அன்புள்ள ஜெ,
அயோத்திதாசர் பற்றிய விவாதங்களை நான் கூர்ந்து கவனித்து வருகிறேன். இந்த தலைப்புகள் சமூகவலைத்தளங்களின் பூசலுக்குள் நின்று பேசப்படவேண்டியவை அல்ல என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் என்னைப்போன்ற பொது வாசகர்களுக்கு சமூகவலைத்தளங்களில் எழுதப்படும் குறிப்புகளே வந்துசேர்கின்றன. ஆகவே வேறு வழியில்லை. நான் கேட்கும் கேள்வி எனக்கு சமூகவலைத்தள விவாதங்கள் வழியாகக் கிடைத்ததுதான்.
அயோத்திதாசரை தொடர்ந்து பூர்வபௌத்தம் என்னும் கருத்தைச் சிலர் முன்வைக்கிறர்கள். இந்தியப்பெருநிலத்தின் தொன்மையான பண்பாடும் மதமும் பௌத்தமே என்றும் இந்துமதம் பின்னாளில் பௌத்தத்தை பின்தொடர்ந்து உருவாக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள். பௌத்தக்கருத்துக்களே இந்துமதத்தில் உள்ளன என்று வாதிடுகிறார்கள். இவ்வாறு வாதிடுபவர்கள் மூர்க்கமான வசைகளுடன் அதை ஒற்றைப்படையாகச் சொல்கிறார்கள்.நையாண்டியும் ஏளனமும் செய்கிறார்கள். அதற்குப் பதிலாகப் பேசுபவர்கள் அதைவிடக் கடுமையாக நையாண்டியுடன் அந்தத்தரப்பை அணுகுகிறார்கள். அல்லது ஒற்றைவரியில் மூடத்தனம் என்று கடந்துசெல்கிறார்கள்.
நான் கேட்பது இந்த விவாதத்தில் என்னைப்போன்ற ஒரு பொதுவாசகன் புரிந்துகொள்ளவேண்டிய ஏதேனும் உண்டா என்பது மட்டுமே. இதை ஒருவகை வெட்டியான சாதி -அரசியல் விவாதம் என்று கடந்துசெல்லவேண்டுமா?
அர்விந்த்குமார்
அன்புள்ள அர்விந்த் குமார்,
சமூகவலைத்தள விவாதங்களின் இயல்பே அது எப்படியானாலும் கடைசியில் ஒற்றைப்படையாக்கல், வசை,நையாண்டி என்று சென்றுசேரும் என்பதே. அதன்பின் என்ன நிகழுமென்றால் நாம் நம் மறுதரப்பை புரிந்துகொள்ளும் திறனை இழப்போம். அறிவியக்கத்தில் அது மாபெரும் இழப்பு.
பூர்வபௌத்தம் பேசுபவர்களின் தரப்பு என்பது அயோத்திதாசரால் சொல்லப்பட்டது மட்டும் அல்ல. கேரளத்தில் என் ஆசிரியரான பி.கே.பாலகிருஷ்ணன் உட்பட பலர் வெவ்வேறு வகையில் அந்த வரலாற்றுச் சித்திரத்தை முன்வைத்திருக்கிறார்கள். விவாதங்கள் நிகழ்ந்துள்ளன, தொடர்கின்றன. நீங்கள் ஆர்வம்கொண்டிருந்தால் படிக்க நிறையவே கிடைக்கும்.
கேரளத்தின் சிந்தனை மையங்களில் ஒன்றான காலடி சம்ஸ்கிருத பல்கலையில் இச்சிந்தனை கொண்டவர் பலர் உள்ளனர் (தலித் சிந்தனையாளர்கள் அல்ல) அங்கே தத்துவம் முதுகலை படித்தவனும், என்னைவிட பலமடங்கு தத்துவ வாசிப்பு கொண்டவனும், ஷோப்பனோவரின் சிந்தனைவழி வந்தவனுமாகிய என் மகன் அஜிதனுக்கு இந்தத் தரப்பு முக்கியமானது என்னும் எண்ணம் வலுவாக உள்ளது.
