அன்புள்ள ஜெ. அவர்களுக்கு,
தங்களுக்கு நீண்ட நாட்களாகக் கடிதம் எழுத நினைப்பதுண்டு. ஆனால் அவசியமின்றித் தொந்தரவு வேண்டாம் என்பதால் அந்த எண்ணத்தை அந்த நொடியே கைவிட்டுவிடுவேன்.
நானும் மறைந்த குமரகுருபரனும் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்தவர்கள். குமாருடன் தங்கள் எழுத்துகளைப் பற்றி நிறையப் பேசித் தீர்த்திருக்கிறோம். கவிதா சொர்ணவல்லியும் உடன் இருந்ததுண்டு. அந்த வகையில் குமரகுருபரன் நினைவு விருது விழாக்களில் மட்டும் தங்களைத் தள்ளிநின்றே நேர் கண்டதுண்டு. அதற்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
முன்பு காட்சி ஊடகத்துறையில் பண்புரிந்த நான் அதிலிருந்து விடுபட்டுத் தற்போது தமிழ்வெளி என்கிற பதிப்பகம் மற்றும் தமிழ்வெளி காலாண்டிதழ் ஆகியவை நடத்திவருகிறேன். தமிழ்வெளி வெளியீடாக இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்திருக்கிறது. தமிழ்வெளி இதழும் தற்போது ஐந்தாம் இதழ் வெளிவந்து பயணத்தைத் தொடர்கிறது.
தற்போது நூல் பதிப்பில் ப.சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’, ‘புயலிலே ஒரு தோணி’ ஆகிய இரு நாவல்களையும் ஒரே புத்தகமாக விலையடக்கப் பதிப்பாகக் கெட்டி அட்டையில் சிறந்த தாள் மற்றும் அச்சில் வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். அப்படி முன்பு இரண்டு நாவல்களையும் ‘தமிழினி’ வெளியிட்டிருக்கிறது. (தற்போது அந்த இரு நாவல்களும் சேர்ந்த புத்தகம் பதிப்பில் இல்லை)
தமிழினி வெளியீட்டில் தாங்கள் எழுதிய ‘வரலாற்று அபத்தத்தின் தரிசனம்’ ப.சிங்காரத்தின் நாவல் படைப்புகள் குறித்த கட்டுரை மிகவும் ஆய்வுபூர்வமானது. சுமார் இருபது பக்கங்களுக்கும் மேலாக நீளும் அந்தக் கட்டுரை இப்போது வேறு எங்கும் புதிய வாசகர்களுக்கு வாசிக்கக் கிடைப்பதாகத் தெரியவில்லை. அதனைத் தாங்கள் ஒப்புதல் தெரிவிக்கும்பேரில், தமிழ்வெளி புதிதாகக் கொண்டுவரவுள்ள பதிப்பில் சேர்க்க விருப்பமாகவுள்ளேன்.
இன்றைய புதிய வாசகர்கள் ப. சிங்காரத்தின் படைப்புகளை வாசித்து எதிர்கொள்ள மிகச்சரியான ஆற்றுப்படுத்தலாகத் தங்களின் அந்தக் கட்டுரை இருக்கிறது. அதனைத் தமிழ்வெளி பதிப்பில் சேர்த்துக்கொள்ளத் தங்களின் ஒப்புதல்வேண்டி காத்திருக்கிறேன்..
நன்றி,
கலாபன்
தமிழ்வெளி
தமிழ்வெளி @ TAMIZHVELI
அன்புள்ள கலாபன்,
ப.சிங்காரம் அவர்களின் நாவல்களை நீங்கள் தமிழில் கொண்டு வருவதறிந்து மகிழ்ச்சி. என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துகள். என் முன்னுரையை தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அதில் அது முதலில் பிரசுரமான ஆண்டு, இடம் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்.
ஏனென்றால் தமிழில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெரிய பிழை, குறிப்புகள் இல்லாமல் கட்டுரைகளும் நூல்களும் மறுஅச்சாவது. அவற்றை தவிர்க்கும்படி கோருகிறேன். அடுத்தடுத்த பதிப்புகளில் முந்தைய பதிப்புகள் பற்றிய தரவுகள் தேவை. ஒரு நூலின் ஏதேனும் ஒரு பதிப்பின் பிரதி கிடைத்தால்கூட நம்மால் அந்த நூலின் பதிப்பு வரலாற்றை அறிந்துகொள்ள முடியவேண்டும். தமிழில் பலநூல்களின் ஏதேனும் ஒரு பிரதியே கிடைக்கிறது.
பலபிரசுரங்கள் அவர்கள் வெளியிட்ட பதிப்பைப் பற்றிய செய்திகள் மட்டுமே அந்நூலில் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். பல பதிப்புகள் வெளிவந்த ஒருநூல் இன்னொரு பதிப்பகத்தால் வெளியிடப்படும்போது தங்களுடைய முதல்பதிப்பு என்று போட்டுக்கொள்கிறார்கள்.
உதாரணமாக ராஜ்கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம் 2018ல் அடையாளம் பதிப்பாக வெளிவந்துள்ளது. அட்டையில் நான் எழுதிய விமர்சனக்குறிப்பு உள்ளது. ஆனால் ‘அடையாளம் பதிப்பு 2018’ என்று மட்டுமே உள்ளது. நான் இன்று அந்நாவல் முதன்முதலில் எப்போது வெளியிடப்பட்டது என்று பார்ப்பதற்காக அதை எடுத்து பார்த்தேன். முதல்பதிப்பு பற்றிய தகவல் எங்கேயுமே இல்லை. முதல்பதிப்புக்கு ராஜ்கௌதமன் எழுதிய முன்னுரை இல்லை. வேறெந்த பதிப்பாளர் குறிப்பும் இல்லை. பின்னட்டைக்குறிப்புகூட இல்லை. அந்நாவல் மட்டுமே கைக்குக் கிடைக்கும் ஒருவர் இது ஒரு புதுநாவலின் முதல் பதிப்பு என எண்ண எல்லா வாய்ப்பும் உள்ளது.
பலசமயம் பதிப்பாளர்கள் இப்படிச் செய்வது நம் நூலகங்களில் பல ஆண்டுகள் பதிப்பில் இல்லாமல் இருந்து மறுபதிப்பாகும் நூல்களைக்கூட ‘மறுபதிப்பு வாங்கவேண்டாம்’ என்று சொல்லி மறுப்பதனாலாக இருக்கலாம். ஆனால் இது நூலை அறியமுயலும் வாசகனுக்கு மிகப்பெரிய இடர். குறைந்தது நூலுக்குள் ஒரு பதிப்புரையாகவாவது எல்லா செய்திகளையும் சேர்க்கலாம். அதை நூலகங்களில் வாசிக்கமாட்டார்கள்.
ப.சிங்காரத்தின் நாவலை மறுபதிப்பு செய்யும்போது அதன் பதிப்பு வரலாறு சுருக்கமாக அளிக்கப்படவேண்டும். அதை முதலில் பதிப்பித்தவர் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி. மிகநீண்ட இடைவெளிக்குப்பின் பதிப்பித்தவர் தமிழினி வசந்தகுமார். இச்செய்திகளும் ப.சிங்காரம் எழுதிய முன்னுரைகளும் முன்போ பின்போ அளிக்கப்பட்டிருக்கவேண்டும்.
ஜெ