சிகண்டி- விதையற்ற கனியின் வேர்ச்சுவை- ராஜகோபாலன்

சிகண்டி வாங்க

என் இளம்பருவம் 1980களில் திருநெல்வேலியின் உள்ளடங்கிய கிராமமாக அப்போதிருந்த வாசுதேவநல்லூரில் கழிந்தது. மாரியம்மன் கோவில் பூக்குழித் திருவிழாவும், சிந்தாமணிநாத சுவாமியின் ஆனிப் பெருந்திருவிழாவும் ஊரின் பெரும் விழாக்கள். சிறிய சர்க்கஸ் தொடங்கி வாட்ச் மிட்டாய்வரை அந்தத் தினங்களில் அந்த ஊரில் கிடைக்கும். அந்த வயதில் மண்மீது சொர்க்கம் இறங்கிய நாட்கள் அவை. அப்படியான நாட்களில் மட்டுமே வெளியூரிலிருந்து வந்திறங்கி ஊருக்குள் வலம் வந்து காசு கேட்கும் ஆட்களாகத்தான் திருநங்கையர் எனக்கு முதல் அறிமுகம்.

கீழப்பஜாரின் ஆண்கள் அனைவரும் கடும் அறச் சீற்றக் கோலமும், முகம் கொள்ளா நாணச் சிரிப்பின் குறுகுறுப்பையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் மானுட சாத்தியத்தை மீறிய வித்தையை தத்தம் முகத்தில் காட்டுவார்கள். தனக்குமுன் அவர்கள் வரும் நொடியில் முப்புரம் எரி செய்த சிவக்கோலமாக, அடுத்தவரிடம் நகர்ந்ததும் நீலப்படம் காணும் விடலைப்பருவ முகத்தை மீட்டுக்கொண்டவராக ஒவ்வொருவரும் மாறுவார்கள். சிலர் தாம் அதுவரை கற்றுக்கொண்ட ஆபாச வசவுகளில் எது ஆழமானது என்பதை அவர்கள் மீது பரிசோதித்து அறிய முயல்வார்கள். இன்னும் சில கட்டிளங்காளைகளின் பரிசோதனையோ அவர்களது அரையாடைக்குள் இருப்பதை அங்கேயே அறியத்துடிக்கும் லட்சிய நோக்கோடு அமைந்திருக்கும். பஜாரில் இருக்கும் பெண்கள் பாண்டியன் அவையேறி அரிமாவென ஆர்த்து நின்று மாமயிடன் செற்றிகந்த திறத்தவளான கண்ணகியின் கொற்றவை வடிவை அரைநொடிக்குள் அடைந்து தன் திரும்பாக் கற்பின் பெற்றியைபஜார் அறிய விரித்துரைத்து திருநங்கையரை மாதவிடாய் உதிரம் பருகச்சொல்லி மண் குளிர உமிழ்ந்து மலையேறுவார்கள்.

இத்தனைக்கும் ஆளாகும் அவர்களோ ஒட்டி வைத்துக்கொண்ட புன்னகையோடு, குறைந்தது ஆறு பேராவது ஒருவரோடு ஒருவர் ஒட்டிக்கொண்டபடி ஓர் உடலெனத்தான் நகர்வார்கள்.  மழையெனப் பொழியும் வசவுகளுக்கும், கிண்டல்களுக்கும் ஆளாகும் வண்ணம் அவர்கள் செய்யும் செயல் என்ன?  ஒருவரை அணுகி “மாமா, காசு தா/ யக்கா காசு தா”எனக் கேட்பது மட்டுமே. இத்தனை கிளர்ச்சிகளையும், இவ்வளவு கீழ்மையான அகச் சீண்டல்களையும் பிறரில் உருவாக்குவது எது? திருநங்கையரின் தோற்றமா? அவர்களது ஆணுடலிலிருந்து ஆணை அகற்ற அவர்கள் செய்யும் அதீத பெண்மைப் பாவனைகளா? எப்போதும் எதனுடனாவது தளைக்கப்பட்டிருக்கும் விலங்குகள் அற்ற கட்டின்மைதான் பெண்களுக்கு இவர்களில் எரிச்சலூட்டுவதா?

