புவியரசு ஆவணப்படம் – கடிதம்

புவி 90 ஆவணப்படம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். மூன்று மாதங்களுக்கு முன்னர், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் கோவையில் ஏற்பாடு செய்திருந்த புவியரசு 90 நிகழ்வு முடிந்ததும், Shruti TV வெளியிட்டிருந்த உரைகளை அன்றே கேட்டேன். உங்கள் உரையில் நீங்கள் அவரைப் பற்றி கூறியதையும், புவியரசு ஏற்புரையையும் கேட்டு வியந்துபோயிருந்தேன். இப்படிப்பட்ட ஆளுமையின் நூல் என் வீட்டில் ஒன்றுகூட இல்லையா என தேடினேன். என் திருப்திக்கு ஏ.பி.ஜே அப்துல் கலாமின் ‘அக்னிச் சிறகுகள்’, தமிழ் மொழிபெயர்ப்பு என்னிடம் இருந்தது. அதில் உள்ள கவிதைகள், புவியரசுவின் மொழிபெயர்ப்பு. அதே நாள், உங்களுடன் தொலைபேசியில் பேசும்பொழுதுகூட, ஒரு ஆளுமையை அறிந்துகொண்ட பிரமிப்பு மாறாமல் காணொளியில் கேட்டதைக் கூறி உங்களிடம் மேல் விபரங்கள் கேட்டேன்.

நான் இலக்கியம் என்று எதையெல்லாம்  நம்புகிறேனோ அதை மறுக்கக்கூடியவருக்கு நாங்கள் எடுக்கும் விழா என்று ஒரு முறுவலுடன் ஆரம்பித்து, புவியரசின் விவாதப்போக்கையும், இலக்கியத்தில் வானம்பாடியின் பங்கையும் விவரிக்கிறீர்கள். சுந்தரராமசாமியிடமிருந்து தாங்கள் வேறுபடும் இடங்களை குறிப்பிட்டு, சுவற்றில் எழுதும் வரிகள் இலக்கியம் ஆகும் வாய்ப்பு உண்டு என்று சொன்னதை நினைவு கூறுகிறீர்கள். சில தருணங்களில் சீற்றம் கவிதை, சில தருணங்களில் அங்கதம் கவிதை என பல விளக்கங்கள் தந்துவிட்டு புவியரசின் கவிதைகளின் சிறப்பை எடுத்து வைக்கிறீர்கள். அவரது மொழியாக்கத்தில் வெளிவந்த கரம்சௌ சகோதரர்கள், நூறாண்டுகள் கழித்தும் வாசிக்கப்படும் படைப்பு என்று பாராட்டுகிறீர்கள்.

புவியரசோ ஏற்புரையில், நீலத்தின் வாசகனாக, ‘நீலம் முன்னூறுபக்க நூல் மட்டுமல்ல, முழுநீளக்கவிதை என்று விழாவில் சொல்கிறார். உங்களின் முன்னுரையில் அவரின் ஆள்மையில் ஆழ்ந்த எனக்கு, அவரது உரையில், நீலம்  நூலின் வாசகனாக எனக்கு அணுக்கமாகிவிடுகிறார். ‘பாரதிக்கு கண்ணன் பாட்டு, ஜெயமோகனுக்கு நீலம்’ என்று நான் சொல்ல நினைத்த நாட்கள் உண்டு. புவியரசின் உரை கேட்டதும், அத்தாட்சி பெற்றவனாக இப்பொழுதெல்லாம், என் உரையாடல்களிலும், பதிவுகளிலும் அப்படிச் சொல்லத் தயங்குவதில்லை. நீலம் பற்றி அவர் பேசும்பொழுது நான் அவர் 90 வயதானவர் என்பதை மறந்துவிட்டிருந்தேன்.

தளத்தில் இன்று புவி 90 ஆவணப்படம் வெளியிடப்பட்டதும் ஒரே அமர்வில் பார்த்துவிட்டேன். அவர் வீட்டுக்கு சென்று உடன் அமர்ந்து பேசியதுபோல் எடுத்துள்ள படம். சக்திவேலுவை எடுத்துவிட்டு நம்மை வைத்துக்கொள்ளவேண்டியதுதான். இயல்பான பேச்சு.  நேற்றுத்தான் நடந்ததுபோல் சொல்லும் நினைவாற்றல்.  அப்பா, நாடகம், வானம்பாடி, மார்க்சியம், ஓஷோ, மொழியாக்கம், கமலுடனான உறவு என்று வாசகனுக்கு அறிந்துகொள்ளவேண்டிய அளவுக்கு அவர் சொல்ல கேட்கும் பாக்கியம். பாம்பேயில்  நாஞ்சில் நாடன் அழைத்துசென்று மொழி தெரியாமல் பார்த்த நாடகத்தை அவர் விவரிக்கும்பொழுது ஒரு நடிகன், வாழ்விற்கு அர்த்தம் ஒன்றும் இல்லை என்று சொல்லும்போது தத்துவ வாதி, மனைவியை அம்மா என சொல்லும்பொழுது ஒரு குழந்தை.  அதிகப் பொருட்செலவில்லாமல், வருகின்ற காலத்தில் அனைவரும் பார்க்க ஒரு சரித்திரத்தை சேகரித்த ஆனந்த் குமார், மயன், சக்திவேல், திருமதி பாக்கியலக்ஷ்மி குடும்பத்தினர், ராமச்சந்திரன் அரவிந்தன், கதிர்முருகன் அனைவருக்கும் நன்றி.

அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்

முந்தைய கட்டுரைஇந்தியஞானம், மதிப்புரை
அடுத்த கட்டுரைபுத்தாண்டு நாள்