ஆசான் என்னும் சொல்

அன்புள்ள ஜெ,

சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் ஒரு விவாதம் நடைபெற்றது. சமஸை எவரோ ஆசான் என அழைத்துவிட்டனர். அதை கேலி செய்து மனுஷ்யபுத்திரன் எழுதினார். உடனே ஆசான் என அழைக்கப்படுவதை தான் வெறுப்பதாகவும், அப்படி அழைக்கவேண்டாம் என மறுப்பதாகவும் சமஸ் பதில் எழுதினார். ஆசான் என நீங்கள் அழைக்கப்படுவதை மனுஷ்யபுத்திரன் கேலி செய்தார்.

நான் நண்பர்களிடம் பேசும்போது ஆசான் என அழைப்பது பொருத்தமற்றது என்றும் நவீன எழுத்தாளர்கள் இந்த வகையான அடிமைத்தனத்தை ஏற்கக்கூடாது என்றும் சிலர் சொன்னார்கள். நான் உங்களுக்கு பல கடிதங்களை ஆசான் என்ற விளிப்புடனேயே தொடங்கியிருக்கிறேன். நீங்கள் அவ்வாறு அழைக்கப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மகேந்திரன் எம்

அன்புள்ள மகேந்திரன்,

நீங்கள் அனுப்பிய கடிதங்கள் பிரசுரமாகும்போது அன்புள்ள ஜெ என அந்த விளிப்பு மாற்றப்பட்டிருப்பதைக் கண்டிருக்கலாம். ஏனென்றால் பொதுவான ஓர் அழைப்பாக அச்சொல் திகழ்வதை நான் விரும்பவில்லை. அது என் அடையாளம் அல்ல. ஜெ என்றுதான் என் நண்பர்கள், வாசகர்கள் என்னை அழைக்கிறார்கள். ’ஜெ’ என்பது எல்லா வகையிலும் வசதியாக இருக்கிறது. அது வயது குறைவானவர்களுக்கு மரியாதையற்ற அழைப்பாக தோன்றுவதில்லை. அதேசமயம் அணுக்கமானதாகவும் இருக்கிறது. நான் பார்த்தவரை பெண்கள் அனைவருமே ஜெ என்றுதான் அழைக்கிறார்கள்.

அருண்மொழி என்னை ஜெயன் என அழைக்கிறாள். என் நண்பர் அன்பு போன்றவர்கள் ஜெயன் என்றே அழைக்கிறார்கள். ஜெயமோகன் என்று அழைக்கும் நண்பர்கள் பலர் உண்டு. சிங்கப்பூர் சரவணன் சிட்னி கார்த்திக்  போன்றவர்கள் ஜெமோ என்பார்கள். [ஆனால் பொதுவாக வசைபாடி, ஏளனம் செய்யும் கடிதங்கள் அனைத்திலுமே விதிவிலக்கே இல்லாமல் ஜெமோ என்றுதான் இருக்கிறது. இதன் உளவியல் என்ன என்று ஆராயவேண்டும்] வே.அலெக்ஸ், பாரிசெழியன், யுவன் சந்திரசேகர் போன்று என் வயதையொத்த நண்பர்கள் ‘டா’ போட்டு அழைப்பதுமுண்டு. சந்தோஷ் சரவணன் போன்ற இளைஞர்கள் அப்பா என அழைக்கிறார்கள். அவ்வழைப்புகளை ஏற்கையில் ஒவ்வொரு அழைப்புக்கும் ஏற்ப அக்கணங்களில் அவ்வாறு உருமாறிக்கொள்கிறேன்.

அழைப்பவர்கள் எப்படி அழைக்கவேண்டும் என நாம் ஆணையிட முடியாது. அது அவர்கள் நம்முடன் கொண்டுள்ள உறவின் வெளிப்பாடு. அது எதுவாக இருப்பினும் நமக்கு அவர்கள் அவ்வண்ணமே ஏற்புடையவர்கள். என்னைவிட ஒருவயது மூத்த யுவன் சந்திரசேகரிடம் நான் ‘ஏண்டா மயிரு மாதிரி பேசிட்டிருக்கே?’ என்று பேசமுடியும். என் மிக நெருக்கமான நண்பரும், என்னைவிட பதினைந்து வயது இளையவருமான ஈரோடு கிருஷ்ணனை ர், ங்க விகுதி இல்லாமல் பேசியதோ அழைத்ததோ இல்லை. இது உறவுகளில் இயல்பாக உருவாவது. இவற்றை திட்டமிட்டு உருவாக்கிக் கொள்ள முடியாது.

