அயோத்திதாசர் விவாதம் – கடிதம்

 

அயோத்திதாசர் இரு கேள்விகள்

அயோத்திதாசர் மேலும்…

அன்புள்ள ஜெ,
அயோத்திதாசர் விவாதத்தில் உங்களுக்கு வந்த கடிதத்தில் ஒரு வரி.ஒவ்வொரு பகுதிக்கும் இடைநிலைச் சாதிக்குரிய வீரர்வடிவங்கள் வெறும் வாய்மொழி வரலாற்றில் இருந்து மட்டுமே உருவாக்கப்பட்டு, எந்த ஆதாரங்களும் இல்லாமல் அப்படியே வரலாறாக ஆக்கப்பட்டு மறுக்கமுடியாதபடி நிலைநிறுத்தப்பட்டுவிட்டன. ஆதாரங்கள் எங்கே என அவற்றைப்பற்றி எவரும் கேட்பதில்லை. இதுவரை அந்தந்தச் சாதியைச் சேர்ந்த எவரும் ஒரு சின்ன கேள்விகூட கேட்டு நான் பார்த்ததில்லை. இனிமேலாவது எவராவது பேசிப்பார்க்கட்டுமே.

மிக நேரடியான அடி இது. வாய்மொழி வரலாற்றைக்கொண்டு வரலாற்றை திரிக்கிறார்கள் என்று எகிறிக்குதித்த எவருமே வெறும் வாய்மொழி வரலாற்றைக்கொண்டு, எந்த சரித்திர ஆதாரங்களும் இல்லாமல் இவ்வளவு பெரிய சமகாலச் சாதிவரலாறுகளை உருவாக்கி கேள்விகேட்கவே முடியாதபடி நிலைநிறுத்தியிருப்பதை கண்டுகொள்ளவில்லை. நீங்கள் எழுதியதும் அப்படியே அயோத்திதாசர் விவாதத்தையும் ஏறக்கட்டிவிட்டார்கள். ஒருவர்கூட ஆமாம், அதற்கும் ஆதாரம் இல்லை, அதையும் ஏற்கமுடியாது என்று சொல்லவில்லை. சரி, வாய்மொழி வரலாறு மட்டும்தான் என்றால் அதையும் ஏற்கமாட்டோம் என்றோ உண்மை இருக்கிறதா என்று ஆராய்வோம் என்றோகூட ஒருகுரல், ஒரே ஒரு குரல்கூட வரவில்லை. அம்பேத்கரோ அயோத்திதாசரோ புத்தர் வரலாற்றில் ஒரு தொன்மத்தை எடுத்து ஆராய்ந்தால் ராப்பகலாகக் குதிப்பவர்கள் இந்தச் சாதிவரலாறுகளைப் பற்றி மௌனம் சாதிக்கிறார்கள்.எல்லாம் எப்படி அப்பட்டமாக இருக்கிறது என்பது ஆச்சரியம்தான்

அறிவழகன் கா

அன்புள்ள அறிவழகன்,
அயோத்திதாசர் அவர் காலகட்டத்து வாய்மொழி மரபுகளை ஒட்டி ஒரு சமாந்தர வரலாற்றைச் சொன்னார். அந்த சமாந்தர வரலாறு வாய்மொழியில் இருந்துகொண்டே இருக்கிறதென்பது ஓர் உண்மை. ஏன் இருக்கிறது, ஏன் நீடிக்கிறது, அதன் பெறுமானம் என்ன என ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள். ஆனால் அதை ‘பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது’ என்று சொல்பவர்கள் நேரடியாகவே வரலாறாகவே மாற்றப்பட்ட சாதித்தொன்மங்களை பரிசீலிப்பதே இல்லை.

அவ்வளவு ஏன், எவராவது தொ. பரமசிவனை கேள்விகேட்டு பார்த்திருக்கிறீர்களா?அவர் எழுதிவைத்தவை முழுக்க ஆய்வு என்றும் தரவு என்றும் சொல்லப்படுகிறது. அயோத்திதாசராவது தொன்மம் புராணம் என எழுதிவைத்தார். இவர் முறைமைசார்ந்த நவீன ஆய்வு என்றே சொல்கிறார். ஆனால் எந்த ஆதாரமும் அளிப்பதில்லை. எந்த முறைமையும் கடைப்பிடிப்பதில்லை. கேட்டால் கள ஆய்வில் வாய்மொழியாக திரட்டிய செய்தி என்பார். ஆனால் அவரை அப்படியே ஏற்று பேரறிஞர் என்று கொண்டாடுகிறார்கள்.

உதாரணம், சம்பா +அளம் என்பதுதான் சம்பளம் என்கிறார். அளம் என்றால் களம். அது எப்படி உப்புக்கு பதிலாகும். சம்பா என்றால் ஒரு நெல்வகை. அது எப்படி அரிசிக்கு பதிலாகும்? உப்பும் அரிசியும் கூலியாக கொடுக்கப்பட்டதற்கு சான்றுகள் உண்டா? அரிசி நூறாண்டுகளுக்கு முன்பும்கூட அரிய உணவுப்பொருள். உழைப்பாளிகளின் உணவு தவசவகைகள்தான். குறைந்தது அறுநூறாண்டுகளாக தமிழகத்தில் பணம்தான் அரச ஊதியம். எந்த அடிப்படையில் சம்பாவும் அளமும் சேர்ந்து சம்பளமாகியது? [ஏன் சம்பாவளம் ஆகவில்லை?]

பழந்தமிழ்நாட்டில் தென்னை இல்லை என எழுதினார். நாஞ்சில்நாடன் ஆதாரபூர்வமாக பதில் அளித்தார். சங்ககால தாவரங்கள் பற்றியெல்லாம் பேரறிஞர்கள் விரிவாக பதிவுசெய்து அட்டவணையே போட்டு ஐம்பதாண்டுகள் ஆகின்றன. இவருக்கு நூல்பழக்கமே மிகக்குறைவு. செவிவழிச் செய்திகளைக் கொண்டுதான் ஆய்வே. அப்படி எத்தனை அபத்தங்கள். அவை எல்லாமே ஆய்வு என தோன்றுபவர்களுக்கு அயோத்திதாசர் சொன்ன தொன்மங்களை நவீன ஆய்வுமுறைமைகளைக் கொண்டு வரலாற்றாய்வுக்கு உட்படுத்தினால் அறிவுத்தாகம் பொங்கிவிடுகிறது.

இங்கே நடப்பது வரலாற்று விவாதமோ, ஆய்வுமுறைமை பற்றிய விவாதமோ அல்ல.

ஜெ

தொ.பரமசிவம் குறித்து…

தலித் அறிவுஜீவிகளை இழிவுசெய்பவர்கள் – கடிதம்

இருதிசையிலும் புதைகுழிகள்

மரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள் 2

மரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள்

முந்தைய கட்டுரைபுத்தாண்டு நாள்
அடுத்த கட்டுரைசடம் [சிறுகதை] ஜெயமோகன்