அஞ்சலி:நாகசாமி

தொல்லியலாளர் முனைவர் நாகசாமி (1930-2022) அவர்களின் மறைவு குறித்து நேற்று அவருடைய உறவினரான நண்பர் ஆர்வி கூறியிருந்தார். வெறுமே ஓர் அஞ்சலிக் குறிப்புக்குப் பதிலாக அவருடைய பங்களிப்பை தொகுத்து ஒரு குறிப்பாக எழுதலாமென எண்ணினேன். அது தாமதம் ஆகவே இக்குறிப்பை எழுதுகிறேன். முப்பதாண்டுகளுக்கும் மேலாக தொல்லியலையும், நாகசாமியையும் பின்தொடர்பவன் நான். ஆனால் தொல்லியளானனோ வரலாற்றாய்வாளனோ அல்ல. பண்பாட்டு ஆர்வம் கொண்ட எழுத்தாளன். அந்த நிலையில் எனக்கு அவரைப்பற்றிச் சில கருத்துக்களும் மதிப்பீடுகளும் உள்ளன.

நாகசாமியைப் பற்றி தொல்லியல் துறையில் ஈடுபடும் அறிஞர்கள் பெரும்பாலும் சொல்லும் மதிப்பீடு அவர் அத்துறையில் ஒரு முன்னோடி, திட்டவட்டமான முறைமைகளை தொடர்ந்து வலியுறுத்தியவர், ஆகவே அறிவியல்பூர்வமான தொல்லியல் தரவுகளை திரட்டி முறையான அட்டவணைப்படுத்துதலைச் செய்தவர், தன் முறைமைகளை கற்பித்து ஒரு மாணவர் வரிசையை உருவாக்கியவர் என்பது. கூடவே அவர் வரலாற்றாய்வில் கடுமையான முன்முடிவுகள் கொண்டவர், அவை அவருடைய சொந்தச் சாதி, மதம் சார்ந்தவை. ஆகவே நாகசாமி ஒரு தொல்லியலாளர் என கருத்தில்கொள்ளத் தக்கவர், ஒரு வரலாற்றாசிரியராக நடுநிலையானவரோ முறைமைசார்ந்த நோக்கு கொண்டவரோ அல்ல.

1996 ல் நான் நாகசாமியை முதலில் சந்தித்தேன். 1998ல் இன்னொரு முறை. இரு சந்திப்புகளிலும் எனக்கு ஆர்வமும் பயிற்சியும் உடைய குமரிமாவட்ட (தென்திருவிதாங்கூர்) தொல்லியல் குறித்தும் அவற்றின் வாசிப்பு குறித்தும் சில ஐயங்களைக் கேட்டேன். அவர் முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட கோணம் சார்ந்த, ஆதாரமில்லாத நிலைபாட்டையே தன் கருத்தாகச் சொன்னார். திருவிதாங்கூர் அரசரின் குருபீடம் காஞ்சி மடம்தான் என்று சொன்னதை நான் மறுத்தேன். அவர் என்னை ஏளனமாக ஒதுக்கி மேலே பேசினார். ஆனால் அது மிக அபத்தமான ஒரு திரிபுக்கருத்து. அத்தகைய பல கருத்துக்கள் அவரிடமிருந்தன. அவர் நேர்ப்பேச்சில் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதியின் கருத்துக்களை வரலாற்று ஆய்வாளர் முடிந்த முடிவாகக் கொள்ளத்தக்கவை என்று சாதாரணமாகவே சொல்வார்.

நாகசாமி 1966 முதல் 1988 வரை தமிழகத் தொல்லியல் துறையில் நிபுணராகப் பணியாற்றினார். அவருடைய முதன்மையான கொடை என்பது தொல்லியல் சான்றுகளை இந்தியவரலாறு – பண்பாடு சார்ந்து நுண்மையான பகுப்புகளுடன் அட்டவணையிடுவதற்கு ஒரு முறைமையை உருவாக்கியது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

