அன்புள்ள ஜெ,
அயோத்திதாசர் பற்றி சமீபமாகக் கிளம்பியிருக்கும் விவாதங்களை கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். [கவனிக்கவில்லை என்றால் பிரதிகளை அனுப்பியிருக்கிறேன்]
இரண்டு கேள்விகள்தான் முன்வைக்கப்படுகின்றன.
அ. தங்கள் கடந்தகால மாண்புகளை முன்வைத்துத்தான் இன்று சமத்துவம் கோரவேண்டுமா? அது கடந்தகால மேன்மை இல்லை என்றால் சமத்துவம் கோரக்கூடாது என தொனிக்கவில்லையா? தங்களை மற்றவர்களுக்கு மேல் என நிலைநிறுத்திக்கொள்ளும் ஆசைதான் அதிலுள்ளது. அது நேற்று ஆதிக்கசாதிகள் செய்தவற்றின் நீட்சி அல்லவா?
ஆ. நேற்று ஆதிக்கம் புராணங்கள் வழியாக நிறுவப்பட்டது. அதற்கு எதிர்ப்பாக தலைகீழ்ப்புராணங்களை உருவாக்கியவர் அயோத்திதாசர். உண்மையில் புராணங்களைக் கட்டுடைப்பதுதானே சரியான எதிர்ப்பாக இருக்கமுடியும்? ஒரு மூடத்தனத்திற்கு எதிராக இன்னொரு மூடத்தனம் செயல்படமுடியுமா?
இந்த வினாக்களை போகன் சங்கர், சரவணக் கார்த்திகேயன் போன்றவர்கள் முன்வைக்கிறார்கள். அவர்களை சாதிய முத்திரை குத்தி எழுதிக் கொண்டிருக்கிறார்கள் அயோத்திதாசர் தரப்பினர்.
தமிழில் அயோத்திதாசரை பொதுவெளிக்குக் கொண்டுவந்து விரிவாகப் பேசியவர்களில் நீங்கள் ஒரு முன்னோடி. நீங்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?
பரிதி
அன்புள்ள பரிதி,
இந்த விவாதத்தில் இன்று அயோத்திதாசர் தரப்பில் வாதாட ஆற்றல்மிக்க ஆய்வாளர்கள் உள்ளனர். ராஜ் கௌதமன், ரவிக்குமார், டி.தர்மராஜ், ஸ்டாலின் ராஜாங்கம், ஏ.பி.ராஜசேகரன், ஜே.பாலசுப்பிரமணியம் போன்றவர்கள் தமிழகம் கண்ட தலைசிறந்த ஆய்வாளர்களின் நிரையில் வருபவர்கள்.
உண்மையில் அவர்களுக்கு நிகராக தலித் அல்லாதவர்களின் நிரையில் அறிவியல் முறைமை, முழுமைநோக்கு, களஆய்வு, ஆய்வுக்குரிய மொழி, தனிப்பட்ட முன்முடிவுகளும் பற்றுகளும் இல்லாமை ஆகிய ஐந்து அடிப்படைகளும் கொண்ட ஆய்வாளர்கள் மிகமிகச் சிலரே உள்ளனர். விவாதிக்கும் எவரும் அவர்களிடமே விவாதிக்கவேண்டும்.
விவாதங்களை முத்திரைகுத்தி வசைபாடுபவர்களை தலித் தரப்பு என எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. அவர்கள் எளிய சார்புநிலையாளர்கள். அந்த குரல் எல்லா தரப்புகளிலும் உண்டு. எந்த விவாதமும் ஓர் அறிவுத்தரப்பின் சிறந்த குரல்களுடன் தான் நிகழ்த்தப்படவேண்டும்.
