காதுகள் – சொற்பொருட் பேதத்தின் விளையாட்டுக் களம்- அந்தியூர் மணி

காதுகள் வாங்க

அன்புள்ள ஆசிரியருக்கு

எம் வி வெங்கட்ராம் அவர்கள் எழுதிய காதுகள் நாவலைப் படிக்கும் வாய்ப்பு அமைந்தது.வழக்கமாக அந்நாவலை எம் வி வியின் வாழ்க்கை வரலாற்று நாவல் எனச் சிலர் எடுத்துக் கொள்கின்றனர்.முன்னுரை எழுதிய பிரபஞ்சன் கோட்பாட்டு அடிப்படையில் இது மேஜிகல் ரியலிச நாவல் என்றும் ,உள்ளிருக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில் ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்றும் கொள்ளலாம் என்று கூறுகிறார்.நீங்கள் இதைக் குறித்து எழுதியது.

\\அன்று எம்.வி.வெங்கட்ராம்டம் முருகன் காதில் பேசியதும் நாவலை நேரடியாக முருகனே சொன்னதுமெல்லாம் கேலிக்குரியதாகவே கருதப்பட்டது. அது ஸ்கிசோபிர்னியா என்றும் அதை அறியாமல் அப்பாவித்தனமாக எழுதிவிட்டார் என்றும் சொன்னார்கள். அந்த ’அப்பாவி’த்தனமே அதன் அழகு என எனக்குப் பட்டது. ஸ்கிஸோபிர்னியாவும் முருகனைப்போல ஓர் உருவகம்தான். நூறாண்டுகளில் அது ஒருவேளை ஒரு தொன்மமாக, குறியீடாக மாறிவிடக்கூடும். அறிவியல் ஒருபோதும் இலக்கியத்திற்கான அளவுகோல் அல்ல, அது இலக்கியத்திற்கு மதத்தைப்போல இன்னொரு குறியீட்டுவெளி மட்டுமே என்று நான் எம்.வி.வெங்கட்ராமுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

செதுக்குகலையும் வெறியாட்டும் | எழுத்தாளர் ஜெயமோகன் ஆனால் இந்நாவல் எனக்குள் விரிந்தது வேறு விதத்தில்.ஆகவே இக்கடிதம். [செதுக்கு கலையும் வெறியாட்டும்]

தன் குழந்தை நோயுடன் போராடிக்கொண்டிருக்கும்போது இறையருளுக்காக மகாலிங்கம் வேதநாராயணப்பெருமாள் கோவிலுக்குச் செல்வதற்கு முயல்வதே கதையின் ஆரம்பம்.புறத்தூய்மையுடன் இருந்தாலும் அகத்தூய்மை இல்லாமல் எவ்வாறு கோவிலுக்குள் நுழைவது எனும் மனப்போராட்டம் மகாலிங்கத்துக்கு.மகாலிங்கம் வெறுத்து ஒதுக்கும் ஆபாசமான சொற்கள் காதில் ஒலித்துச் கொண்டே இருக்கிறது.அது எப்போது எப்படி உருவானது?.அதனால் மகாலிங்கம் அடைந்த துயர்கள் என்ன என நாவல் விரிகிறது.