அந்த தரப்பை வரலாற்று விவாதத்திற்குரிய சமநிலை இல்லாமல் மூர்க்கமான மதநம்பிக்கையாக ஏற்றுக்கொண்டு பேசுபவர்களை கவனிக்காதீர்கள். அது அவர்களின் தரப்பின் தர்க்கம் மீது நமக்கு ஆழ்ந்த அவநம்பிக்கையை உருவாக்கிவிடும். எந்தத் தரப்பையும் அதன் அறிவார்ந்த தளத்தில் நிற்கும் முதல்நிலை அறிவியக்கவாதிகளிடம் இருந்து மட்டுமே கேட்டறியுங்கள். அறிவியக்கத்தில் நம் எதிர்த்தரப்பை எத்தனை நல்லெண்ணத்துடன், எத்தனை முழுமையாக நாம் அறிந்திருக்கிறோம் என்பதே நம் தகுதி
இனி, அந்த தரப்பின் நிலைபாடு என்ன என்பதை மிகச்சுருக்கமாகச் சொல்கிறேன். விரிவாக நீங்கள் ஆய்வுநூல்களைக்கொண்டு புரிந்துகொள்ளுங்கள். இச்சுருக்கம் அந்நிலைபாடு கவனிக்கத்தக்க தகுதி கொண்டதா என்பதை உங்களுக்குக் காட்டும்.
நீங்கள் மதவழிபாட்டுமுறைமேல் நம்பிக்கை கொண்டவர் என்றால் இந்த ஆய்வே உங்களுக்கு தேவையில்லை. நீங்கள் வரலாற்றை அறிய முனைபவர், அதற்கான அறிவுச்சமநிலையும் உணர்வுச்சமநிலையும் கொண்டவர் என்றால் மட்டும் வாசியுங்கள்.
ஓர் உருவகச் சித்திரத்தை முன்வைக்கிறேன். அதற்கு உண்மையான பண்பாட்டுச்சூழலையே எடுத்துக்கொள்கிறேன்
குமரிமாவட்டத்தில் இப்போது மதங்களாக இருப்பவை இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்தவம். இதற்கு மிக அப்பால் காணிக்காரர்கள் பளியர் முதலிய மலைப்பழங்குடிகளிடம் குளிகன், மாதி, கடுத்தா, பிறுத்தா முதலிய தெய்வங்கள் உள்ளன. அவர்கள் அந்த தெய்வத்தை போற்றிப்பாடும் தொன்மையான பாடல்களும் உள்ளன. அவை இன்றைய தமிழுக்கு மிகமிக முந்தைய ஒரு வடிவைச் சேர்ந்தவை.பல ஆயிரமாண்டுகள் தொன்மை அவற்றுக்கு இருக்கலாம்.
காணிக்காரர்களின் மந்திரவாதச் சடங்குகளில் பொதுவாகவே கேரளம் (குமரிமாவட்டம்) முழுக்க ஆழமான நம்பிக்கை இன்றும் உண்டு. அரசகுடிகள் உட்பட அனைவருமே தீயசக்திகளை ஓட்டுதல், எதிரிகளை வெல்லுதல், நல்லூழ் கொண்டுவருதல் ஆகியவற்றுக்காக காணிக்காரப் பூசகர்களை அழைத்து மந்திரவாதம் மற்றும் பூசைகளைச் செய்வது வழக்கமாக இன்றும் உள்ளது.
இந்த தொல்குடிகளை பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள்.பல தலைமுறகளாக இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது. திருவனந்தபுரம் மகராஜா கல்லூரி, திருவனந்தபுரம் பல்கலைகழகக் கல்லூரி, காலடி சம்ஸ்கிருத பல்கலை என இந்த ஆய்வில் பல சிந்தனைமையங்கள் செயல்படுகின்றன. அவர்கள் அந்தப் பாடல்களை திரட்டி நூல்களாக்குகிறார்கள். கொட்டாரத்தில் சங்குண்ணி, கே.பானூர், முனைவர் எம்.வி.விஷ்ணு நம்பூதிரி, கிளிமானூர் விஸ்வம்பரன் என பல ஆய்வாளர்கள் இதில் செயல்படுகிறார்கள். தொகைநூல்கள் எழுதப்படுகின்றன. இதுவரை மெய்யாகவே நிகழ்ந்தது இது.
