விஷ்ணுபுரம் விழா – கொள்ளு நதீம்

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்
விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

23-12-21 வியாழன் இரவிலிருந்தே காட்பாடி ஜங்க்‌ஷனைத் தாண்டி எந்த ரயிலும் கோவை, பெங்களூர் மார்க்கத்திற்கு இயங்கவில்லை, கிட்டத்தட்ட நூறு வண்டிகள் ரத்தானதாக தென்னக ரயில்வே (கொஞ்சங் கொஞ்சமாக) அறிவித்துக் கொண்டே இருந்தது. அவ்வாறு அடுத்தடுத்து மூன்று டிக்கெட்டுகள் வீண்போனதால் ரம்ஜானுக்கு ஊருக்குப் போக முடியாத பதற்றம் என்னிடம் உருவானது. கடைசியில் சனிக்கிழமை இரவு சேரன் எக்ஸ்பிரஸ்-சில் (இரவுப் பயணத்தில் உறங்கிச் செல்லக்கூடிய சீலிப்பர் பெர்த் கிடைக்காத நிலையில்) சிட்டிங் சீட்டில் அமர்ந்து போகும் இருக்கை. அதிலும் இரண்டு பேர் இருக்கையை விரித்துப் போட்டு மூன்று பேராக முழு இரவையும் அமர்ந்து பேசிய படியே வந்த மணிப்புரி, அஸ்ஸாமிய இளைஞர்களின் சலசலப்பு வேறு. ஞாயிறு காலை கோவை வந்து சேர்ந்தேன்.

பாவண்ணன், அழிசி ஸ்ரீனிவாசன், மதார்

உலகளாவிய தீவிர இலக்கியங்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வரத் தொடங்கி ஒரு நூற்றாண்டு காலமான நிலையில், தஸ்தாவ்ஸ்கியின் சமகாலத்தவரான ஆங்கிலேயர் George W. M. Reynolds (1814 – 1879) எழுதிய ‘Omar, a Tale of the War’ என்கிற நாவல் (1856) வெளியிடப்பட்டது. அதை தமிழில் – ‘உமறுஅ பாஷா யுத்த சரித்திரம்’ என்று நாகூர் குலாம் காதிறு நாவலர் (1833 – 1908) தமிழாக்கம் செய்துள்ளார். ஐம்பது, அறுபது ஆண்டுகள் அச்சில் இல்லாத இந்த முன்னோடி முயற்சியை சென்னைப் புதுக்கல்லூரி பேராசிரியரும் நண்பருமான முரளி அரூபன் மறுபதிப்பு செய்திருந்தார். இன்றைய எந்தவொரு சிறு வசதிகளும் அன்று பெரும் luxury-யாக இருந்த 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் எப்படி இவ்வளவு பெரிய முயற்சி முன்னெடுக்கப்பட்டது என்கிற சிறுபொறி என்னுள் எரிந்து கொண்டே இருந்தது.

ஜி.எஸ்.எஸ்.வி நவீன், அந்தியூர் மணி,திருச்செந்தாழை

மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, இந்தோனேசிய, மலேசிய போன்ற தூரகிழக்கு நாடுகளிலிருந்து சரியான இலக்கியப் படைப்புக்கள் எதுவும் இங்கு வந்து சேரவில்லை என்பதை கடந்த பத்தாண்டுகளாகவே என்னை உறுத்திக் கொண்டிருந்தது. ஏதேனும் இதற்கு என் அளவிலான இடையீடு அவசியம் என்று உந்துதலுடன் வேறு சில நண்பர்களின் கனவும், இலட்சியமுமாக இருந்தது. (வழக்கமாக இங்கு இதுவரை வந்து கொண்டிருந்ததுபோல ஆங்கிலம் வழியாக அல்லாமல்) அரபு, பார்சி, உருது மொழிகளுடன் சமகால தமிழ் இலக்கியத்தில் பயிற்சியுமுள்ள இணைமனங்களை கண்டறிவதில் வெற்றி பெற்றோம். ‘சீர்மை’ ஒரு பதிப்பகமாக வடிவம் பெறத் தொடங்கியது. இதில் உரிமையாளரெல்லாம் கிடையாது. சொல்லப் போனால் இதொரு கூட்டுறவு முன்னெடுப்பு.

சென்னைப் புத்தக கண்காட்சியில் கலந்துகொள்ள அரங்கு கேட்டு விண்ணப்பித்துவிட்டு அச்சாகிவந்த புத்தகங்களை விஷ்ணுபுர விழாவில் காட்சிப்படுத்தவது அவசியமாக இருந்தது. ஏனெனில் பபாசி நிகழ்வுக்கு வரக்கூடிய தீவிர இலக்கிய வாசகர்களில் பெரும்பாலானோர் கோவைக்கு வருவதை நான் கண்டிருக்கிறேன்.

