மலேசியா நவீனின் சிகண்டி பற்றி…

சிகண்டி வாங்க

அன்புள்ள ஜெ,

பெருநகர வாழ்க்கை என்பது பலதரப்பட்ட சாத்தியங்களைக் கொண்டது. தமிழ்நாட்டில் சென்னையையும், மதுரையையும் பார்த்தாலே தெரியும் அங்கே எத்தனை விதமான வாழ்க்கை சாத்தியம் என்று. மதுரையில் கோரிப்பாளையத்திற்கும், பாண்டி கோவிலுக்கும் இடையே ஐந்து கி.மீ தூரம் தான் ஆனால் இரு இடத்திற்குமான வாழ்க்கை சூழல் முற்றிலும் மாறிவிடும். சென்னை என்னும் பெருநகரத்தில் எத்தனை விதமான வாழ்க்கையை நாம் பார்க்கலாம். ஆனால் தமிழ் நாவல்களில் இந்த வாழ்க்கையின் பத்து சதவிகிதம் கூட பதிவு செய்யப்படவில்லையோ எனத் தோன்றுகிறது.

அதற்கு அடுத்த கட்டம் என்பது நாம் அதிகம் அறிந்திடாத நிழல் உலகம் பற்றிச் சொல்வது. நான் முன்னர் சொன்னது போலவே இவ்வாழ்க்கை பெருநகர சூழலில் தான் மிகுதி. இந்த வகை பெரிதும் அறியப்படாத வாழ்வை ஒட்டி வந்த நாவல் என்ற முதல் தகுதியே ம.நவீனின் சிகண்டி நாவலை வாங்கியதும் வாசிக்கத் தூண்டியது.

”உலகைப்பற்றிய நம்பிக்கைகள் உடைவதன் வழியாகவே சிறுவர்கள் ஆண்மகனாகிறார்கள்” என்று ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். அந்த வரியில் இருந்து நவீனின் சிகண்டி நாவல் எனக்கு விரிகிறது. தீபன் என்னும் சிறுவன் தன்னை நாவல் முழுதும் ஆண்மகனாக நிறுவ முயல்கிறான். அவன் ஆண்மகனாக தன்னை நிறுவ முயலுவதே இந்நாவல். அவன் மேல் காதல் கொண்டிருக்கும் சராவினிடத்தில், காராட் வீதியில் தனக்கு அண்ணனாகும் காசியிடம், அவர்கள் கேங்கின் தலைவனான ஷாவிடம், சராவின் தாயான ஈபுவிடம் என இருபது வயதை கடந்த தீபன் தன்னை ஆண்மகனாக காட்ட முயற்சித்துக் கொண்டேயிருக்கிறான். மாறாக கோலாம்பூரில் அவன் வசிக்கும் அவனது மாமா வீட்டில் இருக்கும் அவன் மாமன் மகனான கண்ணனிடம் உள்ள சிறுவனை நேசிக்கிறான். கண்ணனிடம் விலகமுடியாத ஒரு ஈர்ப்பு அவனுக்கு உருவாகிறது அதே சமயத்தில் அதனை மீறி போக ஒவ்வொரு வாய்ப்பாக தேடிக் கொண்டிருக்கிறான்.

இந்நாவலில் இரண்டு இடம் வருகிறது ஒன்று கண்ணன் ஆசையாய் வளர்க்கும் பூனையை தீபன் வன்மமாக கொல்லும் இடம். அந்த பூனை இறந்ததற்கு பின்பான காசியை பார்க்கிறான், அதன்பின் அந்த வன்மத்தை அவனால் மீட்டெடுக்க முடியவில்லை. காசி அவனை மர்மமான ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கே உள்ள குரங்கை கொல்வதன் மூலம் தீபனிடம் உள்ள சிறுவனை கொல்ல முயற்சிக்கிறான். தீபனால் அதனை தன்னியல்பாக செய்ய இயலவில்லை. தீபனின் பார்வையில் இந்த நாவலைப் பார்க்கும் போது அவனுள் இருக்கும் இந்த இரண்டிற்குமான ஊடாட்டம் தான் இந்த நாவல் என ஒரு வாசிப்பில் சொல்லத் தோன்றுகிறது.