இனி உருவகக் கற்பனை. பொதுயுகம் 2022 வாக்கில் திடீரென்று ஆய்வாளர்களில் சிலர் ஒரு சிந்தனை அமைப்பாகச் செயல்பட ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் காணிக்காரர்களின் தெய்வங்களையும், சடங்குகளையும், வழிபாட்டுமுறைகளையும் இன்றைய கேரளத்தின் ஆட்சியாளர்களும், செல்வந்தர்களும் ஏற்கும்படிச் செய்கிறார்கள். ஏற்கனவே காணிக்காரப் பூசகர்கள் மேல் அரசர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. சடங்குகளை செய்ய அவர்களை அழைப்பதும் நடக்கிறது. ஆகவே இந்த ஏற்பு எளிதாக நடைபெற்றது. பெரும் செல்வம் இந்த புதிய சிந்தனை- வழிபாட்டுமுறைக்கு அளிக்கப்படுகிறது. அரசு ஆதரவு கிடைக்கிறது.
இந்தப் புதிய சிந்தனைமுறை கேரளத்தின் பல்கலை கழகங்களைக் கைப்பற்றுகிறது. அங்கே இச்சிந்தனையாளர்கள் நிறைகிறார்கள். அவர்களுக்கு அரசு ஆதர்வு கிடைக்கிறது. அவர்கள் தங்களுக்குத் தேவையான தத்துவங்களையும் தர்க்கமுறைமையையும் வேதாந்தத்தில் இருந்தும், கிறிஸ்தவத்தில் இருந்தும் எடுத்துக் கொள்கிறார்கள். அவற்றை ஒருங்கிணைத்து புதியதாக விளக்க ஏராளமான நூல்களை எழுதுகிறார்கள். அந்நூலாசிரியர்களுக்குள் விவாதங்கள் நிகழ்கின்றன. அவை வெவ்வேறு சிந்தனை பள்ளிகளாக ஆகின்றன. இந்த புதிய வழிபாட்டுமுறை ஒரு மதமாக ஆகிறது. இதை காணிமதம் என அழைக்கிறார்கள்
காணிமதத்தவர் தங்களுக்கு சுற்றும் இருந்த அனைத்தையும் அறிவுபூர்வமாகத் திரிக்கிறார்கள். வேதங்களும் பகவத் கீதையும் பைபிளும் எல்லாம் காணிக்காரர்களின் தொல்மொழிக்கு ஏற்ப திரும்ப எழுதப்படுகின்றன. எல்லா மதங்களில் இருந்தும் சாராம்சமானவை உறிஞ்சப்படுகின்றன இந்து சிந்தனையாளர்களான நாராயணகுரு, கிறிஸ்தவ சேவையாளரான சாமர்வெல் ஆகியோரை அவர்கள் தங்கள் காணிக்காரர் மதத்தின் சிந்தனையாளர்களும் ஞானிகளுமாக ஆக்குகிறார்கள். காணிமதம் அரசுக்கு மிக உடன்பாடானதாக இருக்கிறது, அரசுக்கு பயன்படுகிறது. ஆகவே அரசு மேலும் மேலும் அதை ஆதரிக்கிறது.
காணிமதத்தவர் சிவன், விஷ்ணு ,ஏசு உட்பட்ட தெய்வங்களையும் வழிபாட்டுமுறைகளையும் எடுத்துக்கொள்கிறார்கள். சிவன் குளிகனின் இன்னொரு வடிவம் ஆகிறார். (மெய்யாகவே இரு தெய்வங்கள் நடுவே ஒற்றுமைகள் உண்டு) விஷ்ணு கடுத்தா ஆக மாறுகிறார்.அனந்தபத்மநாபசாமி ஆலயமும் பீமாப்பள்ளி பெரிய மசூதியும் சவேரியார் கோயிலும் புதிய வழிபாட்டுமுறையின் ஆலயங்களாக உருமாற்றப்படுகின்றன. அனந்தபத்மநாப சாமியின் பூசைமுறைகள், இஸ்லாமியத் தொழுகைமுறை, கிறிஸ்தவர்களின் ஆராதனை முறை எல்லாமே காணிமதத்தில் இடம்பெறுகிறது.
