பாமரர்களும் எழுத்தாளர்களும்

குற்றிலக்கியவாதிகள் என்னும் இனம்

அன்புள்ள ஜெ

உங்கள் பதில் கண்டேன். உங்கள் சொற்களில் பாமரர், பாமர உள்ளம் என்று வருகிறது. இங்கே நண்பர்களிடம் பேசும்போது அப்படி எப்படிச் சொல்லலாம், மக்களை இழிவுபடுத்துவது அது என்று சிலர் கொதித்தனர். இது அறிவுமேட்டிமைத்தனம் என்றார்கள்.

அவர்கள் சொல்லக்கேட்டு நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால் அவர்களின் சொற்களுக்கும் செயலுக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டு இப்போது கொஞ்சம் குழப்பம் அடைந்திருக்கிறேன். அவர்கள் தங்கள் கட்சிக்கு மக்கள் ஓட்டுப்போடவில்லை என்றால் மக்களை முட்டாள்கள் என்று சொல்பவர்கள். பொதுவாகவே மக்கள் முட்டாள்கள், தாங்கள் அரசியல் விழிப்பு பெற்றவர்கள் என்ற எண்ணம்தான் அவர்களிடமிருக்கிறது. மக்களுக்கு அரசியல் நுட்பங்களும் சூழ்ச்சிகளும் தெரியாது, தாங்கள் அதையெல்லாம் எடுத்துச் சொல்லவேண்டும் என்பார்கள்.   வடக்கே இருப்பவர்கள் எல்லாம் பான்பராக் வாயன்கள் என்பார்கள். ஒட்டுமொத்த இந்தியாவின் மக்களும் அடிமைப்புத்தி கொண்டவர்கள் என்பார்கள். மக்களை இவர்கள் பழிக்காத நாளே இல்லை.

நான் கேட்பது இதுதான். அவர்கள் மக்களை அறிவற்ற கும்பல் என்றும் தங்களை மேலான அரசியல்பிரக்ஞ்ஞை கொண்டவர்கள் என்றும் இவர்கள் சொல்வதற்கும் பாமரர் என்று நீங்கள் சொல்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன?

ஜி.கார்த்திக் ராம்.

அன்புள்ள கார்த்திக் ராம்

ஒரே வேறுபாடுதான், நான் மக்கள் அனைவரும் பாமரர் என்று சொல்லவில்லை, மக்களில் உள்ள பாமரர்களை மட்டுமே குறிப்பிடுகிறேன்.

இலக்கியம் என்பது பாமரத்தனத்துக்கு எதிரான தொடர் போராட்டம். சங்க காலம் முதல் இலக்கியத்தைக் கவனிப்பவர்களுக்கு இது தெரியும். மக்களில் ஒருசாரார் அன்றாட உலகியல் மட்டுமே உண்மை என நினைப்பவர்கள். அளிக்கப்பட்ட வாழ்க்கையை அப்படியே வாழ்பவர்கள். அடிப்படை இச்சைகளாலும், கூட்டுமனநிலைகளாலும் இயக்கப்படுபவர்கள். அவர்களுக்கு அறிவியக்கம் பற்றியோ அறவியல் பற்றியோ ஆர்வமிருக்காது. ஆன்மிகம் என்பதை அவர்கள் உலகியலில் வைத்தே புரிந்துகொண்டிருப்பார்கள். அவர்களையே பாமரர் என்கிறோம்.

பாமரர்களிடமிருந்து வேறுபட்டு இன்னொரு திசையில்தான் அறிவியக்கம், அறவியல், ஆன்மிகம் ஆகியவை செயல்படுகின்றன. பாமரர் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்பவர்கள். தங்களைப் பற்றி, தங்கள் குடும்பம் பற்றி, தங்கள் குழுவைப்பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள். தங்களைச் சூழ்ந்துள்ள வாழ்க்கைக்கு அப்பால் அறிய முயலாதவர்கள். அறிவியக்கம் நேற்றையும் நாளையையும் இணைத்து யோசிக்கிறது, ஒட்டுமொத்த மானுடத்தையும், ஒட்டுமொத்த சமூகத்தையும் கருத்தில் கொண்டு அணுகுகிறது. வாழ்க்கையை அதன் எல்லா களங்களையும் கருத்தில்கொண்டு  ஆராய்கிறது.

