மருத்துவரின் கண்கள்

[1 ]

நான் முதன்முதலாக இந்திய மண்ணைவிட்டு வெளியே சென்றது 2000 த்தில் யார்க் பல்கலைக்கழக அழைப்பின் பேரில் கனடாவுக்கு. அதன்பின் பல வெளிநாட்டுப் பயணங்கள் நிகழ்ந்திருந்தாலும் அந்த முதல் பயணம் அளித்த பரவசம் அப்படியே நினைவில் வாழ்கிறது. முதன்முதலில் இமைய மலையைப் பார்த்தது 1981ல். அதன் பின் எத்தனை முறை பார்த்திருந்தாலும் அந்த முதல் தரிசனமே திரும்ப நிகழ்கிறது.

ஆனால் அன்று அப்பயணங்களைப்பற்றி நான் எழுதவில்லை. அன்று எனக்கு ஒரு தவறான எண்ணம் இருந்தது. பயணக்கட்டுரைகளின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்று. உலகம் சொற்களின் வழியாகவே அறியப்பட்ட காலத்திற்குரியவை பயணக்கட்டுரைகள். புகைப்படங்கள் வந்துவிட்டன, காணொளிகள் வந்துவிட்டன, தொலைக்காட்சியில் இருபத்துநான்கு மணிநேரமும் உலகின் சந்துபொந்துகளையெல்லாம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். பனிமலை முகடுகள், பாலைநிலங்கள், ஆழ்கடல்கள். இனி எதற்காக பயணக்கட்டுரைகள் என எண்ணினேன்.

நான் சிறுவனாக இருந்தபோது மெக்கன்னாஸ் கோல்ட் என்ற சினிமா வெளியாகியது. நாகர்கோயிலில் அந்தப்படம் நூறுநாள் ஓடியது. அதில் அமெரிக்காவின் கிராண்ட் கான்யன் பள்ளத்தாக்கைக் காட்டுவார்கள். அதைப்பார்க்க மக்கள் திரும்பத்திரும்ப வந்துகொண்டிருந்தனர். அதை அப்படி பெரியதிரையில் காட்சியாகப் பார்க்க வேறுவழியே இல்லை.ஐ.வி.சசி இயக்கத்தில் ஜெய்சங்கர் நடிப்பில் ‘ஒரே வானம் ஒரே பூமி’  என்ற படம் வெளிவந்தபோது நயாகாராவை பார்க்கவே மக்கள் பெருகி வந்தனர். படத்தில் அமெரிக்காவை மொத்தமாக இருபது நிமிடம் காட்டுவார்கள். நயாகரா ஒருநிமிடம் வரும்.

ஆனால் தொலைக்காட்சி வந்தபின் நயாகராவை திகட்டத்திகட்ட பார்த்துவிட்டோம். கிரான்ட் கான்யனில் பறவைபோல காமிரா பறந்து எடுத்த காட்சிகளை முப்பரிமாணத்திலேயே இன்று பார்க்கமுடியும். இன்று கூகிள் எர்த் வந்து விட்டது. இணையத்தில் உலகைப் பார்க்கலாம். எந்த ஒரு பகுதியைப்பற்றி தேடினாலும் ஆவணப்படங்கள் குவிந்து கிடக்கின்றன. எனில் எதற்காகப் பயணக்குறிப்புகள்?

நான் இளமையில் பெருவிருப்புடன் வாசித்தவை பயணக்கட்டுரைகள். தமிழில் ’உலகம்சுற்றும் தமிழன்’ என அழைக்கப்பட்ட் ஏ.கே.செட்டியார் அவர்களின் நூல்களை வாசித்திருந்தேன். மணியனின் பயணக்கட்டுரைகள் அனைத்தையும் வாசித்திருந்தேன்.  தமிழின் சிறந்த பயணக்கட்டுரைகள் தி.ஜானகிராமன் எழுதியவை. ஜப்பானைப் பற்றி அவர் எழுதிய ‘உதயசூரியனின் நாட்டில்’ மத்திய ஆசியா பற்றி எழுதிய ‘கருங்கடலும் கலைக்கடலும்’ காவேரியின் கரையோரமாகவே பயணம் செய்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ ஆகிய நூல்கள் முக்கியமானவை.

