வேதாளம், கடிதங்கள்-3

வேதாளம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

உங்களுடைய ஒரு கதை வேறேதோ கதையிலுள்ள ஒரு வரியின் நீட்சியாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். துணைவன் கதையில் இந்த வரி இருக்கிறது

அவனுக்கு துப்பாக்கி ஒரு நாய் என்று தோன்றுவதுண்டு. நீளமான ஒளிரும் நாக்கு கொண்டது. கூடவே இருப்பது. அல்லது விக்ரமாதித்தன் கதையின் வேதாளம் அது.

கேள்விகள் எதையும் கேட்பதில்லை. மௌனமானது. குளிரானது நடக்கும்போது மெல்ல பிடரியிலும் தொடையிலும் மாறி மாறி தட்டிக் கொண்டிருப்பது.

ஆனால் உண்மையில் கேள்விகள் கேட்பதில்லையா? என்ன அல்லது கேள்விகளை அவன்தான் செவி கொள்வதில்லையா? அது ஏதோ புதிர்களை போட்டுக்கொண்டிருக்கிறது. அவன் ஒருபோதும் பதில் சொல்ல முடியாதவை

இந்த வரியே வேதாளம் கதையாக ஆகியது என நினைக்கிறேன். வேதாளம் என்பது விக்ரமாதித்யனிடம் விடைசொல்ல முடியாத புதிர்களை போடுவது. செத்துப்போனது. ஆவியாக இருந்துகொண்டிருப்பது. இதெல்லாமே அந்த துப்பாக்கியும் செய்கிறது.

அதிகாரம், அரசு, பொறுப்பு இதெல்லாம்தான் அந்த வேதாளம். அது கேள்வி மட்டும்தான் கேட்கும். சடாட்சரத்தால் பதில்சொல்ல முடியாது. அரசாங்கத்தின் காலடிகளில் கிடந்து உழலும் அரசாங்கத்தி நட்டு போல்டுகளாக வாழும் எவராலும் பதில் சொல்லிவிட முடியாது

ஆர்.சிவக்குமார்

***

அன்புள்ள ஜெ,

வேதாளம் கதையின் உரையாடல்களின் ஒழுக்கு அபாரம். சுந்தர ராமசாமியின் பிரசாதம் கதையின் சாயல் இருந்தது. அதில் போலீஸ்காரருக்கும் மாட்டிக்கொண்ட அய்யருக்குமான உறவு உரையாடல் வழியாக வேடிக்கையாக உருவாகி வரும். ஆனால் அதில்கூட ஆசிரியர் புகுந்து அய்யரின் தோற்றம், மனநிலை, போலீஸ்க்காரரின் தோற்றம் எல்லாவற்றையும் சொல்லியிருப்பார். இக்கதை நம்மருகே அதுபாட்டுக்கு நிகழ்வதுபோல் இருக்கிறது

நான் 17 ஆண்டுகள் அரசில் வேலைபார்த்திருக்கிறேன். அரசுவேலை என்பதே ஒரு வேதாளம். என்ன செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்ன விளைவு எதுவுமே தெரியாது. நம்பிச் செய்துகொண்டே இருக்கவேண்டும். 2012ல் வேலையை விட்டு கடைவைத்தேன். டபிள் மடங்கு உழைப்பு. ஆனால் நிம்மதி. ஏனென்றால் வேதாளம் தோளைவிட்டு இறங்கிவிட்டது. யாருக்காகவோ யாருடைய பிணத்தையோ சுமக்கவேண்டியதில்லை என்னும் ஆறுதல்

என்,ராமச்சந்திரன்

வேதாளம்- கடிதங்கள்-1

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- பிகு
அடுத்த கட்டுரைகி.ரா. இணையதளம்