வெண்முரசு அறிமுகங்கள்- கடிதம்

அன்புள்ள அருண்மொழி மேடம், ராஜகோபாலன் சார்,

நலம், நாடுவதும் அதுவே!

நான் தமிழ் இலக்கியத்தில் தற்செயலாக நுழைந்து,  ஜெ சார்’இன்  எழுத்துக்கள் வழியில் வாசிப்பின் பித்தில் அகப்பட்டு கொண்டிருக்கும் ஒரு தொடக்க நிலை வாசகன் என்பதில் பெரும் மகிழ்ச்சி. ராஜகோபாலன் சாருக்கு இதற்கு முன் சில கடிதங்கள் எழுதியுள்ளேன் (விவேக், பாண்டிச்சேரி). ஜெ சாருக்கு சில கடிதங்கள் எழுதியுள்ளேன், அவர் என் குழப்பங்களை களைந்து ஆழ்ந்த விளக்கங்கள் அளித்துள்ளார் :) உங்களுக்கு இது என் முதல் கடிதம்.

தமிழ் இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கி வெண்முரசை பற்றி கேள்வி பட்டவுடன் பெரும் பரவசம், ஆனால் நான் சென்றடைந்த தகவல்கள் அனைத்தும் புறவயமானவை.. 26000 பக்கங்கள், உலகின் நீண்ட நாவல் வரிசை, சாரின் 25 வருட தேடல், 7 ஆண்டு உழைப்பு. அனைத்தும் பிரமிக்க வைத்தது. இருந்தும் எனக்கென்னவோ இதன் மகத்துவத்தை இப்படியாக அணுக முடியவில்லை…ஏதோ ஒன்று நிறைவடையாமல் இருந்தது. அப்போதுதான் உங்களின் இருவரின் உரைகளைக் கேட்க நேர்ந்தது. என் அறிதல்களை கீழ்கண்டவாறு புரிந்து கொண்டு இவ்வாறு தொகுத்து கொள்கிறேன்.

அ) இன்றுள்ள உலகமயமாக்கல் மற்றும் நுகர்வு சார் சூழலில் (இலக்கியத்திலும், அதற்கப்பாலும்) – இந்திய பின்புலத்தில் தமிழ் சூழலில் வரும் எந்த ஒரு புதிய விஷயமும் இதற்கு முன் இப்படி ஒன்று வரலாற்றில் வந்தடைந்து இருக்கும் இடம் பொருட்டே அணுகவும், அர்த்தப்படுத்தவும், மதிக்கவும் படுகிறது. அதிலும் ஒரு ஒப்பீட்டுக்காக ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒன்றுடன் தொடர்புபடுத்தி கூறும் போது அது இன்னும் வலுவிழந்தோ/வலுப்பெற்றோ போகிறது. குறிப்பாக “மறுஆக்கம் (remake, duplicate, replication, copy)” என்ற சொல்லாடல் பெரும் குழப்பங்களை எனக்கு விளைவித்தது. ஏனென்றால்,

  • பொதுவெளியில் மக்களை வந்தடையும் மறு ஆக்கங்கள்பெரும்பாலும் எந்த ஒரு மாற்றம் இன்றியோஅல்லது சூழலுக்கு ஏற்ப சிறு வடிவ மாற்றத்துடன் மட்டும் கொண்டு மக்களுக்கு ஏற்புடவையே திரும்ப கொண்டு வந்து சேர்க்கிறது. – உதாரணம்சினிமா (பில்லா/Billa 2; 3 idiots/நண்பன், ஒக்கடு/கில்லி etc);
  • இச்சொல்லை தவறான இடத்தில் பயன்படுத்துதல் மூலம் எழும் சிக்கல்கள் –உதாரணம்இலக்கியம்(Sapiens A brief history of humankind/சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு);
  • Replica or copy of technology/services from across globe – உதாரணம்eCommerce(Amazon/Flipkart, Uber/Ola)