ஏ.கே.செட்டியார்

இந்திய அளவில் என் பிரியத்துக்குரிய பயணக்கட்டுரையாளர்கள் மூவர். முதன்மையானவர் தாகூர். அன்றும் இன்றும் இந்தியமொழிகளின் மகத்தான பயணக்கட்டுரையாளர் அவரே. அவருடைய செல்வ வளம் அவரை தொடர் பயணியாக வாழ வழிவகுத்தது. இமையமலைகளில் ஆப்ரிக்க பழங்குடி நிலங்களில் அரேபிய பாலையில் என அவர் பயணம் செய்துகொண்டே இருந்தார். குறிப்பாக அவருடைய ஆவிக்கப்பல் பயணங்கள் எனக்கு பெரும் கனவென நினைவில் நீடிக்கின்றன. இரண்டாமவர் காகா காலேல்கர். இந்தியாவின் அத்தனை ஆறுகளையும் ஏரிகளையும் நேரில் சென்று பார்த்து அவர் எழுதிய ‘ஜீவன்லீலா’ என்ற நூல் ஒரு பெரும்படைப்பு. மலையாளத்தில் ஞானபீடப் பரிசுபெற்ற எழுத்தாளரான எஸ்.கே.பொற்றேக்காட் எழுதிய பயணக்கட்டுரைகள் எல்லாம் பெரும்புனைவுகளுக்கு நிகராக உளம் கவர்பவை.

பயணக்குறிப்புகளை நான் எழுத ஆரம்பித்தது 2008 ல் ஆஸ்திரேலியா சென்றபோதுதான். அப்போது நான் இணையதளம் ஆரம்பித்திருந்தேன். அதில் தொடர்ச்சியாக எழுதவேண்டியிருந்தது. நாங்கள் ஐந்துபேர் ஒரு காரில் தமிழகத்தில் இருந்து கிளம்பி இந்தியாவைச் சுற்றிவந்தோம். அந்தப் பயணத்தை அன்றன்றே இணையத்தில் பதிவுசெய்தேன். அதன்பின் சென்ற ஊர்களைப்பற்றியெல்லாம் எழுதலானேன். அவற்றுக்கு வாசகர்கள் அமைந்தனர். 2009ல் ஆஸ்திரேலியா சென்றபோது எழுதிய குறிப்புகளை ‘புல்வெளிதேசம்’ என்ற பெயரில் நூலாக்கினேன். அதற்கு வாசகர்களின் பெரிய வரவேற்பு இருந்தது. இன்று என் பயணநூல்கள் பல வெளியாகியிருக்கின்றன.

காகா காலேல்கர்

இப்போது தெளிவடைந்திருக்கிறேன், ஏன் பயணக்குறிப்புகள் முக்கியமானவை என. பயணம் செய்து அறியும் செய்திகள் இணையத்திலேயே கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் பயணம் செய்பவர் தனித்துவமானவர். நான் பயணம் செய்து அடையும் அனுபவம் எனக்கு மட்டுமே உரியது. வாசகர் அறிவது என் வழியாக ஒரு பயண வாழ்க்கையை. ஆகவே எல்லா பயணக்கட்டுரைகளும் முக்கியமானவை. எத்தனையோ பேர் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் சென்று எழுதியிருக்கலாம். ஓரு சித்தமருத்துவர் பார்வையில் இந்நிலங்கள் வெளிப்படுவது கு.சிவராமன் அவர்கள் செல்லும்போதுதான்.

[ 2 ]

ஒரு சித்தமருத்துவராகவும், ஒரு நெல்லைக்காரராகவும் கு.சிவராமன் இந்தப் பயணங்களில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறார். இந்நூலை ஆர்வமூட்டும் வாசிப்பனுபவமாக ஆக்குவது அவர் வழியாக இந்தப் பயணநிலங்கள் வெளிப்படுவதுதான். இதில் நாம் காணும் சிவராமன் உணவுப்பழக்கம் மேல் ஆர்வம் கொண்டவர், உணவில் ஆர்வம் கொண்டவர். கூடவே இளமையின் உற்சாகத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்பவர். ஊர்நினைவுகளை இழக்காதவர். எல்லா காட்சிகளுடனும் நெல்லை வந்து இணைந்துகொள்கிறது. அது மேலும் அணுக்கமானவராக அவரை ஆக்குகிறது

எந்நிலையிலும் மானுடம் மேல் சலிப்பு கொள்ளாதவரே நல்ல பயணி. எந்த அயல்பண்பாடு மேலும் விலக்கமோ கண்டனமோ கொள்ளாதவராக அவர் இருந்தாகவேண்டும். நாம் வெறுக்கும் ஒழுக்கவியல் இன்னொரு சமூகத்தில் இருக்கலாம். நமக்கு ஒவ்வாத உணவு அங்கே உண்ணப்படலாம். நாம் ஏற்றுக்கொள்ள முடியாத பழக்கவழக்கங்கள் இருக்கலாம். ஆனால் மானுடமென்பது மிகப்பெரியது. அங்கே ஒவ்வொன்றும் தனக்கான இருப்பும் பங்களிப்பும் கொண்டது. நாம் மட்டுமே சரி என்றில்லை, நாம் மானுடத்தின் ஒரு துளியே.