காணிமதத்திற்குள் வந்து சேர்ந்த தெய்வங்களை அவர்கள் ஒற்றை அமைப்பாக ஆக்கவேண்டியிருக்கிறது. ஆகவே ஏராளமான கதைகள் உருவாகின்றன. அந்தத் தெய்வங்கள் எல்லாம் ஒரே கதைப்பரப்பில் இணைகின்றன. ஏராளமான கற்பனை வரலாறுகளும் உருவாகின்றன. அவை இதிகாசங்கள் எனப்படுகின்றன. அத்துடன் இந்த தெய்வங்களை வழிபடும் முறையை ஒழுங்குசெய்து ஆகமங்களையும் உருவாக்கவேண்டியிருக்கிறது.
இவ்வாறாக ஐநூறாண்டுக்காலம் செல்கிறது. குமரிமாவட்டத்திலுள்ள இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் வலுவிழந்து குறுகிய வட்டத்துக்குள் ஒடுங்குகின்றன. அவற்றுக்கு அரசு ஆதர்வு இல்லை, ஆகவே மக்களும் மெல்லமெல்ல அவற்றை கைவிடுகிறார்கள். மேலும் இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களின் கூறுகள் புதிய காணிமதத்தில் இருப்பதனால் அந்தந்த மதத்தவர்களுக்கு காணி மதத்தை ஏற்க எந்த தடையும் இல்லை
காணிமதம் ஒரு தொகுப்புமதம் ஆகையால் அது பிரிந்துகொண்டே இருக்கிறது. காணிமதத்துக்குள் உள்ள கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சைவர்களும் வைணவர்களும் தனித்தனி துணைமதங்களாகவே நீடிக்கிறார்கள். ஆகவே நூற்றாண்டுகளுக்குப் பின் அப்பிரிவுகளை ஒருங்கிணைக்க தத்துவஞானிகள் முயல்கிறார்கள். அவை தனித்தனியான சிந்தனைப்பள்ளிகள் ஆகின்றன. தொல்நூல்களுக்கு ஒவ்வொரு சிந்தனைப்பள்ளியும் வெவ்வேறு கோணங்களில் உரைகள் எழுதுகிறது. உரை மரபு முக்கியமான அறிவுச்செயல்பாடாக ஆகிறது
மேலும் ஐநூறாண்டுகளுக்கு பின் காணிமதத்தின் வரலாறு எழுதப்படுகிறது. அதை ஒற்றைமதமாக, ஒரே கட்டமைப்பாக அப்போது சித்தரித்துக் கொள்கிறார்கள். அந்த வரலாற்றை எழுதும்போது காணிமதம் இந்து, கிறிஸ்தவ, பௌத்த மதங்களை விட மிகமிகத் தொன்மையானது என்று ஆய்வாளர் சொல்கிறார்கள். அவர்கள் குளிகனும் கடுத்தாவும் தோன்றிய காட்டுவாழ்க்கை காலத்தில் இருந்து காணிமதத்தின் வரலாற்றை ஆரம்பிக்கிறார்கள். காணிகளின் தொன்மையான பாடல்களின் காலத்தைக்கொண்டு வரலாற்றுக்கட்டங்களை கட்டமைக்கிறார்கள்.
ஆய்வாளர்கள் இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்கள் காணிமதத்துடன் மோதி, விவாதித்து வளர்ந்தவை என்கிறார்கள். காணி மதத்தில் உள்ள இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களின் சாயல்கள் இந்த மதங்களால் காணிமதத்தில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவை என விளக்குகிறார்கள்.
தொன்மையானது என்னும் பொருளில் காணிமதத்தை ’என்றுமுள்ளது’ என பெயரிட்டு அழைக்கிறார்கள். அனாதியானது, முதல்முடிவற்றது என்று வர்ணிக்கிறார்கள். இயற்கையாகவே உருவானது என்கிறார்கள். இது குமரிமாவட்டத்தில் உருவானதனால் இதை வெளியாட்கள் குமரிமதம் என்கிறார்கள்.
மேலும் சில ஆண்டுகள் கழித்து என்றுமுள்ளது எனப்படும் காணிமதத்தின் ஒற்றைப்படைத் தன்மையை மறுக்கும் ஆய்வாளர்கள் வருகிறார்கள். அது தொன்மையான மரபுகளும் பிற்கால மதங்களின் சிந்தனைகளும் அம்மதங்களின் அமைப்புகளும் இணைந்து உருவானது என வாதிடுகிறார்கள். அந்த இணைப்பு நிகழ்ந்த காலகட்டமாகிய பொயு 2022 ஆம் ஆண்டையே அந்த மதத்தின் தோற்றம் என்று சொல்லவேண்டும் என்றும் காலத்தால் இஸ்லாமிய கிறிஸ்தவ இந்து மதங்கள் தொன்மையானவை என்றும் வாதிடுகிறார்கள்.
