உப்புவேலி பற்றி….கடிதம்

உப்புவேலி

உப்புவேலி – தன்னறம் நூல்வெளி

அன்புள்ள ஜெ

ராய் மாக்ஸம் எழுதி சிறில் அலெக்ஸ் அவர்கள் மொழி பெயர்த்த உப்பு வேலி படித்தேன்.. ஒரிசா பகுதியில் இருந்து ஏறக்குறைய இமயமலை அடிவாரம் வரை வளர்க்கப்பட்டிருந்த உயிர் வேலி. இவ்வளவு பந்தோபஸ்து நாம் சாதரணமாய் நினைக்கும் உப்புக்காக. சுவர் எழுப்பிப் பார்த்தும், பெரிய மரங்கள் வளர்த்தும் சரியாய் வராமல் எந்த இயற்கை தாக்குதல் இருந்தாலும் அழியாமல், அழிந்தாலும் உடனே மறுபடியும் புதராய் வளரும் முட்செடிகள் வளர்க்கப்பட்ட ஒரு வேலி.

திருச்சியில் இருந்து கல்லணை செல்லும் வழியில் சிறிய ரோடுதான் இருக்கும். பஸ்ஸில் போகும்போது ஜன்னலோரம் இருப்பவர்களை நல்லா உள்ள தள்ளி உட்காரச்சொல்வார்கள். ஏனென்றால் இரண்டு பக்கமும் அடர்த்தியான முட்செடிகள் வளர்ந்து ஓரத்தில் இருப்பவர்களின் கை, முகம், சிலபோது கண்ணைக் கூட குத்தி இழுத்துவிடும். அதைக் காட்டிலும் அடர்த்தியான வலுவான முட்கள் நிறைந்த புதர்கள்.

அரசாங்கம் பணம் உள்ளவர்களை பாதிக்கும் நிலத்திற்கு, வயல் போன்ற இடங்களுக்கு வரி உயர்த்தாமல் ஏழை, எளியவர்களை பாதிக்கும் உப்பிற்கு வரியை மேலும் மேலும் உயர்த்தி அதனால் நடக்கிற திருட்டுகளை தடை செய்வதற்காக அமைக்கப்பட்ட வேலி. இந்தப் புத்தகம் ஒரு துப்பறியும் கதை படிக்கும் உணர்வைத் தந்தது. ராய் மாக்ஸ்சம் அவர்கள் மூன்று தடவை இந்தியா வந்து மூன்றாம் முறை ஊர் திரும்பும் நேரத்தில் அந்த வேலியைப் பார்க்கிறார். அவருடைய “இதை இப்படியே விடக்கூடாது” என்ற பிடிவாதமும், “எப்படியாவது இதை நிரூபித்து விட வேண்டும்” என்ற வைராக்கியமும்தான் நமது கையில் புத்தகமாய் இருக்கிறது. சாதாரணமாய் பழைய புத்தகக் கடையில் வாங்கிய ஒரு சிறிய புத்தகத்தில் இருந்த ஒரு சிறிய குறிப்பு மட்டுமே விதை போல் முளைத்து அத்தனை கிலோமீட்டர் நீண்டிருந்த மாநிலங்களை இணைத்த உயிர் வேலியை உயிர்ப்பித்தது.

அந்த ஒரு குறிப்பு அவரை தூங்க விடாமல் யக்ஷியைப் போல் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இரண்டு முறை இந்தியா வந்து அவர் தோல்வியடைந்து சென்றது மட்டுமே நாம் வாசிக்கிறோம். அதன் பின்னால் அவருடைய செலவு நமக்குத் தெரியாது. ஒரு பெரிய நிறுவனமோ, அமைப்போ செய்ய வேண்டியதை ஒரு தனி மனிதராய் செய்து இருக்கிறார். ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்து தன் சொந்த ஊருக்குத் திரும்பியதும் மறுபடியும் வெறி கொண்டு உழைத்து இன்னும் நவீனக் கருவிகளைக் கண்டுபிடித்து திரும்பி வருகிறார். அட்ச ரேகை, தீர்க்க ரேகை கணக்குகள் என்னைக் குழப்பினாலும் அவருடைய விடா முயற்சியே நம்மை இழுக்கிறது.