நாகசாமியின் பங்களிப்பை புரிந்துகொள்ள இன்றைய பொதுவாசகர் ஓர் இடத்தை தனக்காக வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியவியலில் ஈடுபடும் இரு தரப்பினர் மிகப்பெரிய திரிபுகளை தொடர்ந்து, மிகப்பெரிய வலைப்பின்னல்போல உருவாக்கி வருகிறார்கள். இனமேட்டிமைநோக்கு கொண்ட ஐரோப்பியர் மற்றும் இடதுசாரிகள். இனமேட்டிமை கொண்டவர்கள் அவர்கள் உருவாக்கியிருக்கும் ஒரு ஆதிக்க- அடிமைப்படுத்தல் கோட்பாட்டுச் சட்டகத்திற்கு ஏற்ப அனைத்தையும் கொண்டுசென்று சேர்ப்பார்கள். இடதுசாரிகள் தங்கள் அரசியல்நிலைபாட்டுக்கு ஏற்ப வரலாற்றுக் கோணத்தை அமைப்பார்கள். இடதுசாரிக் கோணத்தில் வரலாற்றாய்வென்பதே ஆதிக்கம் செலுத்தியவர்கள் என சிலரை கண்டடைந்து அவர்களை எதிர்மறையாகச் சித்தரிப்பதுதான். அது அவர்களின் நிகழ்கால அரசியலியக்கத்துக்கு உதவுவதாகவும் இருக்கவேண்டும்.

இவ்விரு சாராரும் விரிவான தொல்லியல் ஆய்வுகள், தர்க்கமுறைகளுடன் பேசுபவர்கள். சர்வதேசப் பல்கலைக்கழகங்களின் பின்னணி ஆதரவு கொண்டவர்கள். அவர்களுக்கு எதிராக தெளிவான தரவுகளுடன், முறைமையுடன் பேசும் ஆய்வாளர்கள் இந்தியச்சூழலில் அரிதினும் அரியவர்கள். அந்த நிரையைச் சேர்ந்தவர் நாகசாமி. ஆனால் அந்தத் தரப்பில் தங்கள் சாதி, மதநோக்குகளை வரலாற்றாய்வில் கலந்து முடிவுகளை நோக்கிச் செல்லக்கூடியவர்கள் மிகுந்துள்ளனர். அவர்களில் ஒருவர் நாகசாமி.

இன்றைய சூழலில் ஒரு பொதுவாசகர் நம் வரலாறுமேல் ஏற்றப்படும் இனவாத, கொள்கைவாதத் திரிபுகளை அடையாளம் காணவும் எதிர்க்கவும் வேண்டும். மறுபக்கம் அந்த எதிர்நிலையை ஒற்றைப்படையான ஒரு அதிகாரநிலைபாடாக, அமைப்புச்செயல்பாடாக ஆக்கிக்கொள்ளலாகாது. அவ்வண்ணம் ஒற்றைநிலைபாடு கொள்வதென்பது வரலாற்றாய்வு என்னும் சுதந்திரமான அறிவுத்தேடலுக்கே எதிரானது. மேலும் இன்றைய வரலாறென்பது ஒத்திசைவுள்ள ஒற்றைச் சித்திரத்தை உருவாக்கிக் கொள்வதல்ல. நிகழ்காலத்தில் பயன்படக்கூடிய அரசியல், சமூகவியல் கொள்கைகளை கடந்தகாலத்தில் கண்டடைவதும் அல்ல. இன்றைய வரலாற்றாய்வு என்பது ’வரலாறுகளை’ எழுதுவதுதான். விரிந்த களத்தில் ஒன்றோடொன்று முரண்பட்டு செயல்படும் வெவ்வேறு விசைகளாக வரலாற்றை பார்ப்பது. வரலாற்றை நினைவுகூர்தல் எழுதுதல் ஆகிய செயல்களையே பன்மையாக, முரணியக்கம் வழியாக செயல்படும் பலவகையான மொழிபுகளாகப் (Narration) பார்ப்பது ஆகியவையே இன்றைய வரலாற்றாய்வின் வழிகள்.

அந்த இடத்தில் நின்றுகொண்டு மதிப்பிடுகையில் தேர்ந்த தொல்லியலாளர் என்ற அளவில் நாகசாமி மதிப்பிற்குரியவர். பயன்படுபவர். அவருக்கு அஞ்சலி

 

முந்தைய கட்டுரைசடம் [சிறுகதை] ஜெயமோகன்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- ஓசூர் செல்வேந்திரன்