தாக்குப்பிடிப்பியம் -வி.கெ.என்

பல்தேய்த்துவிட்டு சிற்றுண்டிக்கு அமர்ந்தான். ஆவியில் விரிந்த வெள்ளை ஆம்பல் இட்டிலிகள். இரண்டை சட்டினியில் முக்கி தின்றான். இரண்டு பொடிகுழைத்து உருட்டி. இரண்டுக்கு மிளகாய்த்துவையல். இரண்டுக்கு சீனி. மேல்விரிப்பாக இரண்டு கப் காபி.

ஒரு மணிக்கு சாப்பாட்டுக்கு முன்பு இரண்டு லார்ஜ் ஓட்காவை தக்காளிச்சாற்றில் கலக்கி விழுங்கினான். பழைய அரிசிச்சோறு. வெண்டைக்காய் சாம்பார். கும்பளங்காயும் பச்சைமிளகாயும் சேர்த்து ஓலன். வழுதுணங்காயும் வெங்காயமும் சேர்த்து தேங்காயெண்ணையில் வறுத்தெடுத்த பிரட்டல். எண்ணைமாங்காய் ஊறுகாய். அப்பளம். கூடுதலாக புளிமோர். அண்டம் நிறைய உண்டான்.

மூன்று மூன்றரைக்கு டீயும் பலகாரமும். அரிசியும் உழுந்தும் வறமிளகாயும் சின்னவெங்காயமும் நொறுநொறுவென அரைத்து முருங்கையிலை சேர்த்து எண்ணையில் பொரித்து எடுக்கப்பட்ட அப்பம். அதில் மூன்றைத் தின்று வியர்வை வந்து ஆறுவதுவரை டீயும் குடித்து சிறு ஓய்வு.

சாயங்காலம் பொடிநடைக்கு கிளம்பினான். பாரில் நுழைந்து நான்கை ஊற்றிக்கொண்டான். இரண்டு நீட். இரண்டு ஆன் த ராக். தொட்டுக்கொள்ள தேங்காய் சதைத்துச் சேர்த்து தேங்காயெண்ணையில் உலர வறுத்தெடுத்த ஆட்டுக்கறி. மேற்கொண்டு குடல்முட்டும்படி பரோட்டாக்கள்.

பத்துமணிக்கு படுத்தான். ஒட்டுமொத்தமாக வாழ்க்கையில்  ஒரு கச்சித்தத்தன்மையை உணரமுடிந்தது. செய்யவேண்டிய எல்லாம் செய்யப்பட்டிருக்கிறது. உண்ணப்படவேண்டிய எல்லாம் உண்ணப்பட்டிருக்கிறது. இனி சாவது நல்லது. இதைவிட நல்ல சந்தர்ப்பம் வேறில்லை.

சாகப்படுத்தான், செத்தொழிந்தானே. காலையில் மயான காண்டம். பாடையில் ஏறிக் கிளம்பி, வீட்டார் யாரும் கேட்காத அளவு விலகிச் சென்றபோது திருவாளர் பையன்ஸ் சிதை தூக்குபவர்களிடம் ரகசியமாக கேட்டான்.

“அங்கேயும் காலம்பற இட்லி தானே?”

[நிலநில்பீயம்]

[மலையாள பகடி எழுத்தாளர் விகேஎன் எழுதிய கதை. பையன்ஸ் என அவருடைய கதைகளில் தோன்றுவது அவர்தான். ]

இரு மொழிபெயர்ப்புக் கதைகள் – வி .கெ.என்

முந்தைய கட்டுரைசின்ன ஞானங்கள் -கட்டுரை
அடுத்த கட்டுரைஜப்பான்- ஒரு கீற்றோவியம்-தமிழ்செல்வன் இரத்தினம்