எழுத்துரு -அனுபவத்தில் இருந்து…

எழுத்துரு பற்றி, மீண்டும்…

அன்புள்ள ஜெயமோகன்,

இந்தக் கடிதத்தை உங்களுக்கு அனுப்ப வேண்டுமென எண்ணி வேண்டுமென்றே  சில வாரங்கள் தாமதித்தேன். “எழுத்துரு பற்றி, மீண்டும்…” சரியான நேரத்தில் வந்துள்ளது.

2013இல்  நீங்கள் தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதும் ஒரு எண்ணத்தை எழுதியதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. இப்போது எண்ணிப்பார்க்கையில் அது ஒரு உணர்வு ரீதியான மேட்டிமை தான் காரணம் – என் மொழி, என்னால் படிக்க எழுத முடியும், என் குழந்தைகளுக்கு கற்பிக்க முடியும் என்றே எண்ணினேன். பெங்களூருவில் பணியாற்றியபோது என் மனைவி கற்பிக்கவும் செய்தாள்.

சிலஆண்டுகளில் அமெரிக்கா  வந்த பிறகும்  கற்பித்தல் தொடர்ந்தது. ஆனால் கற்றலின் ஆர்வம் குறைவதை கண்கூடாகக் கண்டேன். மெல்ல மெல்ல மகள்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழியாக ஆங்கிலம் ஆகியது. இழுத்து வைத்து கற்பித்தலும் பெரியளவில் உதவவில்லை.

இவ்வாறாக சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் சிவாஜி கணேசன் வடிவில் ஒரு திறப்பு. திருவிளையாடலில்  “கொங்குதேர் வாழ்க்கை” பாடலை முடிக்கும் போது “இதுதான் எமது செய்யுள்ள்ள்ள்” என்று முடித்தவுடன் சின்னவள் தன்னிச்சையாக “Wow, this  is nice, what is that seyyulll paa? ” என்றாள்.

செய்யுள் என்றால் என்ன, எதுகை மோனை எல்லாம் விளக்க ஒரு சிறு பாடலை எழுதிக் காட்டி நீயே படிச்சு சொல்லு என்று ஆங்கிலத்திலும்  எழுதிக் கொடுத்தேன். வியப்பூட்டும் வகையில் வேலை செய்தது. மட்டுமல்லாமல் அவர்களே மேலும் சில என்று கேட்க, இப்போது தினமும் ஒரு மணிநேரம் இனிமையாகக் கழிகிறது.

வார இறுதியில் இன்று தமிழ்ப்பாடம் இல்லை என்றதும் சுணங்கும் அளவிற்கு, அவர்களே இன்று என்னை இழுக்கிறார்கள். “மதுகரம் வாய்மடுக்கும் குழற்காடு” என்னும் படிமம் அவர்களுக்கு பிடிபடுகிறது. “வேற யாராலயும் முடியுமா, என் பொண்ணுடி” என்று பெருமை பேசிக்கொண்டிருந்த வேளையில், “அப்பா, Remember யான் எனது என்பவரை கூத்தாட்டுவான்ப்பா” என்று எடுத்துக்காட்டிய போது உங்கள் எழுத்துரு கட்டுரையும் கருத்துக்களுமே நினைவில் எழுந்தது.

அன்றே வந்து “ஆசானே, பொறுத்தருள்க”  என்று எழுதி  இதோ இன்று அனுப்பிவிட்டேன்.

என்றென்றும்  அன்புடன்,
மூர்த்தி
டாலஸ்

***

அன்புள்ள மூர்த்தி,

நான் சொல்வது ஒரு குறிப்பிட்ட காரணத்தால். இன்றைய குழந்தைகளின் அறிவுத்திறன் மிகுதி, அறைகூவல்களும் மிகுதி.  மொழிகளின் எழுத்து வடிவுகளை கற்பதென்பது ஒரு சலிப்பூட்டும் பணி. நீண்டகால தொடர் உழைப்பு அவர்களால் அளிக்கப்பட இயலாது.

இப்படிச் சொல்கிறேன். இன்றைய குழந்தைக்கு நீங்கள் தத்துவத்தை அறிமுகம் செய்கிறீர்கள் என்று கொள்வோம். சாக்ரடீஸில் இருந்து ஆரம்பித்து பாடத்திட்டத்தை வரிசையாக எடுத்துச்சொல்லி அவற்றை நினைவில் வைத்துக்கொள்ளச் சொன்னால் அவர்கள் உடனே எதிர்ப்பு கொள்வார்கள். அவர்களால் அந்த உழைப்பைச் செலுத்த இயலாது. அது சலிப்பூட்டும் ஒரு மனப்பாடப்பயிற்சி. ஆனால் ‘இங்கே உள்ள பொருட்களின் வடிவம் முன்னரே இருந்து பொருள் பின்னர் வந்ததா, அல்லது பொருட்களில் இருந்து அதன் வடிவங்களை உருவாக்கிக்கொண்டார்களா?’ என்ற கேள்வியை எழுப்பி சாக்ரடீஸ், அரிஸ்டாடில் என்ன சொன்னார்கள் என விவாதித்தால் தீவிரமாக உள்ளே நுழைவார்கள். சோஃபீஸ் வேர்ல்ட் [சோஃபியின் உலகம், தமிழில் ஆர்.சிவக்குமார்] நூல் இந்த அடிப்படையில் எழுதப்பட்டது.

நம் குழந்தைகள் ஏன் தமிழில் அதிகம் வாசிப்பதில்லை? ஏனென்றால் அவர்களுக்கு 15 வயதாகும்போது தமிழ் வாசிக்கும் திறன் ஐந்து வயதுக்குழந்தைக்கு சமானமானது. ஐந்து வயதுக் குழந்தை வாசிக்கும் நூல் அவர்களுக்கு சலிப்பூட்டும். ஆங்கிலத்தில் அவர்கள் 15 வயதுக்குரியதை வாசிக்க முடியும். ஆகவே ஆங்கிலத்தில் வாசிப்பார்கள். காலப்போக்கில் தமிழையே மறாந்துவிடுவார்கள். நான் சொல்வதெல்லாம் இந்த யதார்த்தத்தில் இருந்தே. இங்கே ’பெரியார் பகுத்தறிவுடன்  பார்க்கச்சொன்னார்’ என்றெல்லாம் கூச்சலிடுவார்கள். ஆனால் எல்லா பார்வையும் வெறும் உணர்ச்சிகர வெறியில் இருந்து எழுவதே. அந்த வெறிதான் கண்முன் உள்ள அப்பட்டமான உண்மையைப் பார்க்க தடையாக உள்ளது

ஜெ

முந்தைய கட்டுரைஉறவுகளின் பொருள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- ஷிமோகா பாலு