தலித் ஆய்வுத்தரப்பில் இதில் ஒற்றைக்குரல் இல்லை என்பதை வாசிப்பவர்கள் உணரமுடியும். மெய்யான ஆய்வுகள் அவ்வண்ணம் மாறுபட்ட பார்வை கொண்டே வெளிப்படும். அயோத்திதாசர் பற்றிய ராஜ் கௌதமனின் ஆய்வுநூலில் அவர் அயோத்திதாசரின் மாற்றுப்புராண மொழிபுகளை முழுமையாகவே நிராகரிக்கிறார். சொல்லப்போனால் அயோத்திதாசரின் ஒட்டுமொத்த பங்களிப்பையேகூட மிகவும் குறைத்துத்தான் மதிப்பிடுகிறார். அயோத்திதாசர் ‘கதைவிடுகிறார்’ என்றே சொல்கிறார். நீங்கள் மேலே சொல்லியிருக்கும் இரண்டு கருத்துக்களும் ஏறத்தாழ ராஜ் கௌதமன் அவருடைய நூலில் கூறியவற்றின் நீட்சிகளே.
*
உங்கள் கேள்விக்கு என் புரிதலை மட்டும் சொல்லிவிடுகிறேன். நான் அயோத்திதாசரை எப்படி அணுகுகிறேன் என்பதற்கான விளக்கம் இது,
அ. பழம்பெருமையா?
தலித் தரப்பில் இருந்து தங்கள் முற்கால வரலாறு பற்றி ஆராய்ச்சிகளும் வரலாறுகளும் உருவாவது தங்களுக்கு ஒரு ‘ஆண்ட பரம்பரை’ வரலாற்றை உருவாக்கவேண்டும் என்னும் நோக்கத்தில் அல்ல. தங்கள் ‘மெய்யான’ வரலாற்றை கண்டடைந்து எழுதிக்கொள்ளும்பொருட்டே.
எல்லா சமூகங்களும் அவ்வாறுதான் வரலாற்றை எழுதிக் கொள்கின்றன. இந்தியவரலாறும் தமிழ் வரலாறும் அவ்வாறுதான் எழுதப்பட்டன. இன்று உலகமெங்கும் நுண்வரலாறுகள் [Microhistory] எழுதப்படுகின்றன. சிறு சமூகக்குழுக்களின், சமூக அமைப்புகளின், வட்டாரங்களின் வரலாறுகள் எழுதப்படுவதே இருபத்தொன்றாம் நூற்றாண்டின் வரலாற்று அறிவியக்கம். வரலாறு என்பதை வரலாறுகள் என்று சொல்வதே வழக்கமாக ஆகிவிட்டிருக்கிறது. தலித் வரலாறு அந்த அடிப்படையிலேயே எழுதப்படுகிறது.
இப்போது நாம் ஒட்டுமொத்தமான பொதுவரலாற்றின் ஒரு பகுதியாக நுண்வரலாற்றை பார்க்கிறோம். நுண்வரலாறு பொதுவரலாற்றுச் சித்திரத்தில் பொருந்துகிறதா என ஆராய்கிறோம். இன்று உருவாகிக் கொண்டிருக்கும் பார்வை என்பது நுண்வரலாறுகளின் தொகுப்பாக பொதுவரலாற்றை பார்ப்பது. பொதுவரலாற்றை ஒரு முழுமையான தர்க்கபூர்வமான கட்டுமானமாக பார்க்காமல் தங்களுக்குள் முரண்கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் பல்வேறு உட்கூறுகளின் ஒட்டுமொத்த விசையாக, பரிணாமமாக அணுகுவது.
இந்த வரலாற்று எழுத்து முறையின் சில அடிப்படைச் சவால்கள் சிக்கலானவை. தலித்துக்கள் பற்றி இங்கே ஒரு பொதுவான வரலாற்றுச் சித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நவீன வரலாற்றெழுத்து 1870களில் காலனியாதிக்கவாதிகளால் உருவாக்கப்பட்டபோதே இது உருவாகிவிட்டது. அன்றிருந்த சமூகச்சூழல், அன்று கிடைத்த ஆவணங்கள், அன்றிருந்த வரலாற்று ஆய்வுநெறிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இச்சித்திரம் உருவாகியது.