ஜெமினி டீக்கடையில் தட்டில் உதிர்ந்துகிடந்த பஜ்ஜித் தூள்களை திருநங்கையரில் ஒருத்தி அள்ள வேலைக்கு நின்ற ‘தள்ளாடி’ மணி தேநீர் கோப்பைகள் கழுவி தேநீர் நிறம் அடைந்த தண்ணீரைத் தூக்கி அவர்கள் மேல் ஊற்றினான். பஜாரிலேயே காந்தியை நேரில் கண்ட பெருமையுடைய புனமாலைக் கொத்தனார் அவன் மண்டையில் நொங்கென ஒரு குட்டு வைத்தார். அதன்பின் நடந்த நீண்ட பேச்சில் ஒரு இடத்தில் புனமாலைக் கொத்தனார் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.“பூத்து, காயாகி, கனிஞ்சு தாண்டே வெதை வரும். ஆனா பூத்தாலும், காய்ச்சாலும், கனிஞ்சாலும், இனிச்சாலும் வெதையே இல்லாத பழம் என்னதுல? அதத்தானல சாமிக்கு அர்ச்சனைக்கு கொண்டு வைக்கே. அந்த மரத்தத்தானால கல்யாணத்துக்கு கட்டுத. வெதையத்த சென்மன்னாலும் வேரிருக்கும்லாடே.”

நவீன்

சில பத்தாண்டுகள் வாசிப்பும், வாழ்க்கை அனுபவங்களும் தந்த அறிவில்தான் அன்று புனமாலைக் கொத்தனார் சொன்ன வார்த்தைகள் புரிந்தன. திருநங்கையர் வாழ்க்கையும் புரிந்தது. நமக்கு ஒரு இயல்பிருக்கிறது. ஒன்று அதீதமாக ஆராதிப்பது. இல்லையேல் அதீதமாக அவமதிப்பது. இரண்டிலுமே நமக்கு எல்லைகளை மீறித்தான் வழக்கம். 1990கள் வரையிலுமே நமக்கு திருநங்கைகள் நகைப்புக்குரிய, மானுடப் பிரிவில் சேர்க்கப்படாத உயிரினங்கள். 1990களுக்குப் பிறகு ‘பம்பாய்’போன்ற திரைப்படங்கள், சு.சமுத்திரம் ஆனந்த விகடனில் எழுதிய ‘வாடாமல்லி’போன்ற கதைகளும் வந்ததும் ஒரேயடியாய் அனைவரும் சேர்ந்து அவர்களுக்காக புரட்சி பூபாளம் பாடி “அன்றே சொன்னார் எம் தலைவர்,”என ஆராதனை. இரண்டு அணுகுமுறைகளாலும் அவர்களுக்கு விடிவில்லை.

தமிழ் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்ட நாவல்களில் திருநங்கையரின் வாழ்க்கை எவ்வித ஆராதனையும், விதந்தோதாலும் இன்றி நுணுக்கங்களோடு எழுதப்பட்டதில்லை. அவ்வகையில் நவீன் எழுதியிருக்கும் இந்த “சிகண்டி”தமிழில் வெளிவந்திருக்கும் முக்கியமான நூல்.

தமிழ் நாவல்களில் படைக்கப்பட்ட கதை மாந்தர்களில் இதுவரை படைக்கப்படாத அல்லது மிகக் குறைவாகப் பேசப்பட்ட கதை மாந்தர்கள் சிகண்டியில் வரும் ஈபு, சரா, தீபன் மூவரும்.

சமூகத்தின் பொதுவான கட்டுப்பாடுகளை அதிகாரத்தாலோ, பணத்தாலோ அன்றி வேறெதாலும் மீற முயல்வோரை சமூகம் அனுமதிப்பதில்லை. அவர்களை ஒடுக்கவும், அவமதிக்கவும், வாய்ப்பிருப்பின் துடைத்தெறியவுமே முயல்கிறது. இதில் திருநங்கையர் வாழ்வது என்பதல்ல, பிழைத்திருப்பதே சவால்தான்.  படிப்பு, திறமை ஆகியவற்றில் வேறெந்த மனிதகுலப் பால் பிரிவுகளுக்கும் குறைந்தவர்களில்லை என்றாலும் பொதுச் சமூகத்தில் இவர்களுக்கு வாய்ப்புக் கிடையாது. எந்த வாய்ப்பும் தரப்படாத இவர்கள் இருள் மூலைக்குத்தான் ஓடியாக வேண்டும். அதில் சிலர் மட்டுமே இருள் என்பது குறைந்த வெளிச்சம் என்பதாய் ஒளி நோக்கி எழுகிறார்கள். இந்த நாவலில் ஈபு எனும் கதாபாத்திரம் அப்படித்தான் உருவாகி வருகிறது.

