பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் தளத்தால்  ஈர்க்கப்பட்டவர்களில் ஒருவன் நான். ஆகவே உங்களுக்கு இந்த கடிதம். கொரோனா ஊரடங்கு காலங்களில் பொழுதுகள் சீராக சென்றாலும் மனிதர்களையே  பார்த்துப்  பழகிய மனங்களுக்கு தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது பார்க்கவே அபாயகரமானதாக இருந்தது. இந்த சூழலில் தான் பறவைகள் கண்ணுக்குப் பட்டன. பறவைகள் இதற்கு  முன்னர் வாசலையும் மொட்டை மாடியையும் கடந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், ஒரு சில பறவைகளைத்  தவிர வேறு பறவைகளின் பெயர் தெரியாது.

ஆட்சிப் பணி முதன்மை தேர்வில் எழுதியபோது  ஒரு கேள்வி பறவைகளைப்  பற்றியது. எளிமையானது. ஆனால் பதில் அப்போது தெரியவில்லை. வீடு திரும்பி பதில் ஆராயத்  தொடங்கியதும் எங்கள் ஊர் இணையதளத்தில் திரு.நவநீதம் அவர்கள் ஐந்தாறாண்டு கண்காணித்த பறவைப் பற்றிய தரவுகளைச் சேகரித்தத்  தொகுப்பில் தேர்வில் கேட்கப்பட்டப்  பறவை இருந்தது. அது குக்குறுவான்-coppersmith barbet (சமீபத்தில் எழுத்தாளர் அம்பையின் விருது பெற்ற கவிதை தொகுப்பின் அட்டைப்படத்தில் இருப்பதும் இப்பறவையே). வாசலை கடந்த பறவை அப்போது தேர்வுத்தாளையும் கடந்ததை உணர்ந்தேன். என் சூழலுக்கும் பாடத்திற்கும் இடையிலிருக்கும் இடைவெளி குறைந்ததையும் உணர்ந்தேன். அதிலிருந்து பறவை கண்காணிப்பு (bird watching) ஒரு பொழுதுபோக்காக ஆனது.

அதற்குப்பின், 2021 ஆம் ஆண்டு ‘பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பை’ நவநீதம் அறிமுகம் செய்தார். அதிலிருந்து  பறவைகளின் தரவுகளைச்  சேகரித்து பதிவிடும் ஆர்வம் வந்தது. மொத்தம் அறுபத்தி ஏழு பறவைகள் கொண்ட இணைய தொகுப்பில் இரண்டு பறவைகள் நான் புதிதாக கண்காணித்து கணக்கெடுத்தது. அவை  இரண்டே பறவைகள் என்றாலும் ஒரு கலைப்படைப்பிற்குப்  பின் அடையும் மனநிம்மதிக்குச் சமம். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொகுப்பைப்  பறவைகள் தொடக்கக் கையேடாக நவநீதம் வடிவமைத்து வெளியிட்டு இருக்கிறார். டெல்லி AIIMS கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்ற திரு நவநீதம் கையேடை அறிவியல் நோக்கிலும், சாமானியர் எளிதாக புரிந்துகொள்ளலும் நோக்கிலும் வடிவைமைப்பித்து இருப்பது சிறப்பு. முக்கியமாக பள்ளிக்குழந்தைகளையும் கல்லூரி மாணவர்களையும் பறவைகள் கணக்கெடுப்புக்குள் கொண்டுவருவதே அவரது ஆசை.

தொடக்கக் கையேடை வடிவைமைக்க வல்லுநராக திரு பஞ்சபாகேசன் ஜெகந்நாதன் (https://www.ncf-india.org/author/646417/p-jeganathan)  அவர்களின் உதவி குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் பறவையியலாளர்களில்  முக்கியமானவர். அவரின் “பறவைகள்: அறிமுகக் கையேடு” (பறவைகள்: அறிமுகக் கையேடு. ப. ஜெகநாதன், ஆசை. Cre-A publishers, 2014). பறவைகளைத்  தமிழில் சரியான பெயர்க்ளோடு அறிமுகப்படுத்துகிறது. நவநீதம் அவர்கள்  தயாரித்த கையேட்டிலும் தமிழில் பெயரிட மற்றும் முழுமைபெற  ஜெகநாதன் உதவியுள்ளார்.