அந்தச் சித்திரம் இதுதான். சமூகம் என்பது உறுதியான ஒரு கட்டமைப்பு. இந்தியச் சமூகம் என்பது சாதிமுறையால் ஆனது. சாதி என்பது உறுதியான மதக்கொள்கையால் உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுவது. தலித் மக்கள் என இன்று இருப்பவர்கள் இந்து மதம் தோன்றியபோதே ஒடுக்கப்பட்டு அடிமைகளாக ஆக்கப்பட்டவர்கள். ஆகவே எப்படியும் மூவாயிரமாண்டுகளாக அவர்கள் அடிமைச்சாதியினர்தான். அடிமைகளுக்குரிய பண்பாடும் வாழ்க்கைமுறையும்தான் அவர்களுக்கு உள்ளன. அவர்களுக்கு உயர்தரக் கல்வி, ஆசாரங்கள், கலைகள் ஆகியவை இருக்க வாய்ப்பில்லை. அவற்றை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு மூவாயிரமாண்டுகளாக அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால் பழங்குடி வாழ்க்கையில் இருந்து நேரடியாக அடிமைவாழ்க்கைக்கு வந்தவர்கள் தலித் மக்கள். இதுவே காலனியாதிக்கக் கோணத்தில் தலித்துக்களைப் பற்றிய வரலாற்று வரைவு.
காலனியாதிக்கவாதிகள் இந்த நிலையில் இருந்து காலனியாதிக்கம் கொண்டுவந்த தொடக்ககால முதலாளித்துவப் பொருளியல். அமைப்பும், கிறிஸ்தவ மதமும் தலித் மக்களைக் காப்பாற்றின என்று எண்ணினர். அதற்கடுத்து வந்த இந்திய தேசிய வரலாற்றெழுத்தும் அதன்பின் வந்த தமிழ்த்தேசிய வரலாற்றெழுத்தும் காலனியாதிக்கவாதிகளின் அதே சித்திரத்தையே எடுத்துக்கொண்டன. மீட்பர்களின் இடத்தில் தங்களை முன்வைத்தன.
இன்றைய தலித் வரலாற்றெழுத்து இந்தச் சித்திரத்தை மறுக்கவேண்டியிருக்கிறது. காரணம் அரசியல் தேவை அல்ல, கிடைத்துவரும் திட்டவட்டமான ஆதாரங்கள்தான். சென்ற ஐம்பதாண்டில் இந்தியாவெங்கும் கிடைத்திருக்கும் கல்வெட்டு மற்றும் நூல் சான்றுகள் தலித் என அடையாளப்படுத்தப் பட்டிருக்கும் பல சாதியினர் முற்காலத்தில் செல்வாக்குடன் இருந்திருப்பதை, பல இடங்களில் நாடாண்டிருப்பதைக் காட்டுகின்றன.
சென்ற ஐம்பதாண்டுகளில் வரலாற்றாய்வுக்கு நாட்டார் மரபை, வாய்மொழி மரபை கருத்தில் கொள்வதற்கான முறைமை உருவாகி வந்துள்ளது. ஏனென்றால் கல்வெட்டு போன்றவற்றைக் கொண்டு பெருவரலாற்றையே [Macrohistory] ஆராய முடியும். நுண்வரலாற்றுக்கு நாட்டார்- வாய்மொழி மரபுகளே ஆதாரங்களை அளிக்கமுடியும். நாட்டாரியலாய்வுகள் இன்று அவற்றை ஆதாரமாகக் கொள்வதற்குரிய முறைமையை உருவாக்கியிருக்கின்றன.
ராஜ் கௌதமனுக்கும் டி.தர்மராஜுக்கும் இடையேயான வேறுபாடு இதுதான். ராஜ் கௌதமன் வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளில் நாட்டாரியல் முறைமைகள் நிறுவப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவர். டி.தர்மராஜ் நாட்டாரியல் ஆய்வாளர். ராஜ் கௌதமன் பெருவரலாற்றை ஆராயும் ஆய்வுக்கருவிகள் மட்டும் கொண்டவர். நூல்களின் சான்றுகளையே அவர் கருத்தில்கொள்கிறார். மாறாக, இன்றைய தலித் ஆய்வாளர்கள் பெரும்பாலும் நுண்வரலாற்றாய்வாளர்கள்.
