11 வருடங்களாக தங்கள் தளத்தை பின்தொடர்ந்து வருகிறேன். ஒருமுறை ஈரோடு வெண்முரசு கூடுகையிலும், இருமுறை தங்கள் இல்லத்திலும் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.
விருதுவிழாக்களை பற்றிய பதிவுகளை படித்து மட்டுமே தெரிந்துகொண்ட எனக்கு இந்தமுறை கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்தது.
என் நண்பர்கள் இருவரையும் கூட்டிவந்துவிட்டேன். சுரேஷ் கண்ணனூர் NIFTல் இணை பேராசிரியராக பணிபுரிகிறான். ஓஷோ, சுஜாதா என ஆரம்பித்து இப்போது வெண்முரசு வரை புத்தகங்களை தேடிச்சேர்த்து வருபவன். பள்ளிக்காலத்தோழன் செல்லமுத்து குழுமங்களில் கவிதைநடையில் தன்னுணர்வுகளை பகிர்பவன். இருவருக்கும் இது ஒரு இனிய அனுபவம்.
விழாஅரங்கிட்கு வந்ததும் அனைத்து முகங்களும் தெரிந்த முகங்களாக தோன்றியது. அவர்களுக்கு என்னைத்தெரியாது என உறைக்க சிறிதுநேரம் பிடித்தது. ஈரோடு கிருஷ்ணன், பாரி, மணவாளன், நூற்பு சிவா, குக்கூ முத்து ஆகியோரை சந்தித்து அறிமுகம் செய்து கொண்டேன். நாஞ்சில் ஐயாவோடு உரையாட நிறைய தருணங்கள் வாய்த்தது.
முதல் நாள் காலை 10 மணிமுதல் மறுநாள் இரவு 9மணிவரை நிகழ்ந்த அனைத்து விழா நிகழ்வுகளும் எனக்கு உச்சகணங்கள் தான்.
ஓவ்வொரு கேள்வியும் அதற்கான பதிலும் ஏதோ ஒரு திறப்பை அளித்தன. முதல்நாள் கோகுல்பிரசாத்தின் தன்னை கவரும் படைப்புக்களை மட்டுமே வெளியிடுவேன் என முன்வைத்த அவரது நிலைபாடு, காளிபிரசாத்தின் தன் வாழ்க்கை அனுபவங்கள் இன்னும் செறிவானவை என்ற பகிர்தல், சுஷில்குமாரின் தன் ஊருக்கும் ஜெமோவின் ஊருக்கும் உள்ள இடைவெளி என் படைப்புகளிலும் இருக்கும் என்ற தெளிவு, செந்தில் ஜெகன்நாதனின் இலக்கியத்துக்கு வேறுஎழுத்து சினிமாவிற்கு வேறுஎழுத்து என்ற புரிதல், ஜா.தீபாவின் பெண்களின் உலகை எழுதிவிட்டு பின் அனைத்து தரப்பையும் எழுதுவேன் என்ற நிமிர்வு, பா.திருச்செந்தாழையின் தொழிலுக்கும் இலக்கியத்துக்குமான ஊடாட்டம், சோ.தர்மன் அவர்களின் களஅனுபவங்களின் சரவெடி என அனைத்தும் அருமை.
இரண்டாம் நாளின் சிறப்பு விருந்தினர்கள் அமர்வுகள் சிறப்பாக இருந்தன. இயக்குனர் வசந்த் சாய் அவரின் சினிமா, இலக்கியத்தில் இருந்து சிந்தித்தல் மற்றும் அவர் எதிர்கொள்ளும் சவால்கள் என நிறைய விஷயங்களை பகிர்ந்தார். கவிஞர் சின்ன வீரபத்ருடு அவர்களின் உரை மிகச்செறிவாக தெளிவான ஆங்கிலத்தில் அமைந்தது. தெலுங்கு கவிதை உலகை பற்றிய விரிவான உரை. ஜெய்ராம் ரமேஷ் அவர்களின் வெளிப்படையான பேச்சு மற்றும் வரலாற்று/சூழலியல் பார்வை, கவிஞர் விக்ரமாதித்யன் அண்ணாச்சியின் குழந்தைமை, அவரது அனுபவம் சார்ந்த பகிர்தல்கள் என செறிவான நிகழ்வுகள்.
இடையில் குக்கூ சிவா அண்ணாவை சந்தித்ததும் அவரின் கைதொடுகையும் நெகிழ்ச்சியாக இருந்தது. நினைத்துவந்ததுபோல என்பெயரோடு தங்களோடு இருக்கும் இன்னொரு ஆளுமையை கடைசியாக சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டேன்.
தங்களை சந்தித்து கையொப்பம் பெற்று புகைப்படமும் எடுத்துக்கொண்டோம். ‘எழுதுக’ புத்தகத்தில் தங்கள் ஆசியாக கையொப்பம் பெற்றது நிறைவான அனுபவம்.
இருதினங்களும் தாங்கள் எங்கும் நிலைகொள்ளாமல், எல்லோரிடமும் அவர்களுக்கென்று கவனம் அளித்து, ஓரிரு வார்த்தைகள் பேசி, புதியவர்களிடம் உரையாடி, கையெழுத்திட்டு, சிரித்து மகிழ்ந்து உவகையுடன் ஓடிக்கொண்டே இருந்தீர்கள். செயல்படுதலை யோகமாக வலியுறுத்தும் நீங்கள் சிலகணங்கள் இளையயாதவர் போல தோன்றினீர்கள்.
காளிபிரசாத் நிகழ்வில் நான் மொழிபெயர்ப்பு சார்ந்த கேள்வியெழுப்பிய புகைப்படத்தை தங்கள் தளத்தில் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி. காண்பவரிடமெல்லாம் பகிர்ந்து கொண்டேன்.
அரங்கில் உணவு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. என் நண்பன் சுரேஷ் சொல்வது போல் இந்த ‘இலக்கியபணி’க்காகவே இனிவரும் விழாக்களில் பங்கெடுப்பது என உறுதிபூண்டோம்.
விஷ்ணுபுரம் அமைப்பின் அனைவருக்கும் நன்றிகள் பல.
2021ம் ஆண்டின் இறுதி நிகழ்வை குருவின் ஆசியோடு நிறைவான அனுபவங்களின் நிரையாக அளித்தமைக்கு இறைக்கு என் சிரம்தாழ்ந்த நன்றிகள், வணக்கங்கள்.
செல்வேந்திரன்
ஓசூர்
( செல்வேந்திரன் ஓசூரில் இயற்கை உணவுப்பொருட்கள் விற்கும் அங்காடியை நடத்துகிறார். [email protected])