அச்சத்துடனும், பயத்துடனும், அதே நேரம் மரியாதையுடனும் பார்க்கப்படும் திருநங்கையாகத்தான் ஈபு வருகிறார். கதையின் நிகழ்வுகளில் வெகு சில ஆனால், வெகு முக்கியமான இடங்களில் வருகிறார். மார்க்கெட்டின் அனைத்து மூலைகளிலும் ஆட்களை வைத்து கண்காணித்து கூலிக்கு கொலையை கச்சிதமாகத் திட்டமிட்டுத் தரும் ஷாவ் கிழவன்கூட ஈபுவிடம் எந்த வம்பும் வைத்துக்கொள்வதில்லை. இவ்வளவுக்கும் அவனுக்கும் ஈபுவுக்கும் இடையே நேர்செய்யப்பட வேண்டிய கணக்கொன்றும் உண்டு என்றாலும்கூட. மாறாக, கதை முழுவதும் சொல்லப்படுவது தீபன் எனும் இருபதுகளின் துவக்கத்தில் இருக்கும் இளைஞனின் பார்வையில்.

ஈபு கதாபாத்திரம் அனைவராலும் மதிக்கப்படும் அதேநேரத்தில், சட்டத்துக்கு புறம்பான காரியங்களையே பண மீட்டுவதற்காக அவர் செய்வது கேள்விகளை எழுப்பும். போதை மருந்து விநியோகிக்கும் ஈபுதான் அப்பகுதி திருநங்கைகளின் பால்மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உதவும் தாய் திருநங்கையாக உள்ளார். அதேநேரம் கொல்வேல் கொற்றவை என உதிரத்தில் குளித்து எழுகிறார். திரைப்படங்கள் வழியே கற்பிக்கப்பட்டிருக்கும் வெற்றுக் கொஞ்சல், அதீத இரக்கம் கொண்டவர்கள் அல்லர் திருநங்கையர். அவர்கள் வாழ்நாள் முழுதும் போராடும்படி விதிக்கப்பட்டவர்கள். அவர்களின் மொத்தப் போராட்டமுமே தன்னைப் பிறர் பெண் என ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்தான் குவிந்து நிற்கிறது. அப்படித் தன்னை பெண்ணெனச் சொல்லி நெருங்கும் ஆணிடம் தன் மொத்த சம்பாத்தியத்தையும் இழந்து நிற்கும் கதைகள் எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை திருநங்கையர் தம்மைப் பெண்ணென நிரூபிக்க ஓர் ஆணை உடன் வைத்திருக்க முயல்வதும். அதில் ஆணை உதறி எழும் திருநங்கை மட்டுமே  தன்னைப் பெண்ணென ஆக்கும் அடுத்த கட்டத்திற்குப் போகிறாள்; தாயாகிறாள். ஈபு ஆணை உதறி எழுந்த அன்னைத் திருநங்கை.

திருநங்கையர் தாம் பெண்ணெனப் பிறருக்கு நிரூபிக்கும் முயற்சியில் தம் குடும்பத்தை, உறவுகளை இழந்தவர்களாகத்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். இன்னும் சொல்வதானால் உறவுக்கு ஏங்கும் இவர்கள், உறவினர்களால் குடும்பங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட வலி மிக்க முன்வாழ்க்கை உடையவர்கள். விதிவிலக்குகள் சொற்பத்திலும் சொற்பமே. அதனாலேயே அவர்களுக்குள் உறவுகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். ஒரு திருநங்கை இன்னொரு திருநங்கையை தன் தங்கை என ஏற்றுக்கொண்டால் அவர்கள் இருவரும் சகோதரிகளேதான். பிறப்பிலிருந்து வரும் உறவுக்கு தேர்வு செய்துகொள்ளும்  வாய்ப்புக் கிடைப்பதில்லை. ஆனால் இங்கு இருபுறமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உறவு உருவாகும். முக்கியமான விஷயம் இந்த உறவுமுறைகளை மொத்தத் திருநங்கை சமூகமும் இயல்பாக, மாற்ற முடியாததாக, உறுதிப்படுத்தப்பட்டதாக ஏற்றுக்கொள்வதுதான். அக்கா, தங்கை, அம்மா, சித்தி, அத்தை, பெரியம்மா, மகள் என அனைத்து உறவுகளும் பிறப்புச் சொந்தங்களுக்கு நிகராக அல்லது அதைவிட வலுவாக அமைந்திருக்கும் தனிச் சமூகம் அவர்களுடையது. இதைப் புரிந்துகொண்டால்தான் சரா எப்படி ஈபுவின் மகளாக ஆகிறாள் என்பதும், மெய்யான தாய் -மகள் உறவின் முரண்களும் இந்த உறவில் நிலைத்திருப்பதை நாம் உணரமுடியும். நாம் இப்போதுவரை பிறப்பாலன்றி வேறெந்த வகையிலும் உறவுகளைச் சம்பாதிக்க முடியாதவர்கள் என்பதும் புரியும்.