ஆகவே அறிவியக்கத்தில் செயல்படும் எவரும் தன்னை பாமரர்களிடம் இருந்து வேறுபடுத்தி வரையறை செய்துகொண்டே ஆகவேண்டும். பாமரர்களின் இயல்புகளை தன்னில் இருந்து அடையாளம் கண்டு அகற்றிக்கொண்டே இருந்தாகவேண்டும். பாமரர் மீதான ஒவ்வாமையும் விமர்சனமும் இல்லாத அறிவியக்கவாதி இருக்கவே முடியாது. பாமரர்களுடன் பாமரராக இருப்பதாக சில அறிவுஜீவிகள் பாவனை செய்யலாம். அது ஓர் அரசியல்நடிப்பு மட்டுமே. அவர்கள் போலி அறிவுஜீவிகள் என்றுதான் அதற்குப்பொருள்.

இங்கே ஒரு விஷயத்தை நீங்கள் பார்க்கலாம். அறியப்பட்ட ஓர் ஆளுமை நம் சூழலில் உள்ள ஏதாவது ஒரு பாமரத்தனத்தை சுட்டிக்காட்டி ஏதாவது சொன்னால் உடனே சமூகவலைத்தளத்தில் வாழும் பெரும் கும்பல் பொங்கி எழுகிறது. அதை மேட்டிமைவாதம் என்கிறது. தங்களை பாமரர்களின் பக்கம் நிறுத்திக்கொண்டு கூச்சலிடுகிறது. ஆனால் சில நாட்களுக்குள் அதே சமூகவலைத்தளஜீவிகள் தங்கள் சொந்த வாழ்க்கையில் சந்தித்த சிலருடைய பாமரத்தனத்தைப் பற்றி ஒவ்வாமையும் கண்டனமுமாக பதிவிடுவதைக் காணலாம்.

தான் வாழும் சமூகம், தன் மரபு, தன் சூழல் பற்றிய ஒவ்வாமையில் இருந்தே எழுத்தாளன் உருவாகிறான். ஆகவே சமூகவிமர்சனம் என்பது இலக்கியத்தின் அடித்தளம். தொன்றுதொட்டே அவ்வாறுதான். சங்கப்புலவனே தன் சமூகத்தை விமர்சனம் செய்தவதான். நவீன இலக்கியம் சமூகவிமர்சனத்தின் மேல் கட்டப்பட்டது. இன்றிருக்கும் சமூகத்தின் மீதான விமர்சனமும் இன்னும் மேலான ஒன்றுக்கான கனவுமே இலக்கியத்தை உருவாக்கும் விசைகள்.

இலக்கியவாதியின் விமர்சனத்தை கண்டு சீற்றம்கொள்பவர்கள் இரு சாரார். ஒரு சாரார் பாமரர்கள். அவர்களுக்கு எதிரானது அவ்விமர்சனம். ஆகவே அவர்கள் சீற்றம்கொள்வது இயல்புதான். அவ்வாறுதான் அவர்கள் சாக்ரடீஸ் காலம் முதல், கபிலர் காலம் முதல் சீற்றம் கொண்டனர். சாக்ரடீஸை நஞ்சூட்டியும் கபிலரை கல்லால் அடித்தும் கொன்றனர். அவர்கள் எப்படிச் சீற்றம்கொண்டாலும் இலக்கியவாதி அவன் சொல்வதைச் சொல்லிக்கொண்டுதான் இருப்பான். நீண்டகால அளவில் அவன் சொற்கள் அந்தப் பாமரரையே மாற்றியமைக்கவும் செய்யும்.

பாமரர்களுக்கு, அவர்கள் பாமரர் என்பதனாலேயே, இலக்கியவாதியின் முக்கியத்துவம் புரியாது. அவனுடைய கருத்துக்கள் திரிபடைந்துதான் பாமரர்களுக்குச் சென்று சேரும். அவற்றை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஆகவே ‘எவனோ ஒருவன்’ தன்னை பெரிய ஆளாக நினைத்துக்கொண்டு தங்களை இழிவுசெய்கிறான் என்றுதான் அவர்கள் நினைப்பார்கள். அவனுடைய விமர்சனத்தால் புண்படுவார்கள்.