இதனை சொன்னவுடன் மறுக்கவும் தோன்றுகிறது. நவீன் நாவலை இந்த ஒற்றை புள்ளியில் நிறுத்தவில்லை. இதில் வரும் தீபனின் கதாபாத்திரத்தை நவீன் “ராசன்” என்னும் சிறுகதையில் முன்னரே முயற்சித்துவிட்டார். இந்நாவலை அந்த தொடக்கப்புள்ளியில் இருந்து விரிக்கிறார். நான் முன்னர் சொன்னது போல் இந்நாவல் நாம் பெரிதும் அறியாத கோலாலம்பூரின் காராட் வீதி, சௌவாட் என்னும் குட்டி நகர உருவாக்கம், அங்கே இயங்கும் நிழலுலக வாழ்க்கை என விரிகிறது.

அதிலிருந்து நாவலின் புதிய மையம் உருவாகிவருகிறது. நாவலின் மையம் தீபனிடமிருந்து சராவிடம் நகர்கிறது. சரா என்னும் திருநங்கை. அவள் தன்னை எவ்விதம் ஒரு பெண்ணாக உணர்கிறாள். தன்னை எப்படி ஒரு தேவதையாக மாற்றுகிறாள் என்பதே இந்நாவலில் முன்னர் எதிலும் சொல்லப்படாத புதியது. சரா போன்ற தேவதை திருநங்கை கதாப்பாத்திரமே தமிழ் இலக்கியத்திற்கு புதிது.

சரா கதாப்பாத்திரத்தை நிறுவும் ஒரு இடம் நாவலில் வருகிறது. அவளை எல்லோர் முன்னும் நாட்டியம் ஆடும்படி வற்புறுத்துகின்றனர். அவள் ஆட மறுக்கிறாள். அவளிடம் ஏற்படும் மறுப்பிலிருந்து அவளுக்கு ஒரு தெளிவு பிறக்கிறது. அவள் தன் பிறப்பின் தேவை என்ன என்று அறிகிறாள். தான் ஆடுவது இனி தெய்வத்திற்காக மட்டுமே என்னும் உறுதியை எடுக்கிறாள். எந்நிலையிலும் தெய்வத்தை தவிர யாருக்காகவும் ஆடமாட்டான் என முடிவு செய்கிறாள். அதற்காகவே தெய்வ நடனமான அப்சர நடனத்தை தேர்வு செய்கிறாள். அந்த நடனத்தின் மூலம் தன்னை ஒரு அப்சராவாக உணரத் தொடங்குகிறாள். ஒரு முறை தனி அறைக்குள் தீபனை அழைத்துச் சென்று அங்கே இருக்கும் கடவுளின் முன் ஆடத் தொடங்குகிறாள். அவள் ஆடத் தொடங்கியதும் தீபனுக்கு அவள் மேல் வெறுப்பும் பிரியமும் என மாறி மாறி வருகிறது. அந்த இரண்டுங்கட்டான் நிலையை தவிர்க்க வேண்டி அவன் அந்த அறையிலிருந்து வெளியேறுகிறான். அவள் உலகில் பெரிதும் நேசிக்கும் தீபன் அவள் நடனத்தை காணாது சென்றது கூட அவளுக்கு ஒரு பொருட்டாகவில்லை. அப்போது கூட அவள் நிறுத்தாமல் ஆடிக் கொண்டிருக்கிறாள்.

