தேவிபாரதி விருது விழா

இடம் டாக்டர் ஜீவா நினைவகம். நலந்தா மருத்துவமனை ஈரோடு

நேரம் : 28-1-2022 காலை 10 மணி

ஏன் எழுதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு, “கலை, நான் வாழ்வை எதிர்கொள்ளும் முறை. எழுத்து, மொழியின் வழியே நிகழ்த்தப்படும் சமூகச்செயல்பாடு. இலக்கியம் ஒருவரைப் பண்படுத்தும் என்றுதான் நினைக்கிறேன். அதன் எல்லாக் குறைகளோடும் ஏற்றுக்கொள்ளவும், சில தருணங்களில் வெறுக்கவும், நேசிக்கவும் கற்றுக்கொடுப்பவை இலக்கியம்தான்” என்கிறார் தேவிபாரதி.

வாழ்வூரிய மனிதர்களின் கதைகளை, அந்நிலத்திற்குரிய யதார்த்த குணங்களுடன் புனைவிலக்கியமாகத் தமிழில் பதிவுசெய்த எழுத்தாளுமை தேவிபாரதி அவர்களின் வார்த்தைகளை இக்கணம் நினைத்துக்கொள்கிறோம். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என தான் கையாண்ட ஒவ்வொன்றிலும் தன்னுடைய படைப்பாழத்தை விதைத்துச் சென்றவர் தேவிபாரதி. இனிவரும் தமிழ்ச்சமூகம் தம் இலக்கிய முன்னோடி என எண்ணிக் கொண்டாடத்தக்க ஆளுமைகளுள் இவர் முதன்மையானவர்.

கடந்த ஆண்டு எழுத்தாளரும் ஓவியருமான யூமா வாசுகி அவர்களுக்கு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வாண்டிற்கான தன்னறம் இலக்கிய விருது, எழுத்தாளர் தேவிபாரதி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. நோயச்சகால சூழ்நிலை என்பதால் தேவிபாரதி அவர்களின் நெருங்கிய நட்புவட்டங்கள் மட்டுமே பங்குபெறும் குறுங்கூடுகையாக இந்நிகழ்வு அமையவுள்ளது.

2021ம் ஆண்டிற்கான தன்னறம் இலக்கிய விருது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கரங்களால் தேவிபாரதி அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இவ்விருதுடன், நண்பர்களின் கூட்டிணைவில் விருதளிப்புத் தொகையாக ஒரு லட்ச ரூபாயும் அவருக்கு வழங்கவுள்ளோம். தமிழின் புனைவிலக்கியத் தொடர்ச்சியை தனது யதார்த்தவாத படைப்புமொழியால் செழுமைப்படுத்திய இலக்கியச் செயல்பாட்டிற்காக இவ்விருது அவருக்குப் பணிந்தளிக்கப்படுகிறது.

இவ்விருதளிப்பின் நீட்சியாக, தேவிபாரதி அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் அடங்கிய 392 பக்க புத்தகமானது, தன்னறம் நூல்வெளி வாயிலாக விலையில்லா பிரதிகளாக நண்பர்களுக்கு விரைவில் அனுப்பிவைக்கவுள்ளோம். தனது படைப்புகள் குறித்தும், வாழ்வனுபவம் குறித்தும் அவர் பேசிய நேர்காணல் காணொளித் தொகுப்பு ஒன்றும் அண்மையில் குக்கூ காணொளிப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

படைப்பியக்கத்தின் நீள்வரிசையைத் தங்கள் மொழியிருப்பால் தொடர்ந்து முன்னோக்கி திசைசெலுத்தும் எல்லா முன்னோடிப் படைப்பாளிகளையும் இக்கணம் நெஞ்சில் நிறைத்துக் கொள்கிறோம். நொய்யல் மனிதர்களின் வாழ்வுக்கதையினை எவ்வித பாவனைகளுமின்றி அதே உயிரீரத்துடன் படைப்பியற்றிய எழுத்தாளுமை தேவிபாரதி அவர்களை தன்னறம் இலக்கிய விருது வழியாக மீண்டும் சமகால இளையமனங்களுக்குத் துலங்கச்செய்வதில் தன்னிறைவு அடைகிறோம்.

தான் கொண்டிருக்கும் ஆழத்தால் தனித்துயர்வது தேவிபாரதியின் ஒவ்வொரு எழுத்துப்படைப்பும். ஆழங்களின் இருளும் செறிவும் ஒன்றிணைந்து முயங்கி அவர் படைப்புகளுக்கு அழியாவொளியை வழங்கிவிடுகிறது.

~

நன்றியுடன்,

தன்னறம் நூல்வெளி

குக்கூ காட்டுப்பள்ளி

முந்தைய கட்டுரைப.சிங்காரம்-பதிப்பாளருக்கு வேண்டுகோள்
அடுத்த கட்டுரைகதைகள் திரும்புதல் – கடிதம்