அன்புள்ள ஜெ
வெண்முரசை வாசித்து முடித்தபின் இன்று என் வழக்கம் அதை கைபோன போக்கிலே புரட்டி தென்படும் வரிகளை வாசிப்பது. அப்போதுதான் இந்த படைப்பு எத்தனை செறிவாக எழுதப்பட்டுள்ளது என்ற வியப்பு உருவாகிறது. முதல் வாசிப்பில் கதையோட்டமும் உணர்ச்சிகளுமே தெரிந்தன. ஆனால் இப்போது வரிகளாக வாசிக்கையில் ஒவ்வொரு வரியிலும் அரிய கவித்துவப் படிமங்கள், வாழ்க்கையைப் பற்றிய கூர்ந்த பார்வைகள் இருக்கின்றன. தனித்தனி வரியாகவே அற்புதமான புதுக்கவிதையாக நிலைகொள்ளும் தகுதிகொண்டவை. அத்தகைய வரிகளாலேயெ முழுநாவல்களும் எழுதப்பட்டுள்ளன.
வெண்முரசை வாசித்து முடிக்க முடியாது என்பது இதனால்தான். மேலோட்டமாக எதையாவது வாசித்துவிட்டு வாசித்தோம் என்று சொல்லிக்கொள்ளலாம். அது எந்த புராணத்தை குறிப்பிடுகிறது, எந்தப்புராணத்தை எப்படி மாற்றுகிறது என்பதெல்லாம் நுட்பமான வாசிப்பின் வழியாகவே அறியமுடியும். எங்கே எப்படி அது தொன்மத்தை இன்றைய வாழ்க்கையுடன் இணைக்கிறது என்பது வாசிப்பின் நுட்பம் அறிந்தவர்களால் மட்டுமே உணரத்தக்கது. தமிழில் இன்னொரு எழுத்தை இதற்கு மேலோட்டமாகக்கூடச் சமானமாகச் சொல்லிவிட முடியாது.
நான் டிவிட்டரில் அடிக்கடி வெண்முரசு என தேடுவேன். அதில் உதிரி வரிகளாக வரும் மேற்கோள்களை வாசிப்பேன். அவற்றில் இருந்து இதை யார் எந்த சந்தர்ப்பத்தில் சொன்னார்கள் என்று யோசிப்பதும், வெண்முரசுக்குள் செல்வதும் ஒரு பெரிய அனுபவம். தனித்த வரியாகவே அபூர்வமான கவிதையனுபவமும் வாய்க்கும். இன்றைக்கு உங்கள் வாசகி ரம்யா டிவிட்டரில் கொடுத்திருந்த வரிகள் இவை.
இந்த வரிசையின் கடைசி வரி ஒரு அற்புதமான ஒருவரிக்கவிதை
எம்.பாலகிருஷ்ணன்
***
படைக்கலம் என்பது மானுடஉள்ளத்தின் பருவடிவே. ஆற்றலால் அல்ல, நுண்மையாலேயே கருவிகள் வெல்லற்கரியவை ஆகின்றன. எந்த வில்லை விடவும் நுண்மையானது யாழும் அதன் சுருதியும் என்றுணர்க!
“இந்த மண்ணில் முன்பு விழுந்து எழுந்து கண்ணீருடன் விலகிய கணமே நான் அறிந்தேன், உங்களை சினம் கொள்ளச் செய்வது எது என. உங்கள் கருவிகளில் ஒவ்வொருநாளும் நீங்கள் அறியும் நிறைவின்மைதான். நான் அந்நிறைவை அடைந்தேன்.”
விழைவு உடல் புகுந்த நோய் போல. முற்றிலும் விலகுவதில்லை.
