காதலின் நாற்பது விதிகள்

காதலின் நாற்பது விதிகள் வாங்க

காதலின் நாற்பது விதிகள் – எலிஃப் ஷஃபாக் – தமிழில்: ரமீஸ் பிலாலி
– ஓர் அறிமுகம்

நாவல், இரண்டு மையக் கதையோட்டப் பரப்புகளைக் கொண்டுள்ளது. எல்லா என்கிற நாற்பது வயதான பெண், தனது மூன்று‌ பிள்ளைகளுடனும் கணவனுடனும் நார்த்தாம்படனில் வசித்துவருகிறார். மணவாழ்வில் காதல் குன்றியமையும் கணவனின் வேறு காதல் உறவுகளும் அவள் தனக்கே என உருவாக்கி வைத்திருந்த இனிய உலகின் சமநிலையைக் குலைத்துவிடுகிறது.

சலிப்பினாலும் வெறுமையினாலும் அர்த்தமற்றுப் போன வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இலக்கிய முகவம் ஒன்றில் புத்தக மதிப்புரையாளராக, பகுதி நேரப் பணியில் இணைகிறார். அவரது கைகளுக்கு அஸீஸ் ஜகாரா என்கிற நாடோடி புகைப்பட கலைஞர் எழுதிய இனிய துரோகம் (Sweet Blasphemy) என்னும் நாவல் வந்தடைகிறது.

தன் வாழ்விலிருந்து தொலைந்துப் போன அல்லது கண்டடையாத காதலை, எல்லா நாவலின் மையக் கதாப்பாத்திரமான ஷம்ஸ் தப்ரேஸின் நாற்பது காதலின் விதிகள் மூலம் கண்டடைகிறாள். இதுவே நாவலின் கச்சாவாக இருந்தாலும் ஷம்ஸ் – மௌலானா ரூமியின் நட்பும் காதலும் ஆன்மிகத் தேடலும் பேசப்பட்டிருப்பதன் மூலம், நாவலின் தளம் விரிவடைகிறது.

பதின்மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த ஸூஃபி குருக்களான ஷம்ஸூம் ரூமியும் இனிய துரோகம் என்ற உள்ளமை பிரதியின் மையக் கதாப்பாத்திரங்கள். நாடோடி தர்வேஷாகச் சுற்றிக் கொண்டிருக்கும் ஷம்ஸ், ஞானம் மிகுந்தவரும் மரபைத் தளர்த்திப் பிடிக்கவும் மரபை விட்டு அகலாமலும் இருக்கத் தெரிந்த கலகக்காரராகவும் இருக்கிறார்.

ரூமியோ திருக்குரான், ஷரிஅத், ஹதீஸ் சட்டங்களைப் பேணி வாழ்ப்பவராகவும் மக்களுக்கு அதை அன்றாடம் போதிக்கும் மார்க்க அறிஞராகவும் இருக்கிறார். ஆனால் அவருள் வெறுமையின் கிண்ணம் தனக்கு உணவளிக்குமாறு கதறுகிறது. குடும்பம், பேர், புகழ், சீடர்கள் என அனைத்தும் இருந்தும் உள்ளார்ந்து நிறைவடையாமல் இருப்பவரை நிறைக்கக்கூடிய தளும்பும் பாத்திரமாக ஷம்ஸின் வருகை அமைகிறது.

ஷம்ஸின் வருகையால் வெள்ளிக்கிழமைகளில் மத்றசாவில் போதிக்கும் அறிஞராக சுருங்கியிருந்த ரூமி பிரபஞ்சத்தின் நெடுங்கணக்குகளை நிறைவை உயர்காதலை காலம் நீளும்வரை நிலைக்கச் செய்யும் சொற்களின் அரசனாகிவிடுகிறார். ரூமியின் பிரபஞ்ச கவியுள்ளம் திறப்பதற்கு ஷம்ஸ் என்னும் தர்வேஷின் நட்பு தேவைப்படுகிறது. அது நட்பு என்னும் தளத்தைத் தாண்டி இறைக்காதலின் மானுட வடிவமாக ரூபமெடுக்கிறது.

ரூமிக்கு காதலின் நிழலின் உலகைக் காண, அழகேயான ஜமாலனைக் (இறைவனை) காண ஓர் ஷம்ஸ் அமைந்ததைப் போல் எல்லாவிற்கு நாவலாசிரியன் அஸிஸினால் காதல் மலர்கிறது. அந்தக் காதல் அஸிஸின் மேலேயே மலர்கிறது. இரண்டு காதலும் எப்படி நிறைவடைகின்றன என 484 பக்கங்களில் பேசுகிறது நாவல்.