சூழலின் காரணமாக சிறுவயதில் பக்தனாக இருந்த மகாலிங்கத்துக்கு தனித் திறன் எதுவும் இல்லாமலேயே நன்றாக அமைந்த தொழில் அமைகிறது. அதனால் பக்தி அதிகமாகிறது.முருகனைத் தன் குருவாக எண்ணி வழிபட ஆரம்பிக்கிறான்.முதலில் கனவில் அவனுக்கு குரு காட்சி தருகிறார்.பின் அவன் கண்ட கனவுகள் பலிக்க ஆரம்பிக்கின்றன. அதனால் நடக்கப்போவதை முன்கூட்டியே அறியும் நிலை தனக்கு ஏற்பட்டிருக்கிறதாக நினைக்கிறான்.அதே சமயம் கொஞ்சம் கொஞ்சமாக காதுகளில் கேட்கும்திறனில் குறைவு ஏற்படுகிறது. பின்னர் ஒருநாள் தனக்குள் குரலாக முருகன் பேசுவதைக் கேட்கிறான்.பின்னர் தொடர்ந்த பேச்சுககள் கேட்பதால் அது கடவுளா எனச் சந்தேகம் கொள்கிறான்.அதிலிருந்து அவனுடைய காதுகள் ஆபாசமான சொற்களைப் பேசுகின்றன.அதற்கான காரணம் காளி என எண்ணுகிறான்.தீர்வினைத் தேடி ஜோதிடர் சித்தர் மரபினர் ஆன்மீகப் பெரியவர்கள் எனப் பலரிடம் அலைகிறான். மகாலிங்கத்தின் இடருக்கான தீர்வினை அவர்கள் யாராலும் கொடுக்க முடிவதில்லை.இதற்கிடையே எவ்வாறு வெற்றி பெற்றதென மகாலிங்கத்துக்கே தெரியாத தொழில் எவ்வாறு இழப்பு ஏற்படுகிறது என்று தெரியாமலேயே நொடிந்து போகிறது.குடும்பம் வறுமையைச் சந்திக்கிறது.புறத்தில் வறுமையின் அழுத்தமிருக்க,அகத்தில் காதுகள் ஒலிக்கும் நாராசமான வார்த்தைகள் இருக்க,மனநிலை எப்போது வேண்டுமானாலும் தான் தவறி பைத்தியமாக அலைவோம் என்று தோன்றுகிறது மகாலிங்கத்துக்கு.ஆனால் அவ்வாறெல்லாம் நிகழாமல் அவனுக்குள் குருவாக இருக்கும் முருகன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையும் மகாலிங்கத்துக்கு இருக்கிறது. தான் செய்த தொழிலையே அடுத்தவரின் துணையுடன் செய்யும் வாய்ப்பு கூட வருகிறது.அதுவும் வீட்டின் சூழலாலும் மகாலிங்கத்தின் பிடிவாதத்தாலும் தட்டிப் போகிறது.

முதலில் ஆபாசமான சொற்களைப் பேச ஆரம்பித்த காதுகள் அடுத்து அவனுக்கு ஏற்படப்போகும் இழப்புகளையும் சேர்த்துப் பேச ஆரம்பிக்கின்றன. தொடர்ந்த அப்பேச்சுக்களால் ஏற்பட்ட அழுத்தங்களால் மகாலிங்கம் பெரும்துயர் அடைகிறான்.அந்நிலையிலும் காமம் அவனுள் கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது.கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை நாடுகிறான்.பிரசவத்தின் போது குழந்தை இறந்தே பிறக்கிறது.அதனால் மகாலிங்கமே வெட்டியானாக மாறும் அளவிற்கு வீட்டின் பொருளாதாரச் சூழல் இருக்கிறது.வறுமையும் காதுகளின் ஓயாத பேச்சிற்கும் இடையில் மகாலிங்கம் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும்போதில் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது.அதற்காக வேண்டிக் கொள்ளக் கோவிலுக்குப் போவதுதான் ஆரம்பக்காட்சி. நீண்ட மனப் போராட்டத்திற்குப் பின் கோவிலுக்குச் சென்று பிற தெய்வங்களைத் தரிசித்துவிட்டு அவனின் குருவான முருகனின் முன் சென்று தன் துயரினை வைக்கிறான். மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை அழைக்கிறான்.மருத்துவரோ மகாலிங்கத்தின் மகளைப் பரிசோதித்து பார்த்துவிட்டதாகவும் அவள் நலமாக இருப்பதாகவும் கூறுகிறார்.காதுகளோ வேறொன்றினை உரைக்கின்றன.வீடு சென்று பார்க்கும்போது மகள் நலமாக இருக்கிறாள்.அனைத்திலிருந்தும் தன்னை தன் குரு காப்பார் என்ற மகாலிங்கத்தின் நம்பிக்கையுடன் இந்நாவல் நிறைவுறுகிறது.