சரா – இதுவரை இப்படி ஒரு தேவதைத் திருநங்கை தமிழ் இலக்கிய உலகில் பேசப்பட்டதில்லை. ஒரு கன்னியின் தேவதைக் குணத்துடன்தான் இவள் கதையில் நுழைகிறாள். மிகவும் தீவிரமாக பரதம் பயிலும் சரா நாட்டியத்தில் தனி முத்திரை பதிப்பாள் என்றே அனைவரும் நம்புகிறார்கள். அங்கோர்வாட் கோவிலில் அப்சரஸ் சிலைகளையும், அந்த நடனங்களையும் கண்டபின் தன்னையும் ஒரு அப்சரஸ் என்றே உணர்ந்து அதுவாகவே எப்போதும் இருக்கிறாள். தன்னை அப்சரஸ் நர்த்தகி என்பதை உணர்த்த பரதத்தையும், காற்றிலாடும் கொடிகளின் அசைவை ஒத்த கையசைவுகள் கொண்ட அப்சரஸ் நடனத்தையும் இணைத்து அவளாகவே ஒரு நாட்டிய வகையைப் படைத்துக்கொள்கிறாள்.  மிக நுட்பமான இந்த தேவதைத்தனத்தை நவீன் தேவதைக்குணமாக ஆக்கிக்காட்டுவது சராவின் பிற செயல்கள் வழியே. அவளால் எந்த உடைந்த பொருளையும் தூக்கி எறியமுடிவதில்லை. அவளே அப்படி எறியப்பட்டவள் என்பதால் இருக்கலாமோ என்னவோ? ஆனால் அவற்றை வைத்து ஏதேனும் செய்கிறாள். அவள் வளர்க்கும் பூச்செடிகள் அனைத்துமே உடைந்த பொருட்களில் மண்ணிட்டு வளர்க்கப்பட்டு பூப்பவை. ஒரு நொடி கோபம் மறுநொடி பொங்கும் அன்பு என கன்னிமையின் பிரதிபலிப்பாகவே படைப்பு முழுவதும் வலம்வருகிறாள்.

திருநங்கையர் திருமணம் என்பதை பொதுச் சமூகம் கேலியான வியப்புடன் பார்க்கலாம். ஆனால் தன்னைப் பெண்ணென உணரும் திருநங்கைக்கே அதன் முழு வீச்சும் புரியும். ஆனால் சரா திருமணத்தை கடைசி நொடியில் மறுப்பாள் என்பதை அனுமானிக்கும் இடங்கள் நாவலில் மிகநுட்பமாக பேசப்படுகின்றன. அதுவரை வேறெவருக்கும் ஆடிக்காட்டாத தன் அப்சரஸ் நடனத்தை தீபனுக்கு மட்டுமே ஆடிக்காட்டுகிறாள் சரா. அதுவும் பகுச்சரா மாதாவின் சன்னிதியில். ஒரு கட்டத்தில் தீபன் எழுந்து சென்றுவிட்டாலும் சரா தன் நடனத்தில் மூழ்கி நிறுத்தாமல் ஆடிக்கொண்டேதான் இருக்கிறாள். தீபனுக்காக ஆட வந்தாலும் அவன் எழுந்து சென்றதற்காக அவள் நடனத்தை நிறுத்திக்கொள்ளவில்லை. அப்சரஸ்களுக்கு ஆண்களை விடவும் நடனமே பெருங்காதலன். ஆனாலும் சரா தன்னை முழுமைப்படுத்திக்கொள்ள தாயாகிக் கனிந்தே செல்கிறாள். சரா, இனி தமிழ் இலக்கியச் சூழலின் முக்கியமான ஒருத்தி.