ஆ) இந்தப் பின்புலத்தில் இருந்து வெண்முரசை அணுகியபோது வந்த குழப்பம் வெண்முரசை இலக்கியத்தில் நான் எங்கிருந்து ஆரம்பிப்பது, எப்படி அணுகுவது, என்ன என்று புரிந்துகொள்வது? மேலும் ஜெ சார்’இன் இலக்கியத்திருட்டு, தழுவல், மறு ஆக்கம்கட்டுரை ஒன்றை “இலக்கியத்தின் நுழைவுவாயில்” kindle நூலில் வாசித்தேன். https://www.jeyamohan.in/41422/... இருப்பினும் தெளிவு பெறவில்லை. இதற்குப்பின் தான் சற்று முயன்று – translate (மொழிபெயர்ப்பு), transliterate (ஒலிபெயர்ப்பு), transcribe (பெயர்த்தெழுது) உள்ள வித்தியாசத்தை அகராதி மூலம் தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.

  • Translate (தமிழ்ப்படுத்து/மொழிபெயர்):  (பிற மொழியில் உள்ள நூலை) தமிழில் மொழி பெயர்த்தல்/(பிற மொழிச் சொல்லை) தமிழ் ஒலிப்பு முறையில் அமைத்தல்; translate (a work) into Tamil/render a word in accordance with the tradition of the Tamil language. ‘வாக்யம்’ என்ற வடமொழிச் சொல்லை ‘வாக்கியம்’ என்று தமிழ் படுத்துகிறார்கள். ஒரு மொழியில் எழுதப்பட்டதை அல்லது சொல்லப்பட்டதைப் பொருளும் தொனியும் மாறாமல் மற்றொரு மொழியில் வெளிப்படுத்துதல்.
  • Transliterate (ஒலிபெயர்ப்பு)– ஒரு மொழியின் சொல் ஒவ்வொன்றிற்கும் மற்றொரு மொழியில் குறியீடு தந்து எழுதுதல்; transliterate. Apple (ஆப்பிள்).
  • Transcribe (பெயர்த்தெழுது)–  1. (புத்தகம், ஓலைச்சுவடி, ஆவணம் போன்றவற்றில் உள்ளதை) பிரதியெடுத்தல்; copy. பழந்தமிழ் நூல்களைச் சுவடிகளிலிருந்து பெயர்த்தெழுதியே நம் முன்னோர் பாதுகாத்துவந்தனர்(அல்லது) 2. (ஒரு படைப்பை ஒரு வடிவத்தில் இருந்து மற்றொரு வடிவத்திற்கு) மாற்றி எழுதுதலும் பெயர்த்து எழுதுதல் எனப்படலாம். அதாவது பழந்தமிழ் இலக்கியங்களை இக்காலத்தில் புரிந்து கொள்ள எளிதாக அவற்றை உரைநடையில் எழுதுதல். எனக்கு இந்த 2 விளக்கம் பொருத்தமாக பட்டது .
    • இந்தப் போக்கில்வெண்முரசை மஹாபாரததுடன்ஒப்பிடுகையில் அது எங்கு நிற்கிறது? Is it a translation (or) transliteration (or) transcription of mahabharata? None of the above or perhaps all of the above!

இ) சரி as a literary work, now got some idea என்ற பொழுது, அடுத்த குழப்பம் –  வாய்மொழி இதிஹாசமாகவும், தெருக்கூத்து போன்ற கலைகளின் மூலமாகவும், அல்லது ஒரு நூல் நவிர்ப்பு பயிலுமுறையில் சென்ற காலத்தில் பயில வாய்ப்பில்லாதமையாலும் எனக்கு மஹாபாரதம் ஒரு கடந்த கால/பழமை அடையாளமாகவே இருந்தது. எந்த ஒரு வாசிப்பு பின்புலமும் இல்லாமல் ஆங்கில வழி கல்வி பெற்ற என்னை போன்றோருக்கு மகாபாரதம் நாங்கள் வளர்ந்த சூழலில் இருந்த காட்சி ஊடகம் மூலம் (TV) ஒரு வார இறுதி நாடகத்தொடராக ஏற்கனவே அறிமுகமாகியிருந்தது. தொலைக்காட்சி மூலமாக வந்த போதும், கதாபாத்திரங்கள், நிலக்காட்சிகள், குதிரை, யானை போன்ற ஒரு சில பொருட்களை வைத்து மறு ஒளிபரப்பு செய்தாலும் – இது இன்று உள்ள அறிவியல் யுகத்தில் அம்பு, தேர், கடவுள், சாபம் போன்ற புராண கட்டுகள் நிறைந்து இருப்பதால் பழையது/காலஞ்சென்ற” அடையாளம் இருந்தமையால் பெரிய ஈர்ப்பு ஏற்படவில்லை.