இதே வேறுபாடுதான் சுசீந்திரம் பேராலயத்தின் வரலாற்றை எழுதிய கே.கே.பிள்ளைக்கும் அ.கா.பெருமாளுக்கும் இடையே உள்ளது. கே.கே.பிள்ளை நுண்வரலாறுகளை, நாட்டாரியலை கருத்தில் கொள்ளவில்லை. அ.கா.பெருமாள் அவற்றை கருத்தில்கொள்கிறார். ஆலன் டண்டிஸுக்கும் [Alan Dundes] குளோட் லெவி ஸ்ராஸுக்கும் [ Claude Lévi-Straus] பிறகுதான் இது சாத்தியம் ஆகியது. இதுதான் இன்று நிகழும் ஆய்வுகளின் பொது முறைமை.
நாம் பொதுவான அறிவுச்சூழலில் அரசியலையோ பண்பாட்டையோ விவாதிக்கும்போது இந்த மாறுதலை கொஞ்சம் தெரிந்துகொள்ளவேண்டும். நாம் அறிந்த செய்திகளைக்கொண்டு ஆய்வுகள் மற்றும் அறிவுத்துறை விவாதங்களை மதிப்பிட்டு அறுதிமுடிவுகளைச் சொல்ல முந்தக்கூடாது. இன்றைய நுண்வரலாற்று ஆய்வுகளில் தொன்மங்கள், வாய்மொழிக்கதைகள், நாட்டார்ப் பண்பாட்டுக்கூறுகளுக்கு முக்கியமான இடம் உண்டு. அவற்றை ‘ஆதாரமில்லாதவை’ ‘பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை’ என்றெல்லாம் சொல்வது அறிவுத்துறைகளுக்கு வெளியே நின்று பேசும் பாமரப்பார்வை.
நுண்வரலாற்று ஆய்வு முறைமைகளின்படி சாதிகளை ஆராயும்போது வரும் சிக்கல்களில் முதன்மையானது சாதிகளின் தோற்றம் மற்றும் இயக்கத்தை வகுத்துக்கொள்வது எப்படி என்பதுதான். ஒரு சமூகமானது மதம் அல்லது ஆதிக்கத்தின் வேறேதோ கொள்கையால் அதன் தொடக்கத்திலேயே அறுதியாக வகுக்கப்பட்டுவிடுகிறது என்றும், பின்னர் அதை எவரும் மீறவே முடியாது என்றும் இன்றைய ஆய்வாளர்கள் நம்புவதில்லை. அவர்கள் சமூகத்தின் நிலையான ‘கட்டமைப்பு’ என்பதை ஏற்பதில்லை. அதன் ‘பரிணாமத்தின்’ சித்திரத்தை உருவாக்க முயல்கிறார்கள். எதை ஆராய்ந்தாலும் அது எப்படி ‘இருக்கிறது’ என்பது அல்ல எப்படி ’மாறிக்கொண்டிருக்கிறது’ என்பதுதான் ஆய்வுக்கேள்வியாக இன்று உள்ளது.
சாதிகளின் உருவாக்கம் என்பது ஒரு சமூகப்பரிணாமத்தின் விளைவு. இந்தப் பரிணாமம் என்பது பொருளியல் காரணங்களால், அரசியல் காரணங்களால், பண்பாட்டுக் காரணங்களால், கருத்தியல் காரணங்களால் உருவாகும் ஒரு சிக்கலான நகர்வு என இன்றைய வரலாற்றாய்வாளர்கள் புரிந்துகொள்கிறார்கள். அது எப்படி நிகழ்ந்தது என வகுத்துரைக்க முயல்கிறார்கள். சமூகப் பரிணாமத்தில் தேங்கிநின்ற இனக்குழுக்கள் அடிமைச்சாதிகள் ஆகியிருக்கலாம். தோற்கடிக்கப்பட்டவையும் அடிமைச்சாதிகள் ஆகியிருக்கலாம். இயற்கைக் காரணங்களால் பஞ்சம் முதலியவற்றின் வழியாக வறுமைவாய்ப்பட்ட சாதிகளும் பல்வேறு காரணங்களால் இடம்பெயர்ந்த சாதிகளும் அடிமைச்சாதிகள் ஆகியிருக்கலாம். அடிமைச்சாதிகள் தீண்டாமை, தனி ஊர் போன்ற ஒதுக்குதல்களுக்கு ஆளானார்கள். இன்றும் இம்மனநிலை நீடிக்கிறது.