கதை மொத்தமும் நிகழ்வது தீபன் எனும் முதிரா இளைஞனின் அனுபவத்தில்தான். ஈபுவின் ரிஷிமூல வாழ்க்கையில் தொடர்புடைய ஒரு கண்ணி அவன் என்பது மிகச் சரியான இணைப்பாக கதையில் அமைந்திருக்கிறது.  உடலின் வயதால் இருபதைத் தொடும் தீபனின் மனமோ துவக்ககால விடலைப் பருவத்தில்தான் இருக்கிறது. மனதளவில் அவன் 14, 15 வயதுடையவனாகவே இருக்கிறான். துவக்ககால விடலைப் பருவத்தைக் கடந்து வந்த அனைவருக்கும் யோசித்தால் தெரியும் விஷயம் ஒன்று உண்டு. அப்பருவத்தில் பெண்ணுடலை விட தன்னுடலே ஆராயத்தக்க ஒன்றாக, தன் உடலைத் தான் தொடுவதே கிளர்ச்சி அடையச் செய்வதாக இருக்கும். பெண்ணுடல் கற்பனையில் ஒரு நிமித்தம் மட்டுமே அந்த வயதில். தீபனின் எண்ணங்களும், செயல்களும் நாவல் முழுவதும் இந்தப் புள்ளியையே சுற்றி வருவதைக் காணமுடியும். தன் ஆண்மையை மீண்டும் பெற அவன் செய்யும் முயற்சிகளே கதையை நகர்த்துகின்றன.

தீபனின் அம்மா மட்டுமே அவன் நம்பும் ஒரே மனித உயிர். வேறு எவரையும் அவன் முழுமையாக நம்பத் தயாராக இல்லை. அவன் அம்மாவைத் தவிர அவன் இயல்பாக உணரும் ஒரே அண்மை மாமாவின் பையன் சிறுவன் கண்ணனிடம்தான். தீபனுக்குள் இருக்கும் சிறுவனுக்கும், சிறுவன் கண்ணனுக்கும் ஏறக்குறைய ஒரே வயதுதான் என்பதால் இருக்கலாம். அவ்வாறே அவனையும் எவரும் முழுமையாக நம்பவில்லை. காசி தொடங்கி ஷாவ் கிழவன்வரை அவனைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அமிர்கான் தொடங்கி அவன் அத்தைவரை அவனிடம் பணம் பெறவே முயல்கிறார்கள். ஈபுவுக்கோ இவன் மேல் நம்பிக்கையே இல்லை. முரடன். முன்யோசனை அற்றவன். திட்டமிடத் தெரியாதவன். ஆனால் இத்தனையையும் மீறி அவனுக்குள் இருக்கும் சிறுவனைப் பார்த்தவள் சரா மட்டுமே. சராவின் அன்பு வழியாகத்தான் அவனால் ஈபுவின் உலகில் முக்கிய இடத்தில் நிற்கமுடிந்தது. சராவுக்கு தீபன் மேல் இருக்கும் காதல் வெறும் உடலால் அல்ல என்பதை மிக நுட்பமான ஒரு இடமாக நாவலில் நவீன் பதிவு செய்கிறார். சராவுடன் பழகும் தீபனுக்கு அவள் ஒரு திருநங்கை என்பதே தெரியவில்லை. அவளை ஒரு பெண்ணென நினைத்தே அவளை முத்தமிடவும் அணைக்கவும் செய்கிறான். தன்னை முழுமையான பெண்ணாக நடத்தும் முதல் ஆணாக சரா தீபனையே பார்க்கிறாள். இந்த அங்கீகாரத்திற்குத்தானே ஏங்கிச் சாகிறார்கள் திருநங்கையர். அந்த நொடியை தீபனில் பெற்ற சரா அதன் பொருட்டு அவனை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்பவளாகவே ஆகிறாள். ஈபு சொல்வதும்கூட அவளுக்குப் பொருட்டல்ல. உடைந்த எதையும் ஒட்டவைத்து அதில் பூ பூக்க வைப்பவள் அவள்.

