குமரித்துறைவி- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

“குமரித்துறைவி” ஒரு நிறைவான வாசிப்பு அனுபவமாக இருந்தது. கனவின் சொல்லைச் சுமந்த உதயனின் முதல் பயணம் முதல் செயலின் முழு சொரூபத்தை கண்டு உதயன்  இறுதியில் திரும்பும்  வரையிலான நிகழ் அனுபவம் மிகவும் நெகிழ்வாக இருந்த வாசிப்பு அனுபவம்.  நாவலின் பேசுபொருள் புதிதில்லை ஆயினும் நாவலில் இப்பேசுபொருள் அமைந்துள்ள விதம் அதன் நிகழ்த்துத்தன்மை முற்றிலும் புதியது. ஒரு நவீன கால நாவலில்,ஆண்டாண்டுகளாக நடைபெற்று வரும் ஒரு விஷயம் அதன் அழகியல் சாரத்தை இழக்காது அமைவது முற்றிலும் புதியது. பெருநாவல்கள் குடும்ப வரலாறுகளையும் காலத்தின் ஏற்ற இறக்கங்களையும் பதிவு செய்யும். ஓரளவு சிறிய நாவல்கள் தலைமை கதாப்பாத்திரத்தின் தனிப்பட்ட லட்சியம் நோக்கிய பயணத்தினை பெரும்பாலும் பதிவு செய்யும். மிக அரிதாகவே ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட அனுபவத்தின் சாரமாக நாவல்கள் அமைந்திருக்கின்றன. ஆனால் குமரித்துறைவியில் இடம் பெற்றிருக்கும் அனுபவம் தனிப்பட்டது மட்டும் அல்ல. பெரும் திரளான மக்களின் பொதுவான அனுபவத்தை அதன் உணர்ச்சி பெருக்கான அழகியலோடு முன்வைக்கிறது குமரித்துறைவி. நாவல் வாசிக்கையில் தங்கள் சொற்களின் வலிமையையும் தாண்டி அந்த நிகழ்வுக்காக மட்டும் கண்ணீர் சொறிகையில் அப்பெரும் திரளில் நானும் ஒருவன் என்று உணர வைத்தது.

நவீன காலத்தில்  மோஸ்தராக உள்ள தத்துவ சொல் விளையாட்டுகளுக்கும் Ism சார்ந்த அறிவு  செயல்பாட்டுகளுக்கும் சிக்காது நிகழும் பேரனுபவம் இது.  நிகழும் அனுபவத்தை அளிக்க வல்ல சினிமா போன்ற கூட்டுக்கலை, பொது அனுபவத்திலிருந்து உணர்ந்து திரண்ட தனிப்பட்ட கலைஞர்களின் நிகழ்த்துக்கலை இவை இரண்டும் ஏற்படுத்தும்  மனோ அனுபவங்களை எளிதில் மிஞ்ச வல்ல நிகழ்த்து அம்சமாக இத்திருக்கல்யாணம் அமைந்திருக்கிறது, ஆருத்ரா நடனங்களும் சூரசம்ஹாரம் நினைவுக்கு வருகின்றன. இந்த அனுபவம் ஒரு நவீன நாவலில் அமைகையில் வாசகன் பெறுவது என்ன ? .கடந்த காலத்தை கடைந்தெடுக்கையில், திரண்டு வரும் மங்கலம் மட்டும் நினைவில் நிற்கும் வகையில், அமைந்த  இந்த நிகழ்த்து அனுபவம், காலத்தை அதன் உயரிய பொருளில் அர்த்தம் கொள்ள வைப்பது தான் நாவலின் வாசகன் பெறும் முக்கியமான விஷயம், அக்காலத்தின் போர்களுக்கும், உள்பூசல்களுக்கும், வாரிசு சண்டைகளுக்கும் இன்றைய மதிப்பு என்பது சொற்பம்., தகவல் அறிவு மாத்திரமே. நாவலின் பேசு பொருள் அதன் நிகழ்த்து அனுபவம் எவ்வாறு ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் இயக்கத்தை அலகிலா விளையாட்டை நாம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வாய்ப்பாக அமைகிறது எனக் கூறுகிறது. இதையே உதயன் வழி நாம் காண்கிறோம். நம் ஒட்டு மொத்த செயல்திறனையும் குறைவிலாது  அளித்து, சீர் முதல் உணவு வரையிலான அத்தனை நிரல்களையும் நிரப்பி , தேடித்தேடி குறைகளை களைந்து  நாம் என உணர்ந்து நிற்கையில் நாம் முற்றிலும் எதிர்பாராத ஒரு நிகழ்வு நம் ஆணவத்தை குலைப்பதை உதயன் வழி காண்கிறோம். நாவலின் முடிவு பெரியதொரு சக்தியின் சின்ன கண் சிமிட்டல் போல அமைந்துள்ளது. தங்களுக்கு நன்றி.

அன்புடன்,
மணிகண்டன்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

முந்தைய கட்டுரைபனை மெய்யியல் 
அடுத்த கட்டுரைசமந்தாவின் நடனம் -கடிதங்கள்