அபர்ணா கார்த்திகேயன் – பாலசுப்ரமணியம் முத்துசாமி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

2021 ஜூலையில், `வரவிருக்கும் எழுத்து` என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள்.

அதன் சில முக்கிய புகுதிகளை இங்கே மீண்டும் எடுத்தாள விரும்புகிறேன்.

`புறவயமான தகவல்களை மட்டுமே முன்வைத்து, அவற்றை முன்வைக்கும் விதம் வழியாகவே ஒரு பிரபஞ்சதரிசனத்தை அளித்துவிட முடியும் என தமிழில் நிறுவியவர் தியடோர் பாஸ்கரன் அவர்கள். அவை புனைவுகள் அல்ல, ஆனால் மகத்தான புனைவுகள் அளிக்கும் அனுபவவிரிவை, மெய்த்தரிசனத்தை அளித்தவை. புனைவுxகட்டுரை, அந்தரங்க உண்மை x புறவய உண்மை, அனுபவம் x கற்பனை, படிமங்கள்xதகவல்கள் ஆகிய இருமைகளை அவை உடைத்தன`.

`இன்று பல அறிவியல் துறைகளில் புதிய அறிதல்கள் நிகழ்கின்றன. அவற்றை கூர்ந்தறியும் ஒருவர் தகவல்கள் வழியாக, கோட்பாடுகள் வழியாக, கற்பனைக்கும் உள்ளுணர்வுக்கும் இடமளித்து மேலே செல்வார் என்றால் புத்தம்புதிய இலக்கிய வகைமையாகிய அறிவியல் இலக்கியம் இங்கே நிலைகொள்ளும்`.

இதில் விலையனூர் ராமச்சந்திரன், ரிச்சர்ட் டாக்கின்ஸ் உள்ளிட்ட பலரைக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதில் இதழியலில் ஒரு பெயரைச் சேர்க்க விரும்புகிறேன். அவர் பெயர் பாலகும்மி சாய்நாத்.

சென்னை லயோலாவில் படித்த சாய்நாத், முதுநிலைக் கல்வியை தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முடித்தார்.. முனைவர் படிப்பைப் பாதியில் நிறுத்திய அவர், யூ.என்.ஐ (United News India) என்னும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர், ப்ளிட்ஸ் என்னும் பத்திரிக்கையில் பத்தாண்டுகள் பணியாற்றிய பின்னர், இந்து ஆங்கிலப் பத்திரிக்கையின், ஊரகச் செய்திப் பிரிவுக்கு ஆசிரியரானார்.

அந்தக் காலத்தில், இந்தியாவில் நிகழ்ந்த உழவர் தற்கொலைகளைப் பற்றியும், வேளாண்மையின் சீரழிவைப் பற்றியும் இவர் எழுதிய கட்டுரைகள், செய்திகள், இந்திய வேளாண் பிரச்சினையை ரத்தமும் சதையுமாக, ஆங்கில ஊடகத்தில் முன்னிறுத்தின.. இந்தியாவின், நிர்வாக அமைப்பு ஆங்கிலத்தில் பெட்டிஷன் எழுதினால்தான் என்னவென்று பார்க்கும்.

ஊரகப் பகுதிகளில் வறட்சி வரும் போதெல்லாம், ஒரு அரசு நிர்வாகத்தில் ஒரு சிறு குழு அதைக் குதூகலமாக வரவேற்கும். `வறட்சி`, என்னும் பெயரை முன் வைத்து, அதில் பணம் பார்க்க நினைக்கும் ஒரு குழுதான் அது.

சாய்நாத் எழுதிய, `எல்லோரும் ஒரு நல்ல வறட்சியை விரும்புகிறார்கள்`,  (Everyone loves a Good Drought) என்னும் அந்தப் புத்தகம், நமது அரசு நிர்வாக அமைப்பின் மனசாட்சியைக் கொஞ்சம் அசைத்தது. சில பத்தாண்டுகளாக, இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும், அபுனைவு நூல் இதுதான்.

இந்தப் புத்தகம், உலகில், நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. பெங்குயின் செவ்வியல் பதிப்பு உள்பட, இதுவரை 51 மறுபதிப்புகளைக் கண்டிருக்கிறது.