பறையர்கள் பல்லவர் காலத்திற்கு முன்பு தமிழ்நாட்டு ஆலயங்களில் பூசகர்களாக இருந்தார்கள் என்பதற்கு பல்லவர் காலத்துக் கல்வெட்டுச் சான்று உள்ளது. உண்மையில் பின்னாளில் அயோத்திதாசர் கூறிய வரலாற்றுச் சித்திரத்தை விட விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் 1888 முதல் எழுதப்பட்ட அபிதான சிந்தாமணியில் சிங்கார வேலு முதலியார் இச்செய்திகளைச் சொல்லியிருக்கிறார்.
அந்தச் சான்றுடன் இணைவது பிராமணர்களால் பறையர்கள் அதிகாரமிழக்கச் செய்யப்பட்டார்கள் என்று அயோத்திதாசர் சொல்லும் செவிவழிக் கதை. அதுவும் சிங்காரவேலு முதலியார் விரிவாகப் பதிவுசெய்ததுதான். இன்று நாட்டார்-செவிவழிச் செய்திகளை நுண்வரலாற்றாய்வின் ஆதாரங்களாகக் கொள்ள ஒரு முறைமை உள்ளது என்பதனால் அயோத்திதாசருடைய கூற்று வரலாற்றாய்வில் கருத்தில்கொள்ளப்படுகிறது.
இது கடந்தகால மேன்மையை கண்டடைவது அல்ல. ஒரு சாதியின் வீழ்ச்சி வரலாற்றில் தெரிகிறது, அதை விளங்கிக்கொள்ளும் முயற்சிதான். வரலாற்றாய்வில் இத்தகைய சில வினாக்கள் அடிப்படை ஆதாரங்கள் வழியாக உருவாகி வரும். அவற்றை பலகோணங்களில் விவாதித்து விளக்குவார்கள். அவ்விவாதத்தின் ஒட்டுமொத்தமாக, மெல்லமெல்ல ஒரு பொதுப்புரிதல் உருவாகி வரும். அந்த விவாதமே இன்று நிகழ்கிறது
ஆனால் அந்த விவாதம் தொடங்கியதுமே அ.மார்க்ஸ் போன்ற திராவிட – இடைநிலைச்சாதி அரசியல் கொண்டவர்கள் அயோத்திதாசர் பறையர்சாதியின் மேன்மையைப் பேசுகிறார், அது மற்ற தலித் சாதிகளை இழிவுசெய்வது , அது சாதியரசியல் என பேச ஆரம்பித்துவிட்டனர். ஏனென்றால் இந்துமதத்தால் வீழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கு கிறிஸ்தவம் மீட்பளித்தது என்று இவர்கள் முன்வைக்கும் ஒற்றைவரி வரலாற்றுக்கு மாறானது இந்த ஆய்வு. அவர்களின் அந்த பதற்றமும் உள்நோக்கம் கற்பித்தலும்தான் வரலாற்றாய்வுக்கு எதிரான மனநிலை.
வரலாற்றாய்வில் எது உண்மை என்பதே முக்கியம். அவ்வுண்மையின் அரசியல் விளைவு என்ன என்பதெல்லாம் வரலாற்றாய்வின் கேள்வி அல்ல. அதை கருத்தில்கொண்டு வரலாற்றாய்வை வரலாற்றாய்வாளர்கள் நிறுத்திக் கொள்வதுமில்லை. வரலாற்றாய்வு முகநூல் பூசல்களால் முடிவுசெய்யப்பட முடியாது.