அழைப்புகளில் என்ன பிரச்சினை எழுகிறது? திருநங்கைகளிடம் நீங்கள் பேசியிருக்கலாம். நாம் அனைவருமே எண்ணும் ஒரு கேள்வியை அவர்களிடம் கேட்டிருக்கலாம். ‘ஏன் நீங்கள் பெண்ணுடைக்கு மாறவேண்டும்? ஏன் அகத்தே பெண் என்றாலும் ஆணிண் உடை அணிந்துகொள்ளக்கூடாது. சமூகத்தில் எதையும் இழக்காமல், கேலிப்பொருள் ஆகாமல் வாழ்வதற்கு அது நல்ல வழிதானே?’ அவர்கள் அதற்குச் சொல்லும் பதில் ஒன்றே. ‘நீ பொம்புள டிரெஸ் போட்டுனு சுத்தணும்னா சுத்துவியா? எவ்ளவுநாள் அப்டி இருக்க உன்னால முடியும்?” என்னிடம் ஒருவர் அப்படிக் கேட்க நான் மெய்யாகவே திகைத்துவிட்டேன்.

நாம் அகத்தே யாரோ அதற்குரிய புறத்தோற்றத்தைத்தான் இயல்பாக உணரமுடியும். அந்த ஆடைகளையே அணிய முடியும். அதேபோலத்தான் இதுவும். ஒருவர் தன்னை எப்படி அகத்தே வைத்திருக்கிறாரோ அப்படி அழைக்கப்படுகையில் இயல்பாக உணர்கிறார். உதாரணமாக ஒரு நாற்பது வயதுக்காரரை ஒரு பதினெட்டு வயதுப்பெண் ‘அங்கிள்’ என்று அழைத்தால் திடுக்கிடுவார். ஆனால் அவருக்கே ஒரு பதினெட்டு வயது மருமகள் இருந்து அவள் அப்படி அழைத்தால் இயல்பாக எடுத்துக்கொள்வார். பலர் ஐம்பது வயதுக்குமேல் தாத்தா என அழைக்கப்படுகையில் நிலைகுலைகிறார்கள். ஆனால் அவர்களுக்கே பேரர்கள் பிறந்தபின் இயல்பாக அதை எடுத்துக்கொள்கிறார்கள்.

நான் விஷ்ணுபுரம் நாவல் எழுதும் வரை எழுத்தாளர் என்று எந்த கடிதத்திலும் போட்டுக்கொண்டதில்லை. சொல்லிக்கொண்டதும் இல்லை. எனக்கே அது கொஞ்சம் பொருந்தாததாக தோன்றியது. ஆனால் அதன்பின் அச்சொல் அன்றி வேறேதும் என்னை வகுக்காது என்று உணர்ந்தேன். வாசகர் அல்லாத எவரிடமும் நான் பி.எஸ்.என்.எல் ஊழியன் என்றே சொல்வேன், எழுத்தாளன் என சொல்லிக்கொள்ளவே மாட்டேன். ஆனால் எப்போதும் உள்ளூர எழுத்தாளன் என்றே உணர்ந்தேன்.

ஒருவர் நம்மை ஒருவகையில் அழைக்கையில் அந்த உறவை அவர் அவ்வண்ணம் வகுத்துக்கொள்கிறார் என்பதையே வெளிப்படுத்துகிறார். நாம் அந்த உறவை அவர் எண்ணியபடி எற்கிறோமா இல்லையா என்பதைக் கொண்டே அந்த அழைப்பை ஏற்கிறோம். நாம் நெருக்கமாக உணராத ஒருவர் நம்மை நெருக்கமான சொல்லால் அழைத்தால் ஒவ்வாமை கொள்கிறோம். மிக நெருக்கமாக உணரும் ஒருவர் சம்பிரதாயமாக அழைத்தாலும் வருத்தம் கொள்கிறோம்.