இந்நாவல் சொல்லப்படுவதே மகாலிங்கத்திற்குள் இருக்கும் முருகனின் குரலில் தான்.அதைத்தான் இங்கு பலரும் ஏற்கவில்லை.அதனை நேரடியாக அவ்வாறு பார்க்காது படிமமாக எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறியது அருமையான கருத்து.ஆனால் என் பார்வையில் அந்த முருகனின் குரல் மகாலிங்கத்திற்குள் ஒலித்தது அப்பாவித்தனமாக அல்ல அவனுடைய சாதகத்தால். இந்தியாவில் இருக்கும் பல்வேறு மரபுகளில் ஒன்றான சித்த மரபில் அறிமுகம் இருக்கும் நபருக்கு எந்தச் சாதகனும் சரியான மந்திரத்தினை சாதகம் செய்து அதில் சித்தி அடைந்தால் அந்த மந்திரத்திற்கான தெய்வம் பேசும் என்பது சாதாரணமான தகவல்.

எடுத்துக்காட்டாக தன்னை நாடிவரும் நபர் எதற்காக வருகிறார் என்பதை அறிந்து சொல்லும் தேவதைக்கான மந்திரம் புலிப்பாணி சித்தர் ஜாலத்திரட்டு நூலில் உள்ளது.அது பலிதமாகச் செய்ய வேண்டிய காரியங்களும் அந்நூலிலேயே இருக்கிறது.அம்மந்திரம் பலிதமானால் வருபவர் எந்நோக்கத்தோடு வருகிறார் என்பதைச் சாதகனுக்கு அவன் வழிபட்ட தேவதை கூறும்.இது எவ்வாறு நடக்கிறது என்பதையெல்லாம் தர்க்கரீதியாக நிறுவவே முடியாது.எவ்வித நேர்ப்பொருளும் அற்ற சில ஓசைக்குறிப்புகள் இந்த விளைவினைத் தரும் என்பதே அபத்தமாகக்கூட சிலருக்குத் தோன்றக்கூடும்.ஆனால் அப்படியொன்று சித்த மரபில் இருக்கிறது என்பது உண்மை.

இந்த இடத்தில் பிரிவாளுமை மனநோயான ஸ்கீசோபெர்னியாவுக்கும் இந்தச் சாதகனுக்கும் இருக்கும் வித்தியாசத்தினைச் சொல்வது அவசியம்.இயல்பான மனிதனுக்கு இருக்கும் நனவு மன ஓட்டம் ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் தெளிவு கலைந்து மன ஓட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள் காதில் குரலாக கண்ணில் தோற்றப்போலிகளாக உருவாவதே பிரிவாளுமை மனநோய்.அத்தகைய நோயாளிகள் தொடர்ந்து முழு விழிப்புடன் எச்செயலையும் செய்ய முடியாது.

அதேசமயம் மந்திரத்தினை உருவேற்றும் சாதகன் இயல்பான மனிதனைவிட எப்போதும் ஒருபடி மேல்தான்.ஏனென்றால் சாதாரண மனிதனுக்கு இல்லாத மன உறுதியும் விடாப்பிடியாகச் செய்யும் தொடர்ந்த வழிபாடும் இல்லாமல் எந்த மந்திரமும் சித்தியாகாது.அப்படி அதை அடைந்த சாதகனும் பிரிவாளுமை நோயாளியும் ஒன்றென்று எண்ணுவது தவறான புரிதல்.

இந்தியர்களுக்கு இருக்கும் மருத்துவ அறிவினைப் பற்றி ஈரோடு கிருஷ்ணன் கிண்டலாகச் சொல்வதுண்டு.நோய்க் கூறுகளைப் பற்றிப் பேச்சு வாக்கில் சொன்னால் போதும். நோயையும் அதற்கான மருந்தையும் பெரும்பாலான நபர்கள் பரிந்துரைப்பதைப் பார்த்து இந் நாடே மருத்துவர்களின் நாடு என்றே முடிவெடுத்துவிடலாம் என்று கிண்டலடிப்பார்.அதுதான் இந்த விவகாரத்திலும் நடந்திருக்கிறது.அன்றைய விமர்சகர்களின் மனநலத்துறை பற்றிய அறிவு இது பிரிவாளுமை மனநோய் என முடிவெடுக்க வைத்திருக்கிறது.