தீபன் தன் ஆண்மையை மீட்கச் செய்யும் அனைத்து முயற்சிகளும் ஏமாற்றம் அளிக்கும் விதத்திலேயே முடிகின்றன. ஆண்மையை அனைத்துமாக எண்ணும் தீபன்,காசி சொல்வதைப்போல பயத்தால் அனைவரையும் அடிக்கிறான். அதைத்தாண்டிய ஈபுவோ மிச்சமின்றி அழிப்பவராக இருக்கிறார். தீபனின் பார்வையில் வரும் பாலியல்விடுதி, மார்க்கெட், கட்டடங்கள், போதை மருந்து  பயன்படுத்துவதன் அனுபவங்கள் ஆகியவற்றின் விவரணைகள் அனைத்துமே பதின்வயதை சற்றே கடந்த விடலைப் பருவ வர்ணனைகள்தான். ஒருமுறை அம்மாவைப் பார்ப்பதும், ஆற்றில் முழுகி எழுவதும் தன் அனைத்து பாவங்களையும் கழுவி, தன் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்துவிடுமென நம்பும் இவன்தான் மார்க்கெட்டில் அடிப்பது, கைகால்களை முறிப்பது என ஆரம்பித்து, வட்டிக்கு ஆள் கடத்தல் செய்பவர்களிடம் பேசும் விதத்தில் பேசுவது என வளர்ந்து கொலைத் திட்டத்தில் பங்கு பெறுவதுவரை செய்கிறான். ஒரே நேரத்தில் இரு எல்லைகளிலும் மாறிமாறிப் பயணிக்கும் இக்கதாபாத்திரத்தின் வார்ப்பு அருமையாக வந்துள்ளது.

ராஜகோபாலன்

பெண்மையின் மென்மையும், நளினமும், கன்னிமையின் கருணையும், அழகில் இருக்கும் தெய்வீகத் தன்மையுமாய் இருக்கும் சிகண்டியையும், குருதிப் பலிகொள்ளும் அங்காளியாய், வேட்டையாடி தன் குருளைகளுக்கு உணவளிக்கும் வயமாவென நிற்கும் ஈபுவையும் இணைக்கும் ஒற்றைச் சரடாய் கதையில் நிற்பது பகுச்சரா மாதா எனும் தெய்வமே. இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் புகழ்பெற்ற அவள் இந்திய மரபில் பால்மாற்றம் கொண்டோரின் தெய்வமெனத் தொழப்படுபவள். இம்மண்ணில் தெய்வங்கள் அற்ற எவருமே இல்லை. அந்த மாதாவின் உருவத்தை வரையச் செய்யும் சிகண்டி, அம்மாதாவின் முன்புதான் தாய்த் திருநங்கையாகத் தன்னை மாற்றிக்கொள்கிறாள். அந்தத் தெய்வத்தின் முன்புதான் தாய்த் திருநங்கைகள் உருவாகி வருவது நாவலில் மிக நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது, இறுதி அத்தியாயம் வரையிலும். உடலின் உறுப்பை அறுத்து எறிந்தால் மட்டும் தாய்த் திருநங்கையாகி விட முடியாது. மனம் முழுவதும் தான் சுமக்கும் இன்னொன்றையும் அறுத்து வீசி தன்னையே உடலாலும், மனதாலும் பலியிடுபவருக்கே பகுச்சரா அன்னை கனிகிறாள்.

குஜராத்தில் அமைந்திருக்கும் அன்னையின் மையக் கோவில் புராதானமானது. 1508ல் ஸ்ரீதரரால் எழுதப்பட்ட ராவண – மண்டோதரி சம்வாதம் எனும் நூலிலும், அதை ஒட்டி 1565ல் எழுதப்பட்ட விக்ரம சாவந்த் நூலிலும் சில வரிகளில் எழுதப்பட்டிருக்கும் சம்பவக் குறிப்புகளை வரலாற்றாசிரியர் மஜூம்தார் குறிப்பிடுகிறார். அந்த வரிகள் அங்கு பேசப்படும் நாட்டார் கதையை ஒட்டியதாகவே இருக்கின்றன.