பறையர்களின் அல்லது பள்ளர்களின் வரலாற்றை எழுதமுற்படும்போது அவர்களின் கடந்தகாலப் பெருமையும் வீழ்ச்சியும் வெளிப்படுமென்றால் அதை இன்றைய அரசியலின் பொருட்டு மறைக்கவேண்டுமா என்ன? அது பிற தலித்துக்களுக்கு எதிரானதாக அமையுமென்றால் அப்படியே சொல்லாமல் விட்டுவிடவேண்டுமா என்ன? வரலாற்றில் அதற்கு ஆதாரங்கள் உண்டா, அந்த ஆதாரங்கள் முறைமைப்படி ஒரு மொழிபாக முன்வைக்கப்பட்டுள்ளனவா என்பது மட்டுமே முக்கியம்.
இங்கே சமத்துவம் கோரும்பொருட்டு கடந்தகால வரலாறு ‘புனையப்படவில்லை’. மாறாக வரலாறு ஆராயப்படுகிறது. எல்லா வரலாறும் ஆராயப்படலாம், தலித் வரலாறு ஆராயப்படலாகாது, தொகுத்து முன்வைக்கப்படலாகாது என்று சொல்லமுடியுமா என்ன? தலித் வரலாறு என இங்கே முன்வைக்கப்படுவது வெறும் அரசியல்சார்ந்த புனைவு என்னும் முன்முடிவே இத்தகைய கூற்றை உருவாக்குகிறது.
சமத்துவம் கோர பழம்பெருமையை எவரும் பயன்படுத்துவதை நான் காணவில்லை. மானுடர் என்பதனால் மட்டுமே சமத்துவம் கோரப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே அரசியல் நிகழ்கிறது. வரலாற்றாய்வு வேறொரு தளத்தில் நிகழ்கிறது. வரலாற்றாய்வு நிகழ்வதே அரசியலுக்காகத்தான் என்னும் முன்முடிவுதான் களையப்படவேண்டியது. அரசியல்நோக்குடன் நிகழும் போலி வரலாற்றாய்வுகளையும் மெய்யான வரலாற்றாய்வுகளையும் பிரித்தறியும் வாசிப்பு அறிவுஜீவிகளிடம் இருந்தாகவேண்டும்.
எதிர்காலத்தில் நுண்வரலாற்றெழுத்து அத்தனை மக்களுக்குமென விரிவுறும் என்றும், ஒட்டுமொத்த வரலாறு அந்த நுண்வரலாறுகளின் தொகையாகவே முன்வைக்கப்படும் என்றும் நான் நினைக்கிறேன். அது நாம் ஏற்கனவே உருவாக்கிக்கொண்டுள்ள எளிமைப்படுத்தப்பட்ட பொதுவரலாற்றை பல திசைகளிலும் உடைப்பதாகவே இருக்கும். அவ்வுடைப்பை ஓர் அரசியல்சூழ்ச்சி என நாம் புரிந்துகொண்டால் அது நம்மை மூடர்களென்றே காட்டும்.
ஆ. மாற்றுப் புராண வரலாறு மாற்று மூடநம்பிக்கையா?
இந்த வினாவுக்கான விடையை, விளக்கத்தை டி.தர்மராஜ் மிக விரிவாகவே எழுதியிருக்கிறார். என் சுருக்கமான புரிதல் இது.
புராணம் என்பது ‘கட்டுக்கதை’ மற்றும் ‘மூடநம்பிக்கை’ என்னும் பழைமையான புரிதலின் விளைவு இந்த வினா. வரலாற்றாய்வில் அந்த பார்வை காலாவதியாகி அரைநூற்றாண்டாகிறது.இன்றும் நம்மில் பலர் ஈ.வே.ரா நின்றிருந்த காலகட்டத்திலேயே நின்றுகொண்டு அதை அதிநவீன சிந்தனை என எண்ணிக்கொண்டிருக்கிறோம். அவர் நின்றிருந்தது நூறாண்டு பழைய சிந்தனைக்களம். பலர் சிந்தனையில் தவழ்ந்து தவழ்ந்து அங்கே இப்போதுதான் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
இன்றைய வரலாற்றாய்வின் சில புதிய அடிப்படைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவை மெல்லமெல்லவேனும், எளிமையாகவேனும், நம் பொதுவான அறிவுச்சூழலுக்குள் பேசப்படவேண்டும்.
அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை
நாம் இன்று வரலாறு என எண்ணுவது நவீன வரலாற்றெழுத்து முறைமையால் கட்டமைக்கப்பட்ட ஒன்று. இந்த வரலாற்றெழுத்து சென்ற முந்நூறாண்டுகளில் உருவானது. அதற்கு முன்னர் வேறுவகையான வரலாற்றுப் பதிவுமுறைகள் இருந்தன. நிகழ்வுப்பதிவு [chronicle], கதைகள், தொன்மங்கள், ஆசாரங்கள் மற்றும் சடங்குகள் எல்லாமே வரலாற்றின் வெவ்வேறு மொழிபு [Narration] முறைகள்தான். இன்று நாம் அறிந்துள்ள வரலாறும்கூட அவ்வாறு உருவான ஒரு மொழிபு மட்டுமே
இன்றைய வரலாற்றெழுத்துமுறையே உண்மையானது மற்றவை பொய்யானவை என்பது ஓர் எளிமையான புரிதல். இன்றுள்ள வரலாற்றெழுத்துமுறை பற்பல மடங்கு தகவல் சார்ந்தது, புறவயமானது, தர்க்கபூர்வமானது, பொதுவானது என்பது உண்மை. ஏனென்றால் அறிவுத்திரட்டல், அறிவுப்பரவல் ஆகியவை உலகளாவ விரிந்தபின்னர், அதற்குத் தேவையான நவீனத்தொழில்நுட்பம் வந்த பின்னர் உருவானது இன்றைய வரலாற்றெழுத்து முறை. ஆனால் பழைய வரலாற்றெழுத்து முறைகளிலும் உண்மைகள் உள்ளன. அவற்றையும் இனிவரும் வரலாற்றெழுத்துமுறை கருத்தில் கொண்டாகவேண்டும்
அயோத்திதாசர் ஆய்வுகள்- ராஜ் கௌதமன்.
அவற்றை வரலாற்றெழுத்திற்கான மூலப்பொருட்களாக ஆக்குவதற்குரிய முறைமைகளும் விதிகளும் மெல்லமெல்ல இந்த ஐம்பதாண்டுகளில் உருவாகி வந்துள்ளன. அவை தொடர்ச்சியான விவாதங்கள் வழியாக உருத்திரண்டவை. நாம் பள்ளிகளில் படித்த பழைய வரலாற்றாய்வுகளை கொண்டு அத்துறையில் என்ன நிகழ்கிறதென்றே தெரியாமல் போகிறபோக்கில் கருத்து சொல்லக்கூடாது. இன்றைய வரலாற்றாய்வுக்கு புராணம், தொன்மம், குறியீடுகள், ஆசாரங்கள், நம்பிக்கைகள் ஆகியவையும் முக்கியமானவைதான். அவற்றை நவீன ஆய்வ்முறைமைக்குள் கொண்டுவர இன்றைய வரலாற்றாய்வுக்கு பல வழிமுறைகள் உள்ளன.
ஏன் அவ்வாறு செய்யவேண்டும்? இன்று தேவையாக இருப்பது நுண்வரலாறு. நுண்வரலாறுகளுக்குத் தேவையான தரவுகள் இந்த களங்களிலேயே உள்ளன. மறைக்கப்பட்ட வரலாறுகள், அழிந்துபட்ட வரலாறுகள் அவற்றின் தொடர்ச்சி அழிந்து நவீன வரலாற்றெழுத்துக்குள் வந்து சேராமல் பழைய வரலாற்றெழுத்து முறைமையிலேயே நின்றுவிட்டிருக்கும். அவை கதைகள், தொன்மங்கள், ஆசாரங்கள் என மட்டுமே காணக்கிடைக்கும்
அயோத்திதாசரின் மாற்றுப்புராண வரலாற்றெழுத்து அவ்வாறுதான் இன்றைய வரலாற்றாய்வுக்குக் கருத்தில் கொள்ளப்படுகிறது. இங்கே கதையறியாமல் கதகளி பார்ப்பவர்கள் பேசுவதுபோல அவருடைய புராணக்கதைகளும் விளக்கங்களும் ஒருவகை மூடநம்பிக்கைகளாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ’நீ அந்தப்புராணத்தைச் சொல்கிறாயா நான் இந்தப்புராணத்தை சொல்கிறேன்’ என்றும் முன்வைக்கப்படவில்லை. அவருடைய கருத்துக்கள் ‘அப்படியே’ வரலாறு என எடுத்துக்கொள்ளப்படவுமில்லை.
