விஷ்ணுபுரம் விழா- சிவராஜ்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

எனது அம்மாவுடைய ஊர் பெயர் அறச்சலூர். அது ஈரோட்டுக்கும் காங்கேயத்துக்கும் நடுவில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர். வரலாற்று ரீதியாக, சமணர்களுக்கான முக்கியமானதொரு இடமாக அவ்வூர் அமைந்திருக்கிறது. அங்கு அருகிலிருக்கும் நாகமலையில்தான் இசைக்கல்வெட்டுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. உங்களது ‘அருகர்களின் பாதை’ பயணத்தை நீங்கள் அங்கிருந்துதான் துவங்கினீர்கள். அந்த நாகமலை அடிவாரத்திலிருந்து சற்று தொலைவில் பழமையான ஒரு சிவன் கோவில் உள்ளது.

என்னுடைய சிறுவயதில் அக்கோவிலில் வைத்து நான் கண்ட ஒவ்வொரு விழாவும் எனக்கு நினைவிலிருக்கிறது. மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கான வழிபாடு இரவு நிகழும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சில பக்தர்கள் காலையிலிருந்து எதுவுமே உண்ணாமல் விரதமிருந்து, மாலையிரவில் நிலவைப் பார்த்து பிரார்த்தித்துவிட்டு, அதன்பின் அக்கோவிலில் கிடைக்கும் பிரசாத உணவை உண்பார்கள். அதுமட்டுமின்றி, வருடந்தோறும் இராமநவமி உற்சவ விழா வெகு விமரிசையாக நிகழும். அதிலும் திரளாக பக்தர்கள் பங்கேற்பார்கள்.

வருடத்தில் மூன்று நாட்கள் அத்திருவிழா கொண்டாடப்படும். அவ்விழாவின் ஒரு அம்சமாக, கர்நாடக இசைக்கலைஞர்கள், நாதஸ்வரக்கலைஞர்கள், வாய்ப்பாட்டு பாடும் பாடகர்கள் பலர் வந்து ஒருநாள் கலந்துகொள்வார்கள். இன்னொருநாள், ஆசான் ஞானசம்பந்தம், குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார், சத்தியசீலன் உள்ளிட்ட தமிழறிஞர்களும் பங்கேற்று இறையுரை நிகழ்த்துவார்கள். என் பால்யகாலங்களில் இவர்கள் எல்லோரையும் நேரில் பார்த்து, அவர்களின் குரலையும் இசையையும் கேட்டது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.

அந்தக் கோவில் திருவிழா அனைத்தையும் முன்னின்று பொறுப்பேற்று நிகழ்த்தி ஒருங்கிணைத்தவர் பெயர் கனகராஜ். ஏதோவொருவிதத்தில், தனது பெருஞ்செல்வச் சேகரங்கள் அனைத்தையுமே அவர் திருவிழா பணிகளுக்காகத் தொடர்ச்சியாக இழந்துவந்தார். எல்லாமே கைவிட்டு சென்றபிறகும்கூட, தன் மரணத்தின் கடைசிக்கணம் வரையிலும் அவர் கோவில் விழாவிற்கான பணிகளைச் செய்துவந்தார். எதன்பொருட்டும் அத்திருவிழா என்றைக்குமே தடைபட்டு நின்றதில்லை. அவ்வூரின் பண்பாட்டுக் கொண்டாட்டமென அது நிலைபெற்றது.

அண்மையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் இலக்கிய விழாவும் எனக்கு அத்தகைய மனயெழுச்சியைத் தந்திருக்கிறது. ஒருமித்த மனிதர்களின் அகத்தால் விளைகிற பெருஞ்செயல் என்றே இவ்விழாவை நான் கருதுகிறேன். நாங்கள் வந்த நேரத்தில் அங்கு ஆழிகை, மாசிலன், நிலாயினி, லிகிதன் என குழந்தைகள் ஆங்காங்கே நிகழ்விடத்தில் நிறைந்திருந்தார்கள். குழந்தைகள் விளையாடியது, அழுதது, சிரித்தது என அக்காட்சிகள் அனைத்துமே எனக்கு என் பால்யகாலத்து திருவிழா நாட்களை நினைவுமீட்டின. வளர்ந்தவர்களுக்கான இலக்கிய நிகழ்வுச்சூழலில் குழந்தைகளுக்கான இருப்புச்சூழலும் அமைவது இந்நிகழ்வினை ஓர் ஊர்த்திருவிழா போல உணரச்செய்தது.

இறைத்திருப்பணிகளுக்காக அர்ப்பணிப்புடன் வாழ்வுமுழுக்க செயலாற்றிய கனகராஜ் போன்ற மனிர்களின் நிறைநீட்சியாகவே விஷ்ணுபுரம் நிகழ்வைத் திட்டமிட்டு ஒருங்கிணைக்கும் அத்தனை மனிதர்களின் ஆன்மாவையும் நான் எண்ணிக்கொள்கிறேன். இந்திய இலக்கியச்சூழலில் இனி நிகழப்போகும் நிறைய நற்கூடுகைகளுக்கான ஓர் பாதைத்தடத்தை நிச்சயம் இந்நிகழ்வு அமைத்துத்தரும் என்பதில் ஐயமில்லை.