ராஜகோபாலன்

ஆகவே முறைப்படி, முன்கூட்டியே கேட்கலாம் என்று இரவில் தங்களுக்கு மின்னஞ்சல் செய்துவிட்டு படுத்தேன், அடுத்த பத்து நிமிடங்களில் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் அனுமதி தந்த பதில் எனக்கு வியப்பு எதையும் தரவில்லை. எல்லா தரப்பு இலக்கிய பிரதிகளுக்கும் அதன் தரத்தின்படி ஏற்பும், விலக்கமும் தங்களிடம் உள்ளது என்பது எனக்குத் தான் ஏற்கனவே தெரியும்.

முதல் நாள் நிகழ்வுக்கு வராமல் போன வருத்தம் இருந்தாலும் எப்படியும் அதை யுடியுப்-ல் பார்த்துவிட முடியும் என்கிற சிறு ஆறுதல் இருக்கிறது. ஆனால் எப்படி பார்த்தாலும் பௌதீகமாக நாம் அரங்கில் இருக்கும்போது கிடைக்கும் நிறைவுக்கு ஈடாகாது என்பதால் இரண்டாம் நாள் ஞாயிறு அமர்வை ஒழுங்காக வகுப்பில் அமர்ந்து கற்கும் சீரியஸ் மாணவன் போல ஜென் நிலையில் குறிப்பேடும், பேனாவுமாக அமர்ந்து கொண்டேன்.

சுனீல்கிருஷ்ணன்

முதல் அமர்வு (தொடர் வரிசைப்படி ஒன்பதாம் அமர்வு) வடரேவு சின்ன வீரபத்ருடு அவர்களுடையது. தமிழகத்தின் வட மாவட்டங்கள் ஆந்திர, கர்னாடகா எல்லையை பகிர்ந்துகொள்ளக் கூடியவை. (நாடு விடுதலைக்கு முந்திய காலக்கட்டத்தில்) ஆம்பூர் சித்தூர் ஜில்லாவில்தான் இருந்துள்ளது. ஆகவே எங்கள் பகுதியின் (பூர்விக) வீட்டு மூலப்பத்திரங்களில் தெலுங்கு மொழியை காணலாம். இங்குள்ள அனைத்து சமூக பிரிவு மக்களின் திருமண உறவு மொழிகளையும், (மாவட்ட / மாநில) நிலவியல் எல்லைகளையும் கடந்தவை. சந்தையிலும், வீதியிலும், (காலணி, தோல்) தொழிற்சாலைகளிலும் தெலுங்கு, கன்னடத்துடன் உருது கலந்த தமிழ் புழங்கிவருகிறது, கோவையிலும், நாஞ்சில் நாட்டிலும் மலையாளம் கலந்த தமிழ் பேசுவதுபோல இருக்கும். பொதுவாகவே எல்லையோர பகுதிகள் நிர்வாக வசதிக்காக செயற்கையாக மாறி மாறி வரையறை செய்யப்பட்டாலும் பண்பாட்டு ரீதியாக மக்களின் வாழ்க்கை இந்த கெடுபிடிகளை மீறக்கூடியதே.

ஏற்கனவே ராஜு, ஆனந்த சீனிவாசன், இரம்யா போன்றோர் எழுதிய அருமையான அறிமுகக் கட்டுரைகளும், அதற்கு முன்பு (எங்கள் வாணியம்பாடி) இளம் முனைவர் (தமிழுக்கு நேரடி) மொழிபெயர்ப்புகளின் வழியாக (தெலுங்குச்) சிறுகதையுலகமும் அறிமுகம். அதனால் இந்த அமர்வை முழுமையாக கூர்ந்து கவனித்தேன்.

இலக்கியத்தை தாய்வீடாகவும் சினிமாவை தொழிலாகவும் கொண்ட இயக்குனர் வசந்த் சாய் பத்தாவது அமர்வில் வந்தார். பதினொன்றாம் அமர்வு கவிஞர் விக்ரமாதித்யனுடையது.

ஜெயராம்

இவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறோம், அரங்கில் பேசிவிடலாம் என்று ஒருங்கிணைத்த சுனீல் கிருஷ்ணனிடம் அண்ணாச்சியின் லௌகீக பாடுகளை அவர் நடித்த திரைத்துறை சீர் செய்ததா, நடிப்பு கலையின் இன்னொரு வடிவம், அதை கவிஞனாக எப்படி அணுகினார், ‘நான் கடவுள்’ பிச்சைக்காரன் பாத்திரம், ‘இன்ஷா அல்லாஹ்’வில் முஸ்லிம் என – அதுபோக கூடவே பகவதி அம்மா நடித்தது என்றெல்லாம் எழுதிக் கேட்டேன், ஏனோ அவற்றை சுனீல் கிருஷ்ணன் சுய தணிக்கைக்கு ஆட்படுத்தினார்.