அயோத்திதாசரின் இந்திரர்தேச சரித்திரம் போன்றவை அவருக்கு முன்னரே இருந்த வாய்மொழி மரபுகளில் இருந்து உருவாக்கப்பட்டவை. அத்தகைய பல மாற்றுப்புராணங்கள் இந்தியாவில் உள்ளன. கேரளத்திலுள்ள புலையனார்கோட்டை புராணம், தமிழகத்திலுள்ள வெங்கலராசன் கதை போன்றவை உதாரணம். அவை மூடநம்பிக்கைகள், ஆதாரமில்லா வரலாறுகள் என்றெல்லாம் இன்றைய ஆய்வாளர் எவரும் சொல்வதில்லை. அவை ஏன் உருவாயின, ஏன் வழிவழியாக கைமாறப்பட்டு நீடிக்கின்றன, அவற்றை தக்கவைத்துக்கொள்பவர்களின் நோக்கம் என்ன, அவர்களின் வரலாறென்ன என்னும் கேள்விகள்தான் முக்கியமானவை.
இத்தகைய மாற்றுப் புராணங்களை, தொன்மங்களை, ஆசாரங்களை எவ்வண்ணம் நவீன வரலாற்றாய்வில் பொருள் கொள்ளவேண்டும், எப்படி ஒட்டுமொத்தத்தில் பொருத்தவேண்டும் என்று மிக விரிவான விவாதங்கள் நிகழ்கின்றன. இந்தியச் சூழலில் இன்னும் அவற்றில் ஒரு தெளிவு உருவாகியிருக்கிறது என்று சொல்வதற்கில்லை. அவற்றில் நானறிந்த வரை மூன்று தரப்புகள் உள்ளன
1.அ.கா.பெருமாள் போன்றவர்கள் இந்த புராணங்களிலும் கதைகளிலும் உள்ள தரவுகளை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர். அவை பொதுவரலாற்றுச் சித்திரத்தில் எந்த இடத்தையேனும் தெளிவுபடுத்த பயன்படுமா என்று பார்க்கிறார்கள். அ.கா.பெருமாளின் ஆய்வுமுறையில் இவை இரண்டாம்நிலைச் சான்றுகள் மட்டுமே.
2.இவற்றை எதிர்ப்பரசியலின் வெளிப்பாடாக எடுத்துக்கொண்டு இவை எவற்றுக்கான எதிர்வினைகள் என்று பார்க்கும் ஆய்வாளர்கள் உள்ளனர். ஆ.சிவசுப்ரமணியம் போன்ற இடதுசாரி ஆய்வாளர்களின் வழி இது
3.பெருவரலாற்றுச் சித்திரமே புனைவுதான், இவை இன்னொரு வகை புனைவுகள், புனைவுகளின் ஆடலாக அதிகாரம் எப்படிச் செயல்படுகிறது என்று மட்டுமே பார்க்கவேண்டும் என்று எண்ணும் ஆய்வாளர்கள் உள்ளனர். டி.தர்மராஜ் அவ்வகைப்பட்டவர்
இவ்விவாதங்கள் வரும்காலத்தில் இன்னும் நிகழும். இன்னும் தெளிவுகள் அமையும். பொதுவான அறிவுச்சூழல் அந்த துறைசார் விவாதத்தின் விளைகனிகளுக்காக காத்திருக்கவேண்டுமே ஒழிய இங்கு நின்றுகொண்டு அவர்கள் மேல் தீர்ப்பு சொல்லக்கூடாது.
ஜெ
ராஜ்கௌதமனின் அயோத்திதாசர் நூல் இலவசமாக
ராஜ் கௌதமனின் அயோத்திதாசர் ஆய்வுகள்- சுனீல் கிருஷ்ணன்
அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்- 6
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 5
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 4
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 3
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 2
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 1
==============