அந்த தன்னுணர்வு கொண்டவர் பிற பண்பாடுகள் மேல் பெரும் விருப்பும் மதிப்பும் கொண்டவராகவே இருப்பார். அவ்வண்ணம் இல்லை என்றாலும் பயணம் வழியாக அம்மனநிலையை அடைந்திருப்பார். அவ்வகையில் நான் தமிழில் பெரிதும் மதிக்கும் மாபெரும் பயணி எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள்தான். உலகின் அத்தனை மக்களையும் தன்னுடையவர்களாகவே காணும் விரிவுகொண்டது அவருடைய உள்ளம். அந்த விரிவை இந்நூலிலும் காணமுடிகிறது. அதுவே இந்நூலின் முதன்மையான தகுதி என நினைக்கிறேன்.

தி.ஜானகிராமன்

இத்தகைய பயணநூல்கள் செய்திகளைச் சீராகச் சொல்லிச் செல்பவை அல்ல. பல முக்கியமான செய்திகள் விடப்பட்டிருக்கலாம். மிகச்சிறிய விஷயங்கள் சொல்லப்படலாம். இவற்றின் அமைப்பு என்பது ஒரு பொதுப்பார்வைதான். பயணியின் பார்வை மேலோட்டமானது. உள்ளிருப்பவர்களின் பார்வையில் உள்ள ஆழம் அதில் இருக்காது. ஆனால் அது ஏன் முக்கியம் என்றால் உள்ளிருப்பவர்கள் ஒருபோதும் பார்க்காத சிலவற்றை பயணி பார்த்துவிடுவார். நம் வீட்டுக்கு வரும் விருந்தினர் நாம் நெடுநேரம் தேடி கிடைக்காமல் இருக்கும் ஒரு பொருளை வந்து அமர்ந்ததுமே பார்த்துவிடுவார் என்பதை கண்டிருப்போம்.

ஒரு பயணி வந்திறங்கியதுமே அவர் கண்ணுக்கு என்னென்ன படுகிறது என்பது மிக முக்கியமான கேள்வி. அவ்வாறு அவர் கண்ணுக்குப் படும் விஷயங்களை தொகுத்து அவற்றின் வழியாக அந்நிலத்தையும் பண்பாட்டையும் உருவாக்கிக்கொண்டால் முற்றிலும் புதிய ஒரு சித்திரம் கிடைக்கும். அது அப்பண்பாட்டின் மீதான சரியான மதிப்பீடாகவும் அந்நிலத்தின் அழகான காட்சிச்சித்தரிப்பாகவும் இருப்பதைக் காணலாம். பாகியான், யுவான் சுவாங் தொடங்கி வில்லியம் டார்லிம்பிள் வரை இந்தியாவைப் பற்றி இங்கே வந்தவர்கள் எழுதிய குறிப்புகள் அதனால்தான் முக்கியமானவை.

எஸ்.கே.பொற்றேக்காட்

கு.சிவராமன் சென்றிருக்கும் இந்நாடுகள், இந்நிலங்கள் எல்லாமே நானும் சென்றவை. ஏதாவது இடம் நான் செல்லாதது இருக்கிறதா என நூல் முழுக்க பார்த்தேன், இல்லை. ஆனால் நான் இந்நூலை ஒரே மூச்சில் பேரார்வத்துடன் வாசித்தேன். காரணம் அவருடைய அலையும் பார்வை எவற்றை தொட்டு எடுக்கிறது என்னும் ஆவல்தான்.  அமெரிக்கா உட்பட வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அங்கே குடியேற்ற அதிகாரிகளைச் சந்திக்கும் இடங்களிலேயே நாம் பண்பாட்டுச் சிக்கல்களை சந்திக்க ஆரம்பிக்கிறோம். என்ன தொழில் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு சிவராமன் ஆயுர்வேதம் என்றால் என்ன என்று விளக்க வேண்டியிருக்கிறது. உங்கள் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு ஊரில் இருக்கும் மனைவிக்குத்தான் அது தெரியும் என்று பதில் சொல்கிறார். ‘இந்தியர்கள் எல்லாவற்றுக்கும் மனைவியைச் சார்ந்திருக்கிறீர்கள்’ என்று அவர்கள் வியக்கிறார்கள்