1996 ஆம் ஆண்டு வெளியான இந்தப் புத்தகம், அரசின் கொள்கைகளில் ஆழ்ந்த பாதிப்பைச் செலுத்தியிருக்கிறது. இவரது உழவர் தற்கொலைகள் பற்றிய கட்டுரைகள் மற்றும் வேளாண் சிக்கல்கள் பற்றிய கட்டுரைகள், அரசாங்கத்தை வெகுவாகப் பாதித்தன.  2004 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராகப் பதவியேற்ற மன்மோகன் சிங், சாய்நாத் எழுதியிருந்த உழவர்களை நேரில் சந்திக்கப் பயணித்தது மிக முக்கியமான நிகழ்வாகும். 2005 ஆம் ஆண்டு, மராத்திய மாநிலத்தில் நிலவிய ஊரக வேளாண் பிரச்சினையை சாய்நாத் எழுதியதைத் தொடர்ந்து, மன்மோகன் சிங் நேரில் நேரடியாக களத்தில் இறங்கி விசாரித்து அறிந்து கொண்டார். அதன் விலைவாக, அந்த ஆண்டு, ஆகஸ்டு 15 ஆம் தேதி, செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மன்மோகன் சிங், இதைப் பற்றிப் பேச நேர்ந்தது.

இந்தப் பின்ணணியில் உருவான, வேளாண் மறுமலர்ச்சிக்கான, எம்.எஸ்.ஸ்வாமிநாதன் கமிட்டி உருவாக்கத்தில் சாய்நாத்தின் கட்டுரைகளுக்கு மிக முக்கியமான பங்கு உள்ளது என்பதை அனைவரும் அறிவர்.

2007 ஆம் ஆண்டு, தன் பணிகளுக்காக, ரமான் மகசேசே விருது பெற்ற சாய்நாத், 2014 ஆம் ஆண்டு,  ஊரக மக்களுக்கான நினைவுக் களஞ்சியம் (People’s Archive of Rural India – PARI) என்னும் ஒரு இயக்கத்தைத் தொடங்கினார். (சாய்நாத்: இந்திய இதழியலின் மனசாட்சி | அருஞ்சொல் (arunchol.com))இந்த இயக்கத்தின் ஒரு முக்கியமான கண்ணிதான் அபர்ணா கார்த்திகேயன்.

தமிழ் முகநூல் கூறும் நல்லுலகில்,  நண்பர் அரவிந்தன் கன்னையனின் முகநூல் பக்கத்தில்தான் முதலில் அபர்ணா அவர்களை அறிமுகம் செய்து கொண்டேன். அதுவரை, அவரது நூல்களை (nine rupees an hour, no nonsense nandhini, woof)  இணையத்தில் அறிந்திருந்தேன்.

2014 ல், சாய்நாத், PARI என்னும் இயக்கத்தைத் தொடங்கும் போது, என்னிடம் தோழமை ஒருவர், இது பற்றிக் கேட்டார். சாய்நாத்தின் பங்களிப்பை அறிந்திருந்தும், இந்த இயக்கத்தின் உண்மையான சாத்தியங்களை உணராமல், எதிர்மறையாகப் பதிலிறுத்து விட்டேன்.  இன்றுவரை அச்சிறுமையை எண்ணிக் குமையாத நாளில்லை.

ஆங்கில நாளிதழ்களைப் படிப்பவர்கள், தொலைக்காட்சி ஊடகங்களைப் பார்ப்பவர்கள், வருடத்தில் சில நாட்கள் விசித்திரமான செய்திகளைக் கேட்டிருக்கலாம்.. `சரியான விலை கிடைக்க வில்லை என, தன் வேளாண் பொருளைத் தீ வைத்துக் கொளுத்திய உழவர்; கடன் தொல்லை தாங்காமல், தற்கொலை செய்து கொண்ட உழவர்கள்`, என.. இவை பிரச்சினைகளல்ல.. வேளாண் துறை சந்தித்து வரும் பெரும் பிரச்சினைகளின் அடையாளம் மட்டுமே.. இந்தப் பிரச்சினைகள், இந்தியாவின் 50% மக்களைப் பாதிப்பவை.. 65 கோடி மக்களின் உண்மையான பிரச்சினை.. ஆனாலும், நம் ஊடகங்கள், சுஷாந்த் சிங் ராஜ்புட் ஏன் தற்கொலை செய்து கொண்டார் அல்லது ஷாருக் கானின் மகனின் நண்பரிடம் உண்மையிலேயே போதைப் பொருள் இருந்ததா என்னும் இந்தியாவின் 0.25% மக்களின் பிரச்சினையை 24 மணிநேரமும் விவாதிப்பதைக் கண்டிருக்கலாம்,.