காணிமதம் என்னுமிடத்தில் இதற்குள் இந்து மதத்தை போட்டிருப்பீர்கள். இந்துமதத்தின் மூலநூல்களான வேதங்களும் அவ்வேதங்களின் தெய்வங்களும் காணிக்காரர்களின் தெய்வங்கள் மற்றும் பாடல்கள் போலவே பழைமையானவை. வேதங்களும் துணைவேதங்களும் பொதுயுகத்திற்கு முன் இரண்டாயிரம் ஆண்டுகளாகவே அறிஞர்களால் பயிலப்பட்டும் தொகுக்கப்பட்டும் வந்தன. ஆட்சியாளர்கள் அந்த மந்திரங்களை சடங்குகளுக்கு பயன்படுத்தி வந்தனர். ஏனென்றால் அவை தொல்மொழியில் அமைந்திருந்தன. அந்த தெய்வங்கள் ஆட்சியாளர்களால் வழிபடப்பட்டும் வந்தன. வெளியே மக்கள் அவர்களின் குடித்தெய்வங்கள், குலத்தெய்வங்கள், மூத்தார்தெய்வங்கள், நீத்தார்தெய்வங்களை வழிபட்டபடி ஒருங்கிணைக்கப்படாமல் விரிந்து கிடந்தனர்.
அப்போது சமண, பௌத்த மதங்கள் உருவாயின. அந்த மதங்கள் அழுத்தமான ‘மதப்பரப்புநர் அமைப்பு’ (மிஷனரி) கொண்டிருந்தன. அவர்கள் குடித்தெய்வ வழிபாடு, நீத்தார் வழிபாடு முதலியவற்றைச் செய்து வந்த மக்களை ஈர்த்து ஒருங்கிணைத்து வலுவான அமைப்புகளாக தங்கள் மதங்களை ஆக்கினர். சமண, பௌத்த மதங்கள் மக்களுக்கு மையத்தெய்வங்களையும், தத்துவங்களையும், தொகுக்கப்பட்ட அறங்களையும் அளித்தன. அதற்காக கல்விநிலையங்கள், அறநிலையங்களை சமண, பௌத்த மதங்கள் அமைத்தன. மக்கள் மொழியை இலக்கணம் அமைத்தும், நெறிகள் அமைத்தும், தொல்பாடல்களை தொகுத்தும் செறிவுறச்செய்தன.
தொடக்க காலகட்டத்தில் அரசர்களின் வழிபாட்டுமுறைகளுக்கும் பௌத்த சமண மதங்களுக்கும் பூசல்கள் நிகழ்ந்தன. பின்னர் அரசர்கள் சமண பௌத்த மதங்களை ஏற்று அவற்றை பரப்பலாயினர். ஏனென்றால் மக்கள் ஒருங்கிணைக்கப்படுவது அரசர்களுக்கு நல்லது. அதனால் வலுவான சமூகமும் விளைவாக சீரான வரிவசூலும் உருவாகும். ஆனால் காலப்போக்கில் சமண பௌத்த மதங்கள் அரசர்களை கட்டுப்படுத்தலாயின. ஏனென்றால் அம்மதங்களின் நிர்வாக அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டவை, வலுவானவை. அதை அரசர்கள் விரும்பவில்லை.