சராவால் எந்த ஒரு தேவையற்ற பொருளையும் உதாசீனம் செய்ய இயலவில்லை. அதனைக் கொண்டு ஏதாவது தேவையான பொருளை உருவாக்குகிறாள். ஏனென்றால் அவளே அவள் குடும்பத்தால் தேவையில்லை என உதாசீனம் செய்யப்பட்டவள். அவளது உடலியல் மாற்றத்திற்காக அவள் குடும்பம் அவளை வேண்டாமென தூக்கி எறிகின்றனர். அங்கிருந்து தன்னை ஒட்டவைத்துக் கொண்டு புது பொருளாக மாறுகிறாள் சரா. அவளுக்கான புது வாழ்க்கையை உருவாக்குகிறாள். அவளுக்கு பேரன்னையாக ஈபு வருகிறார். அவளை பாதுகாக்கும் அன்னையாக நிஷாம்மா வருகிறாள். ஒரு கணம் எனினும் தீபன் சரா பெண்ணாக எண்ணி அவள் மேல் காதல் கொள்கிறான். அந்த ஒரு கண காதலுக்காகவே சரா அவனுக்கு தன் முழு வாழ்க்கையே கொடுக்கிறாள்.

இந்த இரண்டு சம்பவங்களையும் கொண்டு நான் இந்த நாவலை தொகுத்துக் கொள்ள முயற்சிக்கிறேன். இந்த நாவல் எனக்கு என்ன தந்தது என்பதையும் கூட.

பொதுவாக நம்மிடம் திருநங்கையரை குறித்த சித்திரம் என்பது அவர்களை ஒரு மூன்றாம் பாலினத்தவர் என ஒதுக்கி வைப்பது. அவர்கள் வாழ்வென்பது நம் கண்ணுக்கு தெரியாத நம் எல்லைக்குள் வராத ஒரு நிழலுலக வாழ்க்கையே. அந்த வாழ்க்கையை அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் எப்படி கழிக்கிறார்கள் என்பதை நாம் எண்ண முற்படுவதில்லை. முடிந்த அளவு அவர்களை நாம் தொலைவில் விலக்கியே வைத்துள்ளோம். நான் கோயம்புத்தூரில் காலேஜ் படிக்கும் போது ஒரு நிகழ்வு, நான் காந்திபுரத்திலிருந்து கணபதிக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது அந்த சிக்னலில் வந்த திருநங்கையர் இருவர் என்னை நோக்கி வருவதைக் கண்டதும் என் கை தன்னியல்பாக கார் கண்ணாடியை மூடியது. அவர்கள் என்னை சட்டை செய்யாமல் கடந்தனர். அதன் பின் பல முறை நான் ஏன் அப்படி செய்தேன் என யோசித்துப் பார்த்திருக்கிறேன். அந்த செயல் இந்த சமூகம் எனக்கு சொல்லி அனுப்பிய செய்தி அந்த தருணத்தில் நான் அப்படி தான் செயல்பட வேண்டுமென என் மூளைக்கு இந்த சமூகம் இட்ட கட்டளை அது.

ஜாக் லாண்டனின் “தீ வளர்க” என்னும் சிறுகதையில் எஜமானும் அவனது நாயும் பனியில் சிக்கிக் கொள்வர். அதிலிருந்து அவனது நாய் மட்டும் தப்பி வரும். கதையின் முடிவில் அதற்கு முன் பனி பிரதேசத்தையே பார்த்திராத அந்த நாய் எப்படி தப்பி வந்தது என ஆசிரியர் சொல்லியிருப்பார். அந்த நாய்க்கு இப்படி தான் தப்ப வேண்டுமென மூளையில் அதன் முன்னோர்களால் இத்தனை ஆண்டு காலம் சொல்லித் தரப்பட்டிருக்கிறது. அதே போல் தான் அன்று என் செயலும் என இன்று நினைக்கிறேன். உலகை முழுதாக உணர்ந்திடாத அதனை உணரத் துடிக்கும் ஒரு பதினெட்டு பத்தொன்பது வயது சிறுவனை அப்படி செய்ய தூண்டியது எது?