அப்படியென்றால் மந்திரத்தின் மூலம் என்ன மனதில் என்ன நிகழுகிறது என்பதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று பார்க்கும்போது சித்தர்கள் கூறியுள்ள மந்திரங்களாகச் சொல்லப்படுபவைகளில் சிலவற்றைப் படித்திருக்கிறேன்.அவர்களைப் பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் மந்திரம் உண்டு.தேவைப்படும் மூலிகையின் ஒற்றை இலையைப் பறிப்பதாயினும் அதற்கான நேரமும் மந்திரமும் பூசையும் உண்டு. அவற்றைக் கவனிக்கும்போது எத்தெய்வத்திற்கான அல்லது எந்நோக்கத்திற்கான மந்திரம் என்பதற்கான அறிவுறுத்தல் இருக்கும். அதன் கூடவே எத்தகைய பொருளையும் கொடுக்காத ஓசை மட்டுமேயான ஒலிக்குறிப்புகள் கட்டாயம் இடம் பெறும்.ஏன் அவை இடம் பெறுகின்றன.பீஜங்களான அவற்றிற்கான பொருள் என்ன அவற்றின் செயல்படும் முறை என்ன என்பதெல்லாம் அந்த மரபை ஆழ்ந்து கற்றவர்களே உரைக்க முடியும்.

தொல்காப்பியரின் கூற்றான” நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளரந்த மறை மொழிதானே மந்திரம் என்ப” என்பதன்படி நோக்கும்போது மொழி செயல்படும் விதத்தை எவ்வாறோ அறிந்த நபர்களே அதை உருவாக்கி இருக்க முடியும் என்று உணர முடியும்.வெறுமனே சில ஒலிக்குறிப்புகளை ஆரம்பத்தில் கொண்டிருந்த மனித இனம் இன்று மாபெரும் சொற்பெருக்கினை அச்சிலவற்றினைக் கொண்டே உருவாக்கிக் கொண்டிருக்கிறது.விலங்கிலிருந்து மனிதனாக இன்றிருக்கும் இந்த மொழிவெளியின் தொடர்காலத்தில் அச்சில ஒலிக்குறிப்புகள் எவ்வாறு அப்பண்பாட்டினைத் தொடரும் தனிமனிதனுக்கு பொருள்படும் என்பது முடிவிலாச் சாத்தியங்களைக் கொண்டதே.

அந்த முடிவிலாச் சாத்தியங்களில் ஒன்றாக மகாலிங்கம் உணர்ந்தது தமிழ்ப் பண்பாட்டின் குரு வடிவான முருகனை என்று எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் அந்த முருகன் மகாலிங்கத்தின முருகன். அம் முருகனின் அளவுகோல்களும் ஆற்றலும் மகாலிங்கத்தின் தமிழ்ப் பாண்பாட்டின் மீதான புரிதலினைப் பொறுத்தது.அவன் உணர்ந்தது சரியான குருவையா என்றால் என்னைப் பொறுத்தவரை மிகச் சரியான குருவையே. ஆனால் சீடனுக்குத்தான் போதிய விழிப்புணர்வு இல்லை .அதனால் அலைபடும் மகாலிங்கத்தின் துயரை இன்னொரு மகாலிங்கமான என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

அப்படியாயின் மகாலிங்கத்தின் காதுகளாக மாறிக் கேவலமான வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்தது காளி எனும் தெய்வமா ஏன் அது முருகனை விட தன்னை வழிபடு என்று கூறிக் கொண்டிருந்தது என்பதற்கான விளக்கம் தேவைப்படுகிறது.சாதாரணமாக நல்லவை×தீயவை எனும் பொதுப்புத்தியோடு எப்போதும் இந்தியாவில் இருக்கும் எந்த மரபையும் அணுக முடியாது.இங்கும் அப்படியே. தமோகுணத்தின் வடிவம்தான் காளி என்றே தன் விருதேற்புரையிலும் எம் வி வி குறிப்பிடுகிறார்.முக்குணங்களும் மனிதனுள் மாறிமாறி நிகழ்வன.பெரும்பான்மையான நேரங்களில் எது செயல்படுகிறதோ அதையே அந்நபரின் பொதுக்குணமாக நாம் எடுத்துக் கொள்கிறோம்.மகாலிங்கம் தன் பொதுக்குணமாக சத்வம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறான்.ஆகவே தமோகுணத்தினிலிருந்து விடுபட எண்ணுகிறான்.ஆனால் அவனுடைய ஆசைகள் வேண்டுதல்களில் பெரும்பாலானவை சத்வ குணத்துடன் சமபந்தமேயில்லாதவை.

