அம்பை எனும் பெண்

ஒவ்வொர் முறையும் பாரதத்தை படிக்கும் போதும் முதலில் எனக்கு தோன்றுவது நாம் அனைவரும் நம் வாழ்வின் வழி அவ்விதிகாசத்தை மீண்டும் மீண்டும் நடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதேயாகும். பாரதம் நம் வாழ்வின் பிரதி. மனிதரின் அகம் புறம் சார்ந்த எல்லா தேவ அசுர வடிவுகளையும் நாம் அதில் காணலாம். மகாபாரதம் என்னும் சதுரங்கத்தில் அத்தனை உயரிய வீரம் நிறைந்த ஆண் மகன்களும் ஆட்டக்காய்களே. அதில் ஆட்டக்காரர்கள் பெண்களே.அவர்களின் அன்பு ஏக்கம் கருணை வஞ்சம் துரோகம் கோபம் துக்கம் வழியே சமைக்கப்படுகிறது

விதியின் மிக முக்கிய திருப்பங்கள். பாரதம் நெடுகிலும் எத்தனையோ பெண்கள் எழுந்து வருகிறார்கள். அவர்களில் எவரையும் நாம் எளிதில் கடந்து செல்ல இயலாது.அவர்களில் நான் அணுக்கமென முதலில் உணர்ந்தது அம்பையை.எனில் நாங்கள் இருவரும் இரு துருவங்கள். நான் உணரா உணரவே முடியா உணர்வுகளின் தொகுப்பே அவள் உள்ளம். உண்மையில் பாரதம் அவளில் தொடங்குகிறது. அவள் ஏமாற்றத்திலும் அவமானத்திலும் பின் வரும் நிகழ்வின் விதைகள் முளைக்கிறது. அவள் கண்ணீரின் தொடக்கத்தில் எழுகிறது இக்காவியம்.

அம்பை அம்பிகா அம்பாலிகா மூவரும் காசி நாட்டின் இளவரசிகள். அவர்களின் சுயம்வரத்தில் அனைவரையும் போரில் வென்று உடல் பலமில்லா தன் தம்பிக்கு அவர்களை மணம் புரிவிக்க கடத்தி வருகிறார் பீஷ்மர். இவர்களில் அம்பை சால்வன் என்னும் மன்னனை மனத்தில் நினைத்திருப்பவள். தன் சுயம்வரத்தில் அவனை மணக்க காத்திருந்தவள்.ஆனால் பீஷ்மரின் எதிர்பாராத வருகை அவள் கனவுகளை கலைத்து விடுகிறது.அவள் மற்ற இளவரசிகள் போல் அழவில்லை. பீஷ்மரிடம் சென்று தன் மன உணர்வுகளை எடுத்துரைத்து தனக்காக தன் வாழ்விற்காக வாதிடுகிறாள்.அவள் மன்றாடவில்லை வாதிடுகிறாள்.

இன்று எத்தனையோ யுகங்கள் கடந்தும் நம்மில் எத்தனை பேர் நமக்காக பேசுகிறோம். இந்நிகழ்வில் தான் நான் அம்பையை அணுக்கமென உணர்ந்தேன்.(அம்பையை நான் எத்தனையோ விதமான புனைவுகளில் வாசித்திருக்கிறேன். ஆனால் நான் உருவகித்திருந்த அம்பை முதற்கனல் என்னும் புனைவில் மட்டுமே வெளிப்பட்டிருக்கிறாள். அம்பையின் அத்தனை மனக் கொந்தளிப்புகளும் நெகிழ்வுகளும் மிக நுண்மையாக இந்நூலில் விவரிக்கப்பட்டிருக்கும்.அதன் வழி எழுதப்பட்டதே இது) இனி அவள் நிலையறிந்த பீஷ்மர் அவள் விரும்பிய சால்வனிடம் செல்ல அனுமதிக்கிறார்.நிருதன் என்னும் குகனின் படகிலேறி சால்வ தேசம் செல்கிறாள் அம்பை. அவளை காணும் படகோட்டிக்கு அவள் ஒரு எரிதழலென தெரிகிறாள்.தன்னில் வரும் எதையும் உண்டெரிக்கும் எரிதழல்.

இறுதியாக சால்வனை காணும் அம்பை அவன் முன் மகிழ்வுடன் முன் நிகழ்ந்ததை கூறுகிறாள். சால்வன் அவளிடம் முகம் கொடுத்து பேச மறுக்கிறான். பீஷ்மரிடம் தான் தோற்றதால் அவர் இடும் பிச்சையென அவள் ஆவாள் என்றும் அதனால் அவளை மணம் புரிய தான் விரும்பவில்லை என்றும் அம்பையை நிராகரிக்கறான் சால்வன். இந்த வரியில் தீண்டப்படுகிறது அம்பையின் சுய மரியாதை. சீ என அவனை விட்டு விலகும் அம்பை என் நெஞ்சமென்னும் பல்லக்கில் பிணம் போல் உன் அன்பையா இதுவரை சுமந்தலைந்தேன் என இழித்துரைத்து விலகுகிறாள்.