இதன் காரணம் மிக எளிமையானது. இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களின், உழவர்களின் பிரச்சினையைப் பேசுதல் கவர்ச்சிகரமானது அல்ல.. மேலும் அதை முன்னெடுக்கும் குறைந்த பட்ச அறம் கொள்ள, அவர்களின் பிரதிநிதிகள் ஊடகத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பதில்லை.

இந்த இடத்தில்தான், சாய்நாத்தின் PARI முக்கியமான பங்கை வகிக்கிறது.சாதாரண மனிதர்களின் போராட்டங்களை, அவர்களின் வரலாற்றை, ரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்துகிறது.

PARI இயக்கத்தின் செயல்பாட்டாளர்களுள் ஒருவர் அபர்ணா கார்த்திகேயன். ஏழ்மையை இரண்டு விதமாகப் பார்க்கலாம். சென்னையில் இருந்து ஒரு சுற்றுலா போல், ஊரகப் பகுதிகளுக்குச்  சென்று விட்டு சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, அங்கு நிலவும் பிரச்சினைகளுக்கு சில மேலோட்டமான கார்ணங்களை, தீர்வுகளை எழுதி விட்டுப் போகலாம். புத்திசாலியான ஒருவருக்கு 800 வார்த்தைகளைக் கண்டு பிடிப்பது கடினமல்ல..

ஆனால், அபர்ணாவின் அணுகுமுறை, தான் அறிந்து கொள்ளவிருக்கும் மனிதரின் வாழ்வை, தனக்குள் ஈர்த்துக் கொண்டு, அதன் முழுமையைப்பார்க்க விழைகிறது.படிக்கும் வாசகரை, அந்த வாழ்க்கைச் சூழலுக்கு அழைத்துச் சென்று, அங்கு நிலவும் ஒரு ஒத்திசைவுடன் பார்க்க அழைத்துச் செல்கிறது. நவீனத்துவத்தின் உச்சம் போன்ற, எளிமையான, அதே சமயத்தில் செறிவான ஆங்கில நடை அபர்ணாவுடையது.

பொங்கலன்று வெளியான கட்டுரையின் (In Tamil Nadu: Thiru’s turmeric triumph (ruralindiaonline.org)  ஒரு பத்தியை இங்கே தர விரும்புகிறேன்.

`At the foothills of the Sathyamangalam range in Erode, his farm is the very definition of pastoral: a row of purple hills, each wearing a cap of rain clouds, rise behind the emerald fields. His turmeric plants are tall, their broad leaves drenched in both a gentle rain and an October sun. Tailorbirds nest on the coconut trees that line the field; they chirp loudly, and race around the fronds. It’s so lovely, that they side-track from his struggles as a farmer. Later, he talks about it slowly, carefully, sitting in his pink-walled house, on a grey cement floor, his four-year-old daughter on his lap, her silver anklets making a musical, chal, chal, chal …`

படித்துக் கொண்டிருக்கும் போதே, ஹாரி பாட்டரின் கதை போல, இக்கட்டுரையின் கதாநாயகனான திருமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று, அவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து விடுகிறோம்.