  • இப்பின்புலத்தில் வைத்து மகாபாரத கதையை தெரிந்து கொண்ட நாங்கள்…மஹாபாரத்தைகருப்பு வெள்ளையாக புரிந்து வைத்திருந்தோம் (பங்காளி சண்டை, பொம்பள சிரிச்சா போச்சு, ஆட்சிக்காக சண்டை, சூட்சி செய்து நினைத்த காரியத்தை முடிப்பது, தருமர் நல்லவர், துரியோதனன் கெட்டவன், திரௌபதி பாவம், கிருஷ்ணன் கடவுள்).
  • மேலும்எப்படி சிரமப்பட்டு வெண்முரசு படித்தாலும் கதை நமக்கு பரிட்சியமான ஒன்று தானே? – இங்கயும் சூது தான் நிகழ போகிறது, தருமன் தோற்கத்தான் போகிறான், திரௌபதி அவமானப்படுத்தப்பட தான் போகிறாள்!
    • இந்த மனநிலையில் இருந்து என்னை விடுவித்ததுஉங்களின் உரைகள் தான்.

  • அருண்மொழி மேடம் நீங்கள் எடுத்தவுடனே கிளாசிக் என்றால் என்ன என விளக்கும் பகுதி, எனக்கு பல இலக்கிய அடிப்படைகள், மற்றும் classicஇன்தேவை விளங்க ஆரம்பித்தது.
  • மேலும் நவீனஇலக்கியமாக மறு ஆக்கம் செய்யும் பொழுது வெறுமேசெய்யுள் வடிவில் உள்ளதை உரைநடை வடிவில் மாற்றாமல், அன்றிலிருந்து இன்றுவரை அறிவியல், சமூகவியல், உளவியல் போன்ற துறைகளின் தோற்றதால் கண்டடைடையப்பட்டிருக்கும் விஞ்ஞான பூர்வமான தகவல்களை கருத்தில் கொள்ள தேவை, இவை அனைத்தையும் வரலாற்றின் கால அடுக்குகளையும் பொருந்தி வரவேண்டியுள்ளது.
  • தத்துவ சிந்தனைகளின்வளர்ச்சி, நட்பு, காதல், துரோகம் போன்ற மனித மனங்களும் உறவுகளும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் . அக்கால சமூகம், வணிகம், போன்ற விஷயங்கள். இதில் கவித்துவம்….வேதங்கள்(தனுர் வேதம், ஆயுர் வேதம் அறிவியலுக்கு முற்பட்ட முறைமைகள்) மற்றும் சாத்திரங்கள் (அஸ்வ சாத்திரம், மதங்க சாஸ்திரம்)…கலைகள்(சிற்பக்கலை, கட்டிட கலை, ஓவியக்கலை, இசைக்கலை, சமையல்கலை, ஒப்பனை கலை)…மாறாத அடிப்படை மானுட அறங்கள் (eternal  ethics), பயன் மதிப்பீடுகள் (value  systems). மாற்றம் அடையாத வேதங்கள்(சுருதி) எப்படி அணுகப்பட்டது, ஸ்மிருதி (do’s & dont ‘s) எவ்வாறு அணுகப்பட்டது, விதிவிலக்குகள், ப்ராயச்சித்தங்கள் போன்றவற்றுக்கு உங்களின் விளக்கம் மிகப்பெரிய திறப்பு!
  • அனைத்திற்கும் மேல் நீங்கள் கூறியது போல இது வெறும் பங்காளி சண்டை அல்ல.. .இரு தத்துவதரிசனங்கள் மோதல் எனும் பார்வை மிக புதிதாகஇருந்தது.