பாமரர்களால் குழுவாகவே செயல்பட முடியும். அவர்கள் எப்போதும் ‘நாங்கள்’ என்றே சொல்வார்கள். சாதி, மதம், இனம், மொழி, கட்சி என அவர்கள் தங்களைத் தொகுத்துக்கொள்வார்கள். கூட்டமாகத் திரண்டு எதிர்வினையாற்றுவார்கள். எழுத்தாளன் அந்த எதிர்ப்பை தனியாக நின்று சமாளிக்கவேண்டும்.

பாமரர்கள் தங்கள் குழு அடையாளத்தைக் கொண்டே எதையும் அணுகுவார்கள். ஒருவன் தன்னை இன்னசாதி, இன்னமதம் என எண்ணிக்கொண்டான் என்றால் அவன் எதை வாசித்தாலும் எதைக்கேட்டாலும் தன் சாதி, தன் மதம் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றே பார்ப்பான். அது அவன் அவனுடைய சாதி, அவனுடைய மதம் பற்றி என்ன நினைக்கிறானோ அதேபோல அப்படியே இருக்கவேண்டுமென எதிர்பார்ப்பான். இல்லை என்றால் புண்படுவான், கொதிப்பான்.

தன் சாதியைச் சேர்ந்த ஒருவன் ஒரு கதையில் கெட்டவனாக காட்டப்பட்டிருந்தால் அதை தன் சாதிக்கு எதிரான தாக்குதல், தன் சாதியை இழிவுசெய்தல் என்று மட்டுமே அவனால் எண்ணமுடியும். அந்த ஆசிரியர் வேறு என்ன சொல்லியிருக்கிறார், ஒட்டுமொத்தமாக என்ன சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் அவனால் பார்க்கவே முடியாது. பாமரனின் எல்லை அது.

கி.ராஜநாராயணன் அவர் கதையில் ஒரு பொற்கொல்லர் பற்றி ஒரு வரி வந்தபோது பொற்கொல்லர்கள் எப்படி கிளர்ந்து எழுந்து எதிர்த்தனர் என எழுதியிருக்கிறார். வாழ்க்கையின் கடைசிக்காலத்தில் ஒரு வாய்மொழிப்பேட்டியில் அவர் தலித்துக்களை அவன் என்று சொல்லிவிட்டார் என்று சொல்லி அவர்மேல் தீண்டாமை ஒழிப்பு சட்டப்படி வழக்கு தொடுத்தனர் முற்போக்கு எழுத்தாளர் முகாமைச் சேர்ந்தவர்கள்.

இப்படி பாமரர் புண்பட்டுக்கொண்டேதான் இருப்பார்கள். ஆசிரியர்களைப் பற்றி எழுதிவிட்டார் என ஆசிரியர்கள் கொதிப்பார்கள். வழக்கறிஞர்களைப் பற்றி எழுதிவிட்டார் என வழக்கறிஞர்கள் கொதிப்பார்கள். வணிகர்கள், வண்டியோட்டிகள் என எல்லாருமே அவர்களைப் பற்றி அவர்கள் நம்புவதை எழுத்தாளன் எழுதவேண்டும், வேறு என்ன எழுதினாலும் புண்படுவோம் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு பிடிக்கும்படி எழுதுபவன் எழுத்தாளனே அல்ல.

இலக்கியவாதியின் விமர்சனத்தைக் கண்டு சீற்றம்கொள்ளும் இரண்டாவது தரப்பினர் அரசியல்வாதிகள். அரசியல்வாதிகள், அவர்கள் முற்போக்கோ பிற்போக்கோ எவராயினும், மக்களை தாஜா செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். தங்களை மக்களுக்காகவே வாழ்பவர்கள் என்று அவர்கள் மக்களை நம்ப வைக்கவேண்டும். ஏனென்றால் அவர்கள் மக்களிடமிருந்து வாக்குகளைப் பெற்றாகவேண்டும். ஆகவே மக்களுக்குப் பிடித்ததையே அவர்கள் பேசுவார்கள். மக்களைப் புகழ்வார்கள். எதன்பொருட்டும் மக்களைக் கண்டிக்க மாட்டார்கள். மக்களுக்கு லஞ்சம் கொடுப்பார்கள். மக்களைச் சீராட்டுவார்கள். அவர்களின் சீரழிவுகள் கீழ்மைகள் எதுவாயினும் அதை கொண்டாடுவார்கள்.

