அயோத்திதாசர் மேலும்…

அயோத்திதாசர் இரு கேள்விகள்

அன்புள்ள ஜெ

அயோத்திதாசர் பற்றிய ஆய்வுகளைச் சார்ந்து நீங்கள் எழுதிய குறிப்பு மிகவும் உதவிகரமானது. இதில் அதிதீவிர தலித் அரசியல்பேசுபவர்கள், அவர்களின் அதிதீவிர எதிர்ப்பாளர்கள் இருசாராரின் வாதங்களையும் கடந்து உண்மையில் நிகழ்வது என்ன என்று பார்க்க அது உதவியது.

என்ன சிக்கல் என்றால் தலித் தரப்பில் சிலர் ஆய்வு முறைமைகளைப் பற்றி ஏதும் அறியாமல் ஓர் அரசியல் அல்லது ஆன்மிகத்தலைவரைப் பின்பற்றுவதுபோல அயோத்திதாசர் சொன்னவை எல்லாம் அப்படியே சரித்திர உண்மைகள் என்று பொதுவெளியில் பேசுகிறார்கள். தொடைதட்டி அறைகூவுகிறார்கள். அதைக்கேட்டு  அயோத்திதாசரின் கூற்றுக்களை ஏற்கனவே உள்ள பொதுவான சரித்திர வரலாற்றுடன் ஒப்பிட்டு அவர் உளறுகிறார் என மறுதரப்பினர் கூறுகிறார்கள்.

அயோத்திதாசர் எழுதிய நூல்களை இன்றைய ஆய்வுமுறைமைகளைக் கொண்டு வரலாற்றாய்வுக்கு, குறிப்பாக நுண்வரலாற்றாய்வுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அவற்றை அப்படியே தரவுகளாக எடுத்துக் கொள்வதில்லை. மூன்று வகைகளில் அவற்றை ஆய்வுப்பொருளாக கையாள்கிறார்கள் என்கிறீர்கள்.

இங்கே பல வாய்மொழி வரலாறுகள் ‘அப்படியே’ வரலாறாக ஆக்கப்பட்டுள்ளன. பொன்னர் சங்கர் கதை ஓர் உதாரணம். அழகுமுத்துக்கோன், சின்னமலை போன்று ஒவ்வொரு பகுதிக்கும் இடைநிலைச் சாதிக்குரிய வீரர்வடிவங்கள் வெறும் வாய்மொழி வரலாற்றில் இருந்து மட்டுமே உருவாக்கப்பட்டு, எந்த ஆதாரங்களும் இல்லாமல் அப்படியே வரலாறாக ஆக்கப்பட்டு மறுக்கமுடியாதபடி நிலைநிறுத்தப்பட்டுவிட்டன. ஆதாரங்கள் எங்கே என அவற்றைப்பற்றி எவரும் கேட்பதில்லை. இதுவரை அந்தந்தச் சாதியைச் சேர்ந்த எவரும் ஒரு சின்ன கேள்விகூட கேட்டு நான் பார்த்ததில்லை. இனிமேலாவது எவராவது பேசிப்பார்க்கட்டுமே.

ஆனால் அயோத்திதாசரின் நூல்களை வரலாற்றாய்வுக்கான மூலப்பொருளாக எடுத்துக்கொண்டாலே இந்த அளவுக்கு கொதிப்பு உருவாகிறது. இவ்வளவுக்கும் அயோத்திதாசரை மிக விரிவாக மறுப்பவர்களும் தலித் தரப்பில் உள்ளனர். அயோத்திதாசரின் கூற்றுக்களை ஒருவகையான மாற்றுத்தரப்பு என்றும் வேறொருவகை நெரேஷன் என்றும் மட்டுமே எடுத்துக்கொள்கின்றன. ஆனால் அயோத்திதாசர் என்பது ஒரு மோசடி என்னும் அளவுக்கு பேச்சு நீள்கிறது. இதை எப்படி புரிந்துகொள்வது?