 

வெண்முரசை வாசித்தல்முதற்கனல் முதல்

அ) இதிகாசம் -> பண்பாடு -> காப்பியம் -> வெண்முரசின் இந்த அடுக்குகளை மிக நேர்த்தியாக, தெள்ளத்தெளிவாக பொருத்துக் காட்டியது உங்கள் உரைதான் ராஜகோபாலன் சார். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனையோ முறை நான் பண்பாட்டுக்கும் கலாசாரத்திற்கு வேறுபாடு தெரியாமல் குழப்பத்தில் இருந்திருக்கிறேன். உங்கள் உரை மட்டுமே அதை தெளிவு படுத்தியது. மேலும் நீங்கள் கூறியுள்ள புராணத்தை பற்றிய விளக்கம் மிக அவசியமான ஒன்று, அவ்விளக்கம் இல்லையெனில் பௌராணிக மதங்களுக்கும் இதிஹாசங்களுக்கும் உள்ள சிறப்பு தெரியாமலே போயிருக்கும்.

  • இதிஹாச(மொழியியல் அடிப்படையில்)– இதிக ஹாஸ (thus happened) இது இவ்வாறு நடந்தது, இவ்வாறாகவே நடந்தது. என்று கூறுவது.
  • இதிஹாசம்(பண்பாடு அடிப்படையில்)– ஒரு தொகுப்பு, ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றிய ஒட்டுமொத்த தொகுப்பு. எல்லா வகைப்படுத்த முடிந்த பண்பாடுகளும் ஒரு இதிஹாசம் உண்டு.
  • இதிகாசம் ஏன் முக்கியம்? – பண்பாடு பற்றிய ஒட்டுமொத்த தொகுப்பை அணுக வழி செய்வது.

ஆ) பண்பாடு என்றால் என்ன? – குறிப்பிட்ட நாடு, இடம் போன்றவற்றைச் சேர்ந்த மக்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மதம், மொழி, கலைகள், சிந்தனை வெளிப்பாடு, வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருக்கும் பொருட்கள் போன்றவற்றின் மொத்தம்; ஒரு சமூகத்தின் வாழ்க்கையை, விழுமியங்களை சொல்லக்கூடியது.

  • நம் பண்பாடு எந்த விழுமியங்களை முன்வைக்கிறது? அதன் அடிப்படையில்தான் சரி, தவறு, சமுதாயம் ஒன்றை பார்க்கும் விதம்,அரசாட்சி, மக்களின் மனசாட்சி, குடும்ப அமைப்புகள், வள பகிர்வுகள், சொத்து பகிர்வுகள் போன்றவற்றை முன்வைப்பது. பண்பாட்டில் இருந்து எழுந்து வருவதே இந்த விழுமியங்கள்.
  • இப்பண்பாட்டுவிழுமியங்கள் இதிஹாசங்களிலுருந்தே பெறப்படுகிறது.

இ) காப்பியம் – இதிகாசத்தில் இருந்து ஒரு கறாரான விதிமுறைகளை கொண்டு உருவாக்கப்பட்ட படைப்பு. இதிகாசத்திற்கு எந்த ஒரு விதிமுறையும் கிடையாது, அது ஒரு நிகழ் வாழ்வை அப்படியே சொல்லிவிட்டு செல்வது. அது தன்னியல்பில் தானே இயங்கி, உருவாக்கி செல்வது. ஆனால் காப்பியம் கறாரான விதிமுறைகளுக்கு உட்பட்டது, காவியகர்த்தா இருக்க வேண்டும். காவியகர்த்தா காவிய லட்சணங்களை கொண்டு அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பேசு பொருட்களை சொல்ல வேண்டும். ஒரு தன்னிகரில்லா காவிய நாயகன் இருக்க வேண்டும். நாடு, காடு, மலை, நதி, கடல், சூரியன், சந்திரன் பற்றி வர்ணனை இருக்க வேண்டும். காவியத் தலைவன் பற்றி பேசும்போது – அவனின் அரசாட்சி, குடும்பம், இருவரின் காதல், பிரிவு, புலத்தில், கலத்தல் பற்றி பேசவேண்டும். உணர்வுகளின் உச்சம் தான் பேசப்பட வேண்டும். இதிகாசத்தில் இருந்து செம்மை படுத்தி எடுக்கும் போது அது காப்பியம் ஆகிறது. வாழ்வின் அனைத்து தருணங்களையும் அது பேச வேண்டும்.