இரண்டாம் அலாவுதீனின் படைகள் குஜராத்தில் நுழைந்து கோவில்களை இடித்தபடியே முன்னேறி வருகிறது. தற்போது மெஹ்சானா மாவட்டத்தில் பெசராஜி எனும் இடத்தில் உள்ள பகுச்சரா அன்னையின் கோவிலுக்கு வருகையில் அலாவுதீனின் படைவீரர்கள் அன்னையின் ஆலயத்தைச் சுற்றி மேய்ந்துகொண்டிருக்கும் சேவல்களை அறுத்து உண்கிறார்கள். அங்குள்ளோர் அவை அன்னையின் வாகனங்கள், கொல்வதுகூடாது  என எத்தனையோ தடுத்தும் படையினர் கேட்கவில்லை. ஒரு சேவல் மட்டும் தப்பிப்பிழைத்து மறுநாள் அதிகாலை கூவ படைவீரர்களின் வயிற்றுக்குள் இருந்த சேவல்களும் உயிர்பெற்று பதிலுக்கு கூவல் எழுப்பி அவர்களின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு உயிருடன் வெளியே வருகின்றன. படை வீரர்கள் இறந்து விழக்கண்ட அலாவுதீன் அன்னையிடம் மன்னிப்புக்கேட்க அன்னை மன்னித்து அவர்களை உயிர்ப்பிக்கிறாள். இந்த நிகழ்வு குஜராத்தின் புகழ்மிக்க கவிஞரான வல்லப பட்டரின் கவிதைகளிலும், அவருக்கு இளையவராகக் கருதப்பட்ட பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷாமல் பட்டரின் கவிதையிலும், 1630இல் குணவிஜயரால் எழுதப்பட்ட வியவஹாரி ரஸ எனும் நூலிலும், நாட்டார் கவி மரபான சரணர்கள் பாடலிலும் குறிப்பிடப்படுகிறது.

அன்னை உயிர்ப்பித்து மன்னித்தாலும் செய்த தவற்றுக்கு பரிகாரமாக அந்தப் படையின் ஒரு பிரிவினர் தம்மை அன்னை பகுச்சராவின் சேவைகளுக்கு ஒப்புக்கொடுத்து அங்கேயே இருக்க வேண்டுமென அன்னையின் ஆணை பிறந்தது. அதுவும் தம்மை ஆணெனக் கருதி அவர்கள் செய்த அகந்தைக்குப் பரிகாரமாக பெண்களின் சேலை போன்று மேலாடை அணிந்தும் கைகளில் வளையல் அணிந்துமே அன்னைக்குச் சேவை செய்யவேண்டும். அந்த மரபில் வந்தவர்களே இன்றும் “கமாலியாக்கள்”என அழைக்கப்படும் பிரிவினர். இப்போதும் இம்முறையில்தான் அன்னையை அவர்கள் வழிபடுகின்றனர். அவர்கள் இறந்தால் குர் ஆனின் சுரா ஓதியே அடக்கம் செய்யப்படுகிறார்கள்.

இந்த வரலாறு ஏன் இங்கு சொல்லப்படுகிறது? இந்த வரலாற்றை இந்த நாவலை எழுதி முடிக்கும்வரை நவீன் வாசித்திருக்கவில்லை  என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஆண்மையின் வெறியில் இயற்றப்படும் தவற்றை அன்னை மன்னித்து, தவறிழைத்தவரை தன் பணியில் இணைத்துக்கொள்வதை இத்தனை நூறு ஆண்டுகள் கழிந்தபின் எழுதப்படும் நவீன நாவலில் காண்பது விவரிக்கமுடியாத அனுபவம்தான். நாவலின் இறுதி அத்தியாயத்தில் இந்த வரலாற்றுத் தொன்மத்தின் முக்கியத்துவம் என்ன என்பது வாசிப்பவருக்கு விளங்கும்.