“இன்றறிந்தேன், குருதிதேடும் கான்விலங்குகள் உறவுகள். குருதிவிளையும்வரைதான் நாம் பேணப்படுவோம்”
“ஆற்றலற்ற உள்ளங்கள் எப்போதும் மிகையாகவே எதிர்வினை புரியும். அவர்கள் தங்கள் ஆற்றலின்மையை அஞ்சுகிறார்கள். அதை சினத்தால் மறைக்கிறார்கள்”
அவர் கண்டது மெய்களை அனைத்தும் அறிந்து அறிவதற்கு அப்பால் என நின்ற கல்வித் திருமகளை. -மத்ர நாட்டு இளவரசி
பருப்பொருளென தன்னை விரித்து இங்கே நிறைந்திருக்கும் மாயை ஒலி மட்டுமே என அவர் முன் நின்றது. -வீணை இசை
நிகரற்ற வைரம் தூய வெண்பட்டிலேயே அமர்ந்திருக்கவேண்டும். மண்ணாளும் மணிமுடி ஒன்றே அதை சூட வேண்டும். தெய்வம் என்பது ஏழ்நிலை மாடம் எழுந்த பேராலயத்திலேயே அமர வேண்டும்
உடலசைவுகளால் மானுடன் காலத்தை சமைத்துக் கொண்டிருக்கிறான். அசைவற்ற உடல் காலத்தை அசைவற்றதாக்குகிறது. அசைவற்ற உடலை அசைக்க உள்ளம் கொள்ளும் முயற்சியை வென்றால் அதுவும் அசைவிழந்து உடல்மேல் படிவதைக் காணலாம்.
உள்ளத்தை வெல்ல உள்ளத்தால் முயல்பவன் யோகி. அவர்களின் வழிகள் பல. உள்ளத்தை உடலால் வெல்லமுடியும் என அறிந்தவன் வீரன். மாபெரும் யோகிகள் அடையாத உச்சங்களை எளிய வீரர்கள் சென்றடையலாகும்’
உள்ளம் தெளிந்து புது எண்ணங்கள் வருவதற்கு தெய்வங்கள் அருளும் தருணம் இது: பிரம்மமுகூர்த்தம்
ஒவ்வொரு எண்ணமும் சரியான சொல்லில் சென்று அமர கலைவாணி புன்னகைக்கும் நேரம். சித்தம் சார்ந்த எத்தொழிலும் முன்புலரியிலேயே நிகழவேண்டும் என்று அனைத்து நூல்களும் சொல்கின்றன.
எந்தப் பெருவீரனும் அவனை அணுகித் தெரிந்தவர்க்கு அத்துணை வீரனல்ல. மானுடரை அணுகும்தோறும் அவர்களின் அச்சமும் அலைவுறுதலும்தான் அறியவரலாகும்.
ஏழு மரங்களும் உடலில் சுழலும் ஏழு யோகத்தாமரைகளே என்பார்கள். மூலாதாரம் முதல் சகஸ்ரம் வரை மலர்ந்த ஏழு புள்ளிகள். அவற்றை தன்னிலை என்ற ஒற்றைப்பாம்பால் நேர்கோடென ஆக்கி ஊழ்கமெனும் அம்பால் முறித்து மெய் நிலையை அடைந்தான் ராமன்.
இங்கு ஒரு மானுட உடலில் எதுவோ ஒன்று தன்னை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன் விளிம்பில் அயலென நின்றிருக்கும் நாம் எப்போதும் உடலெனத் திறந்த இவ்வைந்து பொறிகளால் அவரை கண்டுகொண்டிருக்கிறோம். -இளைய யாதவர் பற்றி அக்ரூரர்
அவர் மானுடரல்ல என்று என்னுள் ஏதோ ஓர் புலன் சொல்கிறது. அது அறிவல்ல. மானுட உணர்வும் அல்ல. இரவில் மூதாதையர் நடமாட்டத்தை உணரும் நாய் கொண்டுள்ள நுண்புலன் என்று அதை சொல்வேன். -இளைய யாதவர் பற்றி அக்ரூரர்
பிறகு ஒருபோதும் நிகழாதது என்று ஒரு கணமும் என்றோ கண்டு உணர்ந்தது என மறு கணமும் தோன்றச் செய்யும் அருங்கணங்களில் ஒன்று அது. எனவே அக்காட்சிகளை முழுக்க விழிகளால் தொட்டு எடுக்க விழைந்தேன்.