அசோகமித்திரன் ‘My Years with Boss At Gemini Studios’ என்று எழுதியதைப் போல அண்ணாச்சியிடமிருந்தும் கேட்டறிய பல விஷயங்கள் சினிமாவில் உள்ளது. தூய இலக்கியம் அங்கு செல்லுபடியாகாது என்பது வெறும் அழகான phenomena. அண்ணாச்சிக்கு கவிதைமூலம் பெரிய வருவாய் ஏதுமில்லை, வாழ்க்கையை எதிர்கொள்ள தொழிலாக அணுகிய சினிமா அண்ணாச்சியை சற்று கைத்தாங்கிக் கொண்டிருக்க வேண்டும். அதெல்லாம் கேட்பதுதான் என் உத்தேசம். இருப்பினும் ‘அம்புப் படுக்கை’யும், ‘நீலகண்டம்’ போன்ற கதைகளையும், ‘வளரொளி’யில் சிறந்த உரையாடலையும் நிகழ்த்தியவர் சுனீல் கிருஷ்ணன் என்பதால் அதை கண்டுக்கொள்ளாமல் விடலாம். ஆனால் அவர் ரொம்பத்தான் (கலை, கலைக்காக என்று கூறும்) தூய்மைவாதியாக இருப்பாரோ என்று எண்ணத் தோன்றியது.

அந்த அரங்கு முடிந்த பிறகு வெளியேறி வந்த அண்ணாச்சி அனேகமாக பிரான்சிஸ் கிருபாவின் ஏதோ ஒரு நூலை வாங்கியபிறகு வேட்டிக்குள் சுருட்டி வைத்திருந்த பணத்தை எடுத்து தமிழினி வசந்தகுமாரிடம் நீட்டினார், இதை ஸ்டாலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த பேராசிரியர் கால.சுப்பிரமணியம் வெடி சிரிப்பு எழுப்பினார், அண்ணாச்சி தன்னிடமுள்ள பட்டிக்காட்டான் அப்படியே விட்டுவைத்திருப்பதால் தான் கவிஞராகவே நீடிக்கிறார் போல் இருக்கிறது.

விஷ்ணுபுரம் விழாவில் (வெறுமனே பார்வையாளர்களாக) கலந்து கொள்வதற்குக்கூட ஆட்சேபணைகள் எழும் நிலையை ஜெயராம் ரமேஷ் போன்றவர்களேகூட அரங்கிலும், பொதுவெளியிலும் பதிவு செய்தது இன்னமும் நாம் இனக்குழு சமூக மனநிலையிலிருந்து மேலெழுந்து வரவில்லை என்பதையே காட்டியது.

விக்னேஷ்

விக்ரமாதித்யன் விருதுவிழா நடப்பதற்கு சரியாக ஒருவாரம் முன்பு Kobad Ghandy சென்னை வந்திருந்தார். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் (வ.கீதா மொழிபெயர்ப்பு) செய்த அந்த அமர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. மும்பையின் செல்வவளம் கொண்ட பார்சி சமூகத்தில் பிறந்த கோபட் காந்தி இலண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணக்கு பட்டவியல் (Chartered Accountancy) முடித்தவர். அதுபோக (1995-ல் வெளியான) கமலஹாசனின் குருதிப்புனல் திரைப்படத்தில் நாசர் ஏற்றிருந்த (பத்ரி பாத்திரம்) போல, (2012-ல் வெளியான) Chakravyuh இந்தித் திரைப்படத்தில் Om Puri ஏற்றிருந்த (Govind Suryavanshi என்கிற பாத்திரம்) இந்த கோபட் காந்தியை நகலெடுத்தது. எஸ்.என்.நாகராஜன் (1927 – 2021) அவர்களின் கீழை மார்க்சியம் போல, மனித மனம் இயங்குவிதம், அகவயமான தேடல்களை தான் செயல்பட்டுவந்த இடதுசாரி அமைப்புக்குள் விவாதிக்கிறவர், கோபட் காந்தி. மத்தியக் குழு உறுப்பினர் என்று குற்றச்சாட்டுக்காகவே பத்தாண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தவரை இறுதியில் இயக்கம் வெளியேற்றியது நகைமுரண்.

இந்த பின்புலங்களை அறிந்திருந்த நான் அவருடைய (சென்னை) கூட்டத்துக்குப் போயிருந்தேன். அங்கு சாம்ராஜ் சற்று மேடான இடத்தில் கடைசி பெஞ்ச் மாணவர் போல அமர்ந்திருந்தார், அருகில் நானும் போய் உட்கார்ந்து கொண்டேன். இங்கு விஷ்ணுபுரம் வந்தபோதும்கூட அதே கடைசி பெஞ்சில் தோழரைப் பார்த்தேன். இதனால் அறியவரும் நீதியாதெனில் நானோ, சாம்ராஜோ முகாமின் அமைவிடம் இடது, வலது, நட்டநடு செண்டர் என்று பார்க்காமல் இருக்கிறோம் என்பதே.