ஆகவே ஒருவர் பிறர் தன்னை ஒரு குறிப்பிட்ட சொல்லால் என அழைத்தால் ஒவ்வாமை கொள்கிறார் என்றால் இரண்டு பொருள்தான். ஒன்று அவர் அவ்வாறு தன்னை உணரவில்லை. அல்லது அழைப்பவர் அவ்வாறு தன்னை அணுகுவதை விரும்புவதில்லை. எதுவானாலும் அது அவருக்கும் அவரை அழைப்பவர்களுக்குமான பிரச்சினை. அதில் மூன்றாமவர் சொல்ல ஒன்றுமில்லை.

நாம் நம் சூழலில் அழைப்புகளை ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் மாற்றிக்கொண்டேதான் இருக்கிறோம். பலசமயம் ஒருவரையே வெவ்வேறு வகையில் அழைக்கிறோம்.நான் என்னைவிட இருபது வயது மூத்த பாலு மகேந்திராவை பாலு என்றுதான் அழைத்தேன். ஏழுவயது மூத்தவரான மணி ரத்னத்தை மணி என்றுதான் அழைக்கிறேன். ஆனால் மேடைகளில் அவ்வாறு சொல்ல மாட்டேன். அவர்களுடைய உதவியாளர்களிடம் அவ்வாறு சொல்ல மாட்டேன். சார் சேர்த்துக்கொள்வேன்

தேவதேவனை கவிஞரே என்றுதான் அழைக்கிறேன். விக்ரமாதித்யனை அண்ணாச்சி என்று. கவிஞர் என அழைத்ததே இல்லை. தேவதச்சனை சார் என்று. மனுஷ்யபுத்திரனை மேடையில் மனுஷ்யபுத்திரன் என்று சொல்வேன். ஆனால் ஹமீது என அழைக்கவே விரும்புவேன். முப்பதாண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமான அந்த அழகான குண்டுப்பையனாகிய ஹமீதின் நினைவை நான் இழக்க விரும்பவில்லை. ஆனால் ஞானியை ஞானி என்றுதான் அழைத்தேன். தனிப்பேச்சில் ‘முட்டாத்தனமா பேசக்கூடாது’ என்றெல்லாம் அவரிடம் பேசுவேன். ஆனால் மேடையில் அவ்வாறு பேசமாட்டேன்.

ஒருவர் தன்னை பிறர் இப்படித்தான் அழைக்கவேண்டும் என்று சொன்னால் அப்படி அவரை அழைக்கலாம், அல்லது நாம் விரும்பியபடி அவரை அழைக்கலாம்.  அந்த அழைப்பை அவர் ஏற்கிறாரா, நம்மை ஏற்கிறாரா என்பதெல்லாம் அவருடைய முடிவு.

ஒருவரை இப்படித்தான் அழைக்கவேண்டும் என பொதுவாக ஒரு கட்டாயம் உருவானால், அதை அவரோ அவரைச்சூழ்ந்தவர்களோ கட்டாயப்படுத்தினால் அது அதிகாரம். மொழியில் நிகழ்த்தப்படும் ஆதிக்க வன்முறை. அங்கே எதிர்த்து நிற்பது இன்றியமையாதது.

ஆகவேதான் நான் பெரியார் என்றோ அறிஞர் அண்ணா என்றோ மகாத்மா காந்தி என்றோ மாவீரன் பிரபாகரன் என்றோ சொல்வதில்லை. அப்படி சொல்லவேண்டும் என இன்னொருவர் என்னிடம் சொல்ல நான் ஏற்பதில்லை. ஆனால் நித்ய சைதன்ய யதியை குரு என்று சொல்கிறேன். அந்தரங்கமாக உணரும்போது நித்யா என்பேன். என் தனிக்குறிப்புகளில் அவரை ஒருமையில் ‘நித்யா உனக்கு…’ என்றெல்லாம் எழுதியிருக்கிறேன். அவரை குரு என்று அழைக்கவேண்டும் என்பது நெறி அல்ல. எவரும் கட்டாயப்படுத்துவதில்லை. சொல்லப்போனால் பெரும்பாலானவர்கள் அவரை குரு என அழைப்பதை அவர் விரும்புவதுமில்லை. ‘Call me Nitya’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

