விஷ்ணுபுரம் விழா- கல்பனா ஜெயகாந்த்

கல்பனா ஜெயகாந்த் கவிதைகள்- கடலூர் சீனு

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

எல்லோரும் விஷ்ணுபுர விருது விழாவைப் பற்றி எழுதும் கடிதங்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கும் இம்முறை நடந்த விழா மிக மிக முக்கியமானது. என்னுடைய கவிதைத் தொகுப்பு இவ்விழாவில் வெளிவந்ததால் மட்டும் அல்ல. புத்தகம் இன்னும் வந்து சேராததால், வெளியீடு அடுத்த நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டதும், அங்கு நிகழ்ந்ததால்.

வெளியீடு அன்று நடக்கவில்லை என்றறிந்ததும், என்னை சந்தித்த அனைவரின் கண்களிலும் அன்னை எழுந்தாள். பரிவென்னும் பெருமலரொன்று அங்கு விரியக் கண்டேன். அதன் ஆயிரம் இதழ்களை ஒவ்வொருவரும் பற்றிக் கொண்டனர். அம்மலர் தானே இவர்களையெல்லாம் இலக்கியம் நோக்கி உந்துகிறது என்று நினைத்துக் கொண்டேன். அழகிய மாய உணர்வது. எனக்குக் காணக் கிடைத்தது.

மற்றொன்று அண்ணாச்சியின் வெடிச் சிரிப்பு. தர்மன் அவர்கள், இவர் செய்த அட்டகாசங்களையெல்லாம் சொல்லச் சொல்ல அனுபவித்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார் மனிதர். அவ்வளவு தான் வாழ்க்கை அல்லவா? மற்றொரு மாய கணம், அண்ணாச்சியின் மனைவி, ஆவணப்படத்தில் ‘உண்மையச் சொல்லணுமா, பொய்யச் சொல்லணுமா..’ என்று சொல்லி விட்டு ஒரு பார்வை பார்த்தது. அக்கூட்டத்தில் அதை ரசிக்காதவர் என்று யாருமே இருந்திருக்க முடியாது. பலமுறை எனக்கு ஞாபகத்தில் அது வந்து கொண்டேயிருந்தது.

நிறைய அழகிய நினைவுகளைத் தருவதாக அமைந்து விட்டது இவ்விழா. எல்லா அமர்வுகளும் நன்றாக இருந்தன. தாய் மொழி தெலுங்கின் மீது கொண்ட பெரும் பற்றால், கவிஞர் வீரபத்ருடுவிடம் சென்று அவருடைய ‘மேலுகோவடம்..-விழிப்பது’ என்ற அவரது கவிதை எத்தனை அழகானது என்று உணர்ச்சி வசப்பட்டு சொல்லி விட்டு வந்தேன். வந்து பாவம், ஜாஜாவிடமும் சௌந்தர் ஜீயிடமும் மிச்சத்தை உணர்ச்சி மீதுற சொல்லிக் கொண்டிருந்தேன். பின்னர் தான் ஜெயகாந்த் சொன்னார், அது ‘மேலுகோல்படம்- எழுப்புவது’ என்று..:)

விழாவைப் பற்றி வந்த சில கடிதங்கள் என்னைத் திகைக்கச் செய்கின்றன, எங்கிருந்து இவர்கள்  போன்ற இலட்சியவாதிகள் வருகிறார்கள் என. விழாவில் பங்கு பெறும் அனைவரும் லௌகீகத்தில் இருப்பவர்கள் தான். பத்தரை மாற்று தங்கமாயிருப்பது உதவாது என்றறியாதவர்கள் அல்ல. ஆயினும் தங்கள் லட்சியக் கனவை வாழ்ந்து தீர்க்க இதை ஒரு வாய்ப்பாக பார்க்கிறார்கள். உண்மையில் மிகவும் பெருமையாக உணர்கிறேன். நன்றி.

அன்புடன்,

கல்பனா ஜெயகாந்த்.

முந்தைய கட்டுரைகுமரித்துறைவி – அய்யனார் விஸ்வநாத்
அடுத்த கட்டுரைவெள்ளையானை – இர.மௌலிதரன்