திரும்பி வரும் வழியில் தன் மனம் இலகுவாகி பறப்பது போல் உணர்கிறாள். அம்பைக்கு தான் சால்வன் மேல் கொண்ட காதல் தன் மனம் தன் அத்தனை கற்பனை வழிகளிலும் பெருக்கிக் கொண்டது என்று தெளிவாக தோன்றுகிறது.திரும்பி வந்து படகில் அமர்ந்தவாறு அஸ்தினாபுரம் செல் என்று நிருதனிடம் சொல்லும் போது அவள் ஒரு அகல் ஒளியென குளிர்ந்திப்பதாக அவன் உணர்கிறான். பீஷ்மரிடம் சென்று தன் பெண்மையின் அத்தனை மெல்லியல்புகளும் வெளித்தெரிய தன்னை கவர்ந்து வந்த அவரே தன்னை மணக்குமாறு வேண்டுகிறாள்.

பீஷ்மர் தன் பிரம்மச்சரிய விரதம் பற்றி உரைத்து அவளை மணக்க மறுக்கிறார். அப்போது அவரில் வெளிப்படும் மெல்லிய ஏளனம் அவளை வெகுண்டெழ செய்கிறது. அவர் மீதிருந்த அத்தனை நம்பிக்கைகளும் சிதறி அவள் மனம் தீரா கோபம் கொள்கிறது. அவளுக்கெதிராக நிகழ்ந்த அத்தனை அவமதிப்புகளுக்கும் அவள் நியாயம் கோருகிறாள். இப்போதும் அவள் மன்றாடவில்லை. நியாயம் கோருகிறாள். அதற்காக அவளறிந்த எல்லா இடங்களிலும் அலைகழிந்து மேலும் அவமதிக்கப்படுகிறாள்.

இறுதியில் பீஷ்மரின் குருவாகிய பரசுராமரிடம் சென்று தனக்குரிய நியாயத்தினை வழங்குமாறு உரைக்கிறாள்.பரசுராமர் அம்பையின் பக்கமிருக்கும் உண்மைக்காக தன் முதன்மை சீடருடன் பெரும் போர் புரிகிறார். வெற்றி தோல்வியின்றி தொடரும் போர் இறுதியில் இறைவனின் தலையீட்டால் இடை நிற்கிறது. அம்பை தன் மறுக்கப்பட்ட நியாயத்திற்காக பீஷ்மரை கொல்வதாக சூளுரைத்து நெருப்பில் பாய்ந்து மடிகிறாள். சிகண்டியென மறுப்பிறப்பெடுத்து பீஷ்மரை வீழ்த்துகிறது அம்பையின் வஞ்சம். பெண்மை என்றாலே கருணையென்றும் கடவுள் என்றும் உருவகித்து நம் உள்ளத்து இயல்புகளை அடக்கி வாழ பயிற்றுவித்த சமூக அமைப்பில் அம்பை எத்தகைய எழுச்சி வடிவம்.

அவள் விதியென்று வந்த வாழ்வை ஏற்று வாழவில்லை. அவள் வாழ்வை அவளே வடிவமைக்க விரும்புகிறாள். அதன் மைய புள்ளியில் புண்பட்டு கீழ் விழும் போதும் தன் பெண்மையின் அத்தனை அக எழுச்சியோடும் நின்றிருக்கிறாள் .தான் விரும்பிய வாழ்வமையவில்லை என்று அவள் தன்னை மாய்த்துக் கொள்ளவில்லை மாறாக தன் பக்கத்து நியாயம் கவனிக்கப்படவில்லை என்பதற்காக உயிர் துறக்கிறாள்.

அம்பை பெண்களின் அக வலிமைக்கான ஒரு அழகிய குறீயிடு.அம்பைகள் எல்லா காலக்கட்டத்திலும் பிறந்துக் கொண்டே இருக்கிறார்கள். அதே தீரா வலிமையோடு தனக்கான நியாயங்களை கேட்டு போராடிக் கொண்டும் இருக்கிறார்கள். நினைவிருக்கட்டும் அவர்கள் ஒருபோதும் மன்றாடவில்லை மாறாக போராடுகிறார்கள்.

திவ்யா சுகுமார்

முந்தைய கட்டுரைஅயோத்திதாசர் இரு கேள்விகள்
அடுத்த கட்டுரைபனை மெய்யியல்