ஈ) இதிகாசம் இலக்கியத்தில் (literature) காப்பியத்தின் மூலம் அறியப்படுகிறது. சிற்பக்கலையில் (sculpture) உச்சம் பெற்று விளங்கும் கோவில்களில் சிலைகளாக அறியப்படுகிறது. ஓவியத்தில் (painting) சிறப்பான தருணங்களாக அறியப்படுகிறது. இசையில் (music) மரபார்ந்த பாடல்கள் மூலம் அறியப்படுகிறது. வாழ்வின் அனைத்து பரிணாமங்களுக்கும் ஈடுகொடுக்கும், அதாவது வெறும் வாய் மொழியாகவும் (word  of  mouth, verbal instruction), நிகழ்த்துக்கலைகளின் (performance arts) வழியாகவும், நாட்டார் வழக்காறு களாகிய தெருக்கூத்து போன்றவற்றால் மட்டுமே அறியப்பட்ட இதிகாசம் அச்சுஊடகம் (print  media) வந்த பிறகு புத்தகங்கள் வாயிலாக அறியப்பட்டது, காணொளி (visual  media) வந்த பிறகும் திரை தொடர்களாக அது வந்து கொண்டிருக்கிறது….இப்படி அணைத்து வெளிப்பாட்டு முறைகளையும் இதிகாசம் தொடர்ந்து காலத்தின் மாறுதல்களுக்கு ஏற்ப ஒரு அறைகூவலை சந்தித்து கொண்டே வந்திருக்கிறது.

  • இதிலிருந்து நவீன இலக்கியத்தின் புனைவு சாத்தியக்கூறுகளையும், போக்குகளையும், விதிமுறைகளையும் உட்படுத்தி வந்திருக்கும் ஒரே முழுமையான படைப்பு வெண்முரசு. ஆகவே இது ஒரு நவீன காப்பியம்.
  • தமிழின்தனிப்பெரும் காப்பியமானசிலப்பதிகாரத்தில் அறம் சார்ந்த விதிமுறைகள் முன்பே விற்கப்பட்டுவிட்டன. அதில் அறக்குழப்பமே கிடையாது. ராமாயணத்தில் அற சிக்கல்கள் இருக்கின்றன ஆனால் அறகுழப்பங்களோ, அறம் சார்ந்த மோதல்கள் இல்லை. இதுவே வெண்முரசின் பிரமாண்டத்தை உணர்ந்து கொள்ள உதவும் சித்திரம்.
  • புராணம் – இதிகாசத்தில் இருந்துபெறப்படுவது, ஆனால் ஒன்றை மட்டும்சிறப்பித்துக் கூறப்படுவது. ஒரே நோக்கம் கொண்டது. ஒன்றின் பெருமை மட்டும் பறைசாற்றுவது.

