிரவுதருணம், இருவேறியற்கையான பகலும் இரவும் கூடும் அந்தித்தருணமாக, இரவும் பகலும் கூடும் புலரியாக, சுவை கூடுவது நிச்சயமாகவே ஓர் இலக்கியத்தருணம். இவை இரண்டும் சிறுபொழுதேயானாலும், நினைவில் நிற்கும் பெருங்கணங்கள். இருப்பில் எவ்வாறு நிகழ்ந்திருந்தாலும், இவ்வாறாகவே நிகழ்ந்திருக்க வேண்டும் என மனம் விரும்புகிறது. புனைவின் களி. இனி, பெருங்காதல் கதைவரிசைகளில் அம்பிகை – விசித்திரவீரியன் என இவர்களும் சேர்த்தே சொல்லப்படலாம்.
ஆடியின் ஆழம் பகுதி முழுவதும் அழகிய பின்னல்கள் நிறைந்த பகுதி. அம்பையின் ஆடியாகிய சிகண்டி, பீஷ்மர். அழிக்கும் பொருட்டு பீஷ்மரின் ஆடியாகிய பால்ஹிகரை சந்திக்கச்செல்லும் பயணம், மிக அழகான விவரணை. சிகண்டி, பீஷ்மர் மற்றும் பால்ஹிகரை இவர்கள் அனைவருமே ஆடிகள்தாம் . பீஷ்மர், சகோதரர்களை தாங்குவதால் பால்ஹிகரின் ஆடி. அம்பையின் பீஷ்மர் மீது வஞ்சினத்தின் ஆடி சிகண்டி. ஆனால் ஆடிகள் தங்குளுக்குள் மோதுவதால் நிகழப்போவது ஒன்றும் இல்லை, அவ்வாறு நிகழ்ந்தால் எஞ்சுவது என ஒன்றும் இல்லை என அறிந்தவர் பால்ஹிகர். பீஷ்மரை கொல்வதற்கு நீ முதலில் அவரை அறிய வேண்டும் ஆனால், அவ்வாறு அறிந்த பின் உன் எண்ணம் மாறலாம் என்கிறார் பால்ஹிகர். ஆடிகள் தங்களை உடைத்துக்கொள்ளும் பொருட்டே மோதுகின்றன, பீஷ்மரும் பால்ஹிகரும் போல. மாபெரும் பின்னல் இது.தன்னைக்கொல்லப்போவதாக தன்னிடம் சொல்லும் சிகண்டியிடம், பீஷ்மர் காட்டும் அமைதியின் கனிவில், அதற்காக அவன் வேண்டும் வித்தையும் கற்றுக்கொடுக்கிறார், நொடியில் பிதாமகராகிறார்.
இளகிய இலக்கிய தருணங்களில் இருந்து சற்றே விடுபட “ஜனநாயக சோதனைச்சாலையில்” நுழையலாம் என இருக்கிறேன். உங்களை கடப்பது சற்று கடினமாகத்தான் உள்ளது. நீலம் வாசிக்கப்போவது இல்லை. கேட்கலாம் என இருக்கிறேன். முதற்காரணம் சுபஸ்ரீ அவர்கள். நீலத்தில் இருந்து அவர்கள்செய்திருந்த மிகச்சிறந்த தனிநாடகம் ஒன்றை கண்டேன், நீலம் முழுவதும் அவர் குரலில் கேட்கலாம் என இருக்கிறேன். அவரது குரலில், கவித்தன்மை மேலோங்கி இருப்பதாகத் தோன்றுவதால்.
லெட்சுமிநாராயணன்
கீழநத்தம், திருநெல்வேலி