சித்த மரபில் இருக்கும் மந்திரங்கள் பற்றிய அறிவில் ஒரு மந்திரத்தில் சித்தியடைந்தவனுக்கு தேவையானவற்றை வழங்கும் மீதமுள்ள மந்திரங்களை அதுவே கொண்டு வந்து சேர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையின்படி நோக்கினால் மகாலிங்கத்திற்கு என்ன வேண்டும் என்று அவன் உள்மனதில் எண்ணுகிறானோ அதைத் தருவதற்கான தெய்வம் தமோகுணத்திலிருந்தே எழ வேண்டும்.

மகாலிங்கத்தினை ஆட்டிப்படைப்பது குடும்பத்தின் மீதான பற்று. பின்பு காமம்.அவை முற்றிலும் தமோகுணத்தினைச் சார்ந்தவை.அவன் வேண்டுதலில் சத்வ குணத்துக்குரியது முருகன் குருவாக வந்து தனக்கு ஞானமருள வேண்டும் என்பது மட்டுமே.

ஞானமருளப்பட வேண்டும் என்றால் அனைத்து வகையான பரிசோதனைக்கும் தயாராக இருக்க வேண்டும்.எளிய மந்திர சித்திக்கே மண் பொன் பெண் ஆகிய பரிசோதனைகளை சந்திக்க வேண்டும் என்று சித்த மரபு கூறும்.மகாலிங்கம் விரும்புவதோ இருப்பதிலேயே மிகப் பெரியது.அதற்கான பரிசோதனைகளை தான் தாங்க முடியுமா என்பதற்கான எந்த தொலைநோக்கும் இல்லாமல் வேண்டுதலை மட்டும் வைத்து விடுகிறான்.

இந்த விஷயத்தில் நானும் மகாலிங்கமாக இருந்திருக்கிறேன்.கடவுளிடம் எதையும் வேண்டுவதற்கு முன்பு அது கிடைப்பதால் நம் இயல்பு வாழ்க்கையென இருப்பது பாதிக்கப்படுமா என்றெல்லாம் தொலைநோக்குப் பார்வை இல்லாமல் அப்போது பெரிதாக நம் ஆணவத்திற்குத் தோன்றுவதை வேண்டுதலாக வைப்பது.பின்னர் அந்த வேண்டுதலுக்குரிய பலன் நம்மை அடையும்போது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட அதற்காக இயல்பு வாழ்க்கையினைக் கொடு என்று மீண்டும் சென்று வேண்டுதல் வைப்பது.அதனால் முதலில் இருந்த நிலையினைக் காட்டிலும் மாறாகச் சென்றதற்கு தன் கோரிக்கையே காரணம் என்று அறியாமல் நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையே அலைபாய்வது.இத்தவறினை நான் செய்திருக்கிறேன்.ஆகவே மகாலிங்கத்தின் செயலினை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.

நன்றாகத் தொழில் நடந்து கொண்டிருக்கும்போது மகாலிங்கம் வேண்டுவது குருவாக வந்து முருகன் ஞானம் அருள வேண்டும் என்பது.முருகன் அவனுக்குள் வந்து விட்டார்.யாருக்கு ஞானமருளப்பட வேண்டும் என்றால் அவன் இங்கு பெரிதென எண்ணும் அனைத்தையும் அவனே முழுமனதுடன் துறக்கவேண்டும் அல்லது அவைகள் இயல்பாக அவனை விட்டு விலகிச் செல்லும் சூழல் அமைய வேண்டும். மகாலிங்கம் வணிகம் செய்வதால் பெருஞ்செல்வனாக மாறி அதைத் துறக்க வேண்டும் அல்லது இழப்பின் மூலம் இங்கு அவனைப் பற்றி நிறுத்தியிருப்பவைகள் அனைத்தும் களையப்படவேண்டும். அதுதான் மகாலிங்கத்தின் வேண்டுதலின்படி நடக்கப்படவேண்டியது.கூடவே அவனுடைய அனைத்துப் பற்றின் மீதான சோதனைகளும் ஆரம்பிக்கப்படவேண்டியது.