என் கேள்வி என்பது இதுதான். அயோத்திதாசர் கூறிய இந்திரர் தேச சரித்திரம் போன்றவற்றை வரலாற்றாய்வுக்கான மூலமாக கருதலாம் என்றால் இன்று ஆதாம் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்றெல்லாம் சிலர் எழுதிக்குவிக்கும் எழுத்துக்களை அவ்வாறு வரலாற்று மூலமாக கொள்ள முடியுமா? இது என் கேள்வி அல்ல. எனக்கு வந்துசேர்ந்த கேள்வி.

அன்புடன்

பரிதி

அன்புள்ள பரிதி,

வாய்மொழி வரலாறுகள் ‘அப்படியே’ வரலாறு ஆவதில்லை. வரலாறு என்பது தொல்லியல் சான்றுகள், நூல்சான்றுகள் போன்ற முதன்மைச் சான்றுகளால் புறவயமாக உருவாக்கப்படவேண்டியது. சான்றுகள் தர்க்கபூர்வமாக ஒழுங்கமையவேண்டும். ஒரு வரலாறு இன்னொரு வரலாற்றுடன் ஒத்திசையவும் வேண்டும். வாய்மொழி வரலாறுகள் இரண்டாம்நிலைச் சான்றுகளே. அவற்றை கருத்தில்கொள்ள வரலாற்றுக்கு முறைமைகள் உள்ளன. சென்ற ஐம்பதாண்டுகளில் உருவாகி வந்தவை அவை. அவற்றை அப்படியே எடுத்துக்கொண்டு பேசுபவர்கள் எல்லா தரப்பிலும் உண்டு. அவர்களிடம் எனக்கு விவாதமே இல்லை.

வரலாறு என்பது தரவுகள் சார்ந்தே புறவயமாக நிலைகொள்ள முடியும். ஆனால் வரலாற்றை எழுதும்போது நாம் கொண்டிருக்கும் பார்வைக்கோணமும் முக்கியமானது. ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலவும் கொள்கைகள், நம்பிக்கைகளுக்கு ஏற்ப அந்த பார்வைக்கோணம் அமைகிறது. அவற்றை நாம் அவ்வப்போது மறுபரிசீலனை செய்தாகவேண்டும். நாம் நம் பொதுவரலாற்றை நாம் எழுதும்போது மையமாகச் செயல்பட்ட, ஓங்கிச்செயல்பட்ட விசைகளை மட்டுமே கருத்தில்கொண்டோம். அரசர்களின் வெற்றிகள் சார்ந்தும், குடிகளின் முதன்மை சார்ந்தும் வரலாறு எழுதப்பட்டது. இன்று மறைக்கப்பட்ட, தோற்கடிக்கப்பட்ட, மறைந்துவிட்ட வரலாறுகளையும் சேர்த்து வரலாற்றை எழுதவேண்டும் என்னும் கோணம் உருவாகியிருக்கிறது. அந்நோக்கமே நுண்வரலாறு என்னும் கருத்தை உருவாக்கியது. நுண்வரலாறு என்பது வட்டாரத்தன்மை கொண்டது, சிறு அலகுகளையும் கருத்தில்கொண்டு எழுதப்படுவது.

அவ்வாறு நுண்வரலாறுகள் எழுதப்படும்போது தொல்லியல், நூல் சான்றுகள் கிடைக்காமல் இருக்கலாம். அல்லது கிடைத்தவற்றை விளங்கிக்கொள்ள முடியாமலிருக்கலாம். பெருவரலாற்றை ஒட்டியே அமைந்துள்ள நம் பார்வையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கலாம். அதற்குத்தான் வாய்மொழி வரலாறு, நாட்டார் வரலாறு போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை பயன்படுத்துவது பற்றி சென்ற ஐம்பதாண்டுகளில் நீண்ட விவாதங்கள் வழியாக வரலாற்றாய்வுத்துறையில் ஒரு பொதுப்புரிதலும் அதற்கான முறைமைகளும் உருவாகியிருக்கின்றன. அவை ‘அப்படியே’ எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அவற்றை கருத்தில்கொள்ள மூன்று வழிகள் உள்ளன என்பதை முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டேன்.