அஜிதன்

(சுந்தர ராமசாமியின்) காலச்சுவட்டில், கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா, இந்திரா பார்த்தசாரதியின் கணையாழி வழியாக தங்களை அறிந்துகொண்டேன். 1997-ல் வேலை வாய்ப்பின் பொருட்டு அரபு நாட்டு எண்ணெய் வயல்களுக்கு சென்றபோது என்னிடம் விஷ்ணுபுரம் நாவல் இருந்தது. அங்கு என் ஆயுளின் மிக நீண்ட காலத்தை (மனைவி உடனிருந்த போதிலும்) தனிமையில் கழித்தபோது என்னை ஆற்றுப்படுத்தியது இலக்கியம். அதற்கு ஏதும் திருப்பி செலுத்த வேண்டும் என்கிற நேர்ச்சை போன்ற ஒன்றே 2012 முதல் இன்றுவரை கிட்டத்தட்ட சொல்லிக் கொள்ளும்படியான பெரிய வருமானம் ஏதுமில்லாவிட்டாலும்கூட இங்கு, இலக்கிய சூழலில் இருக்கவே மனம் பிரியப்படுகிறது.

அதேபோல பெரும்பாலும் சென்னையின் முக்கியமான இலக்கிய கூடுகைகளில் காணப்படும் பலரையும் இங்கு பார்க்க முடிந்தது.

அமிர்தம் சூர்யா, பாவண்ணன், கார்திகை பாண்டியன், அகரமுதல்வன், கீரனூர் ஜாகிர்ராஜா, சொல்புதிது சூத்ரதாரி எம்.கே.வையும், மதுரை சதகத்துல்லா உள்ளிட்டோரையும் விழாவில் காணப்பட்டனர். லா.ச.ரா.வின் மகன் பெரியர் சப்தரிஷி ‘அபி’ edit செய்த திருக்குர்ஆன் (போனில் பேசும்போது) கேட்டிருந்தார். கோவை விஷ்ணுபுரத்துக்கு வருவேன், எடுத்துட்டு வாங்கோ என்று சொன்னதால் கொடுத்தேன். அப்பாவைப் போலவே கண்ணன் என்று என்னை அழைப்பவர் அபி என்று கூறியபடியே தலைமேல் தூக்கி பெற்றுக் கொண்ட சப்தரிஷியை ஆன்மிக பெருக்குடன் கடலூர் சீனு மௌனசாட்சியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

இளம் தோழர்கள் இந்த தொடரோட்டத்தில் இணைந்திருப்பதும் சென்னையிலும், கோவையிலுமாக தாங்கள் எங்கு எந்த ஊருக்கு வந்தாலும் இவர்களை எது ஈர்க்கிறது என்பது வியப்பாகவே உள்ளது. மதார், நவீன், விக்னேஷ் ஹரிஹரன், அழிசி ஸ்ரீநிவாசன் – இன்னும் அறிமுகமாகிக் கொள்ளாத பலரும் இருந்தனர். விழாவில் (நான் பார்க்காமல்) தவறவிட்டவர்களில் தங்களின் குடும்ப உறுப்பினர்கள், கோவை ராம்குமார் போன்ற சிலர். விழா முடிந்த பிறகு திரும்பும் வழியில் நிஷா மன்சூர் தன் காரில் என்னை கோவை ஜங்கஷனில் இறக்கிவிட்டுப் மேட்டுப்பாளையம் சென்றார்.

அன்றிரவு சேரன் எக்ஸ்பிரஸ்சில் படுக்கை வசதியுள்ள இருக்கை கிடைத்தது. சென்னைப் புத்தக கண்காட்சியை எதிர்கொள்ளவும், அருண்மொழி அவர்களின் நூல் வெளியீட்டு விழா ‘நிவேதனம் ஹாலில்’ என்ற தங்களின் அறிவிப்பு முன்கூட்டியே இருந்ததால், அன்று சென்னையில் இருக்கும்படியாக டிக்கெட்டை ஒழுங்கு செய்திருந்தேன், பெருந்தொற்று, பொதுமுடக்கம் இரண்டையும் தள்ளிப்போட்டுவிட்டது. எங்கேனும் கூடிய விரைவில் சந்திக்கலாம், இலக்கியம் பேசலாம்.

கொள்ளு நதீம், ஆம்பூர்.

முந்தைய கட்டுரைவளியில் ஒரு விந்தை – ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
அடுத்த கட்டுரைபொதுப்பணி-ஒரு சுருக்கமான உரை