பொதுப்பணி-ஒரு சுருக்கமான உரை

ஜீவா நினைவாக ஒரு நாள்

ஈரோடு ஜெயபாரதி – மாற்றுக்கல்விக்கென ஒரு வாழ்க்கை

மருத்துவர் ஜீவா நினைவேந்தல், ஈரோடு

அஞ்சலி டாக்டர் வி. ஜீவானந்தம்- குக்கூ சிவராஜ்

கண்கூடான காந்தி

அன்புள்ள ஜெ

தனது வாழ்வு முழுவதும் சமூகம், சூழலியல்,பொதுவுடமைச் சிந்தனை, காந்தியம், எழுத்து, பொதுச்சேவை சார்ந்த அறப்பணிகளில் தொடர்ந்து தன்னை முனைப்புடன் ஈடுபடுத்தி, அந்தந்த துறைகளில் பல்வேறு சாத்தியங்களை உருவாக்கிக் காட்டியவர் ஈரோடு மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்கள். நண்பர்கள் மற்றும் மக்களின் பொதுப்பங்களிப்பில் மருத்துவர் ஜீவா உருவாக்கிய ‘கூட்டுறவு மருத்துவமனைகள்’ என்னும் முன்னெடுப்பானது இந்திய அளவில் முன்னுதாரணமானவை. மக்கள் மருத்துவமனைகள் என்ற பெயரில் இன்றளவும் அது இயங்கிவருகிறது.

காலஞ்சென்ற மருத்துவர் ஜீவா அவர்களின் சமூகச் செயல்பாடுகளைத் தொடர்ந்து நிகழ்த்துவதற்கும், அவர் விட்டுச்சென்ற நிறைய கனவுத் திட்டங்களை உரியவாறு செயல்படுத்துவதற்கும் ஏதுவாக, நண்பர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து, ‘மருத்துவர் ஜீவா அறக்கட்டளை’ என்ற கூட்டமைப்பைத் துவக்கியுள்ளனர்.

மருத்துவர் ஜீவா அறக்கட்டளையின் துவக்கம் டிசம்பர் 12ம் தேதி ஈரோட்டில் மிகச்சிறப்புற நிகழ்ந்து முடிந்தது. சிறப்பு அழைப்பாளர்களுள் ஒருவரான எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் மருத்துவர் ஜீவா குறித்த உரையாற்றிய நினைவுரையின் காணொளிப் பதிவு இது. அய்யலு குமரன், சரண், மோகன் தனிஷ்க், விமல், அங்கமுத்து ஆகிய தோழமைகளின் கூட்டுழைப்பால் இந்த காணொளி சாத்தியப்பட்டது.

எல்லாவகையிலும் மருத்துவர் ஜீவாவின் செயல்மனதை இன்னும் அணுக்கமாக அறியச்செய்கிற நல்லுரை இது.

ஸ்டாலின் பி

அன்புள்ள ஸ்டாலின்

சுருக்கமான உரை. உண்மையில் இப்போது இந்த வகையான பதினைந்து நிமிட உரைகளில் ஆர்வம் செல்கிறது. மேற்கே ஏழு நிமிட உரை புகழ்பெற்று வருகிறது. அதைக்கூட இங்கே நாம் முயற்சி செய்துபார்க்கலாம்.

இத்தகைய உரைகளில் எதையும் விளக்க முடியாது. நிரூபிக்க முடியாது. பின்புலம், தனியனுபவம் ஆகியவற்றைச் சொல்லமுடியாது. ஆனால் ஒரு தரப்பை, ஒரு வரையறையை அழுத்தமாகச் சொல்லிவிட முடியும்.

நம் இலக்கியக் கூட்டங்களில் காலத்தை கருத்தில் கொள்ளாத உரைகள் நிகழ்கின்றன. அடுத்தவர் நேரத்தை எடுத்துக்கொண்டு பேசிக்கொல்வது பெருகி வருகிறது. குறிப்பாகச் சென்னையின் சில நவீன இலக்கியப் பேச்சாளர்கள், சில பேராசிரியர்கள். அவர்கள் பேசும் எந்த விழாவுக்கும் என்னை அழைக்கக்கூடாது என தெளிவாக அனைவரிடமும் சொல்லி வருகிறேன். அழைப்பிதழில் அவர்கள் பெயர் இருந்தாலே தவிர்த்துவிடலாம்.

நான் எப்போதுமே என்னை பேச்சைக் கேட்பவர்களின் தரப்பிலேயே வைத்துப் பார்க்கிறேன். இலக்கில்லாத பேச்சு, மையமில்லாத பேச்சு, தயாரிப்பில்லாத பேச்சு என்னை பெரும் சித்திரவதைக்குள்ளாக்குகிறது. முன்பென்றால் நான் அரங்கில் எழுந்து கண்டித்து விடுவேன். அப்படி பலரை பேச்சை நிறுத்தியுமிருக்கிறேன். இப்போது நானே மேடையில் அமர்ந்திருக்க அது நிகழ்கிறது. வேறு வழியில்லை.

ஆகவே இனிமேல் மேடைகளில் மிகக்கவனமாக இருக்கவேண்டுமென நினைக்கிறேன். என் பேச்சு சரியாக இருந்தால் மட்டும் போதாது , மேடையில் நேரம் மீறி எவர் பேசினாலும் அப்படியே எழுந்து வெளியேறிச் சென்றுவிடுவது என்னும் முடிவில் இருக்கிறேன். ஏனென்றால் என் பெயரை பார்த்து என் வாசகர்கள் பலர் விழாவுக்கு வருகிறார்கள். அவர்களை இந்த மேடைவதையாளர்கள் பிடித்துக்கொள்கிறார்கள். நடைமுறையில் நான் என் வாசகர்களை இவர்களுக்குப் பிடித்துக் கொடுப்பதாக ஆகிவிடுகிறது.

ஒரு நிகழ்வில் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் பேசினால் எந்த உரையும் 20 நிமிடங்களுக்குமேல் நீளக்கூடாது. எந்தக்கூட்டத்திலும் வரவேற்புரை, அறிமுக உரை 10 நிமிடங்களுக்குள் நிகழவேண்டும். மூன்றுபேருக்குள் நிகழும் கூட்டம் என்றால் உரை 40 நிமிடம் நீளலாம். மேடையில் ஒரு தலைப்பில் ஒரே ஒருவர் மட்டுமே பேசுகிறார் என்றால், அப்பேச்சின்பொருட்டே பார்வையாளர் வந்திருக்கிறார்கள் என்றால் மட்டுமே அதற்குமேல் பேச்சு நீளலாம். சாதாரணமாக ஒன்றரை மணிநேரம். அதிகபட்சம் இரண்டு மணிநேரம்.

நாம் மேடைநிகழ்வுகளை கொஞ்சம் ஒழுங்குபடுத்த வேண்டும். இல்லையேல் அடுத்த தலைமுறையினர் எவரும் இலக்கிய நிகழ்வுகளுக்கே வராமலாகிவிடுவார்கள். விஷ்ணுபுரம் அரங்குகளுக்கு வேறெங்கும் தென்படாத இளைஞர்கள் வருவதற்கான காரணம் நிகழ்ச்சிகள் குறித்த காலத்தில் சுருக்கமாக நிகழும் என்னும் உறுதிப்பாடுதான்.

இந்த உரை எனக்கு நிறைவளித்தது. ஜீவா இப்படித்தான் பேசுவார். காந்தியும்.

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா – கொள்ளு நதீம்
அடுத்த கட்டுரைதேவிபாரதி ஓர் உரையாடல்