இலக்கியம் பாடத்தில், கடிதம்

இலக்கியம் பாடமாக ஆகலாமா? 

ஜெயகாந்தன் தமிழ்விக்கி

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

ஜெயகாந்தன் எழுதிய “குருபீடம்” சிறுகதை, நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது துணைப்பாடத்தில் இருந்தது. அந்த கதையை படித்தபோது பெரிய தாக்கம் எதுவும் ஏற்படவில்லை. இருந்தும், தேர்வில் கேட்கப்பட வாய்ப்பு அதிகம் என்பதால், கொஞ்சம் நன்றாகவே படித்து வைத்திருந்தேன். கடவுளின் அநுக்கிரகத்தால் எதிர்பார்த்ததை போலவே, தேர்வில், குருபீடம் மற்றும் வேறொரு கதையை குறிப்பிட்டு, “இரண்டில் ஏதாவது ஒரு கதையை சுருக்கி எழுதுக” என கேட்கப்பட்டிருந்தது.

நான் குருபீடத்தை ‘சுருக்க’ முடிவெடுத்தேன். அந்த கதையில் குரு செய்யும் சேட்டைகளையும், போகிறபோக்கில் அவர் உதிர்க்கும் உபதேசங்களையும், அதைக்கேட்டு சீடன் அடையும் புளகாங்கிதங்களையும் எழுதியபோது சிரிப்பு வந்தது. புன்னகைத்தபடியே அவற்றை தாளில் எழுதிக்கொண்டிருந்தேன். “சாப்பிட சாப்பிட பசி எடுக்குது. பசி எடுக்க, எடுக்க சாப்பிடறோம். குளிக்க குளிக்க அழுக்கு சேருது. அழுக்கு சேர சேர குளிக்கறோம்.”

கதை முழுவதும் மிக வேடிக்கையாக சென்றாலும், முடிவை எழுதும்போது ஏனோ சோகமாக இருந்தது. அந்த கதையை படித்தபோது எதுவும் தெரியவில்லை. ஆனால், கைப்பட எழுதியபோது, அதன் நகைச்சுவையும், முடிவின் மென்சோகமும் நன்றாக புலப்பட்டது.

தேர்வு முடிந்தவுடன் புத்தகங்கள் அனைத்தையும் எடைக்கு போட்டேன். ஆனால், ‘குருபீடம்’ உள்ள துணைப்பாட நூலை எடைக்கு போட மனம் வரவில்லை. ஆகவே, அந்த கதையை மட்டும் கிழித்து எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டேன். அடுத்த 2 வருடங்களுக்கு அந்த கதை என்னுடன் இருந்தது. குருபீடம் உட்பட ஜெயகாந்தனின் சிறுகதைகள் ஆன்லைனிலேயே இலவசமாக கிடைப்பதை அறிந்த பிறகுதான், நான் பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த காகிதம் குப்பைத்தொட்டிக்கு சென்றது.

அதன் பிறகு, ஜெயகாந்தனின் பிற கதைகளையும், நாவல்களையும் படித்தேன். வாழ்க்கை, ஆண்-பெண் உறவு, காமம் உள்ளிட்டவை குறித்த என் பார்வையே மாறியது. அதிகம் இல்லை என்றாலும், பிற ஆசிரியர்களையும் படிக்க தொடங்கினேன். தற்போது, தங்களில் வந்து முட்டி நிற்கிறேன்.

இவற்றிற்கு எல்லாம் குருபீடமும், அதனை கைப்பட நான் தேர்வில் எழுதியதும்தான் முக்கிய காரணம் எ நினைக்கிறேன்.

நன்றி,

ஆனந்த குமார் தங்கவேல்

அன்புள்ள ஜெ

என் மகன் உங்கள் யானைடாக்டர் கதையை பாடத்தில் படித்தான். அவன் அதுவரை அதைப்போன்ற ஒரு கதையை வாசித்ததில்லை. என்னிடம் அவன் அதைப்பற்றிச் சொன்னபோது நான் முழுக்கதையையும் வாங்கிக்கொடுத்தேன். அவன் அதை திரும்பத்திரும்ப வாசித்தான். அதைப்பற்றி ஒரு வாட்டர்கலர் படமும் வரைந்தான். அதன்பின் உங்கள் புத்தகங்கள் வேண்டும் என்று கேட்டான். நான் பனிமனிதன் வாங்கிக்கொடுத்தேன். அதன்பிறகு வெள்ளிநிலம். இப்போது உடையாள்.

இப்போதும் அவன் வாசித்துக்கொண்டே இருக்கிறான்.அவனுக்கு எரிமலர், செம்மணிக்கவசம் என்ற இரண்டு புத்தகங்களை வாங்கிக்கொடுத்தேன். அவற்றை வாசிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டான். நான் நிறையச் சொற்களைச் சொல்லிக்கொடுத்தேன். ஆனால் முடித்துவிட்டான். நேற்று அவனே ‘நான் இந்துவா?’ என்ற கட்டுரையை வாசித்துவிட்டு என்னிடம் விவாதித்தான்.

எல்லாம் பாடப்புத்தகத்தில் இருந்துதான் தொடங்கியது. அதைச் சொல்ல விரும்புகிறேன்.

அருண் சதானந்த்

இலக்கியம் பாடமாக- கடிதங்கள்

முந்தைய கட்டுரைவெற்றி, ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஅபர்ணா கார்த்திகேயன் – பாலசுப்ரமணியம் முத்துசாமி