கவனியுங்கள், ஆசான் என்ற சொல்லை கேலி செய்பவர்கள் அத்தனை அரசியல் பட்டங்களையும் வாய்நிறையச் சொல்லத் தயங்காதவர்கள். பட்டங்கள் அடைமொழிகள் அன்றி பெயரைச் சொல்லவும் பயப்படுபவர்கள். ஏனென்றால் அது அரசியல். அங்கே படிநிலைகளும் பணிவும் முதல் நிபந்தனை. அத்தனை சொற்கள் வழியாகவும் திரும்பத் திரும்ப பணிதலை அறிவித்தாகவேண்டும்.

இக்காரணத்தால்தான் நவீன இலக்கியத்தில் பொதுவாக அடைமொழிகள், பட்டப்பெயர்கள், மரியாதை விளிப்புகளை தவிர்க்க நினைத்தனர். அவற்றை ஒருவகை பாவனையாக கருதினர். ஆனால் அதன்பொருள் இங்கே அனைவரும் அறிவிலும் தகுதியிலும் நிகரானவர்கள் என்றும், எவரும் எவருக்கும் எதையும் கற்பிப்பதில்லை கற்றுக்கொள்வதுமில்லை என்றும் அல்ல. எவருக்கும் எவரிடமும் அணுக்கமான உறவுகளேதுமில்லை, அத்தனை உறவுகளும் நவீனச் சிந்தனைக் களத்தில் ஒன்றாகத் தரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அல்ல.

ஆசான் என இங்கே என்னை மட்டும் சொல்வதில்லை. முதன்மையாக மா.செந்தமிழன் என்பவரைச் சொல்கிறார்கள் என நினைக்கிறேன். அரசியலில் உள்ள பலரை அப்படிச் சொல்கிறார்கள். சமீபகாலமாக சு.வெங்கடேசனை போஸ்டர்களில் அவ்வாறு சொல்லியிருப்பதை காண்கிறேன்.

நான் என் பெயருடன் எழுத்தாளர் என்னும் சொல் அன்றி எதையும் எப்போதும் போட்டதில்லை, போட ஒப்புக்கொண்டதுமில்லை. ஆசான் என முதலில் அழைத்தவர் கே.வி.அரங்கசாமி. அது 2010ல் விஷ்ணுபுரம் விருதுவிழா மேடை நன்றியுரையில். அது அவருடைய உணர்வுநிலை. அந்த மேடையில் அவ்வாறு தோன்றியிருக்கலாம்.

அதன்பின் அவ்வப்போது அவரோ சில இளம் நண்பர்களோ அவ்வாறு  கடிதங்களிலோ குறிப்புகளிலோ சொல்வதுண்டு. எவரும் நேரில் அவ்வாறு அழைப்பதில்லை. அவ்வாறு அழைப்பதை எவரும் வலியுறுத்துவதுமில்லை, எதிர்பார்ப்பதுமில்லை. அதை மீறி ஒருவர் அவ்வாறு எழுதுகிறார், அழைக்கிறார் என்றால் அது அவருடைய உணர்வுநிலை அவ்வளவுதான்.

