நன்றி.
எடுத்த எடுப்பிலேயே நன்றி சொல்வதற்கு ஒரே காரணம் “குமரித்துறைவி”. நான் எனது 10 வயதில் எனது தந்தையை இழந்தவன், என் தாய் அப்போது 32 வயதில் இருந்தாள். அதன் பின் எனது தாயின் உடன்பிறந்த சகோதரிதான் எங்கள் குடும்பத்துக்கான தெய்வம். பெரியளவில் அல்ல, பெயருக்கு சொன்னால் கூட அவளே “தெய்வம்”. எனது கைபேசியில் அவளது எண் “சாமி” என்ற பெயரோடுதான் இருக்கும். அவளது மகனை விட நானே அவளை அதிகமாக “அம்மா” என்று அழைத்திருப்பேன். நிச்சயமாகவே. எனக்கும் எனது அம்மாவான அவளது தங்கைக்கும் அவளே “அன்னை”. எனது ஒவ்வொரு உயர்வுக்கும் எப்போதும் அருளிய தெய்வம் அவள். எனது வசைகளை முறுவலுடன் அனுமதிப்பவள். தனிமையில், எனது தவறுகளுக்காக கண்ணீர் கசிபவள். இவையனைத்தும் தந்தையில்லாத குழந்தையின் மீதான கரிசனம் என்று ஒரு போதும் என்னை உணரச்செய்யாதவள். என் முடிவுகளை சுபமாக்கும் “சுபத்திரை” அவள் (அவள் பெயர் சுபத்திரி).
ஆனால், எனது பக்தியோ “பீமபக்தி”. ஒரு போதும் எனது சாமியிடம் இறைஞ்சியது இல்லை. பேசுவததோடு மட்டும் சரி. என் சிறுவயதில்,எனக்கு “அம்மை”யிட்ட போது உடலெங்கும் கொப்புளங்கள். எடை பாதியானது. அப்போது சக்தி உபாசகரான எனது பாட்டி புஜையறையில் அவளது தெய்வமான இராஜராஜேஸ்வரியை வைதுகொண்டிருந்தாள். “ஒனக்கு இனிமே ஒன்னும் கெடயாதுடி முண்ட. நெதமும் நல்ல தின்னுட்டு எம்புள்ளய படுத்துறியே. அடி முண்ட. இனி நீ பட்டினிதான் போ” ஒரு சொல் மாறாமல் எழுதியிருக்கிறேன்.இதே போன்ற “பக்தி” தான் நானும் எனது “சாமி”க்கு காட்டியது. எனது வாழ்வை குமரித்துறைவியுடன் மிகச்சரியாக இணைக்கும் தருணம் ஒன்று உள்ளது. நான் நண்பர்களுக்கு புத்தக பரிந்துரை செய்யும் போது ஒரு சிறிய மேற்கோளுடன் செய்வதுண்டு. அவ்வாறு குமரித்துறைவி பரிந்துரை செய்த போது நான் சொன்ன மேற்கோள் (Tag Line) “மதுரையின் அன்னை, குமரியின் மகளாக வாழ்ந்ததை உணர்ச்சி கொப்பளிப்புடன் பாடும் பாணனின் பாடல்” என்பதாம்.
மகள் அன்னையாகும் தருணம் என்பது சம்சாரிக்கானது மட்டுமே. ஆனால் அன்னை மகளாகும் ஒரு தருணம் எனக்கு அதற்கு முன்னமே வாய்த்துள்ளது. ஆம். எனது அன்னை, எனது மகளாக மாற இருக்கிறாள். அவளது கல்யாணம் (சஷ்டியப்த பூர்த்தி) வரும் சித்திரையில் நடக்க உள்ளது. நான் குமரித்துறைவியை சென்ற ஆண்டு எனது தங்கையின் திருமணத்திற்குப்பின் வாசித்திருந்தேன். கண்கள் கலங்கியிருந்தன. கடைசி நிமிட முடிவுகள் எப்போதும் ஒரு பெரு நிகழ்வில் தவிர்க்க முடியாதது என உணர்ந்திருந்தேன். இப்போது ஒரு மகனாக நான் எனது அன்னையை மணக்கோலத்தில் நேரிடையாக காணும் பெருநிகழ்வை எதிர்நோக்கியுள்ளேன். அன்னை மீண்டும் மகளும் தருணம் அனைவருக்கும் வாய்க்காதுவே. இரு திருமண நிகழ்வுகளுக்கு இடையில் ஒரு புத்தக வாசிப்பு பெரும் வீச்சுடன் மாற்றத்தினை நிகழ்த்தியுள்ளது. குமரித்துறைவியின் முதல் வரி மேலும் அணுக்கமாகிறது.
“சித்திரை மாதம், வளர்பிறை நாலாம் நாளாகிய இன்று, வேணாட்டின் இரண்டாம் தலைநகராகிய இரணியசிங்கநல்லூரில் இருந்து அரசர் கொடிகொண்டிருந்த தலைநகரான திருவாழும்கோட்டுக்கு ஒற்றைக்குதிரையில் தனியாகச் சென்றுகொண்டிருக்கும் என் பெயர் தென்குளம் கட்டளைக்காரன் வீரமார்த்தாண்டன் உதயன் செண்பகராமன்.” அதே சித்திரை மாதம் வளர்பிறையிலேயே என் அன்னை எனக்கு மகளாக காத்திருக்கிறாள். நான் மேலப்பாட்டம் கட்டளைக்காரன் லெட்சுமிநாராயணன். அதே மனநிலையில் இதை எழுதுகிறன். 59 ஆண்டுக்காலம் மதுரையின் அன்னை மீனாட்சி, குமரியின் மகளாக காத்திருந்தாளாம். எனது அன்னையும் அவளது 57ம் வயதில் எனக்கு மகளாக காத்திருக்கிறாள்.
குமரித்துறைவிக்காக நான் உங்களை என்றும் போற்றுவேன்.
ஆரத்தழுவ காத்திருக்கும்,
லெட்சுமிநாராயணன்
திருநெல்வேலி