அதன் முதல்படி ஆரம்பிக்கும்போதே மகாலிங்கத்தினால் தாங்க இயலாமல் அக்கொடுமையிலிருந்து என்னை மீட்டெடு என்ற அடுத்த கோரிக்கையை ஆரம்பித்துவிடுகிறான்.தான் அடைந்த இடருக்கான மூலகாரணி தானே என்றறியாமல் காளி எனும் தெய்வம்தான் அதற்கு காரணம் என்று எண்ணுகிறான்.ஆகவே அதனிடமிருந்து விலகுவதே உடனடியாகச் செய்யவேண்டியது என்று எண்ணிப் போராடிக் கொண்டே இருக்கிறான்.மகாலிங்கத்தின் உண்மையான தேவைகளை உணர்ந்து அவனிடம் உரைக்கும் தெய்வம்தான் உண்மையில் அவனிடம் பேசிக் கொண்டிருக்கிறது என்றே அறியாமல் அதை எதிர்த்துக் கொண்டிருக்கின்றான்.

அதை உறுதிப்படுத்தும் கருத்துரு ஒன்று எனக்குத் தோன்றியது.அது ஒரு சொல்லின் பல அர்த்தங்கள் படைப்பாளியில் ஏற்படுத்தும் சொற்பொருட்பேதம்.சொற்பொருட் பேதம் என்பதை பாடபேதம் என்பதற்கான விளக்கம் போலச் சொல்லுக்கு எடுத்துக் கொள்ளவும்.மகாலிங்கம் சித்த மரபில் சொல்லும் சில சொற்களை அவர்கள் சொல்லும் மறை அர்த்தத்துடன் அணுகாமல் பொதுவெளியில் இருக்கும் பொது அர்த்ததுடன் புரிந்து கொண்டிருக்கிறான்.நாவலில் வரும் காளி எண்ணற்றறோரின் பத்தினி என்ற வரி கருவூர் சித்தரின் வாலை பூசை விதியில் இருக்கும் தன்னைக் கண்டோர்க்கு நானே பத்தினி என்பாள் என்று வாலையைக் குறித்துச் சொல்லும் வரியின் சொல்லுக்கான பொதுவெளி அர்த்தம்.ஆனால் மறை பொருள் அர்த்தம் வேறு .மணாளனுடன் ஆடிய சுகத்தினை மகளிடம் உரைப்பதற்கான வழியேது என்பதெல்லாம் சித்தர் மரபில் இருக்கும் மறைபொருள் சொற்றொடர்.இது போன்ற பல சொற்றொடரகள் நூலில் இருக்கின்றன.சொற்பொருட் பேதத்திற்கு எடுத்துக்காட்டாகச் சொல்வதென்றால் விந்து என்பதற்கான சித்த மரபின் மறைபொருள் அர்த்தத்தினை பொதுவெளியின் விந்து என்பதற்கான அர்த்தமாக எடுத்தால் நடப்பது எதுவோ அது.மகாலிங்கத்தில் சொற்கள் உருவாக்கிய அனைத்துப் பெரும் துயரும் இந்தக் கருத்துருவின் விளையாட்டுக் களமாக அவன் உள்ளம் மாறியதால் உருவாகியவை.