சின்னச்சின்ன நகைச்சுவைகள், இந்திய உணவைப் பற்றிய கருத்துகள், மக்களைப் புரிந்துகொள்வது எல்லாம் நல்ல ஒரு எழுத்தாளார்களுக்கு உரியது. இந்த இடத்தைவிட்டு சீக்கிரம் போங்க, இங்கக் கொள்ளைக்காரர்கள் இருப்பார்கள் என்று எச்சரிக்கப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே ஒரு கொள்ளைக்காரனிடமே போய் அவர் வேலியைப் பற்றி விசாரிப்பது, வண்டியை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு போகும்போது நிறைய பாரத்தோடு நடந்து போகிற ஒரு அம்மாவை இவர்களே கூப்பிட்டு  வண்டியில் ஏற்றிக் கொண்டு ஊர் எல்லையில் விடுகிறார்கள். மற்றவர்களிடம் விசாரித்து ஊர் தலைவர் வீட்டிற்குப் போனவுடன் தெரிகிறது இவர்கள் வண்டியில் கூட்டி வந்தது அவருடைய மனைவிதான் என்று,  “கடத்தல்காரருக்கு மூட்டையை விட்டுவிட்டு ஓடுவது முக்கியம், நமக்கு மூட்டையை விட்டுவிட்டு ஆளைப்பிடிப்பது முக்கியம்” இவைகளைப்போல புன்னகையை வரவைக்கும் இடங்களும் உண்டு.

பத்து முதல் பதினான்கடி உயரமும், பன்னிரண்டடி அகலமும் கொண்டு 2504 மைல் தொலைவிற்கு உருவாக்கப்பட்ட சுங்க வேலி. மற்ற இடத்தைவிட வங்கத்தை அதிகம் பாதித்திருக்கிறது. மற்ற நாட்டில் விதிக்கப்பட்ட உப்பின் வரியும், அவர்களின் வருட வருமானமும், நமது நாட்டில் விதிக்கப்பட்ட வரியும், வருட வருமானமும் ஒப்பிட்டு பார்க்கையில் பயமாய் இருக்கிறது. சில சைக்கோ கொலைகாரர்கள் ரசித்து கொலை செய்வதுபோல் அடித்தள மக்களின் மேல் விதிக்கப்பட்ட இந்த கொடூர உப்பு வரியைப் பற்றிய ஆங்கிலேயர்களின் குறிப்புகள் அவ்வளவு அழகிய மொழியில் அமைந்துள்ளது.

நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் மூன்று லட்சம், பன்னிரண்டு லட்சம், இருபத்துமூன்று லட்சம், அறுபது லட்சம் என்றெல்லாம் இந்த வரியின் மூலமும் சட்ட விரோத உப்பு விற்பனையின் மூலமும் பணம் திரட்டி இருக்கிறார்கள். என்ன என்னவோ கணக்குகள், எவ்வளவோ லாபங்கள், ஆனால் உள்ளூர் உப்பு உற்பத்தி செய்யும் மலாங்கிகள் பெற்றது 0.5 – 0.9 மட்டுமே. ஐம்பது காசுகளா அல்லது ஐந்து காசுகளா தெரியவில்லை.

நான் பள்ளி இறுதி படித்துக் கொண்டிருந்தபோது   என் சித்தி வேலை செய்யும் நிறுவனத்தில் கொஞ்சம் பேர் சேர்ந்து தீபாவளி சமயத்தில் பட்டாசுக் கடை போடுவார்கள். நாங்களும்போய் விற்பனையாளர்களாய் நிற்போம். வாய்க்கு வந்த விலைதான். முதல்நாள் விலை சொல்ல பயமாய் இருக்கும். பெரியவர்களிடம் கேட்டுக்கேட்டு விலை சொல்வோம். அடுத்தடுத்து தேறிடுவோம். எங்க வாய்க்கு வர விலைதான். இரண்டு வேளை பிரியாணியும் கடைசிநாள் நிறைய பட்டாசும் ஐநூறு ரூபாய் பணமும் கொடுப்பார்கள். அப்படித்தான் உப்பின் விலையும் வரியும் இருந்து இருக்கிறது.

இவ்வளவு பெரிய கொடூரம் ஏன் மற்றவர்களை, அவர்களின் அறவுணர்வை தொடவில்லை. ஆனால் எல்லா மனிதரும் உலகிற்கு உப்பாய் இருந்துவிட்டால் உலகம் ரொம்பக் கரிச்சிப் போய்டும். கொஞ்சூண்டு பேர்தான் உப்பாக முடியும் காந்தியைப் போல். வங்கப் பஞ்சத்தில் கொத்து கொத்தாய் மனிதர்கள் இறந்து போய் இருக்கிறார்கள். அதில் அதிகப் பட்சம் உப்பில்லாமையால் என்பது எவ்வளவு கொடூரமான உண்மை. சுலபமாய் காப்பற்றி இருக்கவேண்டிய உயிர்கள் அனாவசியமாய் கொன்று குவிக்கப் பட்டிருக்கின்றன. நம்மை அவர்கள் ஆட்சி செய்த காலத்தில்தான் நிலம் சரியாய் அளக்கப்பட்டது, கடல் மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரம் என்று கண்டுபிடிக்கப்பட்டது, பறவைகள், தாவரங்கள் போன்ற எது எதையோ பதிவு பண்ணி வைத்திருக்கும் ஆங்கிலேயர்கள் இவ்வளவு பெரிய உண்மையை ஏன் சிறு சிறு குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