இந்த இடத்தைப் பயன்படுத்திக்கொண்டு பழைய வேதவழிபாட்டு முறையைச் சேர்ந்தவர்கள் சமணம், பௌத்த மதங்களில் இருந்து தத்துவங்கள், வழிபாட்டு மரபுகள், தெய்வங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தங்கள் வேதமரபை புதிய மதமாக கட்டமைக்கத் தொடங்கினர். அதற்காக ஏராளமான நூல்களை உருவாக்கினர். பொயு நான்காம் நூற்றாண்டில், குப்தர்களின் காலகட்டத்தில், அந்த புதிய மதம் அரசாங்கத்தின் ஏற்பைப் பெற்றது. அரசர்கள் மைய நிர்வாக அமைப்பு இல்லாத அந்த மதத்தை விரும்பினர்
அடுத்த ஐநூறாண்டுகளுக்குள் அந்த புதிய மதம் பெருவளர்ச்சிஅடைந்தது. அதை வைதிக மதம் அல்லது வேதம்சார் மதம் எனலாம். ஏனென்றால் அதன் மையம் வேதங்களே. முன்பு வேதமரபுக்கு பெரிய ஆலயக்கட்டிடங்களை அமைக்கும் வழக்கம் இருக்கவில்லை. வெறும் சடங்குகளே இருந்தன. உருவவழிபாடும் அவர்களிடம் வலுவாக இல்லை. தற்காலிக உருவங்களைச் செய்து வழிபடும் மரபே இருந்தது. புதிய வைதிகமதம் பௌத்த சமண ஆலயங்களுடன் அவர்களின் தெய்வங்களையும் உள்ளிழுத்துக்கொண்டது. உருமாற்றி தங்கள் தெய்வங்களாக ஆக்கியது. தங்கள் தெய்வங்களை பௌத்த சமண தெய்வங்களின் வடிவுக்கு ஆக்கிக் கொண்டது. பௌத்த சமண மதங்கள் நிறுவிய பண்டிகைகளையும் விழாக்களையும் எடுத்துக்கொண்டது.
வைதிகமதத்தின் தொல்சடங்குளையும் உள்ளிழுத்துக்கொண்ட மரபுகளையும் இணைக்கும்பொருட்டு பலநூறு நூல்கள் எழுதப்பட்டன. புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டன. மாபெரும் அறிவியக்கப்பணி ஒன்று நிகழ்ந்தது. விளைவாக வேதமதம் வலுவான தத்துவ மையம் கொண்டதாக ஆகியது. அந்த தத்துவமே பிரம்மம் என்னும் கொள்கை. அது தொல்நூல்களில் இருந்து பின்னாளில் உருவாக்கப்பட்டது. அதன்பின் அந்த தத்துவத்தைப் பயன்படுத்தி வெவ்வேறு வழிபாட்டுமுறைகளை ஒருங்கிணைக்கலாயினர். சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் காணபத்யம் சௌரம் என்னும் ஆறு வழிபாட்டுமுறைகள் அதனுள் அடங்கின. இந்த ஒருங்கிணைப்பு எட்டாம் நூற்றண்டில் சங்கரரால் செய்யப்பட்டது.
எட்டாம் நூற்றாண்டுக்குப்பின் பின்னர் அப்பிரிவுகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் உருவாயின. அதற்கான தத்துவ ஞானிகள் வந்தனர். உரைமரபுகள் உருவாயின. இது பிற்கால வேதாந்தங்களின் காலம். கூடவே ஒவ்வொரு வழிபாட்டுப்பிரிவிலும் கவிஞர்கள் மற்றும் பெரும்பக்தர்கள் உருவாகி அந்த வழிபாட்டுமரபுகளை உள்மதங்களாக பெருவளர்ச்சி அடையச்செய்தனர். இது பக்திகாலகட்டம் எனப்பட்டது
பதினெட்டாம் நூற்றாண்டில் இந்துமறுமலர்ச்சி உருவாகியது. சனாதனம் (முதலற்றது) என்று அழைக்கப்பட்ட இந்த மதத்தை சிந்துவுடன் தொடர்புபடுத்தி பாரசீகர் போட்ட இந்து என்ற பெயர் பொதுப்பெயராகியது. இந்துமதத்தின் தொன்மை வேதங்களில் இருந்து தொடங்கப்பட்டது. இந்துமதத்திலுள்ள பௌத்த சமண மடாலயங்களின் சாயல், இந்து தெய்வங்களிலுள்ள பௌத்த சமணச் சாயல்கள் இந்து மதத்தில் இருந்து சமண பௌத்த மதங்களுக்குச் சென்றவை என்று சொல்லப்பட்டன.