இம்முறை விஷ்ணுபுரம் விருதளிப்பு நிகழ்வுக்காகவே, உங்களுடைய ‘எழுதுக’ , ‘தன்னைக் கடத்தல்’ ஆகிய புத்தகங்களை வெளியிட நேர்ந்தது எங்களுக்கான மிகப்பெரும் நல்லசைவு. குக்கூ காட்டுப்பள்ளியில், ‘நியதி’ எனும் பெயரில் இளையோர்களுக்கான மாதாந்திர கூடுகை நிகழ்வு நிகழ்கிறது. பெரும்பாலும், பதினெட்டு வயதிலிருந்து இருபத்தைந்து வயது வரையில் உள்ள இளைஞர்களுக்கான கூடுகை அது. உங்களுடைய ‘தன்மீட்சி’ நூலுக்குப் பிறகுதான், இளையவர்களிடம் முழுக்க முழுக்க நேர்மறையான விடயங்களை கொண்டுசேர்க்கும் இம்முன்னெடுப்பைத் திட்டமிட்டோம்.

எங்களை நோக்கி வரக்கூடிய ஏராளமான இளையவர்கள் சந்திக்கக்கூடிய பெருஞ்சிக்கல்கள் தான் ‘தன்னைக் கடத்தல்’ புத்தகத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் இந்நூல் எத்தனையோ இளையமனங்களின் அகத்தத்தளிப்புக்கான பதில்களைச் சுமந்திருக்கிறது. ஆகவே, தன்மீட்சிக்கு அடுத்தபடியாக நாங்கள் இளையவர்களின் கைகளில் ஒப்படைக்கும் நல்லதொரு நூலாக இனி ‘தன்னைக் கடத்தல்’ நூலும் நிச்சயம் இருக்கும்.

இதுவரை வெளிவாரத தேவதேவன் கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக்கும் செயற்பணிகள் நிகழ்ந்துகொண்டிருந்த காலச்சூழலில், ஆனந்த் அவர்களின் ‘டிப் டிப் டிப்’ கவிதைத்தொகுப்பும் ஒருசேர நன்முறையில் நிறைவுற்று அச்சடைந்து வந்திருப்பதையும் ஓர் ஆசியாகவே கருதுகிறோம்.

விஷ்ணுபுரம் விழாவின் முதல்நாள் காலைப்பொழுதில் இந்த மூன்று புத்தகங்களும் உங்கள் கைவந்து சேர்த்த கணம் எங்களுக்கு பெருநிறைவையும் மகிழ்வையும் தந்தது. சின்னதொரு புன்னகையுடன் நீங்கள் அப்புத்தகங்களை விரித்துப் படங்களைப் பார்த்த கணம் மனதில் நிறைந்திருக்கிறது. தன்மீட்சி புத்தகத்தை வாசித்துவிட்டு தாக்கமடைந்து, தான்கற்ற கட்டிடக்கலையும் ஓவியத்தையும் வாழ்வென நேசித்து செயலியங்கும் தோழமையான அக்சயா அவர்கள் வரைந்த கோட்டோவியங்கள்தான் ‘தன்னைக் கடத்தல்’ புத்தகத்தில் அச்சாகியுள்ளன.

தோழமை இரம்யா அவர்கள் வெண்முரசு குறித்தும், குறளினிது உரை குறித்தும் எழுதிய தொடர்கட்டுரைகள் மூலமாவும், முகம் விருது அழிசி ஸ்ரீநிவாசனின் நேர்காணலுக்கு உதவிபுரிந்தது மூலமாகவும் நாங்கள் இரம்யாவை அகத்திற்கு அணுக்கமாக உணரத்துவங்கியிருக்கும் காலகட்டம் இது. அதே இரம்யாவும் ஆனந்த்தும் சேர்ந்து ‘டிப் டிப் டிப்’ புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு பேசிய காட்சிகள் மனதுக்குள் மகிழ்ச்சியை வரவழைத்தன.

குக்கூ நண்பர்களின் அரங்குகள் அனைத்துமே விழா நண்பர்களின் அன்பைப் பெற்றிருந்ததை உணர்ந்தோம். பொன்மணியின் துவம் மூலமாக கிராமத்துப் பெண்களால் தைக்கப்பட்ட துணிப்பைகளும் துணிப்பொம்மைகளும் பல நண்பர்களின் கரங்களைச் சென்றடைந்தது… பாலகுருநாதன் துகள் முன்னெடுப்பு மூலமாக 600 துணிப்பைகளை நிகழ்வு முடிந்தபிறகு எல்லோருக்கும் ஒப்படைத்தது… ஜே.சி.குமரப்பா நாட்காட்டியை தோழமைகளுக்கு தந்தனுப்பியது என எல்லாமும் நலமுற அமைந்தன.