கனடாவில் ஒருவர் விவசாயம் செய்ய விரும்பினால் அவர் இல்லத்தருகே அரசே அதற்கான நிலத்தை அளிக்கிறது, அதில் வயதானவர்கள் தோட்டம் போடுகிறார்கள். கு.சிவராமனின் பார்வை வியப்புடன் அதைப் பதிவுசெய்கிறது. டெர்ரி பாக்ஸ் என்னும் ஓட்டப்பந்தய வீரனுக்கு காலில் புற்றுநோய் வந்தபோது அவன் செயற்கைக்காலுடன் அமெரிக்காவுக்கு குறுக்காக ஓட ஆரம்பித்தான். வழியிலேயே மாண்டான். அவனுக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. கனேடியப் பழங்குடிகளுக்கு அவர்களுக்குரிய ஆன்மா பற்றிய நம்பிக்கை உள்ளது, அவர்களின் மருத்துவர்களால் அது முன்வைக்கப்படுகிறது. கு.சிவராமன் என்னும் மருத்துவரின் பார்வை தொட்டுத்தொட்டுச் செல்லும் இப்புள்ளிகளால் ஆன கனடா நான் காணாத ஒன்று

கூடவே அங்குள்ள தமிழர்களைப் பற்றிய பிரியம் கலந்த கிண்டல்களும் விமர்சனங்களும். குடியேறிய தமிழர்கள் இளமையிலேயே தொழிற்கல்வி பெற்று வேலைபார்க்க வெளிநாடு சென்றவர்கள். அவர்களுக்கு தாய்நாடு பற்றிய ஏக்கம் மிகுதி. ஆனால் தாய்நாடு என அவர்கள் அறிந்ததெல்லாம் இங்குள்ள ‘பாப்புலர் கல்ச்சர்’ எனப்படும் சினிமா அரசியல் போன்றவைதான். அவற்றையே அவர்கள் முதன்மையாக கவனிக்கிறார்கள். கனடா சுதந்திரநாள் என்பதை விட அன்று கபாலி ரிலீஸ் ஆகிறது என்பதுதான் அவர்களுக்கு முக்கியமாகப் படுகிறது. ஃபெட்னா விழாவில் டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரிக்கு வரவேற்பில்லை, சினிமாப்பாடல்களுக்கு ஆட்டம்போடுகிறார்கள். டி.எம்.கிருஷ்ணாவின் வருத்தத்தை மெல்ல பதிவுசெய்து செல்கிறார்.

நரசிம்மலு நாயிடு

நயாகாராவின் காட்சியுடன் குற்றாலம் இணைந்துகொள்கிறது. அங்கே ஒரு கிழத்தம்பதி புகைப்படம் எடுத்துக் கொண்டாடுவதைக் காண்கையில் தன் மனைவியும் தானும் அப்படி கிழஜோடியாக அங்கே ஒருநாள் வரவேண்டும் என எண்ணம் ஓடுகிறது. இந்த எண்ண ஓட்டங்களில் இருக்கும் இயல்புத்தன்மையால் இந்த பதிவுகளை ஓரு நீண்ட உரையாடலாக வாசிக்க முடிகிறது.

ஆஸ்திரேலியா விதைகள் பரவும் விஷயத்தில் எடுத்துக்கொள்ளும் அதீத எச்சரிக்கை, அங்கே காட்டுத் தீ அபாயம் இருப்பதனால் அவர்கள் அளிக்கும் நெறிமுறைகள் என விரியும் பயணப்பதிவுகள் நடுவே ஈழத்தமிழர்களின் இந்திய அரசியலார்வமும் மெல்லிய புன்னகையுடன் சுட்டிக்காட்டப்படுகிறது. சிட்னியில் இருந்துகொண்டு கமலஹாசனும் ரஜினிகாந்தும் கட்சி ஆரம்பித்தால் தேறுவார்களா என பதற்றப்படுகிறார்கள். இதை நானும் எழுதியிருக்கிறேன். மனிதர்களுக்கு விரும்பவும் வெறுக்கவும் நாடு தேவைப்படுகிறது. ஈழத்தமிழர்கள் ஈழ அரசியலில் சோர்வுற்றவர்கள். குடியேறிய நாட்டின் அரசியலில் ஆர்வம் கொள்ளவுமில்லை. ஆகவே அவர்களின் முதல் தலைமுறைக்கு இந்திய அரசியல் மிக உவப்பான ஒரு பேசுபொருள்.