மொத்தம் 67 பறவைகளின் தரவுகள் கொண்ட கையேடு மின்னிதழாக வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு பறவைகள் கண்காணிப்பில் உள்ளது.

மன்னங்காடு பறவைகள் தொடக்கக் கையேடு –  இணைப்பு

https://drive.google.com/file/d/1VOltWbSdJTGnrmx0SCs0WVSf0Uszmn2B/view?usp=sharing

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு (Pongal bird count)

இந்த தொகுப்பைப் பற்றி குறிப்பிட காரணம் வரும் பொங்கல் அன்று தொடங்கும் மூன்று நாள் ‘பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு’. வெளிநாடுகளில் சிறப்பாக செய்து வரும் சூழியல் செயல்பாடுகளில் ஒன்று பறவைகள் கணக்கெடுப்பு. எடுத்துக்காட்டுக்கு,  National Audubon Society, Cornell Lab of Ornithology and Birds Canada இணைந்து நடத்தும் ‘Great Backyard Bird Count’. இந்த கணக்கெடுப்புக்கு உலங்கெங்கிலும் இருந்து பறவை ஆர்வலர்களின் தரவுகள் வரவேற்கப்படுகிறது. கடந்தாண்டு ஒன்றரை லட்சத்திற்கும் மேல் கலந்துகொண்டுள்ளனர். இந்தியாவில் இது போன்ற சூழியல் சார்ந்த கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு மிகக்குறைவு. இருந்தும் 2014 க்கு பிறகு தொடங்கப்பட்ட மாநில வாரியான பறவைகள் கணக்கெடுப்புகள் குறிப்பிடும்படியான ஒன்று. கேரளத்தில் ஓணம் பறவைகள் கணக்கெடுப்பு , தமிழகத்தில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு, ஆஸாமில் பிஹு  பறவைகள் கணக்கெடுப்பு என புதிதாக நிறைய விழாக்கள் வலசை பறவைகளைக்  கணக்கிடும் பொருட்டு அந்தந்த காலத்திற்கேற்ப ஏற்பாடு செய்யப்படுகிறது.

பொங்கல்  பறவைகள் கணக்கெடுப்பு வரும் ஜனவரி 14 -17 நடைபெறுகிறது.

இந்த கணக்கெடுப்பில் கலந்துகொள்ள அடிப்படையான  பறவைகள் மற்றும்  சூழியல் ஆர்வம் இருந்தால் மட்டும் போதும். வல்லுநர்கள் உதவி இல்லாமல் சரியாக கண்டுகொண்ட பறவைகளைத்  தொடக்கக் கையேட்டை கொண்டு  அல்லது இணையத்தின் உதவியோடு கண்டுகொள்ளலாம்.

சரி எப்படி கணக்கெடுப்பு நடத்துவது?, தேவையான உபகரணங்கள் பற்றிய

கேள்விகளுக்கு தெளிவான பதில் இந்த தளத்தில் உள்ளது.https://birdcount.in/event/pongal-bird-count-2022_tamil/.  மேலும் சந்தேகங்களுக்கு அந்தந்த மாவட்ட வாரியான ஒருங்கிணைப்பாளர்களின் மினனஞ்சல் மற்றும் தொலைபேசி எண் மேலுள்ள இணைப்பில் காணலாம்.

மேலும் கணக்கெடுப்பில்  ஈடுபடுபவர்களுக்கு  உதவும் செயலிகளின் இணைப்பு

Merlin Bird ID by Cornell Lab – https://play.google.com/store/apps/details?id=com.labs.merlinbirdid.app&hl=en_IN&gl=US

eBird by Cornell Lab – https://play.google.com/store/apps/details?id=edu.cornell.birds.ebird&hl=en_IN&gl=US

இவ்விழாக்களில் மட்டும் தான் கணக்கெடுப்பு நடக்கிறதா என்றால், இல்லை. இவ்விழா ஒரு அறிமுகம். ஒருங்கிணைப்பு மட்டுமே. நேரம் கிடைக்கும் பொழுது செய்வது அவசியம்.

கோ வெங்கடேஸ்வரன்

[email protected]

முந்தைய கட்டுரைநேரப்பொறுப்பு
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- லோகமாதேவி