அதன் பின்னர் கட்டுரையின் பேசு பொருளான `மஞ்சளுக்கு` வருகிறோம். மஞ்சள் என்பது நம் சமூகத்தில் வகிக்கும் பங்கை, மலைபடு கடாம் தொடங்கி, வீரபாண்டியக் கட்ட பொம்மன் வரையிலான தொடர்ச்சியை  அறிமுகம் செய்கிறார். ஈரோட்டில் பிறந்த எனக்கல்ல அது.. தில்லி கான் மார்க்கெட்டில், ஷாப்பிங் செய்யும் இந்தியத் திட்டக்குழுவில் இருக்கும் Public Policy Expertக்கானது அது.

அதன் பின்னர் மஞ்சள் என்னும் பணப்பயிரின்(!) பிரச்சினைகள் வருகின்றன.திருமூர்த்தி, கொங்குப் பகுதி வேளாண் அலகுகளின் படி, ஓரளவு வசதியான உழவர். பள்ளியிறுதியைத் தாண்டாத படிப்பு. 12 ஏக்கரில் வேளாண்மை செய்கிறார். நம்மாழ்வாரால் உந்தப்பட்டு, கரிம வேளாண்மை.

ஆனால், அத்தோடு நின்று விடுவதில்லை. தான் உற்பத்தி செய்யும் மஞ்சளை, மதிப்புக் கூட்டி, இடைத்தரகர்கள் இல்லாமல், நுகர்வோருக்கு நேரடியாக விற்கிறார். இதனால், அவர் ஓரளவு லாபத்துடன் இயங்குகிறார்.  இதுதான் அவரின் தனித்துவம்.  Innovative entrepreneur.

மஞ்சள் பயிரின் இன்றைய விலை கிலோ 75. அதை உரம் பூச்சி மருந்துகள் கொடுத்து உற்பத்தி செய்தாலும், லாபமில்லாத ஒன்றுதான் என்பதே மற்ற எல்லா உற்பத்தியாளர்களின் நிலை. அதை இன்னும் 2 உற்பத்தியாளர்களின் கதை மூலம் நிறுவுகிறார்.. ஆனால், திருமூர்த்தி, உள்ளூர் மஞ்சள் ரகத்தை உற்பத்தி செய்து, அதன் பிறகும் அதை எப்படி லாபகரமாக மாற்றினார் என்பதே கட்டுரையின் கருப்பொருள்

மஞ்சள் இந்தியாவின் முக்கியமான வணிகப்பயிர்களுள் ஒன்று.  மஞ்சள் வணிகச் சங்கிலியில் யாரோ லாபம் பார்க்கிறார்கள். இல்லாவிட்டால், இது தொடர்ந்து நடக்காது.  ஆனால், உற்பத்தியாளருக்கு ஏன் லாபம் கிடைக்கவில்லை என்பதைக் கட்டுரை கேட்கிறது. `கத்தியின்றி, ரத்தமின்றி, வணிக நிறுவனங்கள் உழவர்களைத் தோற்கடித்து விட்டன`, எனக் குமுறுகிறார், மஞ்சள் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் தெய்வ சிகாமணி

மஞ்சளைத் தாண்டி, திருமூர்த்தி, தன் தோட்டத்தில் இருக்கும் தென்னை மரங்களில் இருந்து கிடைக்கும் தேங்காய்களைப் பிழிந்து, கிடைக்கும் எண்ணையை வைத்து சோப்புகள் தயாரிக்கிறார். இது மதிப்புக்கூட்டலின் இன்னொரு படி. இந்தத் தொழிலில், அவருடைய பங்குதாரர் அவர் மனைவி கோமதி. `உழவர்கள் என்றுமே தாம் உற்பத்தி செய்யும் பொருட்களில், சிறந்த தயாரிப்பை உண்பதில்லை.. அது சந்தைக்குத்தான்.. விற்க முடியாத வாழைச் சீப்பு, உடைந்த சோப்புகள் என மிஞ்சியதே எங்களுக்கு`, என்கிறார் கோமதி.

வீட்டையும், இரு குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு, தொழிலையும் கவனித்து உதவும் கோமதி அதிகம் பேசுவதில்லை.. `She runs the house; she runs the show. And smiles more than she speaks`,  என மூன்று சொற்றொடர்களில், கோமதியின் ஆளுமையை, எம்.எஃப்.ஹூசேனின் கோட்டோவியம் போல நம் மனத்தில் நிறுத்தி விடுகிறார் அபர்ணா.