இந்தியாவின் மிக அழகிய நிலப்பரப்புகளில் ஒன்று தென்கர்நாடகத்தின் கனரா மாவட்டம். அந்த கடலோர நிலத்தின் அழகையும், அங்குள்ள மருத்துவக்கல்வியையும் பேசுகிறது ஒரு கட்டுரை. இன்னொரு காட்சி திரும்பி கத்தார், ஓமன் என பாலைநிலத்தைக் காட்டுகிறது. நிலம், மக்கள், உணவு என்றே சிவராமனின் பார்வை விரிந்து செல்கிறது.

கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, கத்தார் என விரியும் பயணப்பதிவுகளுக்குப்பின் நூலின் நேர்ப்பாதி இந்திய நிலத்தில் செய்த பயணங்களின் பதிவுகளாக உள்ளன. இமையமலைச் சித்திரங்கள் அழகானவை. எந்த தமிழனுக்கும் இமைய மலைமுடிகளைப் பார்க்கையில் திருவண்ணாமலை நினைவில் எழும். சிவராமனுக்கும்தான். ஜாகேஷ்வர் செல்லும் பயணத்தில் எந்த இந்தியருக்கும் எழும் ஐயமும் பதற்றமும் அவருக்கும் எழுகிறது. இமையமலையின் அந்த ஆழ்ந்த அமைதியும் தவமும் இன்னும் எத்தனை காலம் நீடிக்கும்?

அங்கே கட்டிடங்கள் கட்ட எந்த வரைமுறையும் பேணப்படுவதில்லை. மூர்க்கமான காடழிவும், சுற்றுலாவளர்ச்சியும் நகர்மயமாக்கமும் நடைபெறுகிறது. இன்றைய ஆட்சியாளர்களோ சூழியல்பற்றிய அடிப்படைப்புரிதல்கூட இல்லாத பாமரக் கூட்டம். உத்தரகண்ட் மாநிலத்தில் இயற்கையை பாதுகாக்கப் போராடிய சுந்தர்லால் பகுகுணா பற்றிய நினைவு ஆசிரியருக்குள் எழுந்து வருகிறது. ‘ஒவ்வொரு தேவதாருவும் ஒரு மலைச்சிகரம்’ என்று சொல்லும் உள்ளூர்க்காரரின் ஆன்மிகம் வருங்காலத்தில் புரிந்துகொள்ளப்படுமா என்னும் ஏக்கம் எழுகிறது.

எல்லாப் பயணக்கட்டுரைகளும் இன்றில் இருந்துகொண்டு நாளையுடன் பேசுபவை. இன்றிருப்பது நீடிக்குமா என்னும் பதற்றம் அனைத்திலும் எப்படியோ பதிவாகியிருக்கும். தமிழின் தொன்மையான பயணக்கட்டுரை என்பது பகடாலு நரசிம்மலு நாயிடு எழுதிய ‘தட்சண இந்திய சரித்திரம்’ அதில் தமிழகத்தில் கன்யாகுமரி பற்றி அவர் சொல்லியிருக்கும் காட்சி விவரணைகளை வாசிக்கையில் ஏக்கம் நிறைந்து கண்ணீர் மல்குகிறது. தூய வெண்மணலும், தாழைமரங்களும் கொண்ட அந்த கடற்கரையை இன்று எண்ணிப்பார்க்கவே முடியாது. இன்று அங்கிருப்பது தார்ப்பாய்களால் ஆன கடைகளின் நெரிசல். குப்பக்கூடை என்றே கன்யாகுமரியை இன்று சொல்லிவிடமுடியும்.

எல்லா பயணநூல்களும் நாம் இழந்துகொண்டே இருக்கும் இன்றைய பூமியைப் பற்றித்தான் பேசுகின்றன. இந்நூலும்கூடத்தான்

ஜெயமோகன்

மருத்துவர் கு.சிவராமன் எழுதிய பயணக்கட்டுரைத் தொகுதியான ‘அங்கொரு நிலம் அதிலொரு வானம்‘க்கு எழுதிய முன்னுரை.

முந்தைய கட்டுரைதேவிபாரதி விருதுவிழா- கடிதம்
அடுத்த கட்டுரைநாவல் உரை -கடிதங்கள்