அவ்வாறன்றி வாய்மொழி வரலாறுகளை அவ்வாறே வரலாறாகப் புனைந்துகொள்வதும் அவற்றை மறுக்கவே முடியாதபடி சாதிய வன்முறையால் நிறுவுவதும் இங்கே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. நீங்கள் சொல்வதுபோல அவை விவாதத்திற்கே வருவதில்லை என்பது வருந்தத் தக்க உண்மை. கல்வித்துறைச் சூழலில் கூட அவை விவாதிக்கப்படுவதோ மேலதிக ஆய்வுக்கு ஆளாக்கப்படுவதோ நடப்பதில்லை. ஏனென்றால் அதுவே இங்குள்ள மெய்யான அதிகாரம். இங்குள்ள எந்த அறிவுஜீவியும் அவற்றை பற்றி பொதுவெளியில் பேசுவதுமில்லை. இதுவரை எவரும் பேசியதில்லை, இனிமேலும் பேசமுடியாது.

அயோத்திதாசர் கூறியவை ஒரு மாற்றுவரலாறு என கொள்ளத்தக்கவை. ஏனென்றால் அவர் சுயமாகப் புனைந்துசொல்லவில்லை. அவை சொன்னவை அவருக்கு முன்னரே அபிதானசிந்தாமணி போன்ற நூல்களில் பதிவுசெய்யப்பட்டவைதான். இன்று மேலும் பலநூல்கள் கிடைக்கின்றன. அயோத்திதாசர் அவற்றை மறுஆக்கம் செய்திருக்கிறார். சமகால மொழியில் பதிவுசெய்திருக்கிறார். ஆகவே அவை முக்கியமானவை. ஒருவர் தனக்கு தோன்றியபடி புனைவதை வாய்மொழி வரலாறாகக் கருத்தில் கொள்வதில்லை. உதாரணமாக ஒருவர் எகிப்திய பிரமிடுகள் நாடார்சாதியால் கட்டப்பட்டவை என்றால் அதை ஆய்வாளர் கருத்தில்கொள்வதில்லை. ஆனால் வெங்கலராஜன் கதை ஆய்வுக்கு உரிய பொருள் என்றே கொள்ளப்படும். வெங்கலராஜன் கதையும் பலவகையான மாயமந்திரங்கள் கொண்டதுதான்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கே நவீன அறிவியக்கம் உருவானது. நவீன வரலாறு எழுதப்பட்டது. அப்போது இங்கே கருத்தில்கொள்ளப்பட்டவை இங்கே மையப்போக்கில் இருந்த தொல்லியல் தரவுகளும், நூல்தரவுகளும், நம்பிக்கைகளும், வாழ்க்கைமுறைகளும்தான்.அவை அன்று அதிகாரத்துடன் இருந்த உயர்குடியினரிடம் பயிலப்பட்டவை.அவற்றைக் கொண்டே அன்றைய வரலாறு எழுதப்பட்டது. நூறாண்டுகளுக்குப் பின்னரே அடித்தளச் சாதிகளிடம் இருந்த வரலாறுகள், புராணங்கள், ஆசாரங்கள் அச்சில் தொகுக்கப்பட்டு வெளியாயின. அவை அதற்குப்பின்னர் நீண்ட விவாதத்தின் விளைவான புரிதல் உருவாகியபின்னரே வரலாற்றாய்வுக்கான தரவுகளாகக் கொள்ளப்பட்டன. அவைதான் இன்று நுண்வரலாற்றாய்வுக்கான அடிப்படைகளாகக் கருதப்படுகின்றன.

உதாரணமாக, குமரிமாவட்டம் சார்ந்த செவ்வியல்நூல்கள் தொடர்ச்சியாக அச்சில் வெளியானது 1880கள் முதல் நடைபெற்றது. கொட்டாரத்தில் பாச்சு மூத்தது எழுதிய சுசீந்திரம் தலபுராணம் முதல் குறைந்தது நூறு நூல்கள் அவ்வாறு அச்சேறின. அவற்றை ஒட்டியே குமரிமாவட்ட வரலாறு எழுதப்பட்டது. ஆனால் ஆறுமுகப்பெருமாள் நாடார் என்னும் மாபெரும் ஆய்வாளர் 1950 முதல் குமரிமாவட்ட நாடார்களின் வாய்மொழிக் கதைகளை அச்சிலேற்றினார். வெங்கலராஜன் கதை, உலகுடையபெருமாள் கதை போன்ற வாய்மொழிக் காவியங்கள் உட்பட ஏறத்தாழ ஐம்பது நூல்கள்.