இந்த பொது சித்திரத்திலிருந்து இலக்கியமும், தொன்மமும் மூன்றாம் பாலினத்தவரை நமக்கு எப்படி காட்டுகிறது என்பதை யோசிக்கிறேன். முதற் தெய்வங்களான மும்மூர்த்திகளும் அவர்களுள் ஒரு பெண் வடிவை தாங்கியே நிற்கின்றனர். சிவன் அர்த்தநாரியாக பார்வதியை தன்னுள் தாங்கி நிற்கிறார். விஷ்ணு தன்னுள் மோகினி அவதாரத்தை தாங்கி நிற்கிறார். பிரம்மா தன்னுள் கலைமகளைக் கொண்டிருக்கிறார். இதன் குறியீடு என்ன?

நம் நிகழ்த்துக் கலையில் தெருக்கூத்தாகட்டும், கணியான் கூத்தாகட்டும் பெண் வேடத்தை ஆணே போடுகின்றனர். கணியான் கூத்தில் நான் பார்த்த தங்கராசு குழுவில் ஆடிய இருவரிடம் அவர்கள் ஆடும்போது பல முறை அவர்களை பெண்ணெனவே கண்டேன். அந்த ஆணிலிருந்து ஒரு பெண் எப்படி வெளியில் வருகிறாள்? வெறும் அலங்காரம் மூலம் அல்லது நடப்பு மூலம் அதனை நிகழ்த்துவது எளிதல்ல. அது சாத்தியம் என்றால் அந்த குழுவிலேயே யார் வேண்டுமானாலும் அப்படி வேஷம் கட்டலாமே ஆனால் அவர்களுள் இன்னார் தான் இந்த வேஷம் கட்ட வேண்டுமென்ற நியதி உள்ளது. அது எப்படி நிகழ்கிறது, ஒரு ஆண் தன்னுள் உள்ள பெண்ணை உணர வேண்டும் அதன்பின்னே அவள் அவனிடம் வெளிப்படுகிறாள்.

வெண்முரசில் ஒரு இடம் வரும் துரியோதனை பீமன் தாய் கரடியிடமிருந்து காப்பாற்றுவான். பெருவீரனான தான் தன் தம்பிகள் முன் காப்பாற்றப்பட்டேன் என்ற அவமானத்தில் அங்கிருந்து மறைந்து ரௌப்பயை சுனையில் இருக்கிறான். அப்போது அந்த சுனையில் ஸ்தூணகர்ணன் துரியோதனனை நீரில் அவனை தோளைப் பார்க்க சொல்கிறான். துரியோதனன் அதனைப் பார்க்கும் போது உள்ளே சுயோதனை தெரிகிறாள். அக்கணம் சுயோதனையை அந்த சுனையில் விட்டு அங்கிருந்து துரியோதனனான வெளியேறுகிறான்.

யோசித்துப் பார்த்தால் இலக்கியமும், பண்பாடும், கலைகளும் நமக்கு சொல்வது ஒன்றை தான் ஒரு ஆண் தன்னுள் சுமந்தலைவது ஒரு பெண்ணை தான். அது ஒரு தெய்வீக நிலையாகவே நாம் எடுத்துக் கொள்கிறோம். அதுவே ஒரு படி மேலே சென்று ஒரு ஆணின் உடலியல் ரீதியாக மாற்றம் ஏற்பட்டு அவன் ஒரு அவளை தன்னுள் சூடிக் கொள்ளும்போது நம்முள் ஏன் ஒரு விலக்கம் ஏற்படுகிறது. அத்தகைய விலக்கம் ஏதும் இல்லாமல் நாம் அந்த அர்த்தநாரீஸ்வரனை இரு கரம் கொண்டு வணங்க முடிகிறதே. கணியான் கூத்தில் ஆணில் வெளிப்படும் பெண்ணை எந்த விலக்கமும் இல்லாமல் கண்டு ரசிக்க இயல்கிறதே.

ஆனால் நம்மைப் போல் ஓர் உடலில் இரத்தமும் சதையுமாக ஒருவர் வந்து நிற்கும் போது நமக்கு ஏன் ஒரு விலக்கம் வருகிறது?