இந்த வேலி உருவாவதை குறிப்புகளில் எழுதி இருக்கிறார்கள் இப்படி, “அங்கே ஒரு பூதாகரமான அமைப்பு உருவாகி வந்தது. பொருட்படுத்தத் தகுந்த அளவுக்கு நாகரீகமான எந்த ஒரு நாட்டிலும் அதற்கு இணையான ஒன்றைக் கண்டுபிடிப்பது கிட்டதட்ட இயலாத காரியம்”. நாகரீகத்தின் உச்சம் என்று நாம் வியக்கிற மனிதர்கள்தான் இந்த அநாகரீகத்தின் உச்சமான காரியத்தை மிகுந்த அர்ப்பணிப்போடு .செய்து இருக்கிறார்கள்.

உள்நாட்டுக்குள் ஒரு கட்டுக்காவல் இருந்தால் அதின் மக்கள் வேறு எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டிருப்பார்கள்     என்பதை அனோஜென் எழுதிய கதைகளைப் படித்திருப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும். நீர்நிலைகளை ஒட்டியே வேலி பெரும்பாலும் இருந்ததால் பெண்கள் கண்டிப்பாய் பெரும் பாதிப்பு அடைந்திருப்பார்கள். இதில் பொய் கேஸ் வேற. வீட்டின் முன்னால் உப்பைத் தூவி, வேண்டாதவங்க வீட்டில் சோதனை என்ற பெயரில் எல்லாவற்றையும் உடைத்து நொறுக்குவது, சும்மா விசாரணை என்ற பெயரில் புடிச்சுகிட்டுப்போய் சிறையில் அடைப்பது. இப்போதும் நாளிதழ்களில் தொலைக்காட்சியில் பார்த்தால் தெரியும், சில ஏழை வீடுகளில் சோதனை என்ற பெயரில் போலீசார் நுழைந்து எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி திரும்ப அந்த வீட்டின் எந்தப் பொருளும் உபயோகிக்க முடியாமல் செய்து இருப்பார்கள்.

ராய் மாக்ஸம் அவர்கள் இந்த வேலியைக் கண்டு பிடிப்பதற்காக மனித உடலினைப் பற்றி, உலக வரலாறு, தாவரவியல் வரை அறிந்து கொள்கிறார்.  கடைசியாய் சினிமா கிளைமாக்ஸ் போல அந்த வேலியின் கொஞ்ச மிச்சத்தை பார்த்துவிடுகிறார். அதுவும் ஒரு முன்னால் கொள்ளைக்காரரின் உதவியோடு. பர்மத் லயின் என்ற பெயரோடு.  இந்த பர்மத் லயின் என்ற பெயர் நாவலின் தொடக்கத்திலும் முடிவிலும் மட்டுமே வருகிறது. ஏன் அவரால் மிச்ச இடத்தில் பார்க்க முடியவில்லை என்றால் அந்த வேலி அப்படியே ரோடு ஆகிவிட்டது. வேலி நன்றாய் உயர்த்தப் பட்ட இடத்தில் நேராய் எந்தக் குறுக்கீடும் இல்லாமல் வளர்க்கப் பட்டிருந்ததால் அதை அழித்து அப்படியே ரோடு போடுவது மிகவும் சுலபமாக இருந்திருக்கிறது.

ஒருவேளை இப்பொழுது அந்த மிச்சம் சுத்தமாகவே இல்லாமல் போய் இருந்திருக்கலாம். அந்த மீதி இருந்த வேலி தான் அழிவதற்கு முன்னால் தன்னை வரலாற்றில் பதிக்க அதுவே தேர்ந்து எடுத்தது ராய் மாக்ஸம் அவர்களை என்று நான் நினைத்துக் கொள்கிறேன். அந்த வேலி இருந்த மாநிலங்களில் அந்தந்த மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டால் இன்னும் கொஞ்சம் தகவல்கள்கூட கிடைக்கலாம். மொழி பெயர்த்த சிறில் அலெக்ஸ் அவர்களுக்கு நன்றி. கொஞ்சம் கூட சிரமம் இல்லாமல் தங்கு தடையின்றி படிக்க முடிந்தது.

வாழ்த்துகளுடன்

டெய்ஸி.

உப்புவேலி, இலக்கிய முன்னோடிகள் -கடிதங்கள்

உப்புவேலி -கேசவமணி

உப்புவேலி பற்றி பாவண்ணன்

முந்தைய கட்டுரைநதி- கடிதம்
அடுத்த கட்டுரைமழையில் முளைப்பவை- கடிதம்