பெரும்பாலும் என்னை இன்று ஆசான் என்றெல்லாம் சொல்பவர்கள் கேலியாகவோ, இழிவுசெய்யவோதான் அவ்வாறு சொல்கிறார்கள். அச்சொல்லை அப்படி பரப்பி நிலைநிறுத்தியவர்கள் அவர்கள்தான். அனேகமாக ஒவ்வொரு நாளும் அவ்வாறு கேலியாக அழைத்து வசைபாடும், நகையாடும் நாலைந்து கடிதங்கள் வருகின்றன. அதுவும் இந்த ‘பேக்கேஜில்’ சேர்த்திதான். அதையும் அவ்வாறுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மனுஷ்யபுத்திரன் அவரை எவராவது ஆசான் என்று சொன்னால் ஏற்கவில்லை என்றால் அவர் தன்னகத்தே அவ்வாறு உணரவில்லை என்றுதான் பொருள். சமஸ் அவ்வாறு உணரவில்லை என்பதனால் அவருக்கு ஒவ்வாமை தோன்றுகிறது. அதனால் அச்சொல்லே பிழையானது, எவரும் எவரையும் அவ்வாறு அழைக்கக்கூடாது, அழைப்பவர்களுக்கு அறிவில்லை, அழைக்கப்படுபவர்களுக்கு தகுதியில்லை, அவ்வாறு அழைப்பதெல்லாம் அடிமைத்தனம் ஆணவம் என்றெல்லாம் சொல்ல எவருக்கும் உரிமை இல்லை.

பத்தாண்டுகளுக்கு முன்பு எனக்கு ஆசான் என்னும் சொல் அயலானதாகவே இருந்தது. அவ்வாறு அழைப்பதை ஏற்றதில்லை. வெண்முரசு எழுதியபின் அந்த அழைப்பு ஒவ்வாமையை அளிப்பதில்லை. ஆம், என்னை ஏற்பவர்களுக்கு, என்னிடமிருந்து கற்பவர்களுக்கு நான் ஆசான் என சொல்லிக்கொள்ள எந்த தயக்கமும் இல்லை. அதை உள்ளூர உணரும் ஒருவருக்கு அச்சொல் ஒவ்வாமையை அளிப்பதில்லை. என்னை ஒருவர் அப்படி நினைக்கிறார் என்றால் அவருக்கு நான் எதையோ கற்பித்திருக்கிறேன் என்று பொருள். அவ்வளவுதான். அது எனக்கு அளிக்கப்பட்டது, என் வழியாகச் செல்வது. இப்படித்தான் இது இன்று எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதில் ஒரு கண்ணி என்பது எளிமையையும் பெருமிதத்தையும் ஒரே சமயம் அளிப்பது.

இன்று என் புரிதல் கொஞ்சம் விரிவானது. போற்றுதலோ வசையோ எல்லா அழைப்பும் என்னைத்தான் சுட்டுகிறது. என்னை ஒருவர் எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதைச் காட்டுகிறது. ஆசான் என்பவருக்கு நான் ஆசிரியனாக இருக்கலாம். அவ்வாறு அழைத்த சிலர் பின்னாளில் புளிச்சமாவு என கெக்கலித்ததையும் கண்டேன். இந்த ஆட்டத்தில் அதெல்லாம் இயல்பே.

புளிச்சமாவு என எல்லா இடங்களிலும் சென்று எழுதிவைக்கும் ஒருவரை சென்றமாதம் நேரில் சந்தித்தேன். நேரில் மிகப்பவ்யமாக பேசினார். [ஏனென்றால் அவர் ஓர் உதவி இயக்குநர்] ’நீங்கள் புளிச்சமாவு என எழுதுவது தெரியும். நீங்கள் அவ்வாறு உணர்ந்தால் அவ்வாறே எண்ணிக்கொள்ளலாம், என்னிடமிருந்து உங்கள் வரை வந்துசேர்ந்தது அவ்வளவுதான் என்றுதான் அதன் பொருள். நான் கோபப்படுவேன் என்று நேரில் பணிவை காட்டவேண்டாம். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.’ என்று சொன்னேன். அதன்பின் அரைமணிநேரம் தொழில்முறையாகச் சினிமா பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். வசை, போற்றுதல் இரண்டையும் நிகராகப் பார்ப்பது இயல்பாக அமைவதில்லை, ஆனால் அதற்கு முயல்வது ஒரு நல்ல பயிற்சி.

பொதுவாக நான் விரும்பும் அழைப்பு ஜெ என்பதுதான். அதில் எந்த வண்ணங்களும் இல்லை.

ஜெ

முந்தைய கட்டுரைநிழற்காகம் – கடிதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா – இலக்கியமும் இளைஞர்களும்!- அருள்செல்வன்