போரும் அமைதியும் மொழியாக்கங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

“போரும் அமைதியும்” நாவலை தமிழில் படிப்பதற்கும் ஆங்கிலத்தில் படிப்பதற்கும் வேறுபாடு உள்ளதா? நீங்கள் தமிழில் படித்தீர்களா? இல்லை, ஆங்கிலத்தில் படித்தீர்களா?

லியோ டால்ஸ்டாய் பற்றிய உங்களுடைய பேச்சை கேட்ட பிறகு இந்த நாவலை படிக்க இன்னும் ஆசை அதிகமாகிறது.

முக்கியமாக இந்த கேள்வி ஏன் வருகிறதென்றால், நான் தமிழ் வழி கல்வி பயின்றவன். ஆங்கிலமும் இங்கு வந்த பிறகு நன்றாக கற்று பேச தெரிந்தாலும் உங்களுடைய கருத்தை கேட்க ஆசை. நன்றி!

சத்ய நாராயணன்,

ஆஸ்டின், டெக்சாஸ்.

டி.எஸ்.சொக்கலிங்கம்

அன்புள்ள சத்யா,

ருஷ்ய இலக்கியங்களை எப்படி இருந்தாலும் நாம் மூலத்தில் படிக்கமுடியாது. தமிழில் வாசிப்பதா ஆங்கிலத்தில் வாசிப்பதா என்பதே கேள்வி. எனில் எந்த மொழியில் வேகமாக தடையில்லாமல் வாசிக்கமுடியுமோ அதில் வாசிக்கலாம். என்னால் தமிழிலேயே விரைவாக வாசிக்கமுடியும்.

தல்ஸ்தோயின் மொழி மிக நேரடியானது. அணிகளற்றது. சொற்றொடர்களும் எளிமையான கட்டமைப்பு கொண்டவை. ஆகவே அவருடைய நாவல்கள் ஆங்கிலத்திலும் எளிமையான வாசிப்புக்கு உகந்தவையாகவே உள்ளன. நான் வாசித்தவரை தல்ஸ்தோயின் படைப்புகளை தொடக்க காலத்தில் மொழியாக்கம் செய்த Constance Garnett மொழியாக்கம் நன்று. அவர் நிறைய பகுதிகளை விட்டுவிட்டு செய்தார் என குற்றச்சாட்டு உண்டு. ஆய்வுக்காக வாசிக்கவில்லை என்றால் அவருடைய சரளமான மொழியாக்கத்தை வாசிக்கலாம்.  Anthony Briggs  மொழியாக்கம்தான் மிகச்சிறப்பானது என்னும் பேச்சு சூழலில் உண்டு.

தமிழில் சொக்கலிங்கம் அவர்களின் மொழியாக்கம் ஓர் இலக்கியச் சாதனை. டி.எஸ்.சொக்கலிங்கம் தினமணி ஆசிரியராக இருந்தவர். புதுமைப்பித்தனின் தாய்மாமா. தினசரி என்னும் நாளிதழை நடத்தியவர். இலக்கியத்தில் ஈடுபாடும் பயிற்சியும் கொண்டவர். சுதந்திரப்போராட்ட வீரர். தமிழ் இதழியலின் தலைமகன்களில் ஒருவர்.

Contance Garnett

டி.எஸ்.சொக்கலிங்கம் மொழியாக்கம் மிகச் சரளமானது.மூலம் போலவே வாசிக்கலாம். பெரும்பாலும் சொல்லுக்குச் சொல் மொழியாக்கம். தமிழில் உரைநடை சரிவர உருவாகி வராத காலகட்டத்தில் செய்யப்பட்டது அம்மொழியாக்கம். தமிழில் புனைவிலக்கிய நடையை உருவாக்கியதில் அதன் பங்கு முக்கியமானது. ஆயினும் இன்றும் அதை வாசிக்கலாம். எந்த பழமைமையும் உணரமுடியாது.

போரும் அமைதியும் நாவலை வாசிக்க சில சிக்கல்கள் உண்டு. அது பதினெட்டாம் நூற்றாண்டு ரஷ்யாவின் மிகவிரிவான சித்திரத்தை அளிக்கிறது. நேரடியாக ஒரு பெரிய விருந்தில் தொடங்கி கதாபாத்திரங்களையும் உறவுமுறைகளையும் சொல்லிக்கொண்டே செல்கிறது. அந்நாவல் உருவாக்க விரும்பும் அந்த சமூகச்சித்திரம் நம் உள்ளத்தில் தெளிவடையும்வரை நாவலை விடாமல் வாசிக்கவேண்டும். குறைந்தது ஐம்பது பக்கம். நூறுபக்கம் கடந்தால் நாவலுக்குள் வாழத் தொடங்கிவிடுவோம்.

நாவலுக்குள் நுழைகையிலுள்ள முக்கியமான தடை கதைமாந்தர் பெயர்கள் பலவகையாக அளிக்கப்பட்டிருப்பது. ரஷ்யாவில் ஒருவருக்கு செல்லப்பெயர், கிறிஸ்தவப்பெயர், தந்தைபெயர் ,குடிப்பெயர் ஆகியவை இருக்கும். நான்குபெயர்களில் ஒன்றைச்சொல்லி அழைப்பார்கள். கீழே உள்ளவர்கள் குடிப்பெயர் சொல்வார்கள். மூத்தவர்கள் தந்தைபெயர் சொல்வார்கள். அணுக்கமானவர்கள் செல்லப்பெயர் சொல்வார்கள். அது குழப்பத்தை உருவாக்கும். அதற்கு ஒரு சின்ன காகிதத்தில் பெயர்களை குறித்து அருகே வைத்துக்கொண்டு அவர்கள் எவரெவர் என அவ்வப்போது பார்த்துக்கொண்டால் போதுமானது

ஜெ

மொழியாக்கம் ஒரு கடிதம்

அயல் இலக்கியங்களும் தமிழும்

மொழியாக்கம் பற்றி- ஸ்வேதா சண்முகம்

மொழியை பெயர்த்தல்

இரண்டாம் மொழிபெயர்ப்பு

போரும் வாழ்வும் – முதல் வாசிப்பனுபவம், சுரேஷ் பிரதீப்

போரும் அமைதியும் – ஒரு செய்தி, செய்தித்திரிபு

ஆகாயத்தில் ஒரு பறவை — போரும் அமைதியும் குறித்து…

போரும் அமைதியும் வாசிப்பும்

தல்ஸ்தோய் மனிதநேயரா?- எதிர்வினை- சுசித்ரா

ருஷ்ய இலக்கியம் வாசிப்பதன் தடைகள்

முந்தைய கட்டுரைவிண்மீன்கள் நிறைந்த இரவு-நித்யா
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா, கடிதம்