பகுத்தறிவின் சாத்தியங்களை எட்டிவிட்ட ரூமிக்கு, சிறிதளவு உள்ளுணர்விலும் மையல் வேண்டுமென கற்றுக் கொடுக்கும் ஆசானாக, மேலான காதலான ஷம்ஸ், சித்தரைப் போல் இடைப்படுகிறார். உபநிடதங்களையும் வேதங்களையும் கற்றுத் தேர்ந்த பாரதி, அருந்தவப்பன்றியாக உழல்வதிலிருந்து மீட்டு ஒளியின் தாலத்தில் கூத்தாடும் சக்தியை உள்ளுணர்வினால் கண்டு கொள்ளச் செய்ய குள்ளச் சித்தன் தேவைப்பட்டதைப் போல் ரூமிக்கு நாடோடி தர்வேஷான ஷம்ஸ் தேவைப்படுகிறார். பிடரி முடியிலும் நெருக்கமாக உள்ள இறைவனை அகத்துள் நிறைத்துக் கொண்ட மஸ்தில் (போதையில்) வாழும் ஷம்ஸ், கிறிஸ்துவின் மறுவார்ப்பாகவே காட்சித் தருகிறார்.

தொழுநோயாளி, குடிகாரன், பரத்தை போன்று சமூகத்தால் குற்றஞ்சாட்டப்படும் மக்களின் நண்பராக இருக்கிறார். கிறிஸ்து தேவாலயப் பிரஜைகளால் கல்லெறிந்து கொல்லப்பட இருந்த பரத்தையை, உங்களில் குற்றம் செய்யாதவன் முதலில் கல்லெறியட்டும் என்றுகூறி மீட்டதுபோல ஷம்ஸ், பள்ளிவாசலுக்குள் நுழைந்ததற்காகக் கொல்லப்படவிருந்த பாலை ரோஜா என்னும் பரத்தையை மீட்கிறார்.

திருக்குரான் நான்கு படிநிலைகளில் வாசிக்கப்பட காத்திருக்கிறது. அது ஒவ்வொருவரின் மனவிரிவிற்கு ஏற்றாற் போல விருத்தியடைகிறது என்று ஷம்ஸ் கூறுமிடத்தில் பைபிள் கல், நீர், தேறல் (Stone, water, wine) என மூன்று நிலைகளில் வாசிக்கப்பட காத்திருக்கும் நூல். தனியொருவனின் எல்லைகளற்ற அகத்தின் நூல் வடிவமே பைபிள் என்ற கருத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. ஷம்ஸ் அதை உறுதி செய்யும்படி, ஒவ்வொரு மனிதனும் குரான் என்கிறார்.

இசுலாமியச்‌ சட்டங்களுக்குள் அடங்காத ஷம்ஸை, மார்க்க வல்லுநர்களுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கும் பிடிக்கவில்லை. ரூமியிடமிருந்து அவரை விலக்க நினைக்கின்றனர். அது எப்படிச் சாத்தியமாயிற்று? எல்லா எப்படி நாவலாசிரியர் அஸிஸுடன் இணைந்தார் என்பதையும் கூறி நாற்பாதாவது காதல் விதியோடு நிறைவடைகிறது நாவல்.

இசுலாமிய ஸூஃபித்துவ மரபையும் அதன் பயிற்றுமுறைகளையும் அறிய விரும்புபவர்க்கு இந்நாவல் நல்லதொரு அடித்தளமாக அமையும்.

ஸூஃபித்துவக் கோட்பாடுகளைத் தமிழில் தேர்ந்த முறையில் அறிமுகம் செய்துவரும் ரமீஸ் பிலாலி, இந்நாவலைத் தமிழ்செய்துள்ளமையால் மார்க்கம் சார்ந்த சொற்களுக்கும் பெயர்களுக்கும் நாவலின் இறுதியில் இனிய விளக்கமும் கொடுத்துள்ளார். எல்லா சம்பந்தபட்ட அத்தியாயங்களில் நவீனத்துவ மொழியையும் ஷம்ஸ் – ரூமி தொடர்பான அத்தியாயங்களில் செவ்வியல் மொழியையும் இணைத்து இடையூறின்றி படிக்கும் தமிழில் நுண்ணிய அழகியலுடன் தமிழாக்கம் செய்திருக்கிறார் பேராசிரியர் ரமீஸ் பிலாலி.

சமூக-அரசியல் காரணிகள், இறைநேசர்களைக் காலத்தைப் பற்றி எழுதும்போது போதிய அளவு இடம்பெறாதது நாவலின் சிறுகுறை எனலாம். உள்ளடக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது அது ஒதுக்கப்பட (Negligible) வேண்டிய குறையே ஆகும்.

காதலின் நாற்பது விதிகள், அனைத்துவித உளச்சீற்றத்தையும்‌ தவிப்பையும் காதலைக் கொண்டு எதிர்கொள்ள பலன் தருபவை. கணந்தோறும் புது அர்த்தம் தரக்கூடிய விரிவு நிறைந்தவை. ஆன்மிகத் தேடல் உள்ள அனைவரும் ஏந்த வேண்டிய முக்கிய நூல், இது.

அன்புடன்

இம்மானுவேல்.

சீர்மை பதிப்பகம்
விலை: 590.

ஜின்களின் ஆசான் – சௌந்தர்

ரூமியின் வைரங்கள்

காதலின் நாற்பது விதிகள் பற்றி…

முந்தைய கட்டுரைபுலிப்பாணி
அடுத்த கட்டுரைஆயிரம் ஊற்றுகள் -கடிதம்