ஓர் இலக்கியவாதி அல்லது சிந்தனையாளன் சமூகம் மீது விமர்சனத்தை வைக்கும்போது கொதித்து எழுந்து ’மக்கள் பாங்காளன்’ வேடமிட்டு வந்து நிற்பவர்கள் அரசியல்வாதிகள்தான். எந்த விமர்சனத்தையும் இவர்கள் மேட்டிமைவாதம் என திரிப்பார்கள். எந்த சுட்டிக்காட்டலையும் இழிவுபடுத்தல் என்று திருப்பிவிடுவார்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எழுத்தாளன் மேல் பாமரர்களின் கோபத்தை கிளப்பிவிட, பாமரர்கள் குழுவாக அவனை தாக்கும்படிச் செய்ய முயன்றுகொண்டே இருப்பார்கள். ஏனென்றால் இலக்கியவாதி இந்த அரசியல்வாதியையும் விமர்சனம் செய்பவன்.

ஒருபோதும் விமர்சனம் செய்யும் உரிமையை, இடித்துரைக்கும் தகைமையை எழுத்தாளன் விட்டுவிடலாகாது. அரசியல்வாதிகளின் மிரட்டல்களாலோ பாமரர்களின் கும்பல்தாக்குதல்களாலோ அவன் விமர்சனங்களை தவிர்ப்பான் என்றால் இலக்கியத்தை இழப்பான். வளையவேகூடாது என்று நான் சொல்ல வரவில்லை. எழுதுவதே எழுத்தாளனுக்கு முக்கியம், அதன்பொருட்டு அவன் வாழ்ந்தாகவேண்டும். ஆனால் தன் பணி என்ன என்பதைப்பற்றிய தெளிவு அவனிடம் இருக்கவேண்டும்.

இதன் மறுபக்கமாக ஒன்றைச் சொல்லவேண்டும். பாமரத்தனம் மீதான எழுத்தாளனின் ஒவ்வாமை என்பது ஒரு போதும் மக்கள் மீதான ஒவ்வாமை அல்ல. எளியோர் மீதான ஏளனம் அல்ல.  உயர்வுமனப்பான்மையோ திமிரோ அல்ல. பாமரரை விமர்சிக்கும்போதுகூட அது காழ்ப்போ கசப்போ அல்ல. அது இன்னும் மேலான அறிவுத்தளத்தில், ஆன்மிகத்தளத்தில் நின்றுகொண்டு செய்யப்படும் ஒருவகை இடித்துரைத்தலோ அறிவுறுத்தலோ மட்டுமே.

எழுத்தாளன் சமூகத்தில் ஒருவனாகவே இருக்கிறான். மக்களில் ஒரு துளிதான் அவனும். அந்த தன்னுணர்வு அவனுக்கு இருக்கும். தன் மக்கள் இன்னும் மேலான நிலையை அடையவேண்டும் என்னும் ஆதங்கமும் கனவுமே அவனை அவ்வண்ணம் ஒவ்வாமைகொள்ளவும் இடித்துரைக்கவும் செய்கிறது. மக்கள் மீதான ஒடுக்குமுறையும் சுரண்டலும் அநீதியும் அவனை கொதிக்கச் செய்கின்றன. அதன் விளைவாகவே அவன் தீவிரம்கொண்டு எழுதுகிறான்.

மக்களை வெறுப்பவனால் இலக்கியம் படைக்கமுடியாது. ஏனென்றால் இலக்கியத்துக்குத் தேவை நுண்மை. நுண்மைகள் எல்லாம் கூர்ந்த அவதானிப்பால்தான் அமையும். கூர்ந்த அவதானிப்பு பெரும் ஈடுபாட்டில் இருந்து எழுவது. மக்களை பெருவிருப்புடன் கூர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பவனால்தான் அவர்களை இலக்கியத்திற்குள் கொண்டு வர முடியும்.