 

முடிவிலா அவ் விளையாட்டுக் களமாக மகாலிங்கத்தின் மனம் அமைவதால் தன்னுள் பேசும் தெய்வம் சொல்ல வரும் மறைபொருளினைப் புரிந்து கொள்ள மகாலிங்கத்தால் இயலாத சூழலினை உருவாகிறது.மகாலிங்கம் உடலில் நடக்கும் நாடகம் கருப்பன் ராமனுடன் இணைந்து வாயிற்கும் மூக்கிற்கும் இடையில் காளியைத் தேடுவது சித்த மரபின் அண்ணாக்கு எனும் கருதுகோளின் தலைகீழாக்கம்.பிராணயாமத்தின் வழிமுறையில் நாக்கினை மடித்து மூச்சின் வழியாக மூலாதாரத்தின் கனலை எழுப்பி அண்ணாக்கின் வழியாக ஆயிரம் இதழ் கமலத்திற்கு செல்லும் உயிர் என்னும் கருதுகோள் மகாலிங்கத்தின் உடலில் இளிவரல் நாடகமாக வெளிப்படுத்தப்படுகிறது.அதைப் புரிந்து கொள்ள இயலாமல் சொற்பொருட்பேதம் தடுத்து விடுகிறது.சுருக்கமாக இதைக் கூறவேண்டும் என்றால் திருமந்திரத்தின் 599 ஆம் பாடலினைச் சுட்டலாம்.

//கண்ணாக்கு மூக்குச் செவி ஞானக் கூட்டத்துள்

பண்ணாக்கி நின்ற பழம் பொறு ளொன்றுண்டு

அண்ணாக்கி னுள்ளே அகண்ட வெளி காட்டிப்

புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே.

பஞ்ச ஞானேந்திரியங்கள் ( கண், காது, மூக்கு, நாக்கு, மெய் என்பவை ) கூடும் இடத்தில் நாதத்தை எழுப்புகின்ற ஒரு பழமையான வஸ்து உள்ளது. அதுவே நம் அண்ணாக்குப் பகுதியில் எல்லை இல்லாத பேரொளியைக் காட்டும். நம் மனம் வெளியே செல்லாதவாறு தடுக்கும். நம்மை உலக வாழ்விலிருந்து பிழைக்கச் செய்யும்.

திருமந்திரம் மூன்றாம் தந்திரம்.அதிகாரம் 8.தியானம். இரண்டாம் பாடல் //

அதே சமயம் சித்த மரபில் இவ்வளவு அறிந்துள்ள மகாலிங்கத்தின் சிந்தனையின் அளவுகோல்கள் எதன் அடிப்படையில் அமைந்திருக்கின்றன என்று பார்க்கும்போது அவை நவீனகாலத்தினைச் சேர்ந்தவை.குறிப்பாக விக்டோரியா காலவியல் ஒழுக்க முறைகள்.ஆனால் அவன் விருப்பம் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று எண்ணுவது இந்திய மரபின் வழிமுறையில்.முற்றிலும் மாறுபட்ட இரு வழிமுறைகளில் ஒன்றின் அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு மற்றொன்றில் தன் சாதனையை மேற்கொள்ள முயற்சிப்பது எவ்வாறு சாத்தியமாகும்?.பேரிடரில்தான் முடியும்.அதுவும் இங்கு நிகழ்ந்துள்ளது.

இக்காரணிகளைக் கொண்டு நோக்கும்போது காமமே மகாலிங்கத்தின் முதன்மைச் சிக்கல் .பொதுவெளியில் பேசத்தகுதியற்ற ஆபாசச் சொற்களை உரைத்து காதுகள் அவனை அலைக்கழிப்பதைக் கவனித்துப் பார்த்தால் அவை சித்த மரபில் இருக்கும் மறைபொருள்களுக்கான சொற்பொருட்பேதம் என்று அப்பட்டமாகத் தெரிகிறது .சொற்பொருட்பேதத்தால் தான் புரிந்து செல்ல வேண்டிய திசைக்குப் தான் செல்ல வேண்டிய பாதையாக காம ஒறுப்பு எனத் தவறாக எண்ணுகிறான்.அதனால் காமமே அடிப்படைச் சக்தி என்பதை உணராது தன் சமகால சமூகத்தில் கோலோச்சும் ஒழுக்கநெறியின் அடிப்படையில் அதனுடன் போர்தொடுக்க எண்ணுகிறான்.எதிர்க்கொள்ளும் ஆற்றலைக் கொண்டே பேருக்கொள்ளும் காமத்துடன் மீளவே இயலாத போரினைத் தொடர்கிறான்.போரில் தோற்கும்தோறும் குற்றவுணர்வு உருவாகிக்கொண்டே இருக்கிறது.அது பலவித குழப்பங்களை அவனில் தோற்றுவிக்கிறது.ஏற்கனவே படைப்பாளியாக இருப்பவனில் தனக்கு ஏதாவது நிகழுமோ என்று அவன் எண்ணும் அனைத்தும் அவனுள் படைப்பினைப் போலவே விரிந்திருக்கின்றன என்ற முடிவுக்கே முடிவில் வரமுடிகிறது.