பகுச்சரா மாதா போலவே சீன பெளத்தத்தின் தேவியான குவான்-யின்னும் தன் வான் தொடும் உயரத்திலிருந்து தலைகுனிந்து, கண் சரித்து, கருணைகொள்ளும் முகத்துடன் இணையாக வரும் காட்சிகளும் நாவலில் நுட்பமாகவே சொல்லப்படுகின்றன. மரண அடி வாங்கி இறுதி நொடிகளில் இருக்கும் “வைட் டைகர்”குவான்-யின் காலடியில் கிடக்கையில் குவான்-யின் முகத்தை மறைத்து எழும் பகுச்சரா தேவியின் மானுட முகத்தைக் காண்கிறார். அன்னைக்கு பலியெனத் தன்னை அவர் ஒப்புக்கொடுக்கும் இடமும் நாவலில் மிக நுணுக்கமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒற்றை வரியில் நவீன் சொல்வது, தன் துப்பாக்கியின் குறி தவறவே தவறாத இலக்கில் தன்னை கொல்பவள் நின்றாலும் விரலை விசையிலிருந்து இழுத்துக்கொள்கிறார். நவீன் நாவலை பல இடங்களிலும் ஒரு காட்சியென நமக்குள் காட்டும் இடங்களில் இதுவும் ஒன்று.

திருநங்கை வாழ்வில் உள்ளவற்றை தகவலாக ஒரு நாவலில் பயன்படுத்துவது சாதாரண நாவல்களில் நிகழும். ஆனால் சிகண்டியில் அவர்களது வாழ்க்கையின் உணர்வுகள், அவற்றின் முரண்கள், அவர்கள் பிறருடன் கலந்து பழகும்விதம், வாழ்க்கைமுறை என  அனைத்துமே அவர்களது இயல்பில் சொல்லப்படுகிறது.

நவீன தமிழ் இலக்கியத்தில் திருநங்கையரின் வாழ்வின் ஒரு பரிமாணத்தை மிக நேரடியாகவும், வெளிப்படையாகவும் பேசிய படைப்பு சு.வேணுகோபாலின் படைப்பான பால்கனிகள். தன்னைப் பெண்ணென பிறருக்கு நிரூபிக்க அத்தனை துயரையும் தாங்கும் அக்கதையின் நாயகி இறுதியில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து தாயாகி நிறைவுறும் கணம் நவீனதமிழிலக்கியத்தின் உச்சக்காட்சிகளில் ஒன்று என்றுதான் சொல்வேன். அதன் முழு பரிமாணங்களையும் சிகண்டியில் உணரமுடிவதுதான் தமிழ் இலக்கியத்தின் அடுத்த கட்ட பாய்ச்சல் என்பேன்.

ஓர் இலக்கிய வாசகன் இலக்கியத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் கொடைகளில் முக்கியமானது அவனறியா வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் அனுபவத்தையே. சிகண்டி இதுவரை தமிழ் இலக்கிய வாசகர்கள் அறியாத, அல்லது மிகக்குறைவாகவே அறிந்த மலேசியத் திருநங்கையரின் வாழ்க்கையை அணுகி நின்று உடன் வாழும் அனுபவத்தை அதன் வாசகர்களுக்கு அளிக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

நான் தொடக்கத்தில் சொன்ன சுய அனுபவத்தில் ஒன்று மட்டும் விட்டுப்போயிற்று. எங்கள் ஊர் பெரிய கோவில் சிவன் கோவில் என்றாலும், இறைவன் பெயர் சிந்தாமணிநாதர் என்றாலும் அக்கோயிலில் அம்மைக்கு தனி சந்நிதி இல்லை. சிவனுக்கும் லிங்க ரூபமாக தனிச் சந்நிதி  இல்லை. கோயிலின் ஒரே கருவறையில் கிட்டத்தட்ட ஐந்தடி உயரத்தில் ஆணும் பெண்ணும் இணைந்த அர்த்தநாரி கோலத்தில்தான் எங்கள் ஊர் இறை இன்றுவரை அருள்புரிந்து கொண்டிருக்கிறது.

“புனைவின் வழி மட்டுமே நான் நிறைவை அடைகிறேன்” – ம.நவீன்


பேய்ச்சி தடை – நவீனுடன் ஒரு பேட்டி

மலேசியாவில் பேய்ச்சி நாவலுக்கு தடை

பேய்ச்சி: மலேசியா -சிங்கை வட்டாரத்தின் முதன்மையான நாவல்- கனகலதா

ம.நவீனின் பேய்ச்சி- அருண்மொழி நங்கை

ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு

முந்தைய கட்டுரைஆனந்த்குமார் ‘அணிலோசை’- மயிலாடுதுறை பிரபு
அடுத்த கட்டுரைமண்ணில் உப்பானவர்கள் – வெங்கடேஷ் சீனிவாசகம்