அவற்றை கருத்தில்கொண்டு குமரிமாவட்ட வரலாற்றை மீண்டும் எழுதவேண்டிய தேவை உருவானது. தே.வே.ஜெகதீசன் வெங்கலராஜன் கதையை ஒட்டி எழுதிய ‘பத்ரகாளியின் புத்திரர்கள்’ என்னும் ஆய்வுநூல் அந்த தரவு எப்படி ஆய்வுப்பொருளாகக் கொள்ளப்படும், எப்படி அதனடிப்படையில் மறுவரலாறு எழுதப்படும் என்பதற்கான சான்று [தேவை என்றால் ஒரு குறிப்பு, தெ.வெ.ஜெகதீசன் நாடார் அல்ல].

செவ்வியல் நூல்களிலேயே பரதவகுலத்து அரசன் ஒருவனை புகழ்ந்து பாடப்பட்ட செண்பகராமன் பள்ளு என்னும் நூல் 1942ல்தான் எம்.ஜே.காலிங்கராயர் என்பவரால் அச்சேற்றப்பட்டது. அது குமரிமாவட்ட நுண்வரலாற்றெழுத்தை இன்னொரு கோணத்தில் நகரச்செய்தது. இன்னும் இத்தகைய நூல்கள், வாய்மொழிப் படைப்புக்கள், தொன்மங்கள் வந்துகொண்டே இருக்கும். அவை வரலாற்றை மாற்றி எழுதவைக்கும்.

தொன்மங்களை, புராணங்களை, வாய்மொழிக்கதைகளை ‘மூடநம்பிக்கை’ என்றும் ‘பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை’ என்றும் பார்க்கும் பார்வை ஆய்வுத்துறையில் காலாவதியாகி அரைநூற்றாண்டு ஆகிறது. அதை நம் பொதுவெளியில் திரும்பத் திரும்பச் சொல்லவேண்டியிருக்கிறது. அவை பழைய காலத்தில் வரலாற்றை உருவகங்களாகவும் படிமங்களாகவும் நம்பிக்கைகளாகவும் முன்வைத்த ஒருவகையான கூறுமுறைகள், வெளிப்பாட்டு வடிவங்கள். அவற்றுக்குள் இருந்து வரலாற்றை எப்படி எடுப்பது, எங்கே அவற்றை பொருத்திக்கொள்வது என்பதற்குத்தான் கிளாட் லெவிஸ்ட்ராஸ் முதல் ஆலன் டண்டிஸ் வரை வழிகாட்டியிருக்கிறார்கள். அவற்றை வரலாற்றில் பயன்படுத்தும் வழிகள் மூன்று. ஏற்கனவே குறிப்பிட்டபடி

1. அவை வரலாற்றெழுத்தில் மேலதிகமாக எவற்றை நிரப்புகின்றன என்று பார்ப்பது

2. அவை எவற்றை மறுத்து நிற்கின்றன என்று பார்ப்பது

3. அவை ஒரு ஊடுபாவின் சரடுகள். அந்த ஊடுபாவை ஒரு பெரிய நெசவாக அணுகுவது.

இந்த வகையான மாற்றுப்போக்குகள் தொடர்ச்சியாக வரலாற்றாய்வுக்குள் நிகழ்கின்றன. நான் அவற்றை பொதுவாசகர்களுக்காக எழுதிக்கொண்டே இருக்கிறேன். இவை ஒர் அறிவியக்கமாக நடைபெறுகின்றன. நம் எளிய பொதுப்புத்தியால் அவற்றின்மேல் தீர்ப்பெழுதலாகாது என்று மட்டுமே நான் சொல்ல விரும்புகிறேன்.

ஜெ

வெண்கலவாசலின் கதை 

நகர்நடுவே நடுக்காடு

உலகுடைய பெருமாள் கதை

முந்தைய கட்டுரைசமந்தாவின் நடனம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுமரித்துறைவி – அய்யனார் விஸ்வநாத்