பாமரர்கள் என்னும்போது எளியோர், வறியோர், அடையாளமற்றோரைக் குறிப்பிடவில்லை. பாமரத்தனம் என்பது செல்வந்தர்கள், செல்வாக்கானவர்கள், புகழ்பெற்றவர்களிடமும் நிறைந்துள்ளது. அறிவுக்கு , நுட்பங்களுக்கு, முழுமைநோக்குக்கு எதிரான அன்றாடப்பார்வை, உலகியல்பார்வை , தன்னலப்பார்வை மட்டுமே கொண்டவர்களையே பாமரர்கள் என்கிறோம். பாமரர்களின் மேல் எழுத்தாளன் வைக்கும் விமர்சனத்தை மக்கள்மேல் வைக்கும் விமர்சனமாக திரிப்பவன் ஏமாற்றுக்காரனாகிய அரசியல்வாதிதான்.

மக்கள் அனைவரும் பாமரர்கள் அல்ல. பிள்ளைகளைப் பெற்று உளம் கனிந்த அன்னை, நிலத்தை நுண்ணிதின் அறிந்த விவசாயி எல்லாம் பாமரர்கள் அல்ல. அவர்களைப்பற்றித்தான் எழுத்தாளன் எழுதுகிறான். ஏழாம் உலகம் நாவலின் ராமப்பன் ஓர் அரிய மனிதர். சான்றோன் என்ற பேருக்கு தகுதியானவர். அவரை எழுதுவது எழுத்தாளனின் கடமை. கெத்தேல் சாகிப், பாமரர் அல்ல. அவ்வாறு எத்தனை நூறு மானுடரை நான் எழுத்தில் காட்டியிருப்பேன். எளிமையான மக்கள் திரளில் இருந்து வருபவர்கள்தான் அவர்கள். அவர்கள் மக்கள் என்று நாம் சொல்லும் பெருந்திரளின் அறிவுத்திறன், அறம், கருணை, ஆன்மிகம் ஆகியவற்றின் உதாரணங்கள்.

என்னைப்பற்றிச் சொல்கிறேன். நான் என்றும் எங்கும் பெருந்திரளில் இருந்து பிரித்து காணப்படலாகாது என எனக்கே ஒரு நெறியை விதித்துக்கொண்டவன். இன்றும் நான் எழுதும் திரைப்படங்களின் தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றமாட்டேன் என்பதை ஒரு நிபந்தனையாக வைத்த பின்னரே நான் படங்களை ஏற்றுக்கொள்கிறேன். ரஜினிகாந்துடனோ கமல்ஹாசனுடனோ விஜயுடனோ சிம்புவுடனோ ஒரு முறை தொலைக்காட்சியில் தோன்றிவிட்டால் அதன்பின் நான் தெருவில் இயல்பாக நடக்க முடியாது.

நான் தொலைக்காட்சிப் பேட்டிகளைக்கூட தவிர்ப்பது இதனால்தான். என்னை அனைவரும் அடையாளம் காண்பார்கள். அது என்னை மக்களிடமிருந்து விலக்கும். ஏதோ ஒரு டீக்கடையில் நின்று டீ குடிப்பதோ ஏதேனும் வரிசையில் நிற்பதோ எனக்கு அளிக்கும் விடுதலையை நான் இழக்கவேண்டியிருக்கும். பெருவிருப்புடன் நான் மக்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அங்கிருந்துதான் நான் எழுதும் ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கண்டடைகிறேன்.

அந்த மக்களில் உள்ள குறைகளை, சரிவுகளை சுட்டிக்காட்டுவதும் அதே பெரும் அன்பினால்தான். அந்த அன்பே அவர்களைப்பற்றி எழுதும் கலைஞனாக என்னை வைத்திருக்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைபுவி 90 ஆவணப்படம்
அடுத்த கட்டுரைசொல் தட்டச்சு -கடிதம்