பெருந்தொற்று வழங்கியுள்ள பொது முடக்க காலத்தில், ஊர்சுற்றல் மிகவும் குறைந்துள்ள நிலையில், பயண நூல்களை வாசித்தல் பெரும் ஆறுதலை வாசகர்களுக்கு அளிக்கக்கூடும்.
தேர்ந்த ரசனையுடன், தேர்வு செய்யப்பட்ட கோயில் நகரங்களுக்கு நண்பர்கள் சூழ ஜெயமோகன் சென்று வந்திருக்கிறார்.
ஈரோட்டில் இருந்து ஆந்திரம் வழியாக மத்திய பிரதேசத்தை கடந்து காசி வரை பயணித்து இருக்கிறார்கள். அப்படியே கயா வழியாக ஒரிசாவுக்குள் நுழைந்து விசாகப்பட்டினம் வந்து சென்னை திரும்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நகரங்களின் பெயர்கள் பற்றிய குறிப்புகளில் இருந்து துவங்கி அவர் அளித்திடும் தகவல்கள் மனதில் காட்சிகளாய் விரிய வல்லவை.
கருவூல பணத்தைக்கொண்டு விதிகளை மீறி வீரபத்திரசாமி கோயிலை நிர்மாணித்தார் விரூபண்ணா.
விஜயநகர மன்னருக்கு இத்தகவல் தெரிய வருகையில் விரூபண்ணாவிற்கு கொடியதொரு தண்டனை வழங்கப்படுகிறது.
அவரது கண்களை அவரே குத்தி குருடாக்கிக் கொள்ள கட்டளையிடப்பட்டது அவ்வாறே செய்து கொள்கிறார் விரூபண்ணா.
கோயிலின் அமைவிடம் லெபாக்ஷி என்று அறியப்படுகிறது. லோப+ அஷி குருட்டு விழி என்று பொருள் என்றவாறு விளக்குகிறார்ஜெ.
‘வரலாறு விசித்திரமான மீறல்களும் குரூரங்களும் தியாகங்களும் நிறைந்தது’ என்றவாறு நிறைவடைகிறது அக்கட்டுரை.
பயணத்தின் பெரும் அவசியத்தை விளக்கும் ஜெ.வின் வரிகள் கீழ்க்கண்டவை.
‘பயணத்தில் அனுபவங்களால் நினைவுப் பெட்டகம் நிறைந்து வழிகிறது. காட்சிகள் மனதில் நிறைந்து கண் மூடும் போதெல்லாம் இமைகளுக்குள் விரிகின்றன’
உடன் பயணித்த நபர் இரவில் உறங்குகையில் குறட்டை விட்டதையும் அழகாக எழுதியுள்ளார் ஜெ.
வெடியோசை போன்ற குறட்டை ஒலியை பொறுக்க முடியாமல் அவரை தொட்டிருக்கிறார், குறட்டை நின்றிருக்கிறது. மீண்டும் சிறிது நேரம் கழித்து முன்பு போலவே சத்தம், மூன்று முறை தொட்டிருக்கிறார், அதற்குள் ஜெ.வும் தூங்கி விட்டிருக்கிறார்.
மாமல்லபுரத்திற்கு சென்று யானை புடைப்புச் சிற்பங்களைக் கண்டு இதில் எத்தனை குழவிகள் செய்திருக்கலாம் என்றவாறு யோசிக்கும் கலைமனம்தான் இங்கு பெரும்பான்மையோருக்கு வாய்க்கப்பட்டிருக்கிறது என்ற சு.ராவின் கூற்றை ஒரு தருணத்தில் நினைவு கூர்கிறார்.
பயணங்களில், தங்குமிடங்களில் நேரிட்ட அனுபவங்களையும் தனக்கே உரிய மொழியில் நேர்த்தியாக எழுதிச் செல்கிறார்.
இந்தியா முழுவதும் அமைந்துள்ள (இந்து) கோயில்களைக் காண விரும்பும் வாசிப்பு பழக்கம் உள்ள அனைவரும் தவறவிடக்கூடாத நூல் இது.
சரவணன் சுப்ரமணியன்