வெண்முரசு கொண்டாட்டம் இசை வெளியீட்டு விழாவை நேரலையில் youtube’இல் கண்டுகொண்டிருந்தேன். சொல்வதற்கு வார்த்தை இல்லை. எனக்கு இசை கேட்க கூட பயிற்சி கிடையாது, எனவே புரிந்து கொள்ளவும் தெரியாது. சில தமிழ் சினிமா பாடல்கள் தெரியும், சிலது பிடிக்கும். ஏன் என்று விளக்க தெறியாது. ஆனால் இந்த இசை வெளியீட்டு விழா என்னை உள்ளிழுத்து மகிழ்வுறச்செய்தது. என் இல்ல விழா போல மகிழ்ச்சியையும் நிறைவையும் அளித்தது. ராஜகோபாலன் சார்இன் தொகுப்பு இவ்விழாவை நேரில் கலந்துகொண்ட ஒரு நிறைவை அளித்தது. இசைக்கோர்வையை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை, பயிற்சியின்மை காரணமாக. ஆனால் ரவி சார், வேணு சார் இன் உரைகளை கேட்டபின்பு ஒரு இசையை, கலையை எப்படி அணுக வேண்டும் என அடிப்படைகளை தெரிந்து கொண்டேன். ஜெ சார் இன் நவீன தமிழ் இலக்கிய அறிமுக நூலில் அவர் இசையை மற்ற கலைகளில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்று கூறியிருப்பார், அக்குறிப்புகள் இங்கு உதவின. சௌந்தர் சார் சொன்ன மாதிரி விவரம் எல்லாம் தெரியாது, ஆனால் இசைக்கோவை கேட்க மிக இனிமையாக உள்ளது, தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ராஜன் சார் உரையில் அவர் கூறிய உச்சரிப்புகளை கேட்ட பின் தான் அவ்வார்த்தைகள் எவ்வுணர்ச்சிகளை என்னுள் எழுப்புகின்றன என அவதானிக்க ஆரம்பித்துள்ளேன். மிக்க நன்றி.

twinkle twinkle little star …சஷ்டியை நோக்க…தென்பாண்டி சீமையிலே போன்ற எந்த ஒரு பாடலை  கேட்கும் போது எழும் உணர்வு..நினைவு…போல, வெண்முரசு இசைக்கோர்வை கேட்கும் பொழுதும் எழுகிறது. ஒரு அருமையான காட்சி அனுபவத்தை கண்முன் நிறுத்துகிறது. மேலும் மேற்சொன்ன எல்லா பாடல்களும் இசையுடன் கலந்த சொற்கள் தான் எனக்கு முதலில் அறிமுகமானது, இசை பிடித்துவிடவே வரிகளும் அர்த்தங்களும் பிடித்துவிட்டது. ஆராயத் தேவை இருக்கவில்லை. அதைப்போலவே இவ் விழாவின் மூலம் “நீலத்தின்” கவித்துவத்தை எளிமையாக உணரமுடிந்தது. ஒரு வேலை நான் இதற்குமுன் நீலம் வாசித்திருந்தால் இவ்வரிகளை இவ்வளவு அழகுடன் ரசித்திருக்க மாட்டேன். வசந்தபாலன் சார் சொன்ன மாதிரி இனி இந்த இசை இந்த காப்பியத்தை நினைவில் நிறுத்தும் படியாக உள்ளது.

இறுதியாக ஜெ சார்இன் எனக்கு மிக அனுமான வரி ஒன்று உண்டு – பாறை வெடிப்புக்குள் ஒரு சொட்டு நீர் புகவேண்டும் என்றால் இரவெல்லாம் அடை மழை பெய்ய வேண்டும். அதைப்போலத்தான் தமிழ்ச்சூழல். (https://www.jeyamohan.in/139867/). 

இவ்வாறிருக்கும் சூழலில் உங்களை போன்ற அனைவரின்அனைத்து முயற்சிகளும் காலமாகவும்காற்றாகவும்  சூழலாகவும்இம்மழை தொடந்து பெய்ய வழிவகுக்கட்டும்! இப்படிப்பட்ட அடைமழை ஒன்றே இங்குள்ள அறிவுச்சூழலை மாற்றக்கூடியது. நன்றிகள்..அன்புகள்:)

 

இப்படிக்கு,

விவேக்,

பாண்டிச்சேரி.

முந்தைய கட்டுரைஊ அண்டவா மாமா!
அடுத்த கட்டுரைவேதாளம்- கடிதங்கள்-4