இறுதியாக ஏன் காதுகளில் இது நடந்தது.இந்திய மரபினைப் பொறுத்தவரை கற்றலுக்கான இடத்தினை விடக் கேட்டலுக்கான இடம் முக்கியமானது.கற்றலைக் கொண்டு கேட்டலை நிலைநிறுத்தும் பணியையே மரபு முன்னர் பெரும்பாலும் செய்தது.கேட்டல் என்பது தன் தரப்பினைப் பற்றிய அனைத்தும் அறிந்த தகுதியுடைய சீடனிடம் கற்றறிந்த குரு உரைப்பது.கேட்பவனின் தகுதியும் சொல்பவரின் தகுதியும் சரியான பாதையினைத் திறந்து விடும். மாறாகக் கற்றல் என்பதோ அதைச் செய்ய முயலும் அனைவருக்குமான பொதுத்தளத்தினை உருவாக்கிக் கொடுப்பது.அதற்கான நெறிமுறைகளை மட்டுமே கொண்டது.கற்றலுக்குத் தேவையான தகுதிகள் கேட்டலுக்குத் தேவையான தகுதிகளுக்கு முற்றிலும் மாறுபட்டவை. அறிவு என்பதே கேட்டலின் வழியாகவே நிலைநிறுத்தப்பட்ட காலம் சென்ற நூற்றாண்டில்தான் மாறியது.அதுவரை கேட்டலின் வழியாக வந்தடைந்த அறிவினைக் கற்றலின் வழியாக பயில முயன்று இரண்டுக்கும் உரிய வேறுபாடுகளைக் கைக்கொள்ளாமல் சொற்பொருட்பேதத்தால் அதன் மாளாச் சுழலுக்குள் சிக்கிய நபர்தான் மகாலிங்கம்.ஆகவே அவை காதுகளில் ஆரம்பமாகியது புரிந்து கொள்ளக்கூடியதே..கற்றல் முறையினைக் கைக்கொண்டு கேட்டல் நூலினைப் புரிந்து கொள்ள முயன்று சொற்பொருட்பேதத்தால் அதில் சிக்கிக் கொண்டவனின் வாழ்வே இந்நாவல்.

ஒருபுறம் தவறுதலாகத் திறந்துவிட்ட மந்திர தளத்தின் துளிக்குப்பின் வெளிவரத்துடிக்கும் பெருங்கடல்,அதை வெளிவராமல் தடுக்க முயலும் சமகால ஒழுக்க அளவுகோல்கள், ஓங்கிப் பேருருக் கொள்ளும் காமம், தனக்கான சரியான தேவையினை உரைக்கும் தெய்வத்தினை சொற்பொருட்பேதத்தால் உணராமல் போகும் மனம் எனும் நான்கின் போர்க்களமே மகாலிங்கத்தின் உளம்.

நிகர் வாழ்பனுவத்தினைத் தரும் நனவோடை வழிமுறையும்,பல தளங்களில் திறக்கும் வழிகளையுடைய நிகழ்வுகளும் இந்நூலினை சிறந்த இலக்கியப் படைப்பாக மாற்றுகின்றன.மரபும் நவீனமும் இணைந்து படைப்பாளிக்குள் நிகழ்த்திய போரே இந்நாவல் என்றே எனக்குத் தோன்றுகிறது.

இப்படிக்கு

அந்தியூர் மணி.

 

முந்தைய கட்டுரைதேவி- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைதமிழ், குறிகளும் ஒற்றும்