இவை அனைத்தையும் நாம் உசாவிப் பார்க்க ஒரு பக்குவம் தேவையாகிறது. அந்த பக்குவத்தையே இலக்கியம் நமக்கு சமைத்து தருகிறது. நவீனின் சிகண்டி என்னை இந்த புள்ளியிலிருந்து தான் யோசிக்க தூண்டியது. இந்நாவலின் இறுதியில் ஒரு இடம் வருகிறது. சிகண்டிக்கு வைட் கோப்ராவிற்கும் இடையே சண்டை நிகழ்கிறது. அப்போது சிகண்டி வைட் கோப்ராவின் தலையில் அடித்து ஒன்று சொல்கிறாள், “இது ஒங்களுக்கு பொம்பள சாமி… எங்க ஊருல ஆம்பள் சாமி… ஏண்டா ஆம்பள சாமி பொம்பள சாமியா  மாறலாம்… ஆனா நானெல்லாம் ஒன்னோட ரோட்டுல இருக்குறது அசிங்கம்…”

மலேசியாவிலும் சீன கடவுளான ”குவான் – யின்” என்னும் பெண் தெய்வம் இருக்கிறது. பகுச்சரா மாதா என்னும் திருநங்கை கடவுள் சேவலின் மேல் அமர்ந்து சிகண்டியை காவல் காக்கிறாள்.

தீபனுக்கு பகுச்சரா மாதாவின் மேல் இருக்கும் பக்தியும், சராவின் மேல் இருக்கும் விலக்கமும் தான் நான் மேலே சொன்னது. அவனது நம்பிக்கைகள் உடையும் போது தான் அவன் ஆண்மகனாகிறான். அதிலிருந்தே அவனுக்கான ஒரு வாழ்க்கை தொடங்குகிறது.

இப்போது இந்த முப்பது வயதில் என்னால் அப்படி கார் கண்ணாடியை மேலே ஏற்ற முடியாது. அவர்களிடம் அன்பாக நாலு வார்த்தை என்னால் பேச இயலும். பொதுவில் ஏற்படும் கிண்டல்களையும் ஏலனத்தையும் கண்டால் கண்டிக்கக் கூட முடியும். எனக்கு இந்த பாதையை யோசிக்க இந்த பத்தாண்டில் இலக்கியமும், தொன்மமும் கற்று தந்தது. தீபனுக்கு அவனுள் இருக்கும் சிறுவனை உடைத்து வெளியெறியும் வன்மம் கற்று தந்தது.

இந்நாவல் தீபனின் நாவல் தான் அவன் பார்வையிலிருந்தே இந்நாவல் வளர்கிறது. அவன் லுனாஸிலிருந்து கோலாலம்பூரில் இருக்கும் மாமா வீட்டிற்கு வரும் சிறுவன். அந்த சிறுவன் தன்னுள் இருக்கும் ஒவ்வொரு நம்பிக்கைகளாக உடைத்தெறிந்து எப்படி ஆண்மகனாகிறான் என்பதே சிகண்டி. அந்த தீபன் அவன் பயணத்தில் மற்றொரு பாதையாக சராவிடமிருந்து எப்படி பகுச்சரா மாதாவை நோக்கி செல்கிறான் என்பதையே நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறது.

இந்த நாவலை முடித்தபின் ஒவ்வொன்றாக மீட்டு பார்க்கும் போது தீபனின் பயணம் மேலும் மேலுமென விரிந்து அவன் சராவிலிருந்து பகுச்சரா மாதாவை எப்போது கண்டடைக்கிறான் என அவன் வளரும் சித்திரம் ஒவ்வொன்றாக மனதில் விரிகிறது.

சந்தேகமே இல்லாமல் சமீபத்தில் வெளிவந்த நாவல்களுள் இது சிறந்த நாவல் எனச் சொல்வேன். நவீன் அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள்.

நன்றி,

நவீன்.ஜி.எஸ்.எஸ்.வி.

சிகண்டி- விதையற்ற கனியின் வேர்ச்சுவை- ராஜகோபாலன்

முந்தைய கட்டுரைசடம் கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைபூர்வபௌத்தம் என்பது கட்டுக்கதையா?