2021ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதை, எழுத்தாளர் விக்ரமாதித்யன் அவர்களுக்கு வழங்குகிற பெருவிழாவென அமைந்திருந்த இந்நிகழ்வுக்கு, வெவ்வேறு ஊர்களிலிருந்து திரளாக மனிதர்கள் வந்திருந்து, இலக்கிய அமர்வுகளில் பங்கேற்று, இனிதுற பேசிமகிழ்ந்து, நிறைவோடு கிளம்பிச்சென்றது வரை அனைத்துப் படிநிலைகளும் நிச்சயம் பெரும் நம்பிக்கையின் குறியீடுதான். நிகழ்வு ஒன்றடுத்து ஒன்றென அழகியல் நேர்த்தியாக தன்னியல்பு கொள்கிறது.

விக்ரமாதித்யன் அவர்களைப்பற்றிய ஆவணப்படத்தை திரையிடும்போது, அவருடைய மனைவி திரையில் தோன்றி பேசுகிற அந்தக்காட்சி எனக்குள் ஒருவித நடுக்கத்தையும் அழுகையையும் உண்டாக்கியது. உண்மையில் அவ்விடத்தில் நான் கண்கலங்கிவிட்டேன். மேலும், அம்மாவை கெளரவிக்கும் கணத்தில் அந்நிகழ்வின் மொத்த ஆன்மாவும் நிறைந்துவிட்டதாக நான் எனக்குள் எண்ணிக்கொண்டேன். அதற்கு ஒரு முக்கியக் காரணம் ஒன்றுண்டு.

இன்று (டிசம்பர் 30), நம்மாழ்வாருடைய நினைவுநாள்! அய்யா அடிக்கடி சொல்வதுண்டு, “நான் இன்னைக்கு இவ்ளோ தூரம் இத்தன மக்கள்ட்ட போய்ச் சேர்ந்திருக்கேனா… அது எல்லாத்துக்கும் காரணம் எனக்குத் துணையாயிருந்த சாவித்ரிதான். அவளுக்காக நான் எதையுமே பண்ணாம, மத்த எல்லாத்துக்காகவும் என்னென்னமோ செய்றதுக்கு மனசாற அவ தந்த சுதந்திரம் தான்ய்யா காரணம்” என. இக்கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கும் இக்கணத்தில், நான் அய்யாவுடைய சொற்களை அகமேந்திக் கொள்கிறேன்.

இத்தனை மனிதர்கள்… யாருக்கும் எவ்வித மனத்தடையும் இல்லாமல்… எல்லோருமே நல்லதிர்வையும் நம்பிக்கையும் பெற்றுத் திரும்புவதற்கான உறுதிப்பாட்டை இவ்விழா ஒவ்வொருமுறையும் நிகழ்த்திவிடுகிறது. குறையாத இறையாசி என்றும் இவ்விழாவுக்கு அமைந்திருக்கும்!

எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் குறிப்பிட்ட ‘அனைத்துக்கும் அப்பால் ஒன்றுண்டு. அது குருவருள்’ என்ற நித்ய சைதன்ய யதியின் ஊழ்கச்சொல்லை கண்ணீரோடு அகம்பட உச்சரித்து, விஷ்ணுபுரம் இலக்கிய விழா நிகழ்வுக்காக உழைத்திட்ட அத்தனை மனிதர்களையும் மானசீகமாக வணங்கி, அவர்கள் அனைவருக்கும் அவர்களது குடும்பத்திற்குமான பிரார்த்தனையை இப்பேரிறை முன்பாக பாதம்வைத்து வேண்டிக்கொள்கிறேன்.

மல்லசமுத்திரம் ஊருக்குப் பக்கத்தில் ஒரு பொதுக்கிணற்றை தூர்வாரி மீட்டெடுக்கும் பணிகள் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட கிணறு! அக்கிணற்றில் நீர்சுரக்கும் நற்தருணத்தில், உங்கள் அனைவருக்குமான இறைவேண்டலை முன்வைக்கிறோம். விஷ்ணுபுரம் விழா தந்திட்ட நல்லதிர்வோடு இப்புத்தாண்டு துவக்கம்கொள்கிறது. இயற்கையும் இறையும் துணையிருந்து அருள்க!

நிகழ்வின் ஒளிப்படங்கள்: மோகன் தனிஷ்க்

~

கரங்குவிந்த நன்றியுடன்,

சிவராஜ்

தன்னறம் நூல்வெளி

குக்கூ காட்டுப்பள்ளி

முந்தைய கட்டுரைவேதாளம் – கடிதம்
அடுத்த கட்டுரைசிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும்- ஜெயமோகன்