சமூக ஊடகங்களில் கீழ்மை மட்டுமே கொட்டிக் கிடக்கும் என்னும் பார்வையின் இன்னொரு பக்கம்தான் திருமூர்த்தியின் வெற்றி.. திருமூர்த்தி தனது முயற்சிகளை முகநூலில் புகைப்படங்களாக வெளியிட, அதைப் படித்த பலர் அவரைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.. கரிம வேளாண்மை வழி உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டினார்கள்.. அப்படித்தான், தான் உற்பத்தி செய்யும் பொருளை மதிப்புக் கூட்டி, நுகர்வோரிடம் நேரடியாகச் சேர்க்கும் ஒரு வணிக முறையைக் கண்டறிந்தார் திருமூர்த்தி.

இதைத் தாண்டி, இந்த நீள் கட்டுரை, மஞ்சள் என்னும் வேளாண் பொருள் உற்பத்தி, விற்பனை முறைகள், அங்கே விற்பனை விலை மீது 1% கூட அதிகாரமில்லாத கையறு நிலை, ஏற்றுமதி, இறக்குமதி என எல்லாப் புள்ளிகளையும் தொட்டுச் செல்கிறது

இதைப் படித்து முடிப்பவருக்கு, மஞ்சள் என்னும் வேளாண் பொருளின் வரலாறு, வணிகம், துயரம் என்னும் ஒரு முழுமையான பார்வை கிடைக்கிறது. ஆனாலும், கட்டுரை முழுதும் எதிர்பாராத பெரும் சக்தியை எதிர்த்து மனிதன் செய்யும் விடா முயற்சி என்னும் நேர்மறைத்தன்மை விரவிக் கிடக்கிறது

அபர்ணாவின் முந்தைய கட்டுரையான, ` தூத்துக்குடி உப்பளத்தின் ராணி`, The Rani of Thoothukudi’s salt pans (ruralindiaonline.org)  என்னும் கட்டுரையும் இது போன்றதேயாகும். உப்புத் தொழிலின் அடிமட்டத்தில் இருக்கும் தொழிலாளியின் பார்வையில் இருந்து எழும்பி, உயரே சென்று, அந்தத் தொழிலைப் பற்றிய ஒரு பெரும் பொருளாதாரச் சித்திரத்தை வார்த்தெடுத்து நம் முன்னே ரத்தமும் சதையுமாக முன் வைக்கிறது. கட்டுரை படித்து முடித்த பின்னர், ஜோ.டி.குருஸ் எழுதிய `ஆழி சூழ் உலகு`, நாவலைப் படித்த உணர்வு வந்தது

அபர்ணாவின் கட்டுரைகளில் முக்கியப் பங்கு வகிப்பது, அபர்ணாவின் தோழரும்,புகைப்படக்கலைஞருமான பழனிக்குமாரின் கவித்துவமிக்புகைப்படங்கள். அபர்ணாவின் கட்டுரையின் இடைவெளிகளை,  அவை உணர்வுப் பூர்வமாக நிறைக்கின்றன. மதுரை நகரின் மிக ஏழ்மையான குடும்பத்திலிருந்து மேலெழுந்து வந்த பழனிக்குமார், தன் அம்மாவைப் பற்றி எழுதிய கட்டுரையும் மிகவும் அருமையான ஒன்று (Life of my mother – in the light of a lamppost (ruralindiaonline.org) )

`Let them Eat Rice’, என்னும் தலைப்பில், PARI யின் இந்தக் கட்டுரைத் தொடரில் மேலும் பல கட்டுரைகளை அபர்ணா எழுதவிருக்கிறார்.  அஸீம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகம் இந்த முயற்சிக்கான பொருளுதவிகளைச் செய்கிறது.

நாம் கொண்டாட வேண்டிய ஒரு முக்கியமான எழுத்தாளர் அபர்ணா

அன்புடன்

பாலசுப்ரமணியம் முத்துசாமி.

முந்தைய கட்டுரைஇலக்கியம் பாடத்தில், கடிதம்
அடுத்த கட்டுரைகாலம்!