முகமலர்வு என்பது எவரிலும் நிலையாகத் தெரிவதல்ல. சுடர் போல அது எழுந்தும் விழுந்தும் அலைவுற்றே மானுடரிடம் திகழும். சித்திரம் என எழுதிய முகமலர்வு என்பது தெய்வங்களுக்கு உரியது.
மானுடர் மானுடரை தங்கள் இருளைக்கொண்டே அறிந்து மதிப்பிடுகிறார்கள்.
நாகத்தின் விழிகளில் மானுடரை நோக்கிய இளக்காரம் ஒன்று உண்டு. யுக யுகங்களாக கூடாது குறையாது ததும்பி நின்றிருக்கும் ஏளனம் அது.
இந்தப் பாலையிடம் எவ்வினாவையும் எழுப்ப முடியாது. எத்திசையிலும் மாறாத ஊமைப்புன்னகையுடன் அது நின்றிருக்கிறது.
ஒரு அழுகை காலத்தை கற்பாறைகள் என மாற்றி நிற்கச் செய்துவிடும்.
“மொழியாக மாறும் உணர்வுகள் நமக்கு வெளியே பொருட்களென ஆகின்றன. அவற்றை ஐம்புலன்களாலும் காணமுடியும். ஆராயமுடியும்”
அனைவரும் அறிந்த ஒன்றென்பதனாலேயே எவராலும் சொல்லப்படாத ஒன்றாக இது எஞ்சும்.
“கீழ்மை நிறைந்த ஒரு பொது மந்தணம் நட்பு என்றென்றும் உறுதியாக இருக்க இன்றியமையாதது அல்லவா?”
மானுட எண்ணங்கள் நீரலைகள் போன்றவை. ஒவ்வொரு கணமும் அவை நிகழ்ந்து கொண்டிருப்பதே அவற்றின் அழகு. நீரலைகளை நோக்கி கல்லில் செதுக்கி வைப்பது போன்றது எழுத்து. அது அலையல்ல, மானுடனின் அச்சத்தின் சான்று மட்டுமே.”
நிலையின்மையென இங்கு நிறைந்துள்ள அனைத்தையும் சொல்லாலும் விழியாலும் தொட்டு நிலைத்தவை என ஆக்க முயல்கிறது மானுட அச்சம். நிலையற்று விரிந்திருக்கும் இப்பெருவெளியே உண்மை.
தீயவை செய்வதற்கு முன் கடக்கவேண்டிய ஒரு கணம் உண்டு என்று ஒருமுறை என் ஆசிரியர் சொன்னார். நூற்றியெட்டு தெய்வங்களால் காக்கப்படும் பெரும் அகழி அது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முகம் கொண்டு எழுந்து வந்து நம்மை விலக்கும். மூதாதையென, குல தெய்வங்களென, அறநெறிகளென, அயலென, உறவென, குலமென, குடியென, கல்வியென,அகச்சான்று என உருக்கொண்டு சினந்தும் அழுதும் நயந்தும் பேருரு காட்டியும் பேதையென நின்றும் சொல்லெடுக்கும்.ஒரு கணத்தில் அவற்றை தாண்டிச் சென்றுதான் தீயவை எவற்றையும் நாம் ஆற்றுகிறோம்.
நல்லவை ஆற்றுவதற்கும் ஒரு கண தடையே உள்ளது. அச்சமென, ஐயமென, விழைவென, ஆணவமென உருக்காட்டுகின்றன. அக்கணத்தைக் கடந்து நாம் உரியவற்றை இன்றியமையாதவற்றை மேன்மையானவற்றை முழுமையை அடைய முடியும்
ஒரு கணம்தான். இத்தருணத்தில் அதை கடக்காவிடில் பிறகு ஒருபோதும் அது நிகழாமல் ஆகிவிடும். ஒரு கணம் விரிந்து ஒரு பிறவியென்றாகலாம். ஏழ்பிறவியென எழலாம். முடிவிலி கூட ஆகலாம்
பீலிவிழி இமைப்பதில்லை. விழியிமைக்கும் இடைவெளிகளில் வாழும் தெய்வங்களே! உங்களைப் பார்க்கும் விழி அது ஒன்றே அல்லவா?”