குறிப்பாக விஷ்ணுவின் நின்ற அமர்ந்த கிடந்த கோலங்கள் புத்தருக்குரியவை. புத்தருக்கு முன்பு அப்படிப்பட்ட விஷ்ணுசிலைகள் கிடைத்ததில்லை. இந்து தெய்வங்களின் யோக அமர்வு நிலைச் சிலைகள் சமண, பௌத்தமரபில் இருந்து பெறப்பட்டவை. இந்து ஆலயங்களின் கட்டிட முறை பௌத்த குடைவரைகளில் இருந்து உருவானது. அதற்கு முன்பு ஆலயங்கள் இருந்தமைக்கான சான்றுகளே இல்லை. இந்திரன் முதலிய தெய்வங்களேகூட பௌத்தர்களுக்கும் உரியவையே. வைதிகம் கொண்டிருக்கும் பெரும்பாலான புராணங்கள், வழிபாட்டுமுறைகள் பௌத்த மதம் முன்வைத்தவற்றின் திரிபுநிலைகளே.
ஆகவே இந்துமதத்தின் தோற்றத்தை குப்தர் காலத்தில் இருந்தே கணக்கிடவேண்டும். தொன்மையான வேதங்கள் என்று அவர்கள் சொல்வன அப்போதுதான் தொகுக்கப்பட்டன. மற்றநூல்கள் அதன்பின் எழுதப்பட்டன. அவற்றுக்கு தொன்மை அளிக்கப்படுகிறது.சமண பௌத்த மதங்களே இந்தியாவின் தொல்மதங்கள். அதற்கு முன்பு இருந்தவை வெறும் தொல்குடி மரபுகளும் அவர்களின் வழிபாட்டுமுறைகளும் மட்டுமே. இந்துமதத்தின் பண்பாட்டு அடித்தளம், தத்துவ அடித்தளம் சமண பௌத்த மதங்களால் கட்டமைக்கப்பட்டது.
இதுதான் பூர்வபௌத்தர் தரப்பு சொல்லும் வரலாற்றுச் சித்திரம். இச்சித்திரத்தை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்பது உங்கள் நிலைபாடு. அதற்கு நீங்கள் கற்றுத் தெளிவடைய வேண்டும். ஆனால் இது முற்றிலும் தர்க்கமற்ற உளறலோ அபத்தமோ அல்ல. முகநூலில் ‘சவுண்டு’ விட்டு ஒழித்துக்கட்டிவிடக்கூடியதும் அல்ல.
இந்தச் சித்திரத்துடன் அயோத்திதாசர் சொல்வது சரியாக இணைகிறது. ஆனால் இச்சித்திரம் நவீன வரலாற்றாய்வில் உருவாவதற்கு அரைநூற்றாண்டுக்கு முன்னரே அயோத்திதாசர் இதைச் சொல்லியிருக்கிறார். அதுவும் தொன்மையான வாய்மொழி மரபு மற்றும் தன் குடிமரபில் இருந்து இதைச் சொல்லியிருக்கிறார். அவர் பறையர்களில் வள்ளுவர் மரபைச் சேர்ந்தவர். பல்லவர் காலகட்டம் வரை தமிழக ஆலயங்களில் பூசகர்களாக வள்ளுவர்கள் இருந்தனர். அதற்குக் கல்வெட்டுச் சான்று உள்ளது.
வள்ளுவராகிய அயோத்திதாசர் வள்ளுவர்கள் செய்துவந்த மந்திரவாதச் சடங்குகள் மற்றும் பல மருத்துவமுறைகளை செய்துவந்தவர். அங்கீகரிக்கப்பட்ட வரலாற்றுக்குச் சமானமாகவே தலித்துக்கள் மற்றும் பழங்குடியினரிடம் இன்னொரு வரலாறு வாய்மொழியாக இருந்து வந்துள்ளது. நவீன வரலாற்றெழுத்து அவற்றையும் கருத்தில்கொண்டே எழுதப்படுகிறது. ஆகவே அவருடைய நூல்களுக்கு வரலாற்றாய்வாளர்கள் கருத்தில்கொள்வதற்கான அடிப்படை உள்ளது.
இக்காரணத்தால்தான் அயோத்திதாசர் முதன்மையானவர் என நான் எண்ணுகிறேன். இன்று உருவாகி வரும் ஒரு மாற்றுவரலாற்றுச் சித்திரத்தை நூறாண்டுகளுக்கு முன்னரே முன்வைத்தவர்.அதன் மூலநூல்களாக அமையும் சில படைப்புக்களை உருவாக்கியவர்.
ஒரு காலகட்டத்தின் பொதுச்சிந்தனை என்பது மிகப்பெரிய ஒரு கட்டுமானம். ஒரு கோட்டைபோல. பல்லாயிரம்பேர் சேர்ந்து உருவாக்கியது அது. அதில் முட்டினால் சாமானியனின் மண்டைதான் உடையும். அத்தனை தர்க்கபூர்வமானது அது. அதில் ஒரு பெரிய விரிசலை உருவாக்கி புதுவழிக்கான வாய்ப்பை உருவாக்குபவர்தான் முதன்மைச் சிந்தனையாளர். அயோத்திதாசர் அவ்வகைப்பட்டவர். நம் வரலாற்று உருவகம் ஏறத்தாழ முழுமையாகிவிட்ட ஒன்று. அதில் அயோத்திதாசர் உருவாக்கும் உடைவு என்பது மிகமுக்கியமான ஒரு சிந்தனை நிகழ்வு
ஆனால் முன்னோடி என்பதனாலேயே அவர் முழுமையான தர்க்கத்துடன் பேசமுடியாது. ஏனென்றால் அவர் தனக்கு முன்னரே பலர் உருவாக்கிய ஒரு தர்க்கத்தின் தொடர்ச்சியாகச் செயல்படவில்லை. அவர் புதிய ஒரு பார்வையை முன்வைக்கிறார். ஆகவே அவர் அதை ஒரு உள்ளுணர்வு சார்ந்த தரிசனமாக, ஒரு மாற்றுத்தர்க்கமாகவே முன்வைக்க முடியும். அவருடைய வழிவந்தவர்களே அவரை மேலெடுத்துச் சென்று அந்தக் கோணத்தை முழுமைசெய்வார்கள். விரிசலை பாதையாக்குவார்கள்.
முன்னோடிகள் கொஞ்சம் சமநிலையற்றவர்களாக, பொதுப்புத்திப் பார்வையில் கொஞ்சம் மரை கழன்றவர்களாகவே தெரிவார்கள். காந்தி அத்தகையவர். நான் சுட்டிக்காட்டும் முதற்சிந்தனையாளர் அனைவருமே அப்படிப்பட்டவர்கள். அவர்களின் அடிப்படையான பார்வையை விரிவாக்குபவர்களுக்கே அவர்கள் திறந்து அளித்த வழியின் முக்கியத்துவம் தெரியும்.
பொதுப்புத்தி அவர்களை நோக்கி ஏளனம் செய்வதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் சிந்திப்பவர்கள், குறிப்பாக இலக்கியவாதிகள், எல்லா ஊடுபாதைகளையும் உடைவுகளையும் புரிந்துகொள்ள முயல்பவர்களாகவே இருக்கவேண்டும். சிலபெண்களுக்கு ஒரு உளச்சிக்கல் உண்டு. எங்காவது எவராவது குரவை இட்டால் தாங்களும் கட்டுப்படுத்த முடியாமல் குரவையிட்டுவிடுவார்கள். அந்த மனநிலை இலக்கியவாதிகளிடம் இருக்கலாகாது.
கடைசியாக, நான் அயோத்திதாசரை ஏற்கிறேனா? இல்லை. பூர்வபௌத்த கொள்கையை ஏற்கிறேனா? இல்லை. எனக்கு அதற்கான வாசிப்பும், அதை வழிநடத்தும் வரலாற்றாய்வாளர்களும் உண்டு. என் மெய்யியல்மரபு வேதாந்தம். என் குருமரபு நாராயணகுரு முதல் நித்யா வரை.
ஆனால் மாற்றுச்சிந்தனைகளை மட்டம்தட்டக்கூடாது, புரிந்துகொள்ள வேண்டும் என நான் அறிவேன். இன்றைய வரலாற்றாய்வு என்பது ஒற்றைப்படை வரலாற்றுச் சித்திரத்தை உருவாக்கிக்கொள்வதல்ல, வரலாற்று மொழிபுகள் நடுவே ஒரு முரணியக்கமாக வரலாற்றைப் புரிந்துகொள்வது என தெரிந்து வைத்திருக்கிறேன். எல்லா வரலாற்று மொழிபுகளுக்கும் இடமிருக்கும் பெரிய களம் அது என தெளிவுகொண்டிருக்கிறேன். ஆகவே அயோத்திதாசர் என் பெருமதிப்புக்குரிய